மகாபாரதம்



‘‘உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லட்டுமா?‘‘ பரதகண்டத்தின் மிகச்சிறந்த காவியம் இப்படித்தான் துவங்குகிறது: ‘‘உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லட்டுமா?‘‘நைமிசாரண்யம் என்ற இடத்தில் சௌனகர் என்ற ரிஷி மிகப்பெரிய யாகம் செய்து கொண்டிருந்தபோது, அன்றைய யாகத்தை முடித்துவிட்டு மற்ற எல்லா ரிஷிகளும் ஓய்வாக அமர்ந்திருந்தபோது அவர்களுக்கு நடுவே வந்து நின்ற சூதர் என்ற முனிவர் பேச ஆரம்பித்தார். ‘‘உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லட்டுமா.’’

பரதகண்டம் கதை சொல்லிகளின் உலகம். தர்மத்தை அழுத்தமான வாக்கியங்களாக சொல்லியிருப்பினும் வேத விஷயமாக போற்றியிருப்பினும் எல்லோருக்கும் மனதில் பதியும் வண்ணம் அந்த தர்மத்தை கதைகளின் மூலம் சொன்னார்கள். இதிகாசம் என்றால் எங்கோ என்றோ நடந்தது என்று அர்த்தம். ஆக, இது வெறும் கற்பனை கதையாக இல்லாது ஏதோ ஒரு காலத்தில் எங்கோ சில மனிதர்களுடைய நடவடிக்கையால் ஏற்பட்ட விஷயங்கள் என்பதால் செய்திகள் தெள்ளத் தெளிவாக மனதில் பதிகின்றன.

அந்த முனிவரை ரிஷிகள் வரவேற்று நல்ல ஆசனம் கொடுத்து, சௌகரியமாக உட்காரவைத்து, ‘‘எங்கிருந்து வருகிறீர்கள்\,. என்ன கதை சொல்லப்போகிறீர்கள்?‘‘ என்று வினவினார்கள்.

நான், குருவம்சத்து அரசனான ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து வருகிறேன். அங்கிருந்து பல இடங்களுக்குப் போய்விட்டு இப்பொழுது இங்கு யாகம் நடப்பதை கேள்விப்பட்டு வந்திருக்கிறேன்.  நான் உங்களுக்கு மகான்களின் கதைகள் பற்றி சொல்லட்டுமா அல்லது மகாபாரதத்தைப் பற்றி சொல்லட்டுமா என்று வினவினார்.

‘‘வியாஸரால் எழுதப்பட்டதும், நல்ல தர்ம நெறிகளை உள்ளடக்கியதும், வேத சம்பந்தம் உள்ளதும், சரித்திரத்தில் இடம் பெற்றதுமான மகாபாரதக் கதையை கேட்க விரும்புகிறோம். ஜனமேஜயன் சர்ப்ப யாகம் நடத்தியதாக கூறினீர்களே, அது என்ன விஷயம்?‘‘ என்று ரிஷிகள் ஆவலாகக் கேட்டார்கள். ‘‘குரு வம்சத்து அரசனாகிய ஜனமேஜயன் மிகப் பெரிய சர்ப்ப யாகம் நடத்தினான். அந்த இடத்தில் வைசம்பாயனர் என்கிற ஒரு ரிஷி, ஜனமேஜயனுக்கு மகாபாரதக் கதையை சொன்னார். நான் அருகேயிருந்து கேட்டதால் அதை உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

‘‘வியாஸர் மகாபாரத்தை எழுதினார். அவர் தன்னுடைய மகனான ஸூதருக்கு உபதேசித்தார். மற்ற சீடர்களுக்கும் சொன்னார். வியாஸருடைய சீடர்களில் ஒருவரான வைசம்பாயனர் என்பவர்தான் இந்த கதையை ஜனமேஜயனுக்கு எடுத்துரைத்தார்.‘‘‘‘அதென்ன சர்ப்ப யாகம்?‘‘ ரிஷிகள் ஆவலோடு கேட்டார்கள்.‘‘ஜனமேஜயனுடைய தகப்பன் பரீட்சித். பரீட்சித் அபிமன்யுவின் பிள்ளை. இளம்பிராயத்தில் பரீட்சித் இறந்து போனதால் குழந்தையாக இருந்த ஜனமேஜயனை அரசனாக்கினார்கள்.

