மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

வாழ்க்கை என்பது வந்து போதல்...
எங்கிருந்து?
தெரியாது.
வந்தவர்களால் சொல்ல முடிவதில்லை.
சென்றவரைக்
கேட்க வழியில்லை.
எங்கிருந்தோ வருகிறோம்
எங்கேயோ செல்கிறோம்
பயணங்கள் நிரந்தரம்.
மரணம் என்பது..?
புதிதின் தொடக்கம்
ஆன்மாவின்
அடுத்த ஆடைக்கான ஆயத்தம்.
இதில் வலி நினைவுகள்...
புறப்பட்டவர்கள்
போட்டுச் செல்லும் கோலம்...
தன்னை உணர்ந்தவர்களுக்கு?
துயரில்லை...
சோர்வில்லை!
பார்த்துக் கொண்டிருப்பது
மாத்திரம்தான் பணி
அதுவும் வெறும் சாட்சியாய்...

நாளை வரப் போகும் செய்தி அறிந்ததாலோ என்னவோ முருகனின் முகத்தில் சிறிதாய் ஒரு வாட்டம். பாம்பன் சுவாமிகளை ஆதுரத்துடன் பார்த்தான் முருகன். ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் அவர்.

பொழுது புலர்ந்தது.பாம்பன் சுவாமிகளின் மனசில் மெல்லிய வருத்தம் மேகமாய் சூழ்ந்திருந்தது. கண்களில் கண்ணீர் தானாக வழிந்தது. காரணம்?

இதுவரை தெரியவில்லை. ஆனால், ஏதோ கடன் தீர்ப்பது போல, சிந்தும் கண்ணீர் தரையில் பட்டு பரவிக் கொண்டிருந்தது. வீட்டின் கீழிருந்து சுவாமிகளின் சீடர் ஒருவர் மெல்ல அறைக்குள் எட்டிப் பார்த்தார்.‘‘சுவாமி... சுவாமி...’’ - மிக சன்னமான குரலில் அழைத்தார்.துண்டால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்ட பாம்பன் சுவாமிகள், ‘என்ன?’ என்பது போல திரும்பி ஏறிட்டார்.

‘‘ஊரிலிருந்து செய்தி வந்திருக்கிறது. சுவாமிகளின் தாயார் குகனடி சேர்ந்...’’ - வார்த்தையை நிறைவு செய்யாமல் குலுங்கினார் அந்த சீடர்.

‘ஓ... அப்படியா? முருகா! இதனால்தான் உன் தாமரை முகம் நேற்றே வாடிக் கிடந்ததா? காரணமில்லாது வந்த கண்ணீருக்கும் இதுதானே காரணம்? புடம் போடுகிறாய். பந்த பாசத்தில் நான் இன்னும் சிக்கிக் கொண்டிருக்கிறேனா என அறிய விரும்புகிறாய். உன்னைத் தெரியாதா எனக்கு?’ என எண்ணிக் கொண்டவர், செய்தி சொன்னவரிடம், ‘‘இது விதி. என் முருகன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான். எப்போது நான் துறவி ஆனேனோ, அப்போதே எனக்கும் பழைய உறவுகளுக்கும் தொடர்பில்லை. நடப்பது நடக்கட்டும்’’ என்றார்.

‘‘சுவாமி, ஆதிசங்கரர் முதல் பட்டினத்தார் வரை பலரும் அன்னைக்கான இறுதிக் காரியங்களைச் செய்திருக்கிறார்களே?’’

‘‘எல்லாம் கந்தனின் விருப்பப்படி நடக்கும்’’ என ஒற்றை வார்த்தை உதிர்த்துவிட்டு கதவை மூடிக் கொண்டார் சுவாமிகள். இப்போது பொறுப்பு முருகனின் தோளில். முறுவலித்தான் முருகன். செங்கமலத்தம்மாளின் ஒளியுடலை சேவல் கொடி தாங்கிய சேவகர்கள் கரம் பிடித்து தேவலோகத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.பாம்பனில்...

