கீழ்பாக்கம் பைத்தியம்



ஒரு மனநல மருத்துவமனையின் கதை

சென்னைப் பக்கமே தலை வைத்துப் படுக்காத தமிழனுக்கும் கீழ்ப்பாக்கம் என்ற ஏரியாவைத் தெரியும். ‘சரியான கீழ்ப்பாக்கம் கேஸ்’... ‘உன்னையெல்லாம் கீழ்ப்பாக்கத்துக்குத்தான் அனுப்பணும்’... ‘நீங்க கீழ்ப்பாக்கத்துல இருந்தா வர்றீங்க?’

இப்படி கேலி, கிண்டல் வழியாகவே நம் எல்லோரிடமும் ரீச் ஆகியிருக்கிறது சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனை. சென்னையின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றான இதற்கு இப்போது 220 வயது. இன்று, நாம் உளவியல் சிக்கல் என்கிறோம்... மனநல பாதிப்பு என்கிறோம்... ஆனால், அந்தக் கால மக்களுக்குத் தெரிந்ததெல்லாம் ‘பைத்தியம்’ என்பதும் ‘பைத்தியக்கார ஆஸ்பத்திரி’ என்பதும்தான். அப்படியொரு ‘பைத்தியக்கார ஆஸ்பத்திரி’யான இந்த மருத்துவமனை கடந்து வந்த பாதை மிக நெடியது!

‘‘1794 வாக்கில் வாலென்டின் கனோலி என்ற பிரிட்டிஷ் அதிகாரி சென்னை புரசைவாக்கத்தில் சிறு அளவில் துவக்கிய மருத்துவமனைதான் இன்று ஆலமரமாக வளர்ந்திருக்கிறது. தங்கள் குடும்பத்தை விட்டு பல மைல் தூரம் கடல் கடந்து வந்து இங்கு பணியாற்றிய பிரிட்டிஷ் சிப்பாய்களிடையே உளவியல் பாதிப்பு சகஜமாய் இருந்திருக்கிறது.

எனவேதான் இப்படியொரு மருத்துவமனை அத்தியாவசியமாகத் தேவைப்பட்டிருக்கிறது. காலப் போக்கில்தான் இது அரசுடமை ஆக்கப்பட்டு, இந்தியர்களுக்கு சேவை செய்தது’’ எனத் துவங்குகிறார் இந்த மருத்துவமனையின் முன்னாள் சூப்பிரண்டென்ட்டான ஓ.சோமசுந்தரம்.

‘‘இது மருத்துவமனையோடு இணைந்த மனநலக் காப்பகம். ஆரம்பக் காலத்தில் பெரும்பாலும் காவல் நிலையம், நீதிமன்றம் மூலமாக வரும் நபர்கள் மட்டுமே இங்கு பராமரிக்கப்பட்டார்கள். 1950க்குப் பிறகுதான் இங்கு வாலன்டரி வார்டர்ஸ்... அதாவது, காவல்துறை, நீதிமன்றம் வழியாக அல்லாமல் உறவுக்காரர்களே நேரடியாக நோயாளிகளைக் கூட்டி வரும் முறை கொண்டு வரப்பட்டது. இருபது வருடங்களுக்கு முன்பு கூட மனநலம் குறித்த தெளிவான சிந்தனை நம் ஊரில் இல்லை.

அப்படியானால் அந்தக் காலங்களில் எப்படி இருந்திருக்கும்? ‘உங்க மகனுக்கு மனநிலை...’ என ஆரம்பித்தாலே போதும்... ‘அய்யோ, கடைசியில பைத்தியம் பிடிச்சிருச்சா!’ என ஒப்பாரி வைப்பார்கள். பூசாரிகளிடமும் மாந்திரீகர்களிடமும் போய் பேயோட்டிய காலங்களில் இந்த மருத்துவமனையைப் பலரும் இளக்காரமாய் பார்த்ததுண்டு. இங்கே வேலை பார்ப்பதாகச் சொன்னாலே ஏற இறங்கப் பார்ப்பார்கள். நாங்களாவது பரவாயில்லை... லட்சக்கணக்கில் பணம் போட்டு இந்தப் பகுதியில் வீடு கட்டி வந்தவர்களே ‘கீழ்ப்பாக்கம்’ என அட்ரஸ் கொடுக்கத் தயங்குவார்கள்.

