ஆல் இஸ் வெல்... அடிங்கப்பா பெல்!



கலக்கும் காபி ஷாப்!

உணவு ஸ்பெஷல்

அந்தக் கால ஆராய்ச்சி மணியைத்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். சில்லரை மேட்டருக்கெல்லாம் அடிக்க முடியாத சீரியஸ் மணி அது. ஆனால் இந்த மணி கொஞ்சம் வேற மாதிரி. ‘மாஸ்டர், டீ சூப்பர்‘ என்று சொல்ல மட்டும் பயன்படும் அப்பிரிஷியேட் மணியால் கவனம் ஈர்த்துக்கொண்டிருக்கிறது காபி ஷாப் ஒன்று. அட, சிட்டியில் நடக்கும் அட்ராசிட்டி இல்லைங்க இது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடக்குது இந்தக் கூத்து!

பெஸ்ட் கஃபே... பேரே செம ஸ்டைலாக இளசுகளுக்குக் கொக்கி போடுகிறது. ஓவராலாக பார்த்தால் டீ மற்றும் சின்ன லெவல் சிற்றுண்டிக் கடைதான். ஆனால், கூட்டத்துக்கும் விற்பனைக்கும் குறைவே இல்லை. பிள்ளையார் கோயில் போல, கடையில் அடிக்கடி அந்த மணிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ‘‘எங்களது சேவை உங்களுக்கு பிடித்திருக்கிறதென்றால் இந்த மணியை அடிக்கவும்’’ என்ற அறிவிப்பைப் படித்து விட்டு, வியப்பும் சிரிப்புமாக மணியடிப்பவர்களில் பலர், புதிய வாடிக்கையாளர்கள்தான்.

‘‘நம்ம கடைக்கு இந்த பெல் சத்தம்தான் தம்பி அவார்டு, விளம்பரம் எல்லாமே!’’ என வரவேற்கிறார் கடை உரிமையாளரான ஜக்ரியா. ‘‘நான் பில்டிங் மெட்டீரியல் வியாபாரம் செஞ்சுக்கிட்டிருந்தேன். வியாபாரத்துக்காக அடிக்கடி வெளியூர் போக வேண்டியிருக்கும். டிராவல் சமயம் பல ஊர்கள்ல டீ குடிச்சிருக்கேன். எதுவுமே நல்லா இல்ல. காசு கொடுத்து டீ குடிக்க வர்றவங்களுக்கு மனசு நிறையுற மாதிரி தரமான டீ போட்டு கொடுக்கணும்ங்கிற பொறுப்புணர்ச்சி எல்லா கடைக்காரங்களுக்கும் வேணும்னு தோணுச்சு.

 மத்தவங்ககிட்ட எதிர்பார்க்கிறதை விட நாமளே பண்ணலாமேனு முடிவு பண்ணி, என் சகோதரர்களோட சேர்ந்து 2007ல் இந்தக் கடையைத் தொடங்கினேன். கடைக்கு வர்றவங்க திருப்தியோட வெளிய போறாங்களான்னு தெரிஞ்சுக்கத்தான் இந்த மணியைக் கட்டித் தொங்க விட்டேன்’’ என்கிறார் அவர் பெருமையாக.

பார்க்க சின்ன கடை என்றாலும் சர்வர்களுக்கு சீருடை, குடிக்க கேன் வாட்டர் என ஹை கிளாஸ் நடைமுறைகள். வடை, போண்டா, பஜ்ஜி அனைத்தும் கை படாமல், இடுக்கியால்தான் சப்ளை செய்யப்படுகின்றன. சாதாரண டீ, காபியில் தொடங்கி இஞ்சி டீ, கிரீன் டீ, லெமன் டீ வரை மெனுவில் வைத்திருக்கும் இவர்கள், அவித்த நிலக்கடலை, கொண்டைக்கடலை, பட்டாணி, பாசிப்பயிறு என ஆரோக்கிய அயிட்டங்களையும் ஸ்நாக்ஸோடு சேர்த்துவிட்டார்கள். பஜ்ஜியிலும் பைனாப்பிள் பஜ்ஜி, பேபிகார்ன் பஜ்ஜி தொடங்கி பீட்ரூட், முள்ளங்கி, சவ்சவ் பஜ்ஜி வரை வெரைட்டி காட்டுகிறார்கள்.
 
‘‘நம்ம கடையை செதுக்குறதே கஸ்டமர்ஸ்தான் தம்பி. சுத்தமான தண்ணியை பயன்படுத்துங்கன்னு ஒரு வாடிக்கையாளர் சொன்னதுக்காக இப்ப எல்லா தேவைக்கும் கேன் வாட்டர் பயன்படுத்தறோம். எங்க சேவை பிடிச்சிருக்கவங்க மணி அடிக்கிறதோட மட்டுமில்லாம, எல்லார் கிட்டயும் கடையைப் பத்தி சொல்லி விற்பனையை அதிகப்படுத்தறாங்க. அதனால போன வருஷம் புதுக்கோட்டை பைபாஸ்ல இன்னொரு பிரான்ச் தொடக்கினோம். இப்ப மூணாவது பிரான்ச் தொடங்கவும் வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு!’’ என்கிறார் ஜக்ரியா மகிழ்ச்சியாக.‘டங்’ என ஒரு டைமிங் மணியோசை!

- கி.ச.திலீபன்
படங்கள்: எஸ்.பாண்டியன்