தன் தகப்பனைப் பற்றிய அதிக விவரங்கள் தெரியாமல் ஜனமேஜயன் ஆண்டு வந்தான். அப்போது உத்தங்கர் என்கிற முனிவர் ஜனமேஜயனிடம் வந்து, ‘‘எல்லாம் வல்ல அரசனாகிய நீ ஏன் இன்னும் யாகம் செய்யாமல் இருக்கிறாய்? உன் தந்தை மிக அநியாயமாக, பாம்புகளின் அரசனான தட்சனால் கடிக்கப்பட்டு உயிர் துறந்ததை உனக்கு எவரும் சொல்லவில்லையா? எந்த பாவமும் அறியாத உன் தந்தை விபரீதமாக மரணம் அடைந்ததை யாரும் உனக்கு விளக்கவில்லையா? தட்ச¬னைக் கொல்வதற்காக நீ யாகம் செய்ய வேண்டாமா? எனவே, உடனடியாக யாகம் செய்,‘‘ என்று கோபத்தோடும், கண்களில் நீரோடும் கூறினார்.

உத்தமமான அந்த முனிவரை பார்த்து ஜனமேஜயன் திகைத்தான். தன் மந்திரிகளிடம் தன் தந்தையைப் பற்றி விசாரித்தான். ‘‘உத்தங்கர் சொல்வது உண்மை. உன் தந்தை மிகச் சிறிய ஒரு குற்றத்திற்காக தட்சன் என்ற பாம்பு கடித்து இறந்தார். நடந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. எல்லா அரசர்களும் செய்வது போல உன் தந்தையும் காட்டிற்கு வேட்டையாடப்போக, அங்கு ஒரு மானைக் கண்டு வில் வளைத்து அம்பால் அடிக்க, அம்பு தைத்த மான் வேகமாக ஓடியது. காணாமல் போனது.

மானைத் தேடி இங்கும் அங்கும் ஓடிய அரசன் களைப்புற்றான். காட்டுப் பசுக்களின் கன்றுகளின் வாயில் எஞ்சியிருந்த பால் நுரையை அருந்தி சோர்வு நீக்கிக் கொண்டான். பசுக்கள் நிறைந்த ஒரு பர்ணசாலைக்கு அருகே போனான். அங்கு சமீகர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார்.

ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். அவருக்கு அருகே போய், ‘‘நான் அடித்த மான் இந்தப் பக்கம் வந்ததா?‘‘ என்று பலமுறை கேட்டான். ஆனால் சமீகர் எந்த பதிலும் சொல்லாது இருந்தார். அதனால் எரிச்சலுற்ற அந்த மன்னன் அருகில் இருந்த செத்த பாம்பை எடுத்து அவர் கழுத்தில் போட்டு விட்டு போனான்.

சமீகருடைய மகன் சிருங்கி, நல்ல தபஸ்வி. கூர்ந்த மதியாளர். கடுமையான வார்த்தைகளுடையவர். அவர் பர்ணசாலைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அவருடைய சினேகிதன் ஒருவன் அவரைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான். சிரித்ததின் காரணத்தைக் கேட்க, ‘‘உன் தந்தை பிணத்தை தூக்கிக்கொண்டிருக்கிறார். நீ மிகப்பெரிய அறிவாளி என்றும் கோபக்காரன் என்றும் அலட்டிக் கொண்டிருக்கிறாய்.

ஆனால் அன் தந்தையோ பிணந்தூக்கி. இப்பேர்பட்ட தந்தைக்கு பிறந்தவனுக்கு கோபம் என்ன வேண்டிக்கிடக்கிறது?‘‘ என்று கேலி பேசினான். சிருங்கி, ‘‘நடந்ததைச் சொல்,‘‘ என்று அதட்ட, அவருடைய நண்பன், பரீட்சித்து என்ற ராஜா, மானை அடித்து அதை தேடிவந்து அதைப் பற்றி உன் தந்தையிடம் விசாரிக்க, அவர் பதில் சொல்லாமல் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தபடியால் அவர் கழுத்தில் செத்த பாம்பை போட்டு விட்டு போனான். பதில் சொல்லாத ரிஷியும் செத்த பாம்பும் ஒன்றே என்று காட்டிவிட்டு போனான்,‘‘ என்று நடந்ததை விவரித்தான்.

