மங்கள்யான்



க்ளைமாக்ஸ் தருணங்கள்

‘கவுன்ட் டவுன்’ உச்சகட்டத்தை நெருங்குகிறது. எலெக்ஷன் ரிசல்ட்டை விட அதிக எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது மங்கள்யான் ரிசல்ட்! யெஸ், பத்து மாதம் இடையறாத பயணத்துக்குப் பின், 24ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் மங்களகரமாக நுழைய இருக்கிறது ‘மங்கள்யான்’ விண்கலம். நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது அது தன் இலக்கில் 98 சதவீத தூரத்தை அடைந்துவிட்டிருக்கும். மிச்சமிருக்கும் 2 சதவீத பயணமும் பாதையும் மிகச் சிக்கலானது.

 வாழ்வா, சாவா என்ற அந்தப் போராட்டத்தில் மட்டும் ஜெயித்துவிட்டால், அதன் பிறகு செவ்வாயைச் சுற்றிச் சுற்றி சைட் அடிக்கும் ஒரே ஆசிய விண்கலம் மங்கள்யான்தான். இதுவரை எந்த நாடும் முதல் முயற்சியிலேயே செவ்வாயை நெருங்கியதில்லை. அந்தப் பெருமையும் இந்தியாவின் சட்டைப்பைக்குள்; அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்து செவ்வாயைத் தொட்ட நான்காவது நாடாக நாமும் வரலாற்றில்!

எதிர்பார்ப்பு இருக்கிறதே தவிர, மங்கள்யானுக்கும் சரி... இந்தியாவுக்கும் சரி... இந்த விஷயத்தில் பெரிய பிரஷர் எல்லாம் இல்லை. காரணம், செவ்வாயைக் குறிவைக்கும் மற்ற விண்கலங் களோடு ஒப்பிட்டால் மங்கள்யான் ஒரு குட்டிப் பையன். மங்கள்யான் செவ்வாயை அடைவதற்கு மூன்று நாள் முன்னதாகவே அமெரிக்காவின், ‘மாவென்’ விண்கலம், செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் இணையப் போகிறது. அதன் பட்ஜெட் மங்கள்யானை விட ஆறு மடங்கு அதிகம்.

‘‘ஹாலிவுட் படமான ‘கிராவிட்டி’யின் பட்ஜெட் கூட 608 கோடி. நாம் மங்கள்யானுக்காகச் செலவிட்டது அதைவிடக் கம்மி’’ என பிரதமர் மோடியே குறிப்பிட்டிருக்கிறார். ‘ரூ.426 கோடி செலவில் உருவாக்கப்பட்ட குட்டி வாகனம்... இது என்ன பண்ணிடப் போகுது’ என்பதுதான் உலக நாடுகளின் எள்ளல் பார்வை. இப்போது மங்கள்யான் சாதித்துவிட்டால், பவுலர் புவனேஷ்வர் குமார் இறங்கி செஞ்சுரி அடித்தது போலிருக்கும்!

தற்போது மங்கள்யான் பூமியிலிருந்து 2.17 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. நொடிக்கு 22 கிலோ மீட்டர் வேகத்தில் தலைதெறிக்க பயணித்துக் கொண்டிருக்கிறது. செவ்வாயை நெருங்கும்போது, அதன் ஈர்ப்புவிசைக்கு ஏற்ப இந்த வேகம், நொடிக்கு 5 கி.மீ. எனக் குறையும். ஆனால், இது கூட அதிகம். விடலைப் பையன் வண்டி ஓட்டுவதைப் போல இதே வேகத்தில் போனால், மங்கள்யான் நமது கட்டுப்பாட்டையும் சோலார் சிஸ்டத்தையும் தாண்டி எங்காவது போய்விடலாம்.

உடனடியாக பிரேக் போட்டு வேகத்தைக் குறைக்க வேண்டுமென்றால் மங்கள்யானின் முன்புறமுள்ள ‘லிக்விட் அபோஜி மோட்டார்’ லிகிவி இயக்கப்பட வேண்டும். இது  ஒருவேளை இயங்கலாம்... இயங்காமலும் போகலாம் என்பதுதான் டென்ஷன் மேட்டர்.வீக் எண்டில் சும்மா நிறுத்தி வைத்திருந்த டூ வீலரே திங்கட்கிழமை காலை செல்ஃப் எடுக்காது. பத்து மாதங்களாக இயக்கப்படாமல் சும்மா கிடந்திருக்கிறது மங்கள்யானின் ‘லாம்’. அசுர வேகத்தில், உறைபனிச்சூழலில் பயணித்ததில் என்ன ஆனதோ! 

பரிசோதனை முயற்சியாக திங்கட்கிழமை அன்று இதை 2 நொடி மட்டும் ஓட விட்டு பரிசோதிக்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். அப்போது ஸ்டார்ட் ஆனால், எல்லாம் சுபம். 24ம் தேதி காலை 7.17 மணிக்கு ‘லாம்’ இயங்கத் துவங்கி 7.37 மணிக்குள் மங்கள்யானைக் கட்டுப்படுத்திவிடும். இந்த வெற்றிச் செய்தி 12.5 நிமிடம் தாமதமாக 7.52 மணிக்கு நம்மை வந்தடையும். எட்டு மணிக்கெல்லாம் நாம் கேக் வெட்டிக் கொண்டாடலாம்!

ஒருவேளை ‘லாம்’ சொதப்பிவிட்டாலும் இன்னொரு வழி இருக்கிறது. மங்கள்யானை வேண்டிய திசையில் திருப்பிக் கொள்ளும் வகையில் அதில் எட்டு த்ரஸ்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை இயக்கி மங்கள்யானை ஓட்டலாம். என்ன... வேகம் கொஞ்சம் அதிகம் இருக்கும்.

கூட்டங்களில் கட் அடித்து ரேஷ் டிரைவிங் பண்ணுவது போல இங்கிருந்தே வீடியோ கேம் விளையாட வேண்டும். இதில் கொடுமை என்னவென்றால், இங்கிருந்து வலது பக்கம் திரும்பும்படி நாம் பிறப்பிக்கும் கட்டளை, 12.5 நிமிடம் தாமதமாகத்தான் மங்கள்யானைச் சென்று அடையும். ‘‘திறமையான இந்திய விஞ்ஞானிகள் அதை சுலபமாகச் செய்வார்கள்’’ என நம்பிக்கை தெரிவித்திருக்கிறது இஸ்ரோ.

2003ல் ஜப்பானும், 2011ல் சீனாவும் செவ்வாய்க்கு அனுப்பிய விண்கலங்கள் தோல்வியில் முடிந்தன. அவற்றால் அந்த நாடுகள் இழந்த தொகை அதிகம். ஆனால், மங்கள்யான் முயற்சி பழைய டி.வி.எஸ் 50யை வைத்து பென்ஸ் கார்களை முந்துவது போன்றது... தோற்றாலும் பெருமைதான்! இழக்க எதுவுமில்லை... கமான் மங்கள்யான், கமான்!

தற்போது மங்கள்யான் நொடிக்கு 22 கிலோமீட்டர் வேகத்தில் தலைதெறிக்க பயணித்துக் கொண்டிருக்கிறது.

- பேராச்சி கண்ணன்