ராப் என்பது கவியிசை!



ஹிப் ஹாப் தமிழா ராக்ஸ்

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, இனி இசையமைப்பாளர்! ‘சூது கவ்வும்’ சி.வி.குமாரின் அடுத்த படம், சுந்தர்.சியின் ‘ஆம்பள’ என இவர் கீ போர்டுக்காக அடுத்தடுத்து காத்திருக்கின்றன படங்கள்.அடுத்த கட்டம் இப்போதே தெரிகிறது. அச்சு அசல் ஹீரோ மாதிரி யே இருக்கிறார் ஆதி. ‘செல்’லச் சிணுங்கல்களுக்கு குட்டி பதில் சொல்லிவிட்டு, நம்மிடம் அடிக்கடி திரும்பி வருகிறார்...

‘‘ ‘கத்தி’ படத்துல ‘பக்கம் வந்து...’ ராப் பாட்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். எங்க போனாலும் ‘சூப்பர் தலைவா’ன்னு பாராட்டுறாங்க. ஏற்கனவே ‘எதிர்நீச்சல்’ பாட்டு நம்மளை நல்லா கொண்டு போய் சேர்த்தது. ஆனா, நம்ம பூர்வீகம் சினிமா மியூசிக் இல்லை. என் இதயத்தோட ஒட்டியது ராப் பாடல்கள். தமிழ்ல அந்த வகைப் பாடல்கள் அனேகமா இல்லை. கவிதையை இசையில் தொகுத்து வழங்குவதுதான் ராப் இசை. தமிழ்ல ர.சுருக்கமா ‘கவியிசை’ன்னு கூடச் சொல்லலாம்.

ஊர் கோவை. அப்பா, அம்மா கல்லூரி பேராசிரியர்கள். தாத்தா, பாட்டி எல்லாம் தமிழ் வாத்தியார்கள். அதனால தமிழில் ஆர்வம் இருந்துக்கிட்டே இருந்தது. என்னுடைய ராப் பாடல்கள் எல்லாம் ‘மெல்லத் தமிழினி சாகும்’னு இல்லாம, தமிழை யாரும் கை விட முடியாது, தமிழில் பேச மறக்காதீங்க’ன்னு சொல்லும்.

பெரும்பாலும் ‘ராப்’ இசைன்னா குத்துப் பாடல்கள், பெண்களை கேலியும், கிண்டலும் செய்யறது தான் முந்தையப் பழக்கம். தமிழால நான் அதை வேறுபடுத்தினேன். எம்.பி.ஏ படிக்கிற எனக்கு ராப் இசை இடைஞ்சலா இருக்க அப்பா அனுமதிக்கல. ‘என்னைக் கொஞ்சம் சுயமா விட்டுப் பாருங்க’ன்னு வீட்டில் சொல்லிட்டு சென்னைக்கு வந்தேன். அப்போதான் கொஞ்சம் ஜாலியா...

‘கிளப்பில மப்புள திரிகிற பொம்பளை என்னடி நடக்குது

செந்தமிழ் நாட்டுல’ன்னு ஒரு பாட்டை வீடியோவாக்கி ‘யூ டியூப்’ல விட்டேன். சன் மியூசிக்கில் ‘வாடி புள்ள வாடி’ போட்டாங்க. அதுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் ஹிட்ஸ் வந்துடுச்சு. அன்பும், பாசமும் கிடைக்காம போதையில் திளைக்கிறவர்களைப் பத்தி அடுத்து, ‘இறைவா’ன்னு ஒரு வீடியோ போட்டேன். அட்வைஸ் மாதிரி இல்லாம, தோள்ல கை போட்டு பேசுற மாதிரி நம்பிக்கை வார்த்தைகளை அதில் வச்சேன். ‘இனிமே போதை பக்கமே போக மாட்டோம்’னு அதுக்கு எக்கச்சக்க ப்ராமிஸ்.

ஆரம்பத்திலேயே ‘ஆர்குட்’ல ஜீவான்னு ஒரு நண்பன் கெடைச்சான். அப்படியே நம்ம அலைவரிசையில இருக்கிற சென்னைப் பையன். இப்பவும் என்னோட முதுகெலும்பு மாதிரி இருக்கான். நாங்க சேர்ந்துதான் எல்லா ஐடியாவும், இசையும் கோர்க்கிறோம். ஆனால், ஜீவாவுக்கு கூச்சம் அதிகம்.

மேடைக்கு முகம் காட்டாம பின்னாலிருந்து அருமையா உழைக்கிற ஆளு. ஃப்ரண்ட்ஷிப் மாதிரி உண்மையானது எதுவுமில்லை. எங்கோ பிறந்து, நம்ம மனசுக்கு உகர்ந்த, நம்மை மாதிரி கனவுகள் கொண்ட ஒரு நண்பனை அடைஞ்ச பிறகு, இந்த ‘ஹிப் ஹாப் தமிழா’, இப்போ நட்புக்கான அடையாளமாகவும் ஆகிடுச்சு.

எங்களோட இத்தனை வருஷ உழைப்புக்கு, சினிமாவில் வாய்ப்பு வரும்போது புத்துணர்ச்சியா இருக்கு. ஆனா, எங்களுடைய தனிப்பட்ட பிரியத்திற்கான தனி ஆல்பத்தையும் தொடருவோம். நல்ல சினிமாவை தேர்ந்தெடுத்து பண்றோம். சினிமாவுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் ஸ்டைல் மாத்திக்கறோம். இது சுவாரஸ்யமா இருக்கு. எங்க விருப்பம் போலவே, தமிழர் திருநாள் பொங்கல் அன்னைக்குத்தான் எங்க ‘ஆம்பள’ வெளி வருது. முதல் அடியை பார்த்து வைக்கிறோம்...’’

ஹீரோ சான்ஸ் வரவில்லையா?

‘‘எக்கச்சக்க அழைப்பு. ஆனா, ஆர்வம் இப்ப இல்லை. இசையில் இன்னும் போகணும். இசையை ‘கடவுள் மொழி’ன்னு சொல்லுவாங்க. ஒவ்வொரு மனசும் உணர முடியாத ரகசியம். அதை இசைங்கற சாவியால் திறக்கிறவன் கடவுள். இசை தெரிஞ்சவங்களை, கடவுளுக்கு பக்கத்தில் இருக்கிறவங்கன்னு சொல்வாங்க. அதனால, இப்போதைக்கு கடவுள் பக்கத்திலேயே இருப்போம்!’’

- நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்