கேர் ஆஃப் வட சென்னை



இந்தியாவின் நம்பர்  ஒன் வாள் சண்டை வீராங்கனை!

பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து இப்போதுதான் திரும்பியிருக்கிறார் பவானி தேவி. கையில், ‘ஆசிய சாம்பியன்ஷிப்’பில் ஜெயித்த வெள்ளிப் பதக்கமும் கண்களில் உற்சாகமும் மின்னுகின்றன. டென்னிஸுக்கு ஒரு சானியா, பாட்மின்டனுக்கு ஒரு சாய்னா, ஸ்குவாஷுக்கு தீபிகா, ஜோஸ்னா, குத்துச்சண்டைக்கு ஒரு மேரி கோம்... என அந்த வரிசையில் இப்போது இந்தியாவிற்குக் கிடைத்திருக்கும் வாள் சண்டை வீராங்கனை இவர். தொடர்ந்து மொபைலில் பாராட்டுகள் வந்தபடி இருக்க, நடுநடுவே நம்மிடம் பேசுகிறார் பவானி...

‘‘இந்தத் தடவை ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு ‘ஃபென்சிங்’ (வாள் சண்டை) டீமை அனுப்பாம விட்டுட்டாங்க. அதுல எனக்கு பெருத்த ஏமாற்றம். வாள் சண்டையில மெடல் கிடைக்காதுன்னு நினைச்சுட்டாங்க. நான் இந்தப் போட்டிக்காகவே அமெரிக்கா, இத்தாலின்னு நிறைய நாடுகள்ல பயிற்சி எடுத்துக்கிட்டு இருந்தேன். கடைசியில இப்படியாகிருச்சு. ஆனா, அதுக்கு ஆறுதலா, ‘ஆசிய அண்டர் 23 சாம்பியன்ஷிப்’ போட்டியில கலந்துக்கற வாய்ப்பு கிடைச்சது. அதுல வெள்ளிப் பதக்கம் ஜெயிச்சுட்டேன்’’ என்கிறார் பவானி மகிழ்ச்சி பொங்க.

இந்தப் பிரிவு சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா பெற்றிருக்கும் முதல் பதக்கம் இது. ஏற்கனவே பவானி, 2012ல் காமன்வெல்த் ஜூனியர் வாள் சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றவர். இத்தனைக்கும் மிக எளிமையான குடும்பப் பின்னணிதான். பழைய வண்ணாரப்பேட்டை, மகாராணி தியேட்டர் அருகில் இருக்கிறது பவானி தேவியின் வீடு. டிபிக்கல் வட சென்னை சூழல். அப்பா, ஆனந்த சுந்தர்ராமன் கேட்டரிங் சர்வீஸ் செய்கிறார். அம்மா ரமணி, இரண்டு அண்ணன்கள், இரண்டு அக்காக்கள் என பெரிய குடும்பம். மூன்று அறைகள் கொண்ட சிறிய வீட்டை பதக்கங்களும், விருதுகளுமே பாதி நிறைத்திருக்கின்றன.

‘‘2002ல தமிழக அரசு பள்ளிகள்ல ஃபென்சிங், ஸ்குவாஷ் விளையாட்டுகளை அறிமுகப்படுத்தினாங்க. அப்போ எனக்கு பத்து வயசு. ரெண்டு விளையாட்டுலயும் ஈடுபாடு இருந்துச்சு. ஆனா, ஃபென்சிங் மேலதான் ரொம்ப ஆர்வம். இதுல, ‘எப்பி’, ‘ஃபாயில்’, ‘சபெர்’னு மூணு வகை இருக்கு. எனக்கு ‘சபெர்’ பிடிச்சிருந்தது. ஏன்னா, இதை ஃபாஸ்ட்டா விளையாடணும். மூணு நிமிஷத்துலயே ‘கேம்’ முடிஞ்சிடும். அதுல பெஸ்ட்டா வர ஆரம்பிச்சேன். அப்பாவும், அம்மாவும் ரொம்ப உற்சாகப்படுத்துனாங்க.

