கூடு விட்டு கூடு பாய்கிறேன்!



ஜெயம் ரவி புது ரூட்

‘‘என் சினிமா கேரியர்ல இது ரொம்ப முக்கியமான கட்டம். முன்னாடியெல்லாம் ஒரே படம்... ஒரே கேரக்டர்... அந்த நினைவுகள், அதற்கான ஒரே ஹோம்வொர்க்னு சிம்பிளா இருக்கும். இப்ப ‘ரோமியோ ஜூலியட்’, ‘தனியொருவன்’, சுராஜ் டைரக்ஷன்ல ஒரு படம்னு ஒரே நேரத்தில் மூணு படங்கள் பண்றேன். தினம் தினம் கூடு விட்டு கூடு பாயுற மாதிரி இருக்கு. இதுவும் சந்தோஷம்தான். கோடம்பாக்க இயக்குநர்களின் குட் புக்ஸில் இருக்கிறதில் ரொம்ப சந்தோஷம்’’ - ஜாலியாகப் பேசுகிறார் ஜெயம் ரவி.

‘‘சும்மா ஜில்லுன்னு ஹன்சிகாவோட அள்றீங்க..?’’

‘‘எனக்கு மறுபடி ஒரு ரொமான்டிக் படத்தில் நடிக்கணும்னு ஆசை. ‘பூலோக’த்தில் பார்த்தால் அதிரடியான பாக்ஸர். ஜிம்ல ‘கும்’னு உடம்பை ஏத்தி வச்சிருக்கிற வட சென்னை ஆளு. அதுல என் பேரு, ‘பூலோகம்’. அவனை நீங்க இப்படித்தான்னு சொல்லி வைக்க முடியாது. அதுக்கு என்னை வேற மாதிரி மாத்திக்க வேண்டி இருந்தது. அதற்கான உழைப்பை, வெகுமதியை அந்தப் படத்தில் தெரிஞ்சிக்கலாம். இப்ப நான் பண்ணிக்கிட்டு இருக்கிறது ‘ரோமியோ ஜூலியட்’. பேருக்கு ஏத்த மாதிரி, ஜாலி படம்.

திடீர் மழைக்கு ஒதுங்க இடம் தேடி ஓடும்போது, குறுக்கே குடையோட ஒரு அழகான பொண்ணு ‘வா’ன்னு இழுத்தா எப்படி இருக்கும்? அப்படி ஒரு இளமை விளையாட்டு, ‘ரோமியோ ஜூலியட்’. ஆண் - பெண் உறவுல ரசிக்கக்கூடிய இடங்கள் நிறைய. அதைத் தேர்ந்தெடுத்து ஒரு அருமையான கதை பண்ணியிருக்கார் டைரக்டர் லக்ஷ்மண். எஸ்.ஜே.சூர்யாவின் அசிஸ்டென்ட்னா அதில் ஒரு இளமை துள்ளும்.

காதல் கதைன்னாலும் அதில் எனக்கு மூணு கெட் அப். மும்பையிலிருந்து வந்து ‘எங்கேயும் காதல்’ படத்தில் என்னோடுதான் முதலில் நடிச்சாங்க ஹன்சி. எப்பவும் எங்களுக்குள் சுமுகமான ரிலேஷன்ஷிப் இருக்கும். அதனால் இந்தக் காதல் எல்லாம் நிஜமா, நிழலான்னு கூட உங்களுக்கு சந்தேகம் வரும்!’’

‘‘ஆச்சரியமா இருக்கு. அண்ணன் உங்களை வழி நடத்தினது போய்... இப்ப எந்த வேஷத்திற்கும் சரின்னு ரெடியா நிற்கிறீங்க...’’‘‘ஆரம்பத்தில் மக்களுக்கு நெருக்கமான என் படங்களை அதிகமா இயக்கியது ராஜா அண்ணன்தான். அப்புறம்தான் ஜனநாதன் உலக அரசியல் பேசி, பொருளாதாரம் சொல்லிக் கொடுத்து, சாக்லெட் பாய் இமேஜ் உடைஞ்சது. சில படங்கள் தப்பா பண்ணியிருக்கேன். நினைச்சது சில நடக்காம போயிருக்கு. ரெண்டு வருஷம் உழைச்சி எடுத்த படங்கள் கூட ஓடாம இருந்திருக்கு.

 ஆனா, ‘அதில் ரவி எந்தக் குறையும் வைக்கலை’ன்னு சொல்ற மாதிரித்தான் பண்ணினேன். யாரையும் பழித்தது இல்லை. இன்னும் சொல்லிக்கிற மாதிரி படங்கள் செய்யணும்னு ஆசை. இப்பக் கூட, அண்ணன் டைரக்ட் பண்ற ‘தனியொருவன்’ ரொம்ப வித்தியாசமா இருக்கும்!’’‘‘நல்ல கம்போசிஷன் இருக்கு உங்க படங்களில். எப்படித் தேர்ந்தெடுக்கிறீங்க?’’

