மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

உலகில் எல்லா நிகழ்வுகளையும் நம்மை வைத்துத்தான் பார்க்கிறோம். ‘எனக்கு அது பிடிக்கும்’; ‘எனக்கு அது பிடிக்காது’ என அத்தனையும் சுய விருப்பத்தில் இருந்தே தொடங்குகிறது. இது தனி நபருக்கானதாக இருக்கும்போது யாருக்கும் துயரில்லை. ஆனால் ‘இது எனக்குப் பிடிக்காது. அதனால் அதை நீ செய்யாதே’ என அடுத்தவரின் செயல்களில் மூக்கை நுழைக்கும்போதுதான் முரண் முளைக்கிறது.

ஒரு வழிபாடு, சமயக் கொள்கை பிடிக்கிறது எனில் அது தனி விருப்பம். அதை ஒருவர் தனது தலையில் சுமந்து திரிவதில் தவறேதும் இல்லை. ஆனால், தனக்குப் பிடிக்காத ஒன்றின் மீது வெறுப்பு கொள்வது... அது சார்ந்த விஷயங்களை துவேஷத்தோடு விமர்சிப்பது...

எல்லாம் அத்துமீறல். மனிதர்கள் மிகவும் சுலபமாகச் செய்துவிடும் செயல் தனக்குப் பிடிக்காத விஷயத்தின் மீது வெறுப்பு உமிழ்வது. காரண காரியமில்லாது புறம் பேசுவது. தன் தகுதி என்ன என்பதை அறியாது அடுத்தவரின் அழுக்கை சலவை செய்ய முயல்வது. இது மாதிரியான மனிதர்களை எப்படி எதிர்கொள்வது? சாமானியனுக்கு மாத்திரம் இத்தகைய பிரச்னை வருவதில்லை; சந்நியாசிகளுக்கும் வருகிறது.

என்ன ஆயிற்று?

சிதம்பரத்தில் இருந்து சென்னை, ஏழுகிணறு வைத்தியநாத முதலியார் தெருவுக்கு வந்தார் பாம்பன் சுவாமிகள். வீட்டு அன்பர்கள் எல்லாம் சுவாமிகளின் வருகையால் நெகிழ்ந்து நின்றார்கள். ஆனால் ‘முருகன் ஏன் இப்போது இங்கு அனுப்பி வைத்தான்’ என்கிற கேள்வி சுவாமிகளின் மனதில் குமிழ் போல பூத்து நின்றது. மறுநாளே பதில் கிடைத்தது.

வைத்தியநாத முதலியார் தெருவுக்கு அடுத்த தெருவில் இருக்கும் ஒரு நபர், ‘தன் வழிபாடு மட்டும்தான் உன்னதம். மற்றவை எல்லாம் வீண்’ எனப் பேசித் திரிந்தார். அதோடு இருந்தால்கூட பரவாயில்லை.

கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியாரை விமர்சித்தார். நிலையாமையை உலகிற்கு தன் பாடல்கள் மூலம் உணர்த்திய துறவுச் சிம்மம் பட்டினத்தாரை, ‘கல்லாய் சமைந்தவர்’ என சாடிக் கொண்டிருந்தார். செல்வச் செழிப்பில் இருந்தவரை சிவனே அருள் செய்து, காதறுந்த ஊசி கூட கடைசியில் உன்னோடு வராது என உணர்த்தி ஞானம் கொடுத்து நகர்த்திய கதை நாமறிவோம். திருவொற்றியூரில் இருக்கும் ஜீவசமாதி அவர் இருப்பை இன்னும் சொல்கிறது.

உமாபதி சிவாச்சாரியார் எப்பேர்பட்ட மகான் தெரியுமா?

சைவ உலகம், சந்தான குரவர்கள் என்று மெய்கண்ட தேவர், அருள் நந்தி சிவம், மறைஞான சம்பந்தர் மற்றும் உமாபதி சிவம் ஆகியோரைப் போற்றுகிறது. இவர்களில் உமாபதி சிவாச்சாரியார் தில்லையில், தீட்சிதர் மரபில், சம்பு தீட்சிதர் - கௌரி அம்மையார் தம்பதிக்கு கி.பி 13ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார். வேதங்களையும், சிட்சை, கல்பம், வியாகரணம், சந்தஸ், நிருத்தம், ஜோதிடம் என்ற ஆறு அங்கங்களையும் கற்றுத் தேர்ந்தவர். திருக்குறளையும் பன்னிரு திருமுறைகளையும் கரைத்துக் குடித்தவர்.

பதினாறாம் வயதில் இவருக்குத் திருமணம் நடந்தது. வைதீக முறையில் தீட்சைகள் செய்விக்கப்பட்டு, தில்லை நடராஜ மூர்த்திக்கு பூஜைகள் செய்யும் உரிமையும் இவருக்கு கிடைத்தது. சமஸ்கிருத ஞானம் மிக்க இவர், நடராஜர் ஆலய அமைப்பைப் புலப்படுத்துகின்ற ‘குஞ்சிதாங்கிரி ஸ்தவம்’ என்ற சமஸ்கிருத தோத்திர நூலை எழுதினார். அன்றிருந்த சாதிக் கட்டுகளை மீறி, மறை ஞானசம்பந்தரிடம் ஞான தீட்சை பெற்றார். இதனால் அவரை ஊரை விட்டு விலக்கி வைத்தார்கள்.