சிருங்கேரி கோபம் கொண்டார்.நிஷ்டையில் உள்ளவர் பதில் சொல்லவில்லை என்றால் கழுத்தில் இறந்த பாம்பை போட்டு விடுவதா, என்ன திமிர் அந்த சத்திரியனுக்கு என்று கோபத்தால் கால் உதைத்தான்.

முஷ்டி மடக்கினான். பல் கடித்தான். தந்தை அவ்விதமே அசையாமல் இருப்பதைக் கண்டு கண்களில் நீர் பொங்கியது. உட்கார்ந்து ஆசமனம் செய்தார். மனம் குவித்தார். ‘எவனொருவன் இந்த படுபாதகச் செயலைச் செய்தானோ அவன் இன்றிலிருந்து ஏழு நாட்களுக்குள் மிகக் கொடிய விஷ சக்தியுள்ள தட்சன் என்கிற பாம்பால் கொத்தப்பட்டு, பிழைக்கவே முடியாதபடி அகால மரணம் அடைவான்,‘ என்று சபித்தார்.

கண் விழித்த சமீகர் தன்னுடைய மகன் சிருங்கி செய்த கடுமையான சாபத்தைக் கேட்டு மனம் வருத்தப்பட்டார். ‘‘இப்பொழுது என்ன நடந்து விட்டது என்று நீ இவ்வளவு கோபப்படுகிறாய்? தன் கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்றால் ஒருவன் ஆத்திரப்படுவது இயல்புதானே? சத்திரியன் போன்றவர்கள் உடனடியாக கோபத்தில் இறங்குவதும் இயல்புதானே?

சத்திரியனை தண்டித்து விட்டால் நீ உத்தமன் ஆகிவிடுவாயா? ஒரு தேசத்திற்கு சத்ரியன் எவ்வளவு முக்கியம் என்பதை நீ உணரவில்லையா? சத்திரியன் வலிமையுள்ளவனாக இருந்தால்தானே எதிரிகளிடமிருந்து மக்களை காப்பாற்ற முடியும். மக்கள் பயமின்றி சௌகரியமாக இருந்தால்தானே விவசாயம் போன்ற நல்ல விஷயங்கள் நடைபெறும்.

அவை சிறந்த முறையில் நடைபெற்றால்தானே உணவுத்தட்டுப்பாடு இல்லாது உயர்ந்த நாகரீகம் வரும். அப்படி இருந்தால்தானே மகான்களும், ரிஷிகளும் கெண்டாடப் படுவார்கள். அப்பொழுதுதானே தர்மம் நிலைக்கும்.

எனவே தர்மத்தின் காவலன் அரசன் என்பதை நீ புரிந்து கொள்ளவில்லை. அவனை சபிப்பதன் மூலம் தர்மத்திற்கு எதிரான ஒரு விஷயத்தை நீ செய்து விட்டாய். இப்படிப்பட்ட கோபங்கள் யாருக்கும் உபயோகம் இல்லாதவை. எனவே நீ காடுகளுக்குப் போய் கிழங்குகளையும், காய்களையும் உண்டு உன் கோபத்தை குறைத்துக்கொள்,‘‘ என்று அறிவுறுத்தினார்.பரீட்சித்திற்கு இந்த சாபம் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. அவன் பயந்தான்.

மிக உயரமான ஒரு தூண் எழுப்பி அதன்மீது ஏழு மாளிகைகள் கட்டி, ஏழாவது மாளிகையில் அவன் பாம்பிற்கு பயந்து குடியிருந்தான். சுற்றிலும் முள்வேலிகள் போடப்பட்டிருந்தன. வலிமையான வீரர்கள் காவல் இருந்தார்கள். விஷத்தை இறக்கக்கூடிய வைத்தியர்களும், மந்திரவாதிகளும் உடன் இருந்தார்கள். மந்திரிகளும், அந்தணர்களும், விவரம் அறிந்த முனிவர்களும் அந்த வளையத்திற்குள் இருந்தார்கள்.