‘எந்த சிகிச்சையிலும் அறிவியல் ரீதியிலான அணுகுமுறை காலப் போக்கில் ஜெயித்து நிற்கும்’ என்பதற்கு இந்த மருத்துவமனையே சாட்சி. எங்கெங்கோ சென்று மனநிலை பாதிப்பை சரியாக்க முடியாதவர்கள் கடைசியில்தான் இந்த மருத்துவமனையை நாடினார்கள். இங்கு எனக்கு முன்பிருந்த சூப்பிரண்டென்ட் ஒருவர், மனநிலை பாதிப்புக்கு மூலிகை வைத்தியம் போன்றவற்றையும் பயன்படுத்தி சோதித்தார் எனக் கேள்விப்பட்டேன்.

ஆக, எங்கள் தரப்பிலிருந்து மக்கள் போக்கில் சென்று அவர்களைக் கவரும் முயற்சி நடந்திருக்கிறது. ஆரம்பத்தில் உளவியல் நோயாளிகள் என்றாலே தனியறையில் பூட்டி வைக்க வேண்டும், கட்டி வைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகாரிகளிடம் இருந்தது.

எங்கள் காலத்தில் நோயாளிகளுக்கு அன்பும் சுதந்திரமும் ஒரு வகை மருந்தாகத் தரப்பட்டன. ‘மிகவும் வயலன்ட்’ வகை நோயாளிகளை மட்டும்தான் நாங்கள் பூட்டி வைத்தோம். இப்போது அப்படிப்பட்டவர்களையும் சாதுவாக்க மாத்திரைகள் வந்துவிட்டன!’’ என்கிறார் சோமசுந்தரம். கீழ்ப்பாக்கம் பற்றிய மேலும் சில தகவல்கள் தேனி மருத்துவக் கல்லூரியின் க்ளினிக்கல் சைக்காலஜிஸ்ட் சஃபியிடம் கிடைக்கின்றன...

‘‘அரசு சார்பில் கீழ்ப்பாக்கம் லாக்காக் கார்டனிலிருந்த 66 ஏக்கர் நிலத்தில் இந்தக் காப்பகம் கட்டப்பட்டு, 1871ம் ஆண்டு மே 15ம் தேதி 145 நோயாளிகளுடன் செயல்படத் தொடங்கியிருக்கிறது.

1922ல் ஒரு சிறு மாற்றம். பைத்தியக்கார விடுதி என்ற மோசமான அர்த்தத்தைத் தரும் ‘லூனாட்டிக் அசைலம்’ என்ற பிரயோகம் கைவிடப்பட்டு ‘அரசு மனநலக் காப்பகம்’ என்ற புது நாமம் பெற்றிருக்கிறது இந்த இடம். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான மனநல மருத்துவப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஐம்பதுகளில் மருந்துத் துறையில் ஏற்பட்ட ‘ரசாயனப் புரட்சி’ காரணமாக, புதுப்புது மருந்துகளின் வரவால் விலங்கிடுதல் போன்ற கடினமான முறைகள் கைவிடப்பட்டுள்ளன. மின் அதிர்வு சிகிச்சை முறை, இன்சுலின் கோமா தெரபி போன்ற சிசிச்சை முறைகள் வந்தன. பிறகு தேவைகளையொட்டி விரிவாக்கம் நடைபெற்றது. ஆரம்பத்தில் பிராமண மற்றும் பிரிட்டிஷ் மன நோயாளிகளின் சிகிச்சைக்கு தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் நோயாளிகளுக்கு மட்டும் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஈடுபட சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டது.

நிச்சயம் பல சோதனைகளை இந்த மருத்துவமனை/ மனநலக் காப்பகம் கடந்து வந்திருக்கும். அந்த வழித்தடத்தை முழுதாகப் பதிவு செய்தவர்கள் யாருமில்லை. ஆராய்ந்தவர்களும் இல்லை. மேற்கு உலகில் மனநல மருத்துவம் தனிப்பெரும் துறையாக வளர்ந்ததற்கு துல்லியமான வரலாறு உண்டு.

 இங்கே விழிப்புணர்வே இப்போதுதான் வந்துகொண்டிருக்கிறது. இத்தனை பின்தங்கி யிருக்கும் ஒரு சமூகத்தில் 220 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனை நின்று நிலைத்து போராடி சாதித்திருப்பது நிஜத்திலேயே தலை வணங்கப்பட வேண்டிய சாதனை’’ என்கிறார் அவர்.
இனி, ‘கீழ்ப்பாக்கம்’ என்றால் ஒரு மரியாதை உணர்வு வரவேண்டும்... வரும்!

ஆரம்பத்தில் பிராமண மற்றும் பிரிட்டிஷ் மன நோயாளிகளின் சிகிச்சைக்கு தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் நோயாளி களுக்கு பொழுதுபோக்கு வசதி அளிக்கப்பட்டது!

- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்