இது குறித்து கவலையே படாத உமாபதி சிவாச்சாரியார், சைவ சமயத்தில் ஆதி அந்தம் எல்லாம் அறிந்து தெளிந்தார். மறைஞான சம்பந்தரின் முதன்மை சீடராய் உயர்ந்தார். சிதம்பரத்தின் கிழக்கு எல்லையில் ‘கொற்றவன்குடி’ என்னும் பகுதியில் தங்கி, சைவ சித்தாந்த நெறிகளைப் பரப்பினார். அவரிடம் சித்தாந்தம் பயின்றவர்கள் அவருக்கு திருமடம் கட்டித் தந்தார்கள். நாளடைவில் இம்மடம் ‘கொற்றவன்குடி உமாபதி சிவம் மடம்’ என்றானது.

இந்நிலையில் தில்லை அரசனுக்கு உமாபதி சிவாச்சாரியார் பூஜை செய்ய வேண்டிய முறை வந்தது. ஆனால், அவர் இருப்பது கொற்றவன்குடி மடத்தில். தில்லைக் கூத்தன் என்ன செய்தார் தெரியுமா? தில்லை திருச்சிற்றம்பலத்தில் இருந்து கொற்றவன்குடி மடத்தில், உமாபதி சிவத்தின் பூஜையில் எழுந்தருளி காட்சி கொடுத்தார். உமாபதி சிவாச்சாரியாரின் சிவபக்தி கண்டு உலகம் சிலிர்த்தது. ஆடலரசன் அவர் மீது கொண்ட அன்பு கண்டு அகிலம் வியந்தது.

இதோடு விட்டானா ஈசன்?

ஒருமுறை மார்கழி திருவாதிரை திருவிழாவிற்கான கொடியேற்றத்தின்போது தில்லையில் பலமுறை தீட்சிதர்கள் முயற்சித்தும் கொடியேறவில்லை. உமாபதி சிவாச்சாரியார் வந்து ‘கொடிக்கவி’ பாடிய பிறகே கொடியேறியது. பரமன் தனது பக்தனின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்திய உன்னத தருணம் அது.

சிவப்பணிக்காகவே வாழ்ந்து சைவ சித்தாந்தத்தை வார்த்து வளர்த்தெடுத்தவர் இவர். இந்த மகான் ஒரு சித்திரை மாத ஹஸ்த நட்சத்திரத்தில் கொற்றவன்குடி திருமடத்தில் சிவனோடு கலந்தார். ஞானத்தின் உச்சமான இவரை இகழ்ந்து பேசியது பாம்பன் சுவாமிகளை கடுங்கோபம் கொள்ளச் செய்தது.

அப்போது பாம்பன் சுவாமிகள்,
திருநிறைந்த பார்வையினால் தேடரிய மோக்கமதை
உருநிறைந்த ஒரு சாம்பான் என்பாற்கும் ஓர் செடிக்கும்
அருள்நிறைந்தன் றீந்தஅறா அருளாளன் தனை, ஒருவன்

இருள் நிறைந்திங்கு எள்ளியதூஉம் என்கொல்லோ எம்பரனே
பிணமாகிக் கழியுடைம்பை பேரருளால் இலிங்கமெனப்
பணும்தகையோன் உடையாவி எப்பொருளாய்ப் பம்புமென
எணும்தகையில் லாவொருவன் ஏசறுவெண் காடரையோர்
தணிந்தகலா யினரெனவே தாழ்த்தல் என்னோ எம்பரனே

- என இரண்டு பாடல்களை பாடினார். இப்படி உன்னதமான ஞானிகளை தூற்றும் துஷ்டர்களை நீயே பார்த்துக் கொள் என இறையிடம் தண்டனைப் பொறுப்பை வேதனையோடும் சீற்றத்தோடும் ஒப்படைக்கும் இந்த பாடல் திருப்பாவில் 31வது பதிகத்தில் உள்ளது.அன்று அந்தி வேளை. மெல்லிய விளக்கொளி.

பாம்பன் சுவாமிகள் குறிப்பேட்டில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். மெல்ல அடிமேல் அடி எடுத்து வைத்து வந்த முருகன், அவரின் கழுத்தை இறுக கட்டிக் கொண்டான். தோளில் முகத்தை வைத்துக்கொண்டு தாளில் மலரும் பாடலை ரசித்துக் கொண்டிருந்தான். நல்ல பாடலுக்கு ‘அருமை’ என முதுகு தட்டிக் கொடுத்தான்.