இதற்கிடையே காசியபர் என்ற பண்டிதருக்கு, அரசருக்கு ஏற்படும் வேதனை குறித்த செய்தி வந்தது. எந்தவித விஷத்தையும் முறிக்கக்கூடிய வல்லமை பெற்ற அவர் அரசனை நோக்கி நடந்தார். அவரிடம் தன் பலத்தைச் சொல்லி. வேண்டும், திரவியம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். தட்சன் ஒரு அந்தணர் வடிவத்தில் அவரை வழி மறித்தான்.

 ‘‘நீர் யார்? எங்கு போகிறீர்?‘‘ என்று கேட்க, அவர் விவரம் சொன்னார். தட்சன் என்ற நாகத்தால் அரசன் மரணமடையப் போகும் சாபத்தைச் சொன்னார். தட்சன் சுய உருவம் எடுத்தான். ‘‘நான்தான் அந்த தட்சன். உம்மால் என்னுடைய விஷத்தை இறக்க முடியாது. அதோ அங்கு ஒரு உயர்ந்த ஆலமரம் இருக்கிறதே, இதை நான் விஷமேற்றி தீய்த்து விடுவேன். உம்மால் அதை துளிர்க்க வைக்க முடியுமா?‘‘ என்று தட்சன் கேட்க, ‘‘முடியும்,‘‘ என்று காசியபர் பதில் சொன்னார்.

ஆலமரத்தில் தட்சனுடைய விஷம் இறக்கப்பட்டது. மரம் விஷம் தாங்காமல் பொசுங்கி சாம்பலாயிற்று. அந்த சாம்பலை ஒன்று திரட்டிய காசியபர் மந்திரங்கள் சொல்லி புடம் போட்டு அதை உயிர்பித்தார். மரம் சிறு செடியாகி, மெல்ல வளர்ந்து கிளைகள் பரப்பி இலைகள் விட்டு பெரும் மரமாக மாறிற்று. பழைய நிலைக்கு வந்தது. தட்சன் திகைத்தான்.

‘‘பரீட்சித்தின் ஆயுள் முடியப்போகிறது. அதை யாராலும் பிடித்துவைத்து நீட்டிக்க முடியாது. பரீட்சித்து தருகின்ற திரவியத்தை நான் தருகிறேன். திரும்ப உன்னுடைய இடத்திற்கு போய்விடும்,‘‘ என்று சொல்லி, காசியபரிடம் திரவியம் கொடுத்து விலகியிருக்குமாறு தட்சன் சொன்னான். பரிட்சித்தின் ஆயுள் முடியப்போவதை ஞான திருஷ்டியால் அறிந்த காசியபர் திரவியம் வாங்கிக்கொண்டார். பரிட்சித்தின் மரணம் உறுதியாயிற்று.

நாகங்களை அந்தணர்கள் உருவத்தில் அனுப்பி, உள்ளே காவல் இருப்பவர்களுக்கு பழங்கள் கொடுத்தனுப்புவதற்காக தட்சன் ஏற்பாடு செய்தான். பழங்கள் கூடை கூடையாக உள்ளே போயின. அவற்றில் ஒரு பழத்தினுள் தட்சன் அமர்ந்து கொண்டான். சிறு புழுவாக நெளிந்தான்.  பழங்கள் விநியோகிக்கப்பட்டன.

விதி வசத்தால் புழுவாக இருந்த தட்சன் இருந்த பழம் பரீட்சித்திடம் போயிற்று. பரீட்சித்து பழத்தைப் பிளந்தார். உள்ளேயிருந்து புழு வெளியே வந்தது. ‘அட, பழத்திற்குள் புழு இருக்கிறதே.

இது ருசியாக இருக்குமே. ஆனால் இந்த புழுதான் தட்சன். இன்று ஏழாவது நாள். அந்தி சாயப்போகிறது. தட்சனை இன்னும் காணோம். எனவே இந்தப் புழுவையே தட்சன் என்று நினைத்து என்மீது விட்டுக்கொள்கிறேன்,‘‘ என்று விளையாட்டாகச் சொல்லி, புழுவை எடுத்து தன் நெஞ்சில் விட்டுக்கொண்டான். தட்சன் உடனே சுயரூபம் எடுத்து பரீட்சித்தின் நெற்றியில் கொட்டினான். பரீட்சித்து அந்த கணமே இறந்து போனான்.

