நோபல் பரிசால் இந்தியாவுக்கு அவமானமா?



மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு இந்தியர் வாங்கிய நோபல் பரிசு விவாதப் பொருளாகி இருக்கிறது. ‘‘குழந்தைத் தொழிலாளிகளை சுட்டிக் காட்டி இந்தியாவை அவமானப்படுத்தும் முயற்சி’’ என சிலர் கொதிக்க, கண்ணியமாக அதை எதிர்கொண்டிருக்கிறார், நோபல் வென்ற கைலாஷ் சத்யார்த்தி.

‘‘நம் பிரதமரே ஒரு குழந்தைத் தொழிலாளியாக இருந்தவர்தான். இளம் வயதில் ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்ற அவர், குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொண்டு நடவடிக்கை எடுப்பார்’’ என்கிறார் அவர்.

இந்தியராகப் பிறந்து, சமாதானத்துக்கான நோபல் பரிசை முதலில் வென்றிருக்கும் பெருமைக்குரியவர் சத்யார்த்தி. அவர் பிறந்த ஊரான மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷாவிலோ, வசிக்கும் டெல்லியிலோ - நோபல் பரிசு வெல்லும் வரை அவரை பலருக்குத் தெரியாது. குழந்தைத் தொழிலாளிகளை மீட்டு, அவர்களது கல்வி உள்ளிட்ட வாழ்வுரிமைகளை உறுதி செய்து, அவர்களையும் மற்ற குழந்தைகளைப் போல இயல்பாக வாழச் செய்யும் பணியில் கடந்த 35 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் சத்யார்த்திக்கு இப்போது வயது 60. அவரது ‘பச்பன் பச்சாவோ அந்தோலன்’ அமைப்பு, இதுவரை 80 ஆயிரம் குழந்தைத் தொழிலாளிகளை மீட்டிருக்கிறது. 

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதுமே, சத்யார்த்தியை பிரதமர் நரேந்திர மோடி அழைத்துப் பாராட்டி விட்டார். ‘‘இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்திருக்கிறீர்கள்’’ என்று! ஆனால், சத்யார்த்தி மீதான விமர்சனங்களுக்குக் குறைவில்லை. காரணங்கள் ஏராளம்:

* தனது நிறுவனத்துக்கு பல நாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் நன்கொடை பெற்றிருக்கிறார் சத்யார்த்தி. குறிப்பாக வட மாநிலங்களில் தரை விரிப்புகள், படுக்கை விரிப்புகள் செய்யும் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்துவதை எதிர்த்து அவர் பிரசாரம் செய்வதற்காக, அதே தொழிலில் இருக்கும் பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் நன்கொடை கொடுத்தன.

* அவரை விட தகுதி வாய்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கும்போது அவருக்கு ஏன் பரிசு?

* தான் ஆதாயம் பெறுவதற்காகவும், நிதி பெறுவதற்காகவும் குழந்தைத் தொழிலாளிகள் பிரச்னையை பெரிதுபடுத்தி, சர்வதேச நாடுகள் மத்தியில் நமக்கு அவமானத்தைத் தேடித் தந்து விட்டார்.

- இப்படி பிரபலங்கள் பலரே சத்யார்த்தி மீது கணை தொடுக்கிறார்கள். ஆனால் அவரை விமர்சனம் செய்பவர்கள்கூட ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம்... அவர் அப்பழுக்கற்ற நேர்மையாளர்! தொண்டு நிறுவனத்துக்காக வாங்கிய நிதியில் ஒரு பைசாவைக் கூட தன் சொந்தத் தேவைகளுக்காக எடுத்துக் கொண்டதில்லை. உண்மையில் அவரோடு இணைந்து நோபல் வாங்கிய மலாலாவைத் தெரிந்த அளவுக்குக்கூட சத்யார்த்தியைத் தெரிந்து வைத்திருக்காததற்கு இந்தியர்கள் தலைகுனிய வேண்டும். 

லட்சக்கணக்கான குழந்தைத் தொழிலாளிகள் இன்னும் இங்கு இருக்கும் அவலத்தை இந்த விருது உணர்த்தியிருக்கிறது. இது அம்பலமானதற்காக ஆத்திரப்படாமல், இதை மாற்ற முடியாததற்கு அவமானப்பட வேண்டும். வறுமையே குழந்தைகள் வேலைக்குப் போகக் காரணம் என ஒருபக்கம் இந்தியா நம்புகிறது. ஆனால், ‘‘குழந்தைகளை படிக்க அனுப்பாமல், வேலைக்கு அனுப்புவதால்தான் இந்தியா வறுமை தேசமாக இருக்கிறது’’ என்கிறார் சத்யார்த்தி.

கடந்த மாதம்தான் உலகிலேயே முதல் நாடாக, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளித்திருக்கிறது பொலிவியா. ‘10 வயதில் குழந்தைகள் வேலைக்குப் போகலாம். ஆனால் பள்ளிக்குப் போய்க்கொண்டு, பெற்றோர் அனுமதியோடு சொந்தமாக ஏதாவது வேலைகள் செய்யலாம். 12 வயதில் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரலாம், ஆனால் படிக்கவும் வேண்டும்’ என்கிறது இந்தச் சட்டம். ‘‘ஐ.நா. வகுத்துள்ள குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரான சட்டம் இது’’ என உலகெங்கும் கூக்குரல்கள் எழுகின்றன.

‘‘ஆயிரக்கணக்கான குழந்தைகள் இங்கு வேலைக்குப் போகிறார்கள். சட்டம் போட்டு அதைத் தடுக்க முடியவில்லை. வேலைக்குப் போகும் குழந்தைகளுக்கு சட்டபூர்வ பாதுகாப்புத் தரவே இப்படிச் செய்தோம். இதனால் குடும்ப வருமானம் உயரும்’’ என்கிறது பொலிவிய அரசு. இப்படிப்பட்ட அபத்தங்களைத் தாண்டி நம் குழந்தைகளை மீட்க நமக்கு ஏராளமான சத்யார்த்திகள் தேவை!

- அகஸ்டஸ்