‘தனதனன தந்த தந்த
தனதனன தந்த தந்த
தனதனன தந்த தானனா
எனும் சந்தத்தில் ஒரு பாட்டெழுது’ என்று காதில் கட்டளையிட்டான் கந்தன்.
தமிழே சந்தம் சொல்லி பாடச் சொன்னால் வார்த்தை வர யோசிக்குமா என்ன?
அமிர்தமதி னும்சிறந்த அமிர்தநினை கின்ற வின்ப அறிவுடைய துங்கர் நானெனா என அமுதத்தமிழ் எழுதுகோல் வழியே வழிந்து வார்த்தையாய் மலர்ந்தது. இதே சந்தத்தில் மேலும் 9 பாக்களை பாடி நிறைவு செய்தார் சுவாமிகள். இது திருப்பாவில் 81வது பதிகமாக அமர்ந்து சிரிக்கிறது.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் மயிலை, திருவான்மியூர் என தல தரிசனம் செய்து மகிழ்வார். அடிக்கடி திருவொற்றியூர் சென்று பட்டினத்தாரின் ஜீவசமாதியை வணங்குவதை வழக்கமாக்கிக் கொண்டார். அங்கே நாயனார் சுவாமிகள் என ஒரு யோகி இருப்பதை அறிந்து, அவரை தரிசிக்கச் சென்றார். அந்த யோகி கண் மூடி படுத்திருப்பதைக் கண்டு ‘தொந்தரவு செய்ய வேண்டாமே’ எனக் கை குவித்த வண்ணம் அவரை வலம் வந்தார்.

அப்போது அந்த யோகி, ‘மந்தா கினிதந் தவரோ தயனே கந்தா முருகா கருணா கரனே’ என கந்தரனுபூதியைச் சொல்லி சுவாமிகளை ஆசிர்வதித்தார். நாயனார் சுவாமிகளின் யோக சக்தியை வியந்து போற்றினார். ஒருநாள் மந்திர சக்தி வாய்ந்த, ‘அட்டாட்ட விக்ரக லீலை’ எழுதி முடித்துவிட்டு குகனுக்கு நன்றி சொல்லி நிமிர்ந்தவர், முருகனின் முகத்தைப் பார்த்தார். தாமரை முகத்தில் சின்ன வாட்டம்? ஏன் என்று தெரியாமல் தவித்தார், பாம்பன் சுவாமிகள்!

பாம்பன் சுவாமிகள் தரிசனம் கன்னியாகுமரி


கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் நாகர்கோவில் செல்லும் சாலையில் ‘வேல்முருகன் குன்றம்’ கோயில் இருக்கிறது. இங்கு பாம்பன் சுவாமிகளுக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது! முகவரி: வேல்முருகன் குன்றம் திருக்கோயில், 1/53கி முருகன்குன்றம், BSNL அருகில், கன்னியாகுமரி. தொடர்புக்கு: 94867 59363, 94866 80349.

இது சுவாமிகளின் கருணை!

‘‘நான் சிதம்பரத்தில் மளிகைக் கடை வச்சிருக்கேன். மனைவி பெயர் பிரியா. 2009ல் எங்களுக்குக் கல்யாணமாச்சு. ரெண்டு வருஷமா குழந்தை இல்லை. எல்லாம் நார்மல்னு டாக்டர்கள் சொன்னாங்க. எங்க ஊர்ல இருக்கும் பாம்பன் சுவாமிகள் மடத்துல, பசுபதி அய்யா மேல பாம்பன் சுவாமிகள் அருள் வந்து பௌர்ணமி அன்னைக்கு அருள்வாக்கு சொல்வார். போய் கேட்கலாமேன்னு போனோன். ‘பொறுமையா இருங்க. இன்னும் ரெண்டு வருஷம் ஆகும்’னு சொன்னாங்க.

அதே போல 2011ல என் மனைவி கர்ப்பமானாங்க. ஏழாவது மாசத்துலயே கடுமையான உதிரப்போக்கால பாதிக்கப்பட்டு, சென்னையில் அட்மிட் பண்ணோம். என் மனைவியையும் குழந்தையையும் காப்பாத்தித் தர வேண்டியது உன் பொறுப்புன்னு பாம்பன் சுவாமிகளை கெட்டியா பிடிச்சிக்கிட்டேன். அவரோட கருணையால ஆபத்திலிருந்து மீண்டு இன்னைக்கு என் மகன் சரவண சக்திதரனோட நாங்க சந்தோஷமா இருக்கோம். இது அவர் கருணை!’’ என சிலிர்க்கிறார் சீனிவாசன்.

கல்வி தரும் நான்கரைச்  சக்கர பந்தம்

அ(வ)ரவ வரனது கருவ வருகணை
குரவ வரகுக மருவ வருமறை
பரவ வரபத மருவ வருமதி
விரவ வரவிதி திருவ வருதிபொன்
பாம்பன் சுவாமிகள் அருளிய இந்த நான்கரைச் சக்கர பந்தத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்ல, குமரனின் அருளால் கல்வியில் நல்ல தேர்ச்சி கிடைக்கும். முருகன் நிழலாய் தொடர்ந்து காப்பான். வேண்டுவன எல்லாம் தருவான்!

(ஒளி பரவும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்