‘‘ ‘ரோமியோ ஜூலியட்’ அப்படி ஒரு சுவையில் அமைஞ்சிருந்தது. ‘பேராண்மை’ ரவியை பார்க்கும்போது, ‘ஜெயம்’ படத்தில் இருந்த ரவியை நினைச்சுப் பாருங்க. ரெண்டுக்கும் அவ்வளவு வித்தியாசம். பால் வடிகிற முகத்தில் இருந்துவிட்டு, ‘பேராண்மை’யில் இருந்த கடுமை உங்களுக்குத் தெரிஞ்சதுதான். எப்பவும் என்மேல் எந்த நெகட்டிவ் இமேஜும் வந்துடக் கூடாதுன்னு தெளிவா இருக்கேன்!’’‘‘வில்லனா கூட நடிக்க விருப்பமா?’’

‘‘என்ன சார், நாமெல்லாம் சப்பாணி கேரக்டரை விடவா ஒண்ணு பண்ணிற முடியும்? இல்ல... ரஜினி சார் மாதிரி வில்லன் கேரக்டரை அருமையா பண்ண முடியுமா? நாங்க எல்லாம் சும்மா. எல்லாமே ஏற்கனவே செய்ததோட ஜெராக்ஸ். இப்போ மீடியாவுக்கு எல்லாம் தெரியும். புதுசா பண்ணியிருக்கோம்னு தடபுடலா பெருமைப்பட்டுக்க முடியாது.

 கமல் சாரை படகில் இருந்து தண்ணில தள்ளிவிட்டுட்டு அவ்வளவு இறுக்கத்தோடு, ‘மன வினைகள் யாருடனோ, மாயவனின் விதி வகைகள்’னு எம்.எஸ்.வி குரலில் பாடிட்டுப் போவாரே... அதை இங்கே யாரும் செய்துட முடியும்னு நினைக்கிறீங்க..? நாங்க எல்லாரும் அவங்க செய்ததை திரும்பச் செய்யறோம்... இல்லாட்டி மிச்சம் வச்சதை செய்துகிட்டு இருக்கோம்!’’ ‘‘நீங்க சைலன்ட் காதல் மன்னனாச்சே..?’’

‘‘சேச்சே... அதெல்லாம் சும்மா! ஹீரோயினோட ஒரு சாதாரண ரிலேஷன்ஷிப்தான் படம் முழுக்க ஓடும். படம் முடியிற வரை அவங்களுக்கு பாதுகாப்பாதான் இருப்பேன். நிறைய ஹீரோயின்ஸ் ஷூட்டிங்லயே, ‘அண்ணா’ன்னு கூப்பிட ஆரம்பிச்சிடுவாங்க. நான்தான் ‘தயவு செய்து வெளியே சொல்லிடாதீங்க... படத்தோட கெமிஸ்ட்ரி கெட்டுப் போகும்’னு அதட்டி வைப்பேன். சொல்ல மாட்டாங்க!’’‘‘ஜெனிலியா ரொம்ப ஃப்ரண்டாச்சே...’’

‘‘அவங்க எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஒவ்வொரு புது வருஷம் ஆரம்பிக்கும்போதும் ஜெனிலியா போன் வந்துடும். நிறைஞ்ச மனசா வாழ்த்து சொல்லுவாங்க. வீட்ல யாருக்கும் தெரியாம ஆர்த்தியோட இருந்த காதலைக் கூட முதலில் ஜெனிலியாகிட்டதான் சொன்னேன். அவ்வளவு ஸ்பெஷல்.

மும்பை போனா பார்த்துக்குவோம். அவங்க சென்னைக்கு வந்தாலும் மீட்டிங். ஆர்த்தி ஆரவ்வை சுமந்திருக்கும்போது, ‘மும்பையிலிருந்து உனக்கு என்னென்ன வேணும், சொல்லு’ன்னு ஆர்த்தியைக் கொஞ்சி தீர்த்துட்டாங்க ஜெனிலியா!’’

‘‘எல்லா ஹீரோவுக்கும் நயன்தாரா கூட நடிக்கத்தான் பிரியம். நீங்களும் நடிக்கிறீங்க..?’’

‘‘எனக்கு நயன்கிட்டே பிடிச்சது, அவங்க ஸ்கிரிப்ட்டை தேர்வு செய்கிற அழகு. எத்தனை நாள் கழிச்சு வந்தாலும், ஏத்துக்கிற மாதிரி ஸ்கிரிப்ட்டை செலக்ட் பண்ணுவாங்க. கேரக்டரில் நிப்பாங்க. மத்தபடி அவங்க அழகா இருக்காங்க, டான்ஸ் அருமையாக பண்றாங்கன்னு எல்லாம் சொல்லமாட்டேன்!’’‘‘உங்களுக்கு இண்டஸ்ட்ரியில நிறைய ஃப்ரண்ட்ஸ்
இருக்காங்களே...’’‘‘ஆர்யா, விஷால், ஜீவான்னு பழகுவேன்.

ஆனா, உயிருக்கு உயிரான நட்பெல்லாம் இல்லை. வீட்டுல இருக்கவே டைம் ஒதுக்க முடியலை. சினிமாவில் பெரிய நட்புக்கு எல்லாம் வேலையில்லை. அவரவர்களுக்கு ஆயிரம் வேலை. அதான் உண்மை. பொதுவா நான் எங்கே இருக்கணும், என்னவெல்லாம் சாதிக்கணும்னு எதையும் என் பொறுப்பில் எடுத்துக்கிறதில்லை. ஆரவ், அயான் முகம் பார்த்திட்டு கிடைக்கிற அமைதி தான், என்கிட்ட அடுத்த நாள் வரைக்கும் ஓடுது!’’

நா.கதிர்வேலன்