ஆயுளுக்கும் ஆரோக்கியத்துக்கும் ‘நல்லசோறு!’



உணவு ஸ்பெஷல்

சிறுதானிய யூத் மூவ்மென்ட்!

“மனுஷனுக்கும் மண்ணுக்கும் நெருங்கின பந்தம் இருக்கு. அந்தந்த தட்பவெப்பத்துக்கும், ஜீரண மண்டலத்துக்கும் பொருந்துற உணவை மண் விளைவிச்சு மனுஷனுக்குக் கொடுக்குது. நம் மூதாதையர்கள் இந்த பந்தத்தைப் பாடுபட்டுப் பாதுகாத்தாங்க. அதனாலதான் அவங்க ஆரோக்கியமா ரொம்ப நாள் வாழ முடிஞ்சுது.

நாம கடந்த 50 ஆண்டுகள்ல எல்லாத்தையும் இழந்துட்டோம். மண்ணும் மனுஷனும் எதிரெதிர் திசையில நிக்கிற நிலை. நம்ம பாட்டனும், பூட்டனும் சாப்பிட்ட சிறுதானியங்கள் இன்னைக்கு அபூர்வ உணவுகளா மாறிடுச்சு. மண்ணுக்கும் உடம்புக்கும் பொருத்தமில்லாத ஏதேதோ உணவுகள் நம் சமையலறைகள்ல நிறைஞ்சு கிடக்கு... இதையெல்லாம் மாத்த முடியாதாங்கிற ஆதங்கத்துல உருவானதுதான் ‘நல்லசோறு’...’’ - அக்கறையான வார்த்தைகளை ருசியாகப் பேசுகிறார் ராஜமுருகன்.

27 வயதாகிறது. ஆனால், பார்க்க +2 மாணவன் மாதிரி இருக்கிறார். சிறுதானிய உணவுகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியை ஒரு இயக்கமாக முன்னெடுக்கும் அளவுக்கு சமூகப் பொறுப்புணர்வு. 300க்கும் மேற்பட்ட சிறுதானிய சமையல் குறிப்புகளைத் திரட்டி ''நல்லசோறு'' என்ற பெயரில் நூல் எழுதியிருக்கிறார். அத்தனை உணவுகளையும் சமைத்தும் அசத்துகிறார்.

‘‘திருச்செங்கோடு பக்கம் ஆன்றாபட்டிதான் என் ஊரு. அப்பா ராஜமாணிக்கம். அம்மா பெருமாயி. விவசாயக் குடும்பம். பள்ளிக்கூட காலத்துல, அம்மா அடுப்புல சாதத்தை வச்சுட்டு கட்டுத்தறிக்குப் போயிரும். அப்போ அடுப்பெரிக்கிறதுல இருந்து சோறு வடிச்சு இறக்குறது வரைக்கும் எல்லா வேலையும் பாப்பேன். ஆனா, அதுதான் எதிர்காலம்னு யோசிச்சதில்லை.

கம்ப்யூட்டர் சயின்ஸ்லதான் எனக்கு ஆர்வம். ஆனா, அப்ளை பண்ண லேட்டாயிடுச்சு. 'சமையல்தான் உனக்குப் பிடிக்குமே... கேட்டரிங் படி... ஸ்டார் ஹோட்டல்ல வேலை கிடைக்கும்...Õனு ஆசை காட்டினாங்க. சேர்ந்துட்டேன். கேட்டரிங்ல தனிச்சு அடையாளம் தெரியணும்னா வித்தியாசமா ஏதாவது செஞ்சாகணும்... மூலிகை உணவுகள் பத்தி நிறைய கத்துக்கிட்டேன். உணவு மருத்துவம் பத்தியும் படிச்சேன்.

மூலிகைகளைத்தான் நம் மூதாதையர்கள் உணவா பயன்படுத்தியிருக்காங்க. கால், கை வலிச்சா, நாலைஞ்சு முடக்கத்தான் கீரையைப் பறிச்சுப்போட்டு சாம்பார்... சளி பிடிச்சா தூதுவளை ரசம்... நெஞ்சு சளிக்கு முள்ளு முருங்கை அடை... இப்போ, லேசா ஜலதோசம் பிடிச்சா மெடிக்கலுக்கு ஓடி மாத்திரையை வாங்கிப் போடுறாங்க. அந்த மாத்திரை ஜலதோசத்தை நிறுத்துதோ இல்லையோ புதுசா ஒரு தோசத்தை உருவாக்கிட்டுப் போயிடுது.

அந்தக் கால பாரம்பரிய மூலிகைகளையே இளம் தலைமுறைக்கு உகந்த மாதிரி பதார்த்தங்களா மாத்த முடியுமானு முயற்சி பண்ணினேன். சோற்றுக் கற்றாழையில ஜாம், அல்வா, ஊறுகாய், வற்றல்கள் செஞ்சேன். கல்லூரியில ஏகப்பட்ட வரவேற்பு. நிறைய உணவுக் கருத்தரங்குகள்ல பரிசுகளும், பாராட்டும் கிடைச்சுச்சு... பெரிய உத்வேகம் உருவாச்சு. பஜ்ஜி மிளகாய் அல்வா, சர்க்கரையே சேர்க்காத அதிமதுர அல்வா, பனம்பழ மிட்டாய், பனம்பழ அல்வானு நிறைய செய்ய ஆரம்பிச்சேன். எல்லாத்தையும் டாகுமென்ட் செஞ்சுக்கிட்டே வந்தேன்.

