பெண்களின் வாழ்க்கை வலி நிறைந்தது. சிலருக்கோ வலிகளால் மட்டுமே ஆனது. கலைவாணியின் வாழ்க்கையை வாசிக்கிற ஒவ்வொருவருக்குள்ளும் இறங்குகிறது இனம்புரியாத வலி. முன்பின் தெரியாத ஒரு அற்ப மனுஷியின் சோகமாக நினைத்து அதை ஒதுக்க முடியவில்லை. அந்த சோகம் அத்தனை சீக்கிரம் மனதை விட்டு அகலவும் மறுக்கிறது.
கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘கலைவாணி: ஒரு பாலியல் தொழிலாளியின் கதை’ என்கிற புத்தகம், ஒரு நிஜ பாலியல் தொழிலாளியின் ரத்தச்சரித்திரம்!
உலகமே தெரியாத அப்பாவி கிராமத்துச் சிறுமியான கலைவாணி, ஆண்களின் வஞ்சக உலகில் சிக்கி சின்னாபின்னமாகி, மெல்ல மெல்ல பாலியல் தொழிலாளியாக உருவெடுத்த கதை இது.
அப்பா ஸ்தானத்தில் இருந்து ஆதரிக்க வேண்டிய அக்கா கணவன், மகளாகப் பார்க்க வேண்டிய கலைவாணியை மனைவியாகப் பார்க்கிறான். மகனின் மருத்துவச் செலவுக்குப் பணம் தருவதாகச் சொல்லிக் கூட்டிச் சென்று, எல்லாம் முடிந்ததும் காசு கொடுக்காமலே காணாமல் போகிறான் ஒருவன்.
தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்டு, ஆசையும் மோகமும் தீர்ந்ததும் கழட்டிவிட்டுச் செல்கிறான் இன்னொருவன். இன்னும்... தள்ளுவண்டி சாப்பாட்டுக் கடை வைத்திருப்பவனிலிருந்து, போலீஸ், அரசியல்வாதி, மொழி தெரியாதவன் என கலைவாணியை வஞ்சித்தவர்களின் பட்டியல் புத்தகம் நெடுகிலும்... புத்தகம் கலைவாணியின் சொந்தக் கதை என்றாலும், அவருடன் பயணம் செய்த சக பாலியல் தொழிலாளிகளின் அனுபவங்களும் கண்களையும் மனசையும் கலங்க வைக்கின்றன.
போதை திரவத்தை ஊற்றிக் கொடுத்துவிட்டு, நான்கு பேர் ஒரு பெண்ணை அணுகுகின்றனர். எல்லாம் முடிந்ததும் போதையிலிருக்கும் அந்தப் பெண் வாயில் பச்சை மிளகாயைத் தேய்த்துவிட்டுப் போகிறார்கள். போதை தெளிந்து, அந்தப் பெண் வாய் வீங்கி, எரிச்சலில் துடிக்கிற அந்தக் காட்சி ஆண் வக்கிரத்தின் உச்சம்!
அரைகுறை ஆடையுடன், காம அரக்கன்களின் பிடியில் இருந்து தப்பித்து சுவர் தாண்டி ஓட முயற்சிக்கிறாள் இன்னொரு பெண். வழி விட வேண்டுமென்றால், 5 நிமிடங்களாவது தன்னை சுகப்படுத்தக் கட்டளையிடுகிறான் வாட்ச்மேன். அந்த அவசரத்திலும் அவனது இச்சைக்கு இரையாகி அவள் அங்கிருந்து தப்பித்து ஓடுகிற இன்னொரு காட்சி இதயத்தில் ரத்தம் கசியச் செய்கிறது.
புத்தகத்தின் பக்கங்கள் கரையக் கரைய, மனதில் கனம் ஏறிக்கொண்டே போகிறது. கலைவாணியின் வாழ்க்கையைப் பக்கத்தில் இருந்து கவனித்தவர் போல, சிறிதும் ஆபாசமின்றி, யதார்த்த நடையில் தொகுத்திருக்கிறார் எழுத்தாளர் ஜோதி நரசிம்மன். ‘ஒரு அரசியல் அடியாளின் வாக்குமூலம்’ என்கிற தனது முதல் புத்தகத்தில், அடியாளாக சிறை சென்ற தனது சொந்த அனுபவங்களை வித்தியாசமான பார்வையில் தொகுத்தவர். ‘கலைவாணி’ இவரது அடுத்த படைப்பு.
