சமைக்கத் தெரிந்த கணவன் வேணும்!



உணவு ஸ்பெஷல்

பார்வதி ஓமனக்குட்டன்

மிஸ் இண்டியா சவுத்’, ‘மிஸ் வேர்ல்ட் ரன்னர் அப்’, ‘பெஸ்ட் போட்டோஜெனிக்’, ‘பெஸ்ட் கேட்வாக்’ என பியூட்டி பொக்கேவாக பார்வதி ஓமனக்குட்டனை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். தெரியாத ஒன்று... அவர் ஒரு பொம்பளை அஜித். அதாங்க, நம்ம ‘தல’ போலவே பிரியாணி மேக்கிங்ல பாரு செம ஜோரு!‘‘குக்கிங்..? நோ, நோ, ஒன்லி ஈட்டிங்!’’ என்கிற நடிகைகள் மத்தியில், ‘‘குக்கிங் ஒரு தெரபி...’’ எனச் சொல்லி முகம் மலர்கிறார் பார்வதி.

‘‘அம்மாதான் என் சமையல் குரு. என் சின்ன வயசுல, நிறைய கதை சொல்லி எனக்கு ஊட்டி விடுவாங்க. கதை முடியறதுக்கும், தட்டுல சாதம் காலி ஆகறதுக்கும் சரியா இருக்கும். அவங்களால ஐ லவ் குக்கிங்.

ஆனா, என்னால ஒரு நாளைக்கு மூணு வேளை எல்லாம் சமைக்க முடியாது. கிச்சன் போனால் ஓட்ஸ், அப்புறம் முட்டை வெரைட்டீஸ் சமைக்கப் பிடிக்கும். ஒரு நாள், ‘டாடி மம்மி வீட்டில் இல்ல’ன்ற சமயம், என் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் வந்துட்டாங்க. அன்னிக்கு நான் ஃபிஷ் ஃப்ரை, இறால் கறி பண்ணினேன்.

ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் அது சர்ப்ரைஸா போச்சு. எனக்குள்ள இருந்த செஃப்பை நான் கண்டுபிடிச் சது அப்போதான்!’’ என்கிற இந்த ஓமனக்குட்டி, ‘பில்லா 2’க்கு அடுத்து, ‘நம்பியார்’ படத்தில் ஒரு கெஸ்ட் ரோலுக்காக ஆர்யாவோடு ஜோடியாகியிருக்கிறார்.‘‘ஷூட்டிங் சமயத்திலும், ஹோம் மேட் ஃபுட்தான்.

தவிர்க்க முடியாம ஹோட்டலில் சாப்பிட்டாகணும்னா, எண்ணெய், காரம் கண்டிப்பா அவாய்ட் பண்ணிடுவேன். கொஞ்சம் பருப்பு, ஃப்ரூட்ஸ், வொயிட் ரைஸ்தான் என் ஆர்டர் மெனு. சைனீஸ் ஃபுட்னா ரொம்ப இஷ்டம்.

வீட்ல ஒருநாள் சிக்கன் பிரியாணி செஞ்சேன். ஓஹோ... ஆஹா...னு எல்லாருமே அதைப் புகழ்ந்து, சாப்பிட்டாங்க! அன்னில இருந்து எனக்குப் பிடிச்ச உணவுல பிரியாணியும் சேர்ந்துடுச்சு. ஐ மீன்... நான் செய்ற பிரியாணி!’’‘‘அப்ப உங்க வருங்காலக் கணவருக்கு சமைக்கத் தெரியணும்னு கண்டிஷன் போடுவீங்களே..?’’‘‘நிச்சயமா! விதவிதமான வெரைட்டீஸ் ரெடி பண்ணி, சமையல்ல எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும். ஒவ்வொரு டைமும் ஒவ்வொரு டிஷ் பண்ணித் தரணும். நமக்கான மனிதரோட கிச்சன்ல டைம் செலவழிக்கறதை விட சந்தோஷம் வேற என்ன இருக்கு, சொல்லுங்க!’’

பார்வதி ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி ரெஸிபி


தேவையான பொருட்கள்:
பாஸ்மதி ரைஸ்    - 2 கப்
சிக்கன்    - முக்கால் கிலோ
பால்    - அரை கப்
தயிர்    - 1 கப்
பெரிய வெங்காயம்
(நறுக்கினது)    - 3
இஞ்சி-பூண்டு விழுது- ஒன்றரை டீஸ்பூன்
பச்சை மிளகாய்
(அரைத்தது)    - 1 டீ ஸ்பூன்
தக்காளி (அரைத்தது)    - அரை கப்
மிளகாய்த் தூள்    - 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள்    - 1 டீ ஸ்பூன்
சீரகத் தூள் (வறுத்தது)- 1 டீ ஸ்பூன்
கரம் மசாலா    - 2 டீ ஸ்பூன்
ஏலக்காய் தூள்    - அரை டீ ஸ்பூன்
தனியா    - 1 டீ ஸ்பூன்
கொத்தமல்லி    - சிறிதளவு
எண்ணெய்    - 7 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ    - சிறிதளவு
உப்பு    - தேவையான அளவு

செய்முறை: அரைத்த தக்காளி, தயிர், இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, தனியா, உப்பு இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். அதில் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கிளறி ஒரு மணி நேரம் ஊற வைத்துவிடுங்கள். பாலில் குங்குமப்பூவை ஊற வையுங்கள். கொத்தமல்லியை நன்றாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

தவாவில் எண்ணெயைச் சூடாக்கி, வெங்காயத்தை வதக்கி, ஊற வைத்த சிக்கன் துண்டுகளை இதில் சேர்த்து, 15 நிமிடம் வேக வைக்கவும். குக்கரில் 4 கப் தண்ணீர் சேர்த்து அரிசியை வேக வைத்து எடுங்கள். அதில் பாலில் ஊறிய குங்குமப்பூ, ஏலக்காய் தூள் சேர்த்த பின், சமைத்த சிக்கன் கலவையையும் சேர்க்கவும். மேலே நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகளைத் தூவி மெதுவாகக் கிளறி விடுங்கள். டேஸ்ட்டியான ஹாட் சிக்கன் பிரியாணி ரெடி!

- மை.பாரதிராஜா
படம்: சரித்.சி.வர்மா