சகோதரனா நினைச்சார் சிவாஜி!



தில்லானா மோகனாம்பாள் இன்ஸ்பிரேஷன் சகோதரர்கள்

எத்தனை முறை பார்த்தாலும் அலுப்புத் தட்டியதே இல்லை, ‘தில்லானா மோகனாம்பாள்’ படம்! அந்தப் படத்தில் நடிகர் திலகமும், ஏ.வி.எம்.ராஜனும் நாதஸ்வரக் கலைஞர்களாகக் கலக்கக் காரணமாக இருந்தது யார் தெரியுமா? நிஜமாகவே இணை பிரியாமல் வாழ்ந்த நாதஸ்வர சகோதரர்கள் எம்.பி.என்.சேதுராமன்  எம்.பி.என்.பொன்னுச்சாமி இருவரும்தான் அந்தப் படத்துக்கு இன்ஸ்பிரேஷன்.

இதற்காக, சென்னை சென்று சிவாஜிக்கும் ஏ.வி.எம்.ராஜனுக்கும் ஆறு மாதங்கள் பயிற்சியளித்த பெருமை இந்த இசைச் சக்கரவர்த்திகளுக்கு உண்டு. பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இந்தக் கலைஞர்களில் இன்று வாழ்ந்து கொண்டிருப்பவர் ‘கலைமாமணி’ பொன்னுச்சாமி மட்டுமே!

மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் இருக்கிறது பொன்னுச்சாமியின் வீடு. வீட்டின் அருகே இருக்கும் மற்றொரு தெருவிற்கு இவரது தாத்தா எம்.பி.எம்.பொன்னுச்சாமியின் பெயரே சூட்டப்பட்டிருக்கிறது. அவ்வளவு பாரம்பரியமான குடும்பப் பின்னணி. வெள்ளை வேட்டி, சட்டையோடு, நெற்றி நிறைய விபூதி, குங்குமம் சகிதம் நம்மை வரவேற்கிறார் அவர். ‘‘பரம்பரை பரம்பரையா நாதஸ்வரம் வாசிச்சிட்டு வர்ற குடும்பம் எங்களோடது.

நான் 8வது வாரிசு. என் தாத்தா பொன்னுச்சாமிப் பிள்ளை, மைசூர் சமஸ்தானத்துக்கு ஆஸ்தான வித்வான். இசையை ஆய்வு செஞ்சு ‘பூர்வீக சங்கீத உண்மை’ன்னு புஸ்தகமே எழுதியிருக்கார். அவரை இங்க ‘மதுரையார்’னுதான் கூப்பிடுவாங்க. அவரோட பிள்ளைகளும்  அதாவது எங்க அப்பா நடேசப் பிள்ளையும் சித்தப்பா சண்முகப் பிள்ளையும்  எங்களை மாதிரி இணைந்து வாசிச்சவங்க. அவங்களுக்குப் பிறகு அண்ணனும் நானும் சேர்ந்து வாசிச்சோம்.

எங்களுக்குப் பூர்வீகம், திருமங்கலம் பக்கத்துல இருக்கிற சிந்து பட்டி கிராமம். அங்கிருந்து பாட்டன் காலத்துலயே மதுரை வந்துட்டோம். நாலு அக்கா, நாலு தங்கச்சி, ஒரு தம்பின்னு எங்க குடும்பம் பெருசு. நான், ஆறாவது.

அஞ்சு வயசுல இருந்து சாதகம் பண்ண ஆரம்பிச்சிட்டேன். அண்ணனுக்கும் எனக்கும் அப்பாதான் குருநாதர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில்லதான் வாசிப்போம். அங்க எல்லா கால பூஜைகளுக்கும் எங்க நாதஸ்வரம் ஒலிக்கும். அப்ப மகாத்மா காந்தி, பிரதமர் நேரு, ஜனாதிபதிகள் ராஜேந்திர பிரசாத், ராதாகிருஷ்ணன்னு கோயிலுக்கு வர்ற எல்லா பிரபலங்கள் முன்னாடியும் வாசிச்சிருக்கோம்.

ஒன்பது வயசுலயே விருதுகள் தேடி வர ஆரம் பிச்சுடுச்சு. இதனால, அஞ்சாவதோடு என் படிப் பும் முடிஞ்சு போச்சு. ஒரு நாள் அப்படி ரேடியோவுல வாசிச்சதைத்தான் இயக்குநர் ஏ.பி.நாக ராஜன் சார் கேட்டிருக்கிறார். உடனே அவர், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவ னிடமும் சிவாஜியிடமும் சொல்ல, ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்துக்காக வேலை செய்யும்படி கேட்டாங்க.
அது 1967ம் வருஷம்...