ஜனமேஜயனுக்கு இந்தக் கதை சொல்லப்பட்டது. ஜனமேஜயன் துக்கப்பட்டான். கண்ணீர் பெருக்கினான். கோபம் அடைந்தான். உத்தங்கர் அவன் கோபத்தை தூண்டிவிட்டார்: ‘‘தட்சன் முதற்கொண்டு சகல சர்ப்பத்தையும் நீ பொசுக்கி விடு. பூமியிலிருக்கும் இந்தப் பாம்புகள் மரணமடையட்டும். பூமி சௌக்கியமடையட்டும்,‘‘ என்று அவனுக்கு அறிவுரை சொன்னார். அந்தணர்களையும், முனிவர்களையும் அழைத்து மிகப்பெரிய சர்ப்ப யாகத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்.

யாகத்திற்கான குண்டங்கள் அமைக்கப்பட்டன. மிகப் பெரிய யாகசாலை உயரமாக நிறுவப்பட்டது. அந்த யாகசாலையை சுற்றி வந்த ஸ்தபதியில் ஒருவன் அதை கூர்ந்து கவனித்துவிட்டு, ‘‘இந்த யாகம் பூர்த்தி அடையாது. இந்த கட்டமைப்பில் ஒரு குறை இருக்கிறது. யாகம் ஒரு அந்தணரால் நிறுத்தப்படும்‘‘ என்று தெரிவித்தான். ஆனால் காலம் கடந்து விட்டது. வேறு வழியில்லை. யாகசாலையை இனிமேல் திருத்தி அமைக்க முடியாது. எனவே, குறிப்பிட்ட நேரத்தில் யாகம் ஆரம்பிக்கும்படி ஜனமேஜயன் கட்டளையிட்டான்.

மகாபாரதம் வெறும் கதையல்ல. அது நீதி சாஸ்திரம். எப்பேர்ப்பட்ட சக்தியுள்ள முனிவராக இருந்தாலும்  ஒரு அரசனுக்கு எதிராத இயங்கக் கூடாது என்பது மிகத் தெளிவாக சமீகர் மூலம் சொல்லப்பட்டது. நீ எவ்வளவு கவனமாக இருந்தாலும் விதி தீர்மானிக்குமானால் எப்படியாவது உன் முடிவு வந்து சேரும். ஏனெனில் விதி வலியது என்றும் நிலைநிறுத்தப்பட்டது.

அரசனுக்கு பொறுமை முக்கியம். மௌனமாகவும், அமைதியாகவும் இருந்த ஒரு முனிவரை வலுவுள்ள ஒரு அரசன் அவமானப்படுத்தியதால் மோசமான ஒரு மரணத்தை அடைந்தான் என்று பல்வேறு விதமான விஷயங்களை மகாபாரதம் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் மகாபாரதம், தர்மத்தைச் சொல்கிறது. மந்திரங்கள் சொல்லச் சொல்ல ஜனமேஜயன் யாகத்தில் பாம்புகள் ஊர்ந்து வந்து தீயில் விழுந்து கருகின. இடையறாது நெய் வார்க்கப்பட்டு பெரும் தழல் எரிக்கப்பட்டது.

தட்சன் வரவேண்டும் என்று மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டன. தட்சன் பயந்துபோய் இந்திரனை சரணடைந்தான். இந்திரன் தட்சனை அழைத்து அடைக்கலம் கொடுத்தான். இந்திரன் அடைக்கலம் கொடுத்தது தெரிய வந்தது. இந்திரனோடு வந்து தட்சன் விழட்டும் என்று மந்திரங்கள் ஓதப்பட்டன. இந்திரன் தட்சனை விலக்கினான். தட்சன் தலைகீழாக யாகத்தீயை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

