பாசந்தி



‘‘ப்ச்... ‘ஸ்டிரைக்’ இன்னும் நீடிக்கும்னு சொல்றாங்க. இப்பவே அடுப்புல பூனை தூங்காத குறை’’ - வீட்டுக்குள் நுழைந்தபடியே சலித்துக்கொண்டான் சோமு.‘‘குழந்தை வேற, பொறந்த நாள்னு புடுங்குறா’’ என்றாள் சரசு.

‘‘ஆமா, அவ ஹோட்டலுக்குக் கூட்டிட்டு போக அடம்புடிச்சாளேன்னுதான் கைமாத்தா அம்பது ரூவா வாங்கியாந்தேன்’’ - சோமு சொல்லிக்கொண்டிருந்த போதே அவன் மடியில் ஆசையாய் வந்து விழுந்தாள் குழந்தை மானஸா.‘‘அப்பா, புது யூனிஃபார்மையே பர்த்டே டிரஸ்ஸா அம்மா போட்டு விட்டுட்டாங்க. நாம ஓட்டலுக்குப் போகலாம்பா’’ என்றாள் கெஞ்சும் குரலில்.

அந்த ஹோட்டலுக்குள் மானஸாவோடு நுழைந்த சோமுவுக்கு கண்கள் விலைப் பலகையிலேயே இருந்தன. ‘‘ரவா தோசை சாப்புடுறியா கண்ணு?’’ என்றான் கணக்குப் போட்டபடி. பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த ‘பாசந்தி’ மேல் மானஸாவின் கண்கள் இருந்தன.அதுவும் வேணும்னா எங்கே போறது? சோமு தவித்திருந்தபோது, அங்கே வந்த சர்வர் கையில் பாசந்தி. ‘‘எங்க ஹோட்டல் ஆரம்பிச்சு இன்னையோட பத்து வருஷமாகுது சார். அதான், இன்னைக்கு ஹோட்டலுக்கு வர்ற குழந்தைகளுக்கெல்லாம் ஸ்பெஷல் ஸ்வீட் இலவசம்.’’ சோமுவுக்கு வயிற்றில் பால்... இல்லை, பாசந்தி வார்த்தது போலிருந்தது.   
                        
கல்யாண்