யோசிக்காம ஒப்புக்கிட்டு சென்னைக்குப் போனோம். ஆறு மாசம் எல்லாருக்கும் பயிற்சி கொடுத்தோம். எங்க குழுவுல இருந்த தவில்காரர்தான், பாலையா அண்ணனுக்கு தவில் பயிற்சி கொடுத்தார். கூடப் பிறந்த அண்ணன், தம்பி மாதிரி ரொம்ப அன்போடு பழகினார் சிவாஜி. அப்போ, சிவாஜி சாருக்கு பிறந்தநாள். அவர் வீட்டுல வாசிக்கக் கூப்பிட்டார். அங்க, ஆங்கிலோ இந்தியர்கள் சிலர் மேற்கத்திய இசையை வாசிச்சாங்க. நாங்க அதற்கு இணையா, நம்ம இசையை வாசிச்சோம். இதையே படத்துல காட்சியா வச்சார் ஏ.பி.என் சார். படம் வந்த பிறகு நிறைய பாராட்டுகள்.

அப்புறம், நிறைய சினிமா கலைஞர்கள் அவங்க வீட்டு முக்கிய விசேஷங்கள்ல வாசிக்கக் கேட்டாங்க. எம்.ஜி.ஆருக்கு எங்களை ரொம்ப பிடிச்சுப் போச்சு. தொடர்ந்து எங்களுக்கு மரியாதை தந்து கவுரவிச்சார். எங்களுக்கு கலைமாமணி பட்டமும் வழங்கினார். அதேபோல் கலைஞர் ஐயா, முதல்வரா இருந்த சமயம் என்னை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலராகவே நியமிச்சார். அப்புறம், அண்ணன் சேதுராமனுக்கு பத்மஸ்ரீ பட்டம் கிடைச்சுது.

எனக்கு பாரத ரத்னாவிற்கு சமமான ‘ராஜரத்னா’ விருதை முத்தமிழ்ப் பேரவை மூலம் கொடுத்து கவுரவிச்சார் கலைஞர். எல்லாருமே எங்களை அன்பால நெகிழ வைச்சாங்க’’ என உருகுகிறவருக்கு ஐந்து பிள்ளைகள். மனைவி ருக்மணி கார் விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். அதன்பிறகு 2000ல் அண்ணன் சேதுராமனும் இறந்துவிட, நாதஸ்வரம் மட்டுமே துணையாகிப் போயிருக்கிறது பொன்னுச்சாமிக்கு.

‘‘இப்போ எனக்கு 81 வயசாகுது. ஆறு மாசமா வாசிக்கிறதையும் நிறுத்திட்டேன். என் கடைசிப் பொண்ணு மட்டும்தான் இசைத்துறைக்கு வந்தா. அவதான் இசைக் கல்லூரியில பேராசிரியையா இருக்கா. மற்ற யாரும் இசையில முழுசா ஈடுபடல. இப்ப என் மூத்த மகளோட பேரன், ஐ.டி. துறையில இருந்தாலும் நல்லா வாசிக்கிறான். அவனுக்கு நிறைய விஷயங்களைக் கத்துக் கொடுத்துட்டு வர்றேன். வேற யாராவது வந்து சந்தேகம் கேட்டாலும் சொல்வேன்.

இன்றைய கலைஞர்கள் நாதஸ்வரத்தோடு ‘மற்ற’வற்றிற்கும் அடிமையா இருக்காங்க. நாங்க எல்லாம் மூக்குப்பொடி கூட போட மாட்டோம். அவ்வளவு தூரம் கண்ணியமா இருந்து இசையை நேசிச்சோம். சுவர் இருந்தாதானே சித்திரம் வரைய முடியும். அதனால, கலைஞர்கள் தங்களைக் காப்பாத்திக்கணும். அதே மாதிரி, அவங்களை அரசும் காப்பாத்தணும். தமிழகத்துல உள்ள 35 ஆயிரம் கோயில்கள்ல நாதஸ்வரக் கலைஞர்களே இல்லைன்னு ஒரு பத்திரிகை செய்தி பார்த்தேன்.

அந்த இடங்களை அரசு நிரப்பினாலே நிறைய கலைஞர்கள் குடும்பம் முன்னேறும். அதை வச்சு நாதஸ்வரத்துல நிறைய பேர் நல்லா வருவாங்க’’  தன்னலமில்லாத கோரிக்கையோடு முடிக்கிறார் பொன்னுச் சாமி. தமிழகத்துல உள்ள 35 ஆயிரம் கோயில்கள்ல நாதஸ்வரக் கலைஞர்களே இல்லை. அந்த இடங்களை அரசு நிரப்பினாலே நிறைய கலைஞர்கள் குடும்பம் முன்னேறும்...

பேராச்சி கண்ணன்
படங்கள்: பொ.பாலமுத்து கிருஷ்ணன்