அப்போது ஆஸிதீகர் என்ற முனிவர் அங்கு வந்தார். ஜனமேஜயனிடம் கை கூப்பி தனக்கு வேண்டுவன தரவேண்டும் என்று வினவினார். நிச்சயம் தருகிறேன் என்று வாக்கு கொடுத்த ஜனமேஜயன் தொடர்ந்து யாகத்தை நடத்தும்படி சொன்னான். இன்னும் விரைவாக தட்சன் யாகத்தீயை நோக்கி வந்து கொண்டிருந்தான். யாகம் முடியப்போகிறது என்பதால் ஆஸ்தீகர் கேட்ட தட்சணையை கொடுக்கும்படி அந்தணர்கள் அரசனுக்குச் சொன்னார்கள். ‘‘என்ன வேண்டும்?‘‘ என்று ஜயமேஜயன் கேட்டபோது, அந்த யாகத்தை உடனடியாக நிறுத்தும்படி ஆஸ்தீகர் சொன்னார்.

தன்னுடைய தாய் நாககன்னியின் விருப்பத்திற்கேற்ப மீதியுள்ள சர்ப்பங்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்விதம் கேட்டார். ஜனமேஜயன் வேறு ஏதேனும் கேளுங்கள் என்று வற்புறுத்த, இதுவே வேண்டும் என்று உறுதியாக நின்றார். ஜனமேஜயன் யாகத்தை நிறுத்தினான். தட்சன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினான். தன்னுடைய வேண்டுகோளுக்கேற்ப ஜனமேஜயன் யாகத்தை நிறுத்தியதால் ஆஸ்தீகர் என்ற ரிஷி அவனுக்கு அஸ்வமேத யாகம் நடத்தித்தர சம்மதித்தார்.

ஜனமேஜயனுடைய இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மகாபாரதம் அதனுடைய ஆரம்ப கட்டத்தை தொட்டுக் காண்பிக்கிறது. அதாவது ஃப்ளாஷ்பேக் சொல்லப்படுகிறது.மகாபாரதத்தை பல்வேறு கிளைக் கதைகள் அலங்கரிக்கின்றன. ஒரு விஷயத்திற்கு எதிரொலியாக இன்னொரு விஷயம் நடக்கிறது என்பதைச் சொல்லி, எதனால் இவ்விதம் நடந்தது, அப்படி நடக்காதிருக்க என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணங்களையும் நமக்குள் தோற்றுவிக்கிறது.

இதையெல்லாம்விட இந்த பரதகண்டத்தில் மிக ஆச்சரியமான மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். விதவிதமான வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறார்கள் என்கிற திகைப்பையும் நமக்கு கொடுக்கிறது. பரத கண்டத்தின் கலாச்சாரம் மிக நீண்டது. இவையெல்லாம் விவாதத்திற்கான விஷயங்களா என்று யோசிப்பதைவிட, இப்படி நடந்தது என்பதாகவே சொல்லப்படுகிறது.

ஜரத்காரூர் என்கிற முனிவர் தன்னுடைய உடம்பின் சக்தியை ஒன்று திரட்டி அதை உச்சிக்கு ஏற்றி மனிதருள் மிகச் சிறந்த ஒரு நிலையை அடைய வேண்டும்  என்று கடுமையான விரதங்கள் மேற்கொண்டிருந்தார். கிடைத்ததை உண்டார். எந்த இடத்தில் இரவு வந்துவிட்டதோ, எந்த இடத்தில் மேற்கொண்டு பயணம் செய்ய முடியாதோ, அது என்ன இடமாக இருந்தாலும் தங்கினார்.

வீடோ, மாளிகையோ, கிராமமோ, நகரமோ, அடர்ந்த வனமோ, பாலையோ, ஆற்றங்கரையோ மலை உச்சியோ எதுவாக இருந்தாலும் அதைப் பற்றி கவலையில்லாது இரவு நேரத்தை அவரால் அமைதியாக கழிக்க முடிந்தது. விடிந்ததும் பயணம் தொடர்ந்தது. எந்த இலக்கும் இன்றி அலைந்தார். எந்த தொடர்பும் இன்றி சுற்றி வந்தார்.

