ஸ்கிரிப்ட்தான் இப்ப ஹீரோ!



நாடகக் கலைஞர்களின் சினிமா

‘‘ஜிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் முதல் சினிமா, எங்களோட ‘குற்றம் கடிதல்’தான். அதுமட்டுமில்ல... ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ஆரண்யகாண்டம்’ படங்களுக்கு அப்புறம், மும்பை திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் தமிழ்ப் படமும் இதுதான்!’’ - பெருமிதம் காட்டுகிறார் இயக்குநர் பிரம்மா ஜி. அடிப்படையில் வீதி, மேடை நாடகக் கலைஞரான இவர் தனது படத்தில் முழுக்க முழுக்க பயன்படுத்தியிருப்பதும் வீதி, மேடை நாடகக் கலைஞர்களைத்தான்!

‘‘அவார்டுக்கான ஆர்ட் ஃபிலிமா இது?’’

‘‘அச்சச்சோ... அப்படியெல்லாம் சொல்லி, இதை ஒரு வட்டத்துக்குள்ள அடக்கிட விரும்பல. ஆனா, சப்ஜெக்ட் மேல இருக்கற நம்பிக்கையில் எல்லா ஃபெஸ்டிவலுக்கும் அனுப்புறோம். இது சீரியஸான படம் இல்லைங்க. அதே மாதிரி மேடை, வீதி நாடகக் கலைஞர்கள் பத்தின கதையும் இல்லை. இது ஒரு த்ரில்லர் டிராமா. திருக்குறள்ல 44வது அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களும் ‘குற்றம் கடிதல்’ பத்தி சொல்லியிருக்கு.

‘கடிதல்’னா தவிர்த்தல், கண்டித்தல்னு அர்த்தம் இருக்கு. வெவ்வேறு வாழ்க்கைத் தரத்தில் உள்ள மனிதர்களின் சூழ்நிலைகள் இந்தச் சமூகக் கட்டமைப்பினால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுதுன்னு ரசிக்கிற மாதிரி சொல்லியிருக்கேன். ஒரு இடத்தில் கூட அட்வைஸ் தொனி இல்லை. நம்ம எதிர் வீடு, பக்கத்து வீட்டுல உள்ள ஆட்களாக கேரக்டர்கள் தெரியணும்... அதுக்காகத்தான் மேடை நாடக நடிகர்களை செலக்ட் பண்ணினேன்!’’

‘‘நாடகம் டு சினிமா... எப்படி வந்தீங்க?’’

‘‘என்னோட பூர்வீகம் திருநெல்வேலி பக்கம் சங்கரன்கோவில். சென்னை லயோலாவில்தான் படிச்சேன். படிக்கும்போதே காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல கலந்துக்கிட்டு விருதுகள் நிறைய வாங்கியிருக்கேன். மீடியாவில் வேலை பார்த்திருக்கேன். சோஷியல் வொர்க்கர். தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டியில வேலை பார்த்திருக்கேன்.

 சமூக விழிப்புணர்வு குறித்து நிறைய குறும்படங்கள், டாக்குமென்டரிகள் இயக்கி, விருதுகள் வாங்கியிருக்கேன். இந்தப் படத்தை ஜே.எஸ்.கேவோடு தயாரிக்கும் கிறிஸ்டி, என் நெருங்கிய நண்பர் என்பதால், எனக்கு
இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. விறுவிறுன்னு ஷூட்டிங் முடிச்சிட்டோம். அடுத்த மாசம் ரிலீஸ் ஆகலாம்...’’

‘‘முழுக்க முழுக்க புதுமுகங்களை நம்பியிருக்கீங்களே..?’’

‘‘கதையில ரெண்டு வகை இருக்கு. ஒண்ணு, சம்பவங்களின் கோர்வையை மேம்போக்கா சொல்றது. இன்னொரு ரகம், ஆழ்மனதில் ஏற்படும் உணர்வுகளைச் சொல்வது. இந்த ரெண்டையும் சரிசமமா வச்சு, ஸ்கிரிப்ட் பண்ணியிருக்கோம்.

 ஸோ, இதுல ஸ்கிரிப்ட்தான் ஹீரோ. இப்போ பாருங்க... ஆர்ட்டிஸ்ட் யாரு, டெக்னீஷியன் யாருன்னெல்லாம் பார்க்காம பல ஸ்கிரிப்ட்கள் ஜெயிச்சிருக்கு. இப்போ மக்கள் எவ்வளவு பெரிய ஹீரோவா இருந்தாலும், கதை நல்லா இல்லைன்னா சட்டையைப் பிடிச்சுக் கேள்வி கேக்குறாங்க. அந்த நம்பிக்கையிலதான் இறங்கியிருக்கோம்.

இப்படிப்பட்ட ஸ்கிரிப்ட்டுக்கு யதார்த்தமான ஆட்கள்தான் வேணும். எல்லாருமே புதுமுகங்கள் என்பதால, அவங்களை கேரக்டர்களாகவே வாழ வச்சிருக்கோம். அதுதான் படத்துக்கு ப்ளஸ். ஹீரோ சாய்ராஜ்குமார், ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல படிச்சவர். ஹீரோயின் ராதிகா பிரஷிதா, தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். இந்தப் படத்துக்குப் பிறகு இதில் நடிச்ச நாடகக் கலைஞர்கள் எல்லாருக்குமே பெரிய பிரேக் கிடைக்கும்னு உறுதியா சொல்வேன். சென்னையில 120 லொகேஷன்கள்ல படமாக்கியிருக்கோம்.

அஜய்னு ஒரு பையன்... அரசு குழந்தைகள் இல்லத்துல படிக்கிறான். ஒரு நாடகத்துல அவனைப் பார்த்தேன். ரொம்ப மெயின் கேரக்டர்ல அவனை நடிக்க வச்சிருக்கேன். மனோஜ் பரமஹம்சாவின் அசோசியேட் மணிகண்டன் ஒளிப்பதிவு, லெனினின் உதவியாளர் சி.எஸ்.பிரேம் எடிட்டிங், இசைக்கு சங்கர் ரங்கராஜன்...

இப்படி எல்லாமே புதுமுகங்கள். அப்படிச் சொல்றதை விட ஃப்ரெஷ் முகங்கள்னு சொல்லலாம். நடிப்பு, ஒளிப்பதிவு, இசைனு இந்தப் படத்தில் எல்லாமே ஃப்ரெஷ்ஷா இருக்கும். புதுசா இருந்தா தமிழ் ரசிகர்கள் எப்பவும் கை கொடுப்பாங்கங்கற நம்பிக்கையில களம் இறங்கியிருக்கோம். இப்ப பேசுறது எல்லாமே பில்டப்பா தெரியும். படம் வரட்டும்... நிறையவே பேசலாம்!’’

 மை.பாரதிராஜா