மத்தாப்பு



‘‘சந்தோஷ்... என்ன இது? மத்தாப்பு மட்டும் வாங்குன்னு எவ்வளவு சொன்னேன்... கேக்காம இப்படி ஆட்டம்பாம், லக்ஷ்மி வெடின்னு வாங்கியிருக்கியே. சாந்தா, நீயும்தானே கடைக்குப் போனே... அறிவில்லையா? பிஃப்த் படிக்கறவனுக்கு ஆட்டம்பாம், ராக்கெட்!’’ - கோபத்தில் வெடித்தான் கதிரவன்.

அவனுக்கு நேரமில்லாததால் காலையில்தான் பணம் கொடுத்து மனைவியையும் மகனையும் பட்டாசு வாங்கிக் கொள்ளச் சொன்னான். மாலையில் வந்து பார்த்தால் அவன் விதித்திருந்த சட்ட திட்டங்கள் எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை.

சின்னப் பையன்... வெடி வைக்கிறேன் என்று கை, காலில் பட்டுவிட்டால் என்ன செய்வது? இருவரையும் கண்டபடி திட்டிவிட்டு குளிக்கப்போனான் கதிரவன்.குளித்து முடித்து தலை துவட்டியபடியே பால்கனிக்கு வந்தான். கட்டிடக் காவலாளியின் பையன்கள் வெடி வெடித்துக்கொண்டிருந்தனர். சந்தோஷ் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். கதிரவனுக்கு சங்கடமாய்ப் போய்விட்டது.

‘‘இவங்களைப் பார்த்துத்தான் நீயும் வெடி வாங்கினியா?’’ - சமாதானத் தொனியில் செல்லமாகக் கேட்டான் மகனிடம்.‘‘அப்பா... நான் எனக்கு வெடி வாங்கல. எல்லாம் மத்தாப்புதான்!’’‘‘என்னடா உளர்ற..?’’‘‘அதெல்லாம் இவங்களுக்குக் கொடுக்கத்தாம்பா வாங்கினேன். அதைத்தான் வெடிக்கறாங்க. ஏழைங்கப்பா. இவங்க முகத்துல சிரிப்பு மத்தாப்பு பாருங்க!’’ மகனை நினைத்து பெருமைப்பட்டான் கதிரவன்.

சாயம் வெ.ராஜாராமன்