எங்களிடம் இருப்பது ஒலி வரலாறு!



ஹைதர் கால கலக்கல் கலெக்ஷன்

‘‘தமிழின் முதல் பேசும் படம், ‘காளிதாஸ்’. 1931ல வெளியான அந்தப் படம் இப்போ நம்மகிட்ட இல்லை. 1938ல் வெளிவந்த ‘பவளக்கொடி’தான் தியாகராஜ பாகவதருடைய முதல் படம். ஆனா, அந்தப் படப் பாடல்கள் இன்னைக்கு யார்கிட்டயும் இல்லை. எதையும் முறையா ஆவணப்படுத்துற பழக்கம் நமக்குக் கம்மி.

சினிமா நமக்குக் கொடுத்ததும் நிறைய... அதில் நாம் தொலைச்சதும் நிறைய!’’ - ஆதங்கமாய் ஆரம்பிக்கிறார் குணசேகரன். இதைச் சொல்லும் சகல உரிமையும் இவருக்கு உண்டு. காரணம், 1940 தொடங்கி தமிழில் வெளிவந்த கிடைத்தற்கரிய பழைய பாடல்களை பெரிய அளவில் சேகரித்திருப்பவர் இவர்தான். கோபிச்செட்டிப்பாளையத்தில் இவர் நடத்தி வரும் இசையகத்தின் பெயரே, ‘ஹைதர் காலம்’!

‘‘தமிழில் ‘காளிதாஸ்’ உட்பட ஆரம்ப காலப் படங்கள்ல இசையும் பாடலும்தான் பிரதானம். ஆனா, ஆடியோவுக்கு தனி மெஷின் இருக்கும். படமும் சவுண்டும் பொருந்துற மாதிரி ஓட்டிக் காட்டுறது பெரிய சவால். கோபிச்செட்டிப்பாளையத்தில் இப்ப இருக்கிற பெரியார் திடலுடைய முந்தைய பெயர் வின்சென்ட் மைதானம்.

வெள்ளைக்காரர்கள்கிட்ட இருந்து திரையிடுற மெஷினை வாங்கி ஊர் ஊராப் போய் படம் ஓட்டிக் காட்டிய மனிதர், சாமிக்கண்ணு வின்சென்ட். அவர் படம் திரையிட்ட இடம்ங்கிறதாலதான் அந்தப் பெயர் வந்திருக்கு!” என்ற குணசேகரனிடம் கேசட்டாக, இசைத்தட்டுகளாக இருப்பவை எல்லாமே அரிதான பாடல் தொகுப்புகள்தான்.

‘‘திருப்பூர் பாத்திர சொசைட்டியில வேலை செஞ்சுட்டிருந்தேன். அப்ப ஒரு கடை வாசல்ல ‘கேசட் வாடகைக்கு’ங்கிற அறிவிப்பைப் பார்த்தேன். 30 ரூபாய் அட்வான்ஸ். ஒரு நாளைக்கு ஒரு கேசட்டுக்கு ஒரு ரூபாய் வாடகைன்னு சொன்னாங்க. இது நல்ல தொழிலா இருக்கேன்னு நினைச்சுத்தான் 1981ல இந்தக் கடையை ஆரம்பிச்சேன். பழைய காலத்து கலெக்ஷன்ஸ் எனக்குப் பிடிக்கும்கிறதால ‘ஹைதர் காலம்’னு பேர் வச்சேன். கவிஞர் கண்ணதாசன், ‘கன்னியின் காதலி’ங்கிற படத்தில் எழுதின, ‘கலங்காதிரு மனமே’ங்கற பாடல்தான் அவரோட முதல் பாட்டு.

அது எங்க தேடியும் கிடைக்கலை. பத்து வருஷமா தேடி அலைஞ்சு, கடைசியில மதுரை பக்கம் ஒரு மைக் செட்காரர்கிட்ட அதை வாங்கினேன். 1990லயே அந்தப் பாட்டுக்கு ஆயிரம் ரூபாய் விலை கொடுத்தேன். இதெல்லாம் வெறும் சினிமா பாட்டு இல்ல... நம்ம பாரம்பரியம். இதுக்காக எவ்வளவு அலைஞ்சாலும், எவ்வளவு செலவு பண்ணாலும் தப்பே இல்லைன்னு நினைப்பேன். இப்படித்தான் தமிழ்நாட்டுல பல ஊர்களுக்கும் போய் பல அரிய பாடல்களை சேகரிச்சேன்’’ என்று குவிந்து கிடக்கும் இவரது சேகரிப்புகளை பெருமையுடன் காட்டுகிறார்.

‘‘பாட்டுகள் மட்டுமில்ல... எங்க பகுதியில எங்க அரசியல், இலக்கியக் கூட்டம் நடந்தாலும் அந்த மேடைப் பேச்சு காத்தோட போயிடக் கூடாதுன்னு அதை ரெக்கார்டு பண்ணுவேன். கலைஞர், எம்.ஜி.ஆர், புலவர் கீரன், கி.வா.ஜகந்நாதன், ஈ.வெ.கி.சம்பத், கோவை மணியன்னு பலருடைய மேடைப் பேச்சுக்களை ரெக்கார்டு பண்ணியிருக்கேன்.