2004ல் தேசிய சப்-ஜூனியர் பிரிவுல முதல் தங்கப்பதக்கம் வாங்குனேன். தமிழ்நாட்டுக்கும் அதுதான் முதல் மெடல்’’ - வாள் வீச்சு போல் சர்ரென வந்துவிழுகின்றன பவானியின் வார்த்தைகள். அவரைத் தொடர்கிறார், அம்மா ரமணி. ‘‘பவானி இப்போ உலக அளவுல 77வது இடத்துல இருக்கா. இந்தியாவுல முதல் இடம்.

 ஆனா, இந்த இடத்துக்கு வர ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. இந்த விளையாட்டுக்கு நிறைய பயிற்சி தேவை. டெக்னிக்கா விளையாடணும். ஆரம்பத்துல, இங்கதான் பயிற்சி எடுத்துட்டு இருந்தா. அப்புறம், அனுபவமுள்ள சிலர் சொல்லி, கேரளாவுல இருக்கிற ஒரு அகடமியில சேர்த்துவிட்டேன். இவளோட கோச் சாகர் சுரேஷ் லாகுவும் அங்கேதான் வேலை செய்யறார். அங்கேயே விளையாடிட்டு பி.பி.ஏ படிச்சிட்டு இருந்தா.

இதுக்கிடையில இத்தாலியைச் சேர்ந்த கோச் ஒருத்தர், ‘நல்லா விளையாடுறே... நானே டிரெயினிங் தர்றேன்’னு சொன்னாரு. ஆனா, அங்க போய் விளையாட நிதியுதவி தேவை. எங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் அவளுக்குப் பொருளாதார பிரச்னை வராம பாத்துக்கறோம். முன்னாடி, தமிழக அரசு நிறைய நிதியுதவிகளைச் செய்தாங்க. பவானி இடையில கேரளா போனதால அங்குள்ள அரசு, கேரள சார்பாதான் விளையாடணும்னு சொல்லிடுச்சு.

இதனால, நம்ம மாநில அரசோட நிதியுதவி நின்னுடுச்சு. அதுக்கு அப்புறமும், இத்தாலி, யு.எஸ்னு போய் பயிற்சி எடுக்க வச்சோம். இத்தாலிக்கு போகும்போது இயக்குனர் - நடிகர் சசிகுமார் ஒரு பத்திரிகை பேட்டியைப் பார்த்துட்டு 2 லட்சம் ரூபாய் ஸ்பான்சர் கொடுத்தார். அப்புறம், அமரந்தா என்டர்டெயின்மென்ட்டைச் சேர்ந்த ஜெஃப்ரி தாமஸ் நிறைய ஸ்பான்சர் செய்தார். இதனால இப்போ ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் நல்லா பயிற்சி எடுத்துட்டு வர்றா. நிச்சயமா சொல்றேன் சார்... 2016 ஒலிம்பிக்ல என் பொண்ணு கோல்டு மெடல் வாங்குவா’’ - நம்பிக்கை தெறிக்கிறது அவரின் பேச்சில்!

‘‘பவானி விளையாட்டுல மட்டுமில்ல. படிப்பிலும் கெட்டி. அதான், அவளோட முயற்சிக்கு நான் எந்தத் தடையும் எப்பவுமே சொன்னதில்ல’’ என சந்தோஷமாகக் குறிப்பிடுகிறார் அப்பா ஆனந்த சுந்தர்ராமன். ‘‘இப்போ என்னோட லட்சியமெல்லாம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில ஜெயிக்கணும்ங்கிறது.

 அடுத்து, வாள் சண்டைக்கான காமன்வெல்த் இருக்கு. அப்புறம், ஒலிம்பிக். இப்போ, நான் கேரளாவுல படிப்பை முடிச்சிட்டேன். அதனால, தமிழ்நாடு அரசுதான் எனக்கு உதவணும். அது மட்டும் கிடைச்சா சிறப்பா பயிற்சி எடுத்து, நிச்சயம் ஒலிம்பிக்ல நான் தங்கப்பதக்கம் வாங்கிடுவேன்’’ என்கிறார் பவானி தன்னம்பிக்கையோடு! பவானி இப்போ உலக அளவுல 77வது இடத்துல இருக்கா. இந்தியாவுல முதல் இடம். ஆனா, இந்த இடத்துக்கு வர ரொம்ப கஷ்டப்பட்டுட்டா...

பேராச்சி கண்ணன்
படங்கள்: புதூர் சரவணன்