ஒரு மலை உச்சியிலிருந்து கீழே இறங்கும்போது தீனமான குரல்கள் கேட்டன. என்ன என்று அந்த சரிவில் எட்டிப் பார்த்தபோது ஒரு மிகப்பெரிய பள்ளத்தாக்கில் விளாமிச்சை வேரை பிடித்தபடி சிலர் தொங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த வேரை அதன் ருசிக்காக ஒரு எலி தன் கூரியபற்களால் அரித்துக் கொண்டிருந்தது. எந்த நேரம் வேண்டுமானாலும் அவர்கள் அதளபாதாளத்தில் விழுந்து விடுவார்கள் என்று தோன்றியது.

 நல்லவரான ஜரத்காரர் பதறினார். ‘‘யார் நீங்கள்? எதற்காக இப்படி ஒரு வேரை பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? இந்த வேரும் ஒரு எலியினால் அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதே.

எப்பொழுது வேண்டுமானாலும் அதள பாதாளத்தில் விழுந்து விடுவீர்களே. மிகவும் இருட்டாக அல்லவா இருக்கிறது. உங்களுக்கு நான் என்ன  செய்ய வேண்டும்? இது ஏதேனும் புதியவகை தவமா. அல்லது விதியா என்னுடைய தவத்தின் பாதியை உங்களுக்கு தரட்டுமா அல்லது முழுவதையும் கொடுத்து விடட்டுமா உங்களது நிலைமையை பார்க்க எனக்கு பதறுகிறது. பயமாக இருக்கிறது. நான் கவலையோடு இதை உங்களிடம் கேட்கிறேன். தயவு செய்து சொல்லுங்கள் ஏன் இது, யார் நீங்கள்?‘‘

‘‘ஐயா நாங்கள் பித்ருக்கள். அழகான வார்த்தை சொல்லுகின்ற உத்தமரே. நாங்கள் வம்சவிருத்தி இல்லாத பித்ருக்கள். இந்த ஒரே ஒரு வேர்தான் எங்களுக்கு பிடிமானம். ஒரே ஒரு மகன்தான், எங்கள் வம்சத்தை சேர்ந்த ஒரே ஒரு மனிதன்தான் எங்கள் பிடிமானம். அவனுடைய ஆயுளையும் மெல்ல மெல்ல காலம் அரித்துக்கொண்டிருக்கிறது.

அதுதான் அந்த எலி. அந்த மனிதன்தான் இந்த வேர். காலம் அவனை அழித்து சாய்த்துவிட, நாங்கள் இந்த பெரிய நரக குழியில் விழுந்து விடுவோம். எங்களுக்கு நீர் வார்க்க யாரும் இல்லாது மிக மோசமான நிலையை அடைவோம்.‘‘‘‘இதைத் தடுக்க என்ன வழி?‘‘

‘‘இதோ இந்த விளாமிச்சை வேருக்கு சொந்தக்காரரான எங்கள் சந்ததியை கண்டுபிடித்து அவரை திருமணம் செய்து கொள்ளச் சொன்னால் நாங்கள் மேலேறுவோம். இல்லையெனில் நரகம்தான்.‘‘

‘‘அப்படியா யார் அவர்? இவ்வளவு தீரமான நிலையில் உங்களை விட்டு விட்டு போன மனிதர் யார்? எனக்கு சொல்லுங்கள். அவரை நான் தேடி கண்டுபிடித்து திருமணம் செய்விக்கிறேன்.‘‘
‘‘அவர் பெயர் ஜாரக்ருது. மிக சந்துஷ்டியான மனிதன்.

கடுமையான விரதங்கள் உள்ளவன். உத்தமமானவன். ஞானவான். ஆனால் அவன் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் நீர் வார்க்க வழியில்லாது எங்களுடைய பித்ரு வாழ்க்கை மோசமான இடத்திற்கு போகப்போகிறது. சுபீட்சமான இடத்தை நாங்கள் தொடப்போவதேயில்லை. முடிந்தால் அந்த ஜாரக்ருதுவை சந்தித்து அவனை திருமணம் செய்துகொள்ளச் சொல்லுங்கள். சந்ததியை வளர்க்கச் சொல்லுங்கள். இதுபோதும் எங்களுக்கு‘‘. ஜாரக்ருது திகைத்துப் போனார். பித்ருக்களுக்கும் வேதனை உண்டு என்பது அதிர்ச்சியாக இருந்தது.

(தொடரும்)

பாலகுமாரன்