இந்த மாதிரி விஷயங்களைத் தேடத்தேட வேறு சில யதார்த்தங்கள் புரியத் தொடங்குச்சு. உரம்போட்டு விளைவிச்ச ஒரு பொருளுக்கும், உரம், பூச்சி மருந்து கலக்காம விளைஞ்ச ஒரு பொருளுக்கும் சுவையில வித்தியாசம் இருந்துச்சு. அந்த வேறுபாட்டை புரிஞ்சுக்க நான் செஞ்ச முயற்சிகள், உணவுக்குப் பின்னுள்ள அரசியலை எனக்கு அறிமுகப்படுத்துச்சு.

சர்க்கரை, உப்புனு இன்னைக்கு வர்ற எல்லா தொற்றா நோய்களுக்கும் உணவும், அது உற்பத்தி செய்யிற முறையும்தான் காரணம்னு புரிஞ்சுச்சு. ஊட்டச்சத்து தொடர்பான ஆய்வுகள்லயும் இறங்கினேன். நாம சாப்பிடுற உணவெல்லாம் வெறும் சக்கை... எது நல்ல உணவுனு தேடத் தொடங்கினபோதுதான் மண்ணுக்கும், மனிதர்களுக்குமான உறவு புலப்பட்டுச்சு. நம்ம மூதாதைங்க நூறு வயசு வாழ்ந்ததுக்குக் காரணம், இந்த மண்ணுல விளைஞ்ச சிறுதானியங்கள்.

இது ருசிக்கு முக்கியத்துவம் கொடுக்கிற அவசர யுகம்... அவங்க நாவுக்கு இணக்கமா சிறுதானியங்களைக் கொண்டு போய் சேர்க்கணும். கிராமம் கிராமமாப் போய் சிறுதானிய உணவு வகைகளைப் பத்தி தகவல் சேகரிச்சேன். நானும் புதுசு, புதுசா நிறைய ரெசிபிகள் செஞ்சு வகைபிரிச்சு வச்சுக்கிட்டேன்.

இதுக்கிடையில, எம்பிஏவும் முடிச்சுட்டேன். பெரிய நிறுவனத்துல நல்ல சம்பளத்துல வேலையும் கிடைச்சிடுச்சு. ஆனால் ஓரிரு மாதங்களுக்கு மேல அந்த வேலையில ஒன்ற முடியலே. வேலையை விட்டுட்டு நண்பர் ஜெகநாதனோட சேந்து விவசாயத்துல இறங்குனேன். 'நல்ல கீரைÕனு ஒரு அமைப்பை ஆரம்பிச்சோம். நிறைய நிலங்களை லீஸுக்கு வாங்கி கீரை சாகுபடி செஞ்சோம். அப்போ அங்கே எல்லாருக்கும் நான்தான் சமையல். சிறுதானிய சமையல்தான்.

தானிய உணவுகளை ருசித்தபடி நடந்த உரையாடல்கள்ல இதை ஒரு இயக்கமா முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தோம். அப்படி உருவானதுதான்'நல்ல சோறு'. சிறுதானியங்களை வீடுகளுக்குள்ள கொண்டு சேர்க்கிறதுதான் இந்த அமைப்போட நோக்கம். இன்னைக்கு மார்க்கெட்டுக்கு வர்ற சிறுதானியங்கள் 'பிராசஸ்'ங்கிற பேர்ல சத்துக்கள் அகற்றப்பட்டு தான் வருது. அதன் தன்மை கெடாம பிராசஸ் பண்ணி மார்க்கெட் பண்ற வேலைகளைச் செய்யிறோம். ரெடிமேட் மாவுகள், தின்பண்டங்கள் செஞ்சு விற்பனை செய்யிறோம்.

சிறுதானிய விற்பனையாளர்களை உற்சாகப்படுத்துறோம். கேட்டரிங்கும் செய்யிறோம். 150 வெரைட்டி உணவுகள், பதார்த்தங்கள் செஞ்சு கொடுக்கிறோம். சிறுதானிய சாகுபடிக்காகவும் வேலை செய்யிறோம். அதுல பல பயன்கள் இருக்கு. குறிப்பா, தண்ணீர் தேவை குறைவு. 1 கிலோ நெல்லை விளைவிக்க 5000 லிட்டர் தண்ணீர் வேணும். 1 கிலோ சிறுதானியத்துக்கு 500 லிட்டர் போதும். உரமோ, பூச்சிக்கொல்லியோ தேவையில்லை. இயல்பாவே இயற்கை விவசாயம் சாத்தியமாகிடும்.

சிறுதானிய உணவு எல்லாருக்கும் பொருந்தும். அலர்ஜி ஏற்படாது. நல்லா ஜீரணமாகும். சர்க்கரையை சக்தியா மாத்தும். உடம்பை வலுவாக்கும். நோய்களைத் தடுக்கிறதோட மருந்தாவும் வேலை செய்யும்!’’ - உற்சாகமாகப் பேசுகிறார் ராஜமுருகன்.ஃபாஸ்ட்டுக்கும் டேஸ்ட் டுக்கும் அடிமையாகிப் போன நமக்கு இப்போ ஆரோக்கியம் தானே மோஸ்ட் வான்டட்! இது ருசிக்கு முக்கியத்துவம் கொடுக்கிற அவசரயுகம்... அவங்க நாவுக்கு இணக்கமா சிறுதானியங்களைக் கொண்டு போய் சேர்க்கணும்.

வெ.நீலகண்டன்