சகுனியின் தாயம்



தண்டவாளத்தை ஒட்டி குவிக்கப்பட்டிருந்த சரளைக் கற்களின்மீது இளவரசன் குப்புறப் படுத்திருந்தான். பத்தடி தொலைவில் திவ்யா. ரயிலில் அடிபட்டு இறந்ததற்கான அறிகுறிகள் அவர்கள் இருவரது உடல்களிலும் தென்பட்டன. ஆங்காங்கே சிதறிக் கிடந்த ரத்தத் துளிகள் காய்ந்திருந்தன. குழுமியிருந்த மக்கள் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து விலகவில்லை.

சில நாட்களுக்கு முன்னர்தான் அவர்களது கிராமங்கள் சூறையாடப்பட்டிருந்தன. அந்த இழப்பிலிருந்து மீள்வதற்குள் அடுத்த இடி.‘‘இப்ப திருப்தியாடா... ஜீன்ஸ் பேன்ட் - டி ஷர்ட் போட்டுக்கிட்டு உங்க வீட்டு பொண்ணுங்களை எங்க பசங்க மயக்கறதா சொன்னீங்களே! பாருங்கடா... அதே ஜீன்ஸ் பேன்ட்டோடதான் என் பையன் செத்திருக்கான்... இனிமேலாவது நிம்மதியா ஒரு வாய் தண்ணியை குடிங்கடா...’’

மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு இளவரசனின் தாயார் அழுததை தேன்மொழி யால் பார்க்க முடியவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவளையும் அறியாமல் அடிவயிற்றிலிருந்து அழுகை பீறிட்டது. துப்பட்டாவின் நுனியை வாயில் இடுக்கி அதைக் கட்டுப்படுத்தினாள்.திவ்யாவின் பெற்றோர் இன்னும் வந்து சேரவில்லை. அவளைச் சுற்றிலும் தோழிகள்தான் நின்று கதறிக் கொண்டிருந்தார்கள்.‘‘எதுக்காக இப்படி தற்கொலை செய்துக்கிட்டாங்கன்னு தெரியலையே...’’

யாரோ முணுமுணுத்தார்கள். கேட்ட இளவரசனின் தாயாருக்கு ஆத்திரம் வந்தது.‘‘தற்கொலையா..? கொலைய பண்ணிட்டு தற்கொலைன்னு நாடகமா ஆடறீங்க? எதுக்குடா என் பையனும் மருமகளும் ரயில்ல விழுந்து சாகணும்? அவங்களுக்கு என்ன குறை? ஒருத்தர் மேல ஒருத்தர் ஆசைப்பட்டாங்க... கட்டிக்கிட்டாங்க... சந்தோஷமா வாழணும்னு நினைச்சாங்க... இது தப்பா? ஏற்கனவே வீடு, வாசலை இடிச்சு தரைமட்டமாக்கிட்டீங்க... இப்ப பையனையும் மருமகளையும் கொன்னுட்டீங்க. இன்னுமா உங்க வெறி அடங்கலை? சும்மா விட மாட்டேன்... உங்க அத்தனை பேரையும் கூண்டுல ஏத்தாம விட மாட்டேன்...’’

கண்கள் கசிய அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி. எல்லாவற்றுக்கும் சாட்சியாக தன் வாழ்க்கை மாறும் என்று துளிக்கூட அவள் எதிர்பார்க்கவில்லை.யாரோ அவள் உள்ளங்கையை சுரண்டினார்கள்.நிமிர்ந்தாள்.ரங்கராஜன் அவள் அருகில் நின்றிருந்தான். ‘‘போகலாம்...’’‘‘அந்தம்மாவுக்கு....’’‘‘அப்புறமா ஆறுதல் சொல்லலாம். போலீஸ் வர ஆரம்பிச்சிடுச்சு. இதுக்கு மேல நாம இங்க நிக்கறது நல்லதுக்கில்லை...’’‘‘கதிர்?’’‘‘தோழர் அப்புறமா வருவாரு. அவர் உள்ளூர்தானே? யாரும் சந்தேகப்பட மாட்டாங்க...’’

நகரத் தொடங்கியவனைப் பின்தொடர்ந்தாள். துண்டினால் தன் முகத்தை மூடியபடி ஐம்பதடி தொலைவில் தமிழரசன் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. எரிந்து சாம்பலாகியிருந்த வீதிகளைக் கடந்து கதிரின் வீட்டை அடைந்தார்கள்.இவர்களுக்காகவே கதிரின் மனைவி காத்திருந்தாள். நுழைந்ததும், ‘‘நான் போய் பார்த்துட்டு வரேன்...’’ என்று கிளம்பினாள். அழுதிருப்பாள் போல. கண்கள் எல்லாம் சிவந்திருந்தன. ரங்கராஜன், ஜன்னல்களையும், வாசல் கதவையும் இழுத்து மூடினான்.

