ஹோட்டல்!



ஹோட்டலில் சாப்பிட்டுத் திரும்பிய மனைவி கமலாவையும் மகள் ரேவதியையும் முறைத்தார் குருமூர்த்தி.‘‘இன்னும் பத்து நாள்ல கல்யாணம். பொண்ணுக்கு சமையல் சொல்லிக் கொடுக்காம, நீயும் வெளியே சாப்பிட்டு வர்றே. நாளைக்கு புகுந்த வீட்ல அவ என்ன கஷ்டப்படப் போறாளோ!’’‘‘

எல்லாம் அங்கே போய் கத்துப்பா..!’’ - வழக்கமான அம்மாவாக சமாளித்தாள் கமலா.ரேவதி கல்யாணம் முடிந்து ஒரு வாரம் ஆகிறது. மகளைப் பார்க்க ஒரு வித பயத்துடன் அவள் வீட்டுக்குப் போனார் குருமூர்த்தி. ரேவதியின் மாமனார் பரம திருப்தியாக வரவேற்றார்.

‘‘ரேவதி வந்தப்புறம்தான் எங்க வயிறு நிறைஞ்சிருக்கு சம்மந்தி! இப்பதான் ருசியா சாப்பிட ஆரம்பிச்சிருக்கோம்’’ என்றவரின் பேச்சு குருமூர்த்திக்குப் புரியவில்லை.‘‘ஆமாம், சம்மந்தி. என் மனைவிக்கு மூட்டு வலி. சமையல் பண்ண கஷ்டப்படுவா. மாசத்தில் இருபது நாள் ஹோட்டல்தான்.

என் பையன் ரகு கூட்டிட்டுப் போற ஹோட்டல் எல்லாம், மட்டம். ஆனா, ரேவதிக்கு சிட்டியில எல்லா நல்ல ஹோட்டலும் அத்துப்படி. தினம் புது ஹோட்டல். புது வெரைட்டி உணவு. மெனு கார்டைப் பார்க்காமலே ஆர்டர் தர்றா... ரொம்ப புத்திசாலிப்பொண்ணு!’’குருமூர்த்தி இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்.             

வி.சிவாஜி