சட்டை



‘‘இந்த தீபாவளிக்கு உனக்கு பட்டுப் புடவை, எனக்கு பிராண்டட் ஷர்ட், நம்ம தீபக்குக்கு ஜீன்ஸ்... இன்னும் ஊர்ல அப்பா, அம்மா, தம்பின்னு எல்லாருக்கும் கணக்குப் போட்டுப் பார்த்தா பட்ஜெட் கை மீறுதே!’’

 கவலைப்பட்ட நாராயணன், ‘‘நம்ம வீட்டு வேலைக்காரி குப்பம்மாவுக்கும் புடவை வாங்கித் தரணுமா என்ன?’’ என்றான்.‘‘ப்ச்... நம்ம பர்ச்சேஸ் முடிச்சதும், ஐம்பது, நூறு ரூபாய் மிச்சம் இருந்தா, சாதா புடவை வாங்குவோம். இல்லைன்னா வேணாம்’’ என்று தீர்ப்பு சொல்லிவிட்டுத் திரும்பிய கமலாவின் முகத்தில் ஆச்சரியக்குறி.

‘‘ஏய், தீபக்... என்ன இது புதுச் சட்டை போட்டுட்டிருக்க... எப்படி?’’

அடுக்களையிலிருந்து குப்பம்மா ஓடி வந்தாள்... ‘‘நான்தாம்மா போட்டு விட்டேன். உங்க வூட்டுல அஞ்சாறு வருஷமா வேல செய்யறேன். நான் பார்த்து வளர்ந்த குழந்தை தீபக். அவனுக்கு ஒவ்வொரு வருஷமும் தீபாவளிக்கு ஏதாவது வாங்கித் தரணும்னு ஆசைப்படுவேன். என் கையில ஏது அவ்வளவு காசு? இந்த வருஷம் எப்படியோ கஷ்டப்பட்டு வாங்கிட்டேன். தீபாவளிக்கு நீங்க இதை விட நல்ல துணி போடுவீங்க. அதான் தீபக்குக்கு இன்னிக்கே இதைப் போட்டு விட்டுட்டேன்மா. மறுப்பு சொல்லாதீங்க’’ குப்பம்மாள் சொல்ல, இவர்களுக்கு வார்த்தை வரவில்லை.           
       
சாயம் வெ.ராஜாராமன்