 கோயில்கள்ல பாடுற மங்கல வாழ்த்து, வாக்குச் சொல்றது, இறப்பு வீட்டுல பாடுற ஒப்பாரி... இதெல்லாம் தவிர, ‘பொன்னர் சங்கர்’, ‘வள்ளி திருமணம்’, ‘நல்ல தங்காள்’, ‘அரவான் களப்பலி’ன்னு பல தெருக்கூத்து களையும் பதிவு பண்ணி வச்சிருக்கேன்’’ என்கிறவர், இப்போதும் இதையெல்லாம் தேடி வருகிற மனிதர்கள் இருப்பதாகச் சொல்கிறார்.

‘‘பழைய பாடல்கள்ல ஆய்வு செஞ்சு முனைவர் பட்டம் வாங்குறதுக்காக பல மாணவர்கள் எங்க இசையகத்தைத் தேடி வந்திருக்காங்க. 20 வருஷத்துக்கு முன்னாடி, ஒருத்தர் வந்தார். கர்நாடக மாநிலம் சிக்மகளூர்ல அவர் பில்டிங் கான்ட்ராக்டரா இருந்தப்போ இலங்கை வானொலியில் ‘ஏன்’ படத்துல இருந்து எஸ்.பி.பி பாடின தத்துவப் பாடலைக் கேட்டிருக்கார். அதை மறுபடி யும் கேட்கணும்ங்கிற ஆசையோட பல இடங்கள்ல தேடியிருக்கார்... கிடைக்கலை. ஒரு கட்டத்துல, ‘அந்தப் பாடல் வேணும்’னு இலங்கை வானொலிக்கே கடிதம் எழுதியிருக்கார்.

இலங்கைக்கு கடிதம் எழுதுனதால புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரோன்னு அவரை விசாரிக்கிற அளவுக்கு போயிடுச்சு விஷயம். அப்புறம் தற்செயலா இந்தப் பக்கம் வந்தவர், அந்தப் பாடலைப் பதிவு பண்ணிக்கிட்டுப் போனார்.

இப்படி ஆர்வமுள்ளவங்க மட்டுமில்லாம, கே.ஆர்.விஜயா, சில்க் ஸ்மிதா, செல்வராக வன், சுந்தர்.சி, நெப்போலியன், பாண்டு, மன்சூர் அலிகான்னு பல சினிமா பிரபலங்கள் கூட எங்களைத் தேடி வந்திருக்காங்க’’ என்கிற குணசேகரன், தனது இசையகத்தின் முகப்பில் தினமும் ஒரு புதிய சிந்தனையை கரும்பலகையில் எழுதி வைக்கிறார்.

‘‘நம்ம சிந்தனை மட்டுமில்ல... சில சினிமா தகவல்களையும் அதில் சேர்த்து எழுதறேன். அந்தக் கால சினிமா பத்தி நான் தெரிஞ்சிக்கிட்டு பிரமிச்ச தகவல்கள்தான் எல்லாம். இப்ப பத்து வருஷமா தான் இதை எழுத ஆரம்பிச்சேன். ஒருநாள் இதை நான் எழுதாம விட்டாக்கூட, ‘ஏன் எழுதலை?’ன்னு கேக்குற அளவுக்கு இதுக்கு வாசகர்கள் கூடிட்டாங்க. இந்தப் பக்கம் கார்ல போற ஆபீஸர்கள் கூட ஒரு நிமிஷம் காரை நிறுத்தி, இதைப் படிச்சுட்டுத்தான் போவாங்க’’ என்கிறார் அவர் துள்ளலாக.

‘ஹைதர் கால’த்தை தற்போது குணசேகரனின் மகன் தியாகுவும் இணைந்து நிர்வகிக்கிறார். ‘‘அப்பாவோட கலெக்ஷன்ஸ் எல்லாம் கேசட் வடிவிலதான் இருக்கு. அப்படியே இருந்தா அது பூஞ்சை பிடிச்சி அழிஞ்சிடும். காலத்துக்கும் தொழில்நுட்பத்துக்கும் தகுந்த மாதிரி நாமும் மாற வேண்டாமா? அதான், இப்ப எல்லாத்தையும் டிஜிட்டலா கன்வெர்ட் பண்ணிட்டிருக்கேன். மதராஸ் மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ன்னு பெயர் சூட்டின பிறகு, அதுக்கான காரணத்தை விளக்கி அண்ணா பேசிய மேடைப் பேச்சு எங்ககிட்ட இருக்கு.

கிட்டத்தட்ட நம்ம வரலாறே ஒலி வடிவுல எங்ககிட்ட இருக்குன்னு சொல்லலாம். இது மாதிரியான சேகரிப்புகள் காலாகாலத்துக்கும் பாதுகாக்கப்படணும் என்பது தான் எங்க குறிக்கோள்’’ என்றார் தியாகு உறுதியோடு!கடை மட்டுமல்லாது, இந்த உணர்வும் அடுத்த தலைமுறைக்கு போய்ச் சேர்ந்திருப்பது நிம்மதி!

மதராஸ் மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ன்னு பெயர் சூட்டின பிறகு, அதுக்கான காரணத்தை விளக்கி அண்ணா பேசிய மேடைப் பேச்சு எங்ககிட்ட இருக்கு.

கி.ச.திலீபன்
படங்கள்: ஆர்.ஜெய்.ராஜா