‘‘எந்தப் பெண்ணும் ‘விபச்சாரி’ங்கிற அடையாளத்தை விரும்பி ஏத்துக்கிறதில்லை. அந்தப் பட்டம் ஆண் சமூகத்தால, பெண்கள் மேல திணிக்கப்படற ஒரு விஷயம். சமூக விரோதச் செயல்கள் ஆண் விஷயத்துல ஒரு மாதிரியாகவும், பெண் விஷயத்துல வேற மாதிரியாகவும்தான் பார்க்கப்படுது.
‘பையன் எப்பவாவது ஃப்ரெண்ட்ஸுங்களோட தண்ணியடிப்பான்... தம்மடிப்பான்’னு ரொம்ப சாதாரணமா சொல்றவங்க, ‘அந்தப் பொண்ணா... வாய் அதிகம்’னு வெறும் வார்த்தைகளாலேயே அவங்க நடத்தையை சீர்குலைக்கிற அவலம்தான் நடக்குது.
சாமானிய மக்களோட வாழ்க்கையைப் பதிவு பண்ணணுங்கிறது என்னோட விருப்பம்.
பாலியல் தொழில்ல இருக்கிற பெண்களைப் பத்தியும் எழுதணும்னு நினைச்சு, ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலமா 3 பேரை சந்திச்சேன். ரெண்டு பேர் மிகைப்படுத்தி, செயற்கையா பேசினாங்க. கலைவாணி மனசுலேர்ந்து பேசறது புரிஞ்சது. அவங்ககிட்ட பேசின பிறகு 150க்கும் மேலான பாலியல் தொழிலாளிகளை சந்திச்சேன்.
அவங்களோட மொழிநடை, சங்கேத வார்த்தைகளை எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து, எல்லாம் உண்மைதானானு சரி பார்த்துட்டுத்தான் எழுத ஆரம்பிச்சேன். ‘கலைவாணி’யோட வெற்றின்னா, அவங்க இன்னிக்கு பாலியல் தொழில்லேர்ந்து விலகி இருக்கிறதுதான்...
இந்தப் புத்தகத்தைப் படிச்சிட்டு யாராவது ஒருத்தர் நல்ல பாதைக்குத் திரும்பினா, அதுதான் என்னோட வெற்றி...’’ என்கிற ஜோதி நரசிம்மன், அடுத்து தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறையும் மற்றும் சலவைத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் எழுதி வருகிறார்.
2003லேயே பாலியல் தொழிலுக்கு விடை கொடுத்துவிட்டு, இப்போது ‘சென்னை சங்கமா’ என்கிற அமைப்பில் பொறுப்பேற்றிருக்கிறார் இந்தப் புத்தகத்தின் நாயகியும், நிஜ மனுஷியுமான கலைவாணி. திருநங்கைகள், ஓரினப் பிரியர்கள் மற்றும் பாலியல் தொழிலாளிகளின் நலன்களுக்குப் போராடும் அமைப்பு இது.
‘‘எல்லா உறவுகளும் இருந்தும் என்னை யாரும் எட்டிக்கூடப் பார்க்கிறதில்லை. முன்ன பலருக்கும் பணம் காய்ச்சி மரமா இருந்தேன். இப்ப நான் யாருக்கும் உபயோகமில்லைங்கிறதால ஒதுக்கிட்டாங்க. அதுக்காக நான் கவலைப்படலை. மகனை இன்ஜினியரிங் படிக்க வச்சிட்டேன். வேலை வாங்கிக் கொடுத்து, நல்ல பொண்ணா கல்யாணம் பண்ணி வச்சிட்டா ஒரு அம்மாவா என் கடமை முடிஞ்சிடும். ஆனா, இந்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்யணும். என்னை மாதிரி ஏமாந்து, வாழ்க்கை இழந்து நிக்கிற பொம்பளைங்க எக்கச்சக்கம்... அவங்க பிள்ளைங்களோட எதிர்காலத்துக்காக இந்த அமைப்பு மூலமா போராடிக்கிட்டிருக்கோம்.
‘இவ்வளவுக்குப் பிறகும், உங்களுக்கு ஆம்பிளைங்கன்னாலே வெறுப்பா இல்லையா’னு கேட்கறாங்க பலர். பத்துல 9 ஆம்பிளைங்க கெட்டவங்களாத்தான் இருக்காங்க. தப்பித் தவறி ஒருத்தன் நல்லவனா இருந்துடறான். ஆனா, அந்த ஒருத்தன் இவனா இருப்பானோங்கிற தேடல்லதான் பல பொம்பிளைங்களும் ஏமாந்துக்கிட்டிருக்காங்க...’’
வலி மரத்துப் பேசுகிறார் கலைவாணி!
ஆர்.வைதேகி
படங்கள்: புதூர் சரவணன்