குட்டிச்சுவர் சிந்தனைகள்!



காலம் என்பது நதி போல ஓடிக்கொண்டே இருக்கும், வாழ்க்கை என்பது கரை போல மாறிக்கொண்டே இருக்கும்’னு பெரிய பெரிய மகான்கள் சொல்லல... நான்தான் சொல்றேன். தமிழ்நாட்ட, மத்தியில மன்மோகன் ஆட்சிக்கு வந்த 2004ல பார்த்திருப்பீங்க, மோடி ஆட்சிக்கு வந்த 2014ல பார்த்திருப்பீங்க...

ஆனா, யாரு ஆளப்போறாங்கன்னு தெரியாத 2024ல பார்த்திருக்கீங்களா? 2024ல தமிழ்நாடு எப்படி இருக்கும்னு யோசிச்சு இருக்கீங்களா? கற்பனை பண்ணினா ஒண்ணரை டன் கவுனுய்யா... சாரி, கனவுய்யா!

வீட்டில் கண்ணீர் பிரச்னை வருமளவு நாட்டில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்து டான்ஸ் ஆடலாம். ஒவ்வொரு குடும்பத்துக்கும், மாசம் அஞ்சு லிட்டர் தண்ணீரை அரசாங்கமே ரேஷன் கடைகளில் வழங்கலாம். நாடு விட்டு நாட்டுக்கு தங்கத்துக்கு பதிலாய் தண்ணீரைக் கடத்தலாம். கல்யாணத்துக்கு வரதட்சணையாக 4 ஒரு லிட்டர் கேன் தண்ணியும், 3 ரெண்டு லிட்டர் கேன் தண்ணியும் தரப்படலாம்.

‘இன்று ஒரு லிட்டர் தண்ணீரை வங்கியில் டெபாசிட் செய்தால், ஆறு வருடம் கழித்து ஒண்ணரை லிட்டர் தண்ணீர் தருவோம்’ என வங்கிகள் விளம்பரம் செய்யலாம். வீடுகளில் தண்ணீர் குடிக்க டம்ளர்களைப் பயன்படுத்தியது போய், இங்க் ஃபில்லர் புழக்கத்திற்கு வரலாம். அளவுக்கு அதிகமாய் தண்ணீர் வைத்திருப்பவர் வருமானத்திற்கு அதிகமாய் சொத்து குவித்த வழக்கில் கைது செய்யப்படலாம்.

இன்று, பசு மாடு விற்கும் விலைக்கு அன்றைக்கு பால் விலையே இருக்கலாம். இன்று, புல்லட் விற்கும் விலைக்கு அன்றைக்கு பெட்ரோல் விலை இருக்கலாம். இன்று வீடு கட்ட லோன், வியாபாரம் பண்ண லோன் தரும் வங்கிகள், 2024ம் ஆண்டில் டீ குடிக்க லோன், காபி குடிக்க லோன், லன்ச் லோன், டின்னர் லோன், டிபன் லோன் என கடன்கள் தரலாம். கார்களில் பணத்தைக் கொண்டு போய் கையளவு மளிகைச் சாமான்கள் வாங்கி வரலாம். இந்த தீபாவளிக்கு விடிய விடிய வெடி வைக்கும் காசுக்கு, அந்த வருடங்களில் வெடி வைக்க ஊதுவத்திதான் வாங்க முடியும்.
 
விலையில்லா அரிசி, விலையில்லா மிக்சி கிரைண்டர், விலையில்லா ஆடு-மாடுகள் என ஆரம்பித்த இந்த விலையில்லா திட்டங்களை, இனி வரும் அரசாங்கங்கள் விலையில்லா வீடு, விலையில்லா கார், விலையில்லா கல்யாணம், விலையில்லா குழந்தைகள் வரை கொண்டு போய், 2024ல விலையில்லா கிட்னி, விலையில்லா லிவர், விலையில்லா இதயத்தில் நிறுத்தலாம்.

300 ரூபாயிலிருந்து பத்து வருடங்களில் 3000 ரூபாயா உயர்ந்த ஒரு ஓட்டின் விலை, 2024ம் ஆண்டில் எப்படியும் 30000, 40000 ரூபாயா இருக்கலாம். தமிழகத்தில் புதுசு புதுசா உருவாகப்போகும் கட்சிகளின் கொடிகளுக்கு கலர் கிடைக்காமல், விஞ்ஞானிகள் புதிதாய் பல நூறு நிறங்களை உருவாக்கலாம்.

நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகளும், ஜாதிக் கட்சிகளும் முளைத்துவிடுவதால், ‘தமிழ்நாடு அரசியல் லீக்’ என தமிழக கட்சிகளுக்குள் ஒரு போட்டி வைத்து, ஜெயிக்கும் நான்கு அணிகள் மட்டும் தேர்தலில் நிற்குமாறு வழி வகை செய்யப்படலாம்!1994ல் சில லட்சமாக இருந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 2004ல் பல ஆயிரமாக மாறியது,

இப்போ 2014ல் பல நூறுகளாக மாற்றம் கொண்டிருக்கிறது, எப்படியும் 2024ல் மொத்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்க எண்ணில் இருக்குமளவு வளர்ச்சி பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. 2026ல் எங்க ஆட்சிதான் என சரத்குமார்கள், சீமான்கள், நடிகர் கார்த்திக்கள், டி.ராஜேந்தர்கள், ஞானதேசிகன்கள், இளங்கோவன்கள் அப்பவும் நம்பிக்கையோடு சொல்லிக்கொண்டு இருக்கலாம். 2024ம் ஆண்டில் கூட, தாங்கள் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோமா எனத் தெரியாமல் தா.பாண்டியன்கள் தவித்துக்கொண்டு இருக்கலாம்.

2024ம் ஆண்டு தீபாவளிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதுப் படம் ரிலீஸாகலாம். இன்று, ஜோடிகளாக நடிச்சுக்கிட்டு இருக்கும் எதோ ஒரு நடிகையின் மகள் கூட வளர்ந்து அந்தப் படத்தில் தலைவருக்கு ஜோடியாக நடிக்கலாம். இப்போ ஜப்பான், சீனா என பரவிக் கிடக்கும் சூப்பர்ஸ்டாரின் புகழ், வரும் ஆண்டுகளில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், பலுசிஸ்தான், செவ்வாய் கிரகம், யுரேனஸ் என மேலும் பரவலாம். உலக வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் ஹாலிவுட் படத்தை நம்ம ஷங்கர் இயக்கலாம். சிம்பு நடித்து வெளிவரக் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை 20 டூ 30க்குள் இருக்கலாம்.

2024ம் ஆண்டில் கூட இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் சில பல மெகா சீரியல்கள் முடியாமல் இருக்கலாம். இப்போது இருப்பதை விட ராதிகா மேடமும் ரம்யா கிருஷ்ணனும் இன்னும் இளமையாக குடும்பப் பிரச்னைகளைத் தீர்க்க சீரியல்களில் போராடலாம். ட்வென்ட்டி 20 கிரிக்கெட் போரடித்து, அடுத்து 2/2 ஓவர் மேட்ச்கள் பிரபலம் ஆகலாம். மேட்ச்சுக்கு இடையே விளம்பரங்கள் போடுவது நின்று, விளம்பரங்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெறலாம்.

உலகின் மிக நீண்ட கிரிக்கெட் கிரவுண்டாக காவிரி ஆறு மாறலாம். பாலைவன சண்டைக் காட்சிகள் எடுக்க, காவிரி ஆறு, பாலாறு, அமராவதி ஆறுகள் ஷூட்டிங் வாடகைக்கு விடப்படலாம். இந்த முறை தமிழகத்தின் எல்லா ஆறுகளும் இணைக்கப்பட்டிருக்கும், ஆறுகளாய் அல்ல... சாலைகளாய். விளை நிலங்களை எல்லாம் விலை நிலங்களாய் மாற்றிய காலத்துக்கு குட்பை சொல்லிவிட்டு, மனை கற்களைப் பிடுங்கி விலை நிலங்களை விளை நிலங்களாக்க ஆரம்பித்திருப்பார்கள்.

உசேன் போல்ட் ஓட்டத்தை விட டெக்னாலஜியின் வேகம் அதிகமாய் இருக்கும். ஃபேஸ்புக் வழியாக பொண்ணு பார்த்தல்களும் வாட்ஸப் வழியாக கல்யாணங்களும் அதிகரித்திருக்கும். பேங்க் அக்கவுன்ட் இல்லாதவங்க கூட இருக்கலாம்... ஆனா, ஃபேஸ்புக் அக்கவுன்ட் இல்லாதவங்க இருக்க மாட்டாங்க. கருவில் இருக்கும் குழந்தைகளுக்குக் கூட கேப்ஸூல் அளவுக்கு செல்போன் தர வேண்டி யிருக்கும். கணவர்கள் உடம்புல மனைவிகளும், மனைவிகள் உடம்புல கணவர்களும், குழந்தைகள் உடம்புல பெற்றோர்களும் ஜி.பி.எஸ். வச்சு கண்காணிக்கிற அளவுக்கு தமிழ்நாடு இம்ப்ரூவ் ஆகியிருக்கும்.

சரி சரி, நீங்க ‘இப்படியெல்லாம் ஆயிடுச்சுன்னா என்ன பண்றது’னு சிந்திக்கிறது தெரியுது. நேற்றைய பொழுதை நினைக்க வேண்டாம், நாளைய பொழுதை நம்ப வேண்டாம், இன்றைய நாளைக் கொண்டாடுவோம். இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்!