எங்கிருந்தோ ஆறு பேர் கிராமத்துக்குள் வந்தார்கள். குமரகுருதாசரின் வீட்டை விசாரித்து வந்தவர்கள், மளமளவென எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார்கள். முருகையா பிள்ளையை முன்னிறுத்தி, மிகச் சரியாக ஈமச் சடங்குகளை முடித்தார்கள்.எல்லாம் முடித்து வீட்டிற்கு வந்த முருகையா பிள்ளை, ‘‘அந்த ஆறு பேர் யார்? அவர்கள் எங்கே?’’ எனக் கேட்டபோது யாரிடமும் பதில் இல்லை. வந்தவர்கள் முருகன் அனுப்பிய மனிதர்கள் என்பதை உணர்ந்து, பாம்பன்வாசிகள் வியந்து போனார்கள். நடந்த அதிசயத்தை சொல்லிச் சொல்லி மலைத்தார்கள்.

 ‘இது குகனின் அருளின்றி வேறென்ன? எல்லாம் குகனே’ என சரணாகதி அடைந்த பிறகு, அந்த பக்தனின் இன்பம் துன்பம் அனைத்துக்கும் அவனே பொறுப்பேற்கிறான். தகவல் அறிந்து பாம்பன் சுவாமிகள் நன்றி சொன்னார், முருகனுக்கு... கண்ணீர்த் துளிகளால்!

பாம்பன் சுவாமிகளுக்கு காசி யாத்திரை செய்ய வேண்டும் என்கிற ஆவல் எழுந்தது. 1902 சுபகிருது வருடம் ஆடி மாதத்தில் காசிக்குப் புறப்பட்டார். முதலில் ஆந்திராவில் கோதாவரி, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களை தரிசித்தார். நதிகளில் நீராடினார். கிருஷ்ணா நதியில் நீராடியவர், ‘‘கிட்டிணி மூழ்கிக் கிடக்க கிடக்க, உடல் உட்டிணம் மாறும்: மனத் தோகையுறும்’’

என அந்த இனிய அனுபவத்தைப் பாடலாக்கினார். வழியெங்கும் சுவாமிகள் பசித்திருந்தபோதெல்லாம் யாராவது உணவு தந்து உபசரித்தார்கள். இதெல்லாம் குமரனின் கருணை என உணர்ந்து மகிழ்ந்தார். பூரி, கொல்கத்தா, கயா என யாத்திரை தொடர்ந்தது.ஓர் அதிகாலை, காசி மண்ணில் கால் பதித்தார். உடலுக்கும் உயிருக்குமான தொடர்பை ஏற்படுத்தி... எதுவும் நிரந்தரமல்ல என்கிற உண்மையை உணர்த்தும் ஆன்மிக பூமி காசி.

ஆதி யோகியான சிவனே இதை உருவாக்கி இருக்கிறார். இங்கு வரும் ஒவ்வொரு ஜீவனின் காதிலும் சிவன் முக்திக்கான மந்திரத்தை ஓதி வீடு பேறு அளிக்கிறான். அன்னை பார்வதியோ அந்த ஆன்மாவுக்கு சாமரம் வீசுகிறாள். அந்த ஆன்மா மிக இலகுவாக தன் தன்மையை உணர்ந்து புறப்படுகிறது.

அப்பேர்ப்பட்ட பூமியில் இப்போது நிற்கிறோம் என்கிறபோதே அவர் ரோமங்கள் சிலிர்த்துக் கொண்டன. அந்த மண்ணை விழுந்து வணங்கினார். இந்த பூமியில் உருகாத உள்ளம் எந்த பூமியிலும் உருகாது என்று சொல்லிக்கொண்டார்.

 மெல்ல கங்கையுள் இறங்கினார். உச்சி குளிர, மூழ்கி எழுந்தார். பல பிறவிகள் தோன்றி மறைந்தன. ஜானவி உடல் தொட்டாள். உள்ளம் தொட்டாள். பல பிறவி கர்மாக்களை கழுவிக் களைந்தாள். இந்த மகாமயானத்திற்கு வந்து இந்த நதியில் நீராடிய மகான்கள் எல்லாம் ஒரு கணம் மனக்கண்ணில் தோன்றி மறைந்தார்கள்.

வெள்ளை எருதில் பரசு தாங்கி பாம்பு மாலையோடு ஜடாமுடி தாங்கி சிவன் சிரித்தான். ஒரு கண்ணில் சூரியன் காட்டினான்; மறு கண்ணில் சந்திரன் ஒளிர்ந்தான். அன்னை அருகில் சிரித்தாள். குமரனும் விநாயகனும் ஆசி சொன்னார்கள். நந்தி மத்தளம் கொட்ட கங்கை நதி பிரவாகத்துக்கு மத்தியில் இந்த அதிகாலை தரிசனம் அவரின் ஆன்மாவை உலுக்கியது. உலகம் எதை எல்லாம் விலக்கிவிடுகிறதோ... எதைத் தீட்டு என்று சொல்கிறதோ... அதை கண் முன்னே காசியும் கங்கையும் புனிதமாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு சிலிர்த்தார். கேதாரக் கட்டம் சென்று சிவனையும் குகனையும் தரிசித்தார்.

அங்கு குமரகுருபர சுவாமிகள் திருமடத்தில் தங்கியவர், ஆடி மாதம் 22ம் நாள் பூச நட்சத்திரம் அன்று குமரகுருபரரை தரிசித்தார். தனக்கு அளித்த உணவை உண்டுவிட்டு தனது அறைக்கு வந்தார். அங்கு தான் உலரப் போட்டிருந்த வெள்ளை வஸ்திரம் காணாதது கண்டு திகைத்தார். அப்போது காவியுடை தரித்த ஒரு பெரியவர் வந்தார். இரண்டு காவியாடைகளை பாம்பன் சுவாமிகளிடம் கொடுத்து வணங்கினார். பாம்பன் சுவாமிகள் வியந்துபோய் ‘‘என்ன இது?’’ எனக் கேட்டார்.

‘‘குமரகுருதாசரின் மடம் இது. இளம் வயதிலேயே கந்தர் கலிவெண்பா பாடிய பெரியாரின் பெயருடைய தங்களுக்கு இதைத் தர வேண்டும் என என் ஆழ்மனம் சொன்னதால் இதைக் கொண்டுவந்தேன்’’ எனக் கூறினார் பெரியவர்.

இது குகனின்... குமரகுருபரரின் கட்டளையாகவே ஏற்றுக்கொண்டு, முதன்முதலாக பாம்பன் சுவாமிகள் காவியுடை தரித்தார். காசி யாத்திரை முடித்துக்கொண்டு, சென்னை வந்தார். ‘‘அப்புறம் முருகா?’’ - குகனைக் கேட்டார். ‘‘சொல்கிறேன்’’ என ஒற்றை வார்த்தை உதிர்த்தான் முருகன்!

எல்லாமே சுவாமிதான்!


‘‘எனக்கு மயிலாடுதுறை சொந்த ஊர். படிச்சிட்டு வேலை கிடைக்காம கஷ்டப்பட்டேன். ‘பாம்பன் சுவாமிகள்கிட்ட வேண்டிக்கோ’ன்னு தெரிஞ்சவங்க எல்லாம் சொன்னாங்க. அவரை வேண்டிக்கிட்டு தினமும் சண்முக கவசம் படிச்சேன். 1988 இறுதியில அரசு வேலையே கிடைச்சது. திருமணம் முடிஞ்சு ஒரு மகள், மகன்னு சந்தோஷமா வாழறேன். மகள் பல் மருத்துவம் முடிச்சிருக்கா. மகன் எஞ்சினியரிங் படிக்கிறான்.

போன வருஷம் எனக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அபாயமான காலகட்டத்துல சுவாமிகளின் அருள், எங்களை கவசம் போலக் காத்ததை மறக்கவே முடியாது. எனக்கு எல்லாமே பாம்பன் சுவாமிகள்தான்’’ என நெகிழ்கிறார், உதயகுமார். தற்போது, வட சென்னை அரசு அனல் மின் நிலையத்தில் பணிபுரிகிறார்.

மனக் கவலைகள் நீக்கும் மந்திரம்
திருவா ரெந்தத் தலமுற் றாலுந்
தெய்வந் தொழுதாலும்
பெருவா ரிபடிந் தாலுந் தெய்வப்
பெயர்கள் சொற்றாலும்
மருவா ரளிநக் கடம்பார் மார்பா
மங்கா ரளிநக் கடம்பார் மார்பா
மங்கா வொளியாமுன்
உருவா னதிலே படியா விடினென்
னுள்ளம் படியாதே
-பாம்பன் சுவாமிகள் அருளிய இந்த ‘பதிற்றுப்பத்தந்தாதி பதிக’த்தை தினமும் 12 முறை பாராயணம் செய்ய, மனக்கவலைகள் மாயமாய் மறையும்.

(ஒளி பரவும்)