‘‘என்ன தோழர் இதெல்லாம்? என்ன நடக்குது..? தங்கப்பனை முன்வைச்சு ஸ்காட் வில்லியம்ஸை இவங்க ரெண்டு பேரும் கடத்தியிருக்கறதா நாம நம்பிக்கிட்டு இருக்கோம்... ஆனா, அதுக்கு நேர்மாறா சம்பவங்கள் நடக்குதே... இளவரசனும், திவ்யாவும் எப்ப இங்க வந்தாங்க... ஏன் ரயில்ல அடிபட்டு செத்தாங்க..? எனக்கு ஒண்ணும் புரியலை...’’ தேன்மொழி படபடத்தாள்.‘‘ஓரளவு விஷயம் தெரிஞ்ச உங்களையே குழப்பிட்டாங்க பார்த்தீங்களா... இதுதான் ஆளும் வர்க்கத்தோட சூழ்ச்சி...’’ தமிழரசன் பற்களைக் கடித்தார்.‘‘என்ன சொல்றீங்க?’’

‘‘உண்மையை. ரெண்டு பேரும் தானா ரயில் முன்னாடி விழலை. அப்படி விழக்கூடிய அளவுக்கு அவங்க இளகிய மனசு கொண்டவங்க இல்லை... மார்க்சிய - லெனினிய கல்வியைக் கற்றவங்க. வாழ்க்கைல ஏற்படற பிரச்னைக்கு என்ன காரணம்... அதை எப்படி தீர்க்கணும்னுதான் புரட்சியாளர்கள் யோசிப்பாங்களே தவிர, இப்படி விரக்தி அடைய மாட்டாங்க. இளவரசனோட அம்மா சொன்னா மாதிரி இது திட்டமிட்ட கொலை... ரெண்டு பேரையும் யாரோ ஓடற ரயில் முன்னாடி வீசி எறிஞ்சிருக்காங்க...’’

‘‘யார் இதை செய்திருப்பாங்க?’’
‘‘வேற யார்... வால்டர் ஏகாம்பரம்தான்...’’ ரங்கராஜனின் குரல் அழுத்தமாக ஒலித்தது.
‘‘எதை வச்சு இந்த முடிவுக்கு வர்றீங்க?’’

‘‘இதோ... இதுதான் ஆதாரம்...’’ சொன்ன தமிழரசன், செய்தி சேனலை ஆன் செய்தார். சத்தியமங்கலம் காட்டுக்குள் புகுந்த அதிரடிப்படையினர், பல கோடி ரூபாய் மதிப்புள்ள யானைத் தந்தங்களையும், சந்தனக் கட்டைகளையும் மீட்டிருப்பதாகவும், தங்கப்பன் மட்டும் தப்பிவிட்டதாகவும் ஃப்ளாஷ் நியூஸ் அறிவித்தது.

செய்தியாளர்கள் மத்தியில் வால்டர் ஏகாம்பரம், ‘‘விரைவில் தங்கப்பனையும் பிடிப்போம்...’’ என்று கர்ஜித்துக் கொண்டிருந்தார்.‘‘இப்ப புரியுதா தோழர்?’’ ரங்க ராஜன் கேட்டான்.‘‘சத்தியமா ஒண்ணும் புரியலை... இளவரசன் - திவ்யாவோட சடலங்கள் மட்டும்தான் என் கண் முன்னால நிக்குது...’’ சொல்லும்போதே தேன்மொழியின் குரல் தழுதழுத்தது.

‘‘ஆளும் வர்க்கத்தோட வெற்றியே இதுலதான் அடங்கியிருக்கு...’’ தமிழரசன் சீறினார்.‘‘போதும் தோழர். எல்லாத்தையும் இப்படி அறிவுபூர்வமா பார்த்து எதை சாதிக்கப் போறீங்க?’’‘‘மனிதகுலத்தோட எழுச்சியை...’’‘‘தோழர்...’’‘‘முதல்ல உணர்ச்சிவசப்படறதை நிறுத்துங்க... நம்மை பின்னுக்கு இழுக்கறதே இந்த எமோஷனல்தான். திரும்பவும் சொல்றேன்... எது நம்ம கண் முன்னாடி நிகழுதோ அது உண்மையில்லை...’’‘‘அப்ப எதுதான் நிஜம்...’’‘‘ஸ்காட் வில்லியம்ஸ் தப்பிச்சது...’’‘‘...’’‘‘இளவரசனும், திவ்யாவும் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்க வேண்டிய விஷயம்தான். ஆனா...’’

‘‘ஆனா?’’‘‘ஸ்காட் வில்லியம்ஸ் பத்தின செய்தியை ஊடகங்கள் மறைக்குதே... அதுதான் முக்கியம். எனக்கென்னவோ தங்கப்பனும், வால்டர் வில்லியம்ஸும் சேர்ந்து நடத்தின நாடகமாதான் இது தெரியுது...’’‘‘கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க...’’‘‘இதுக்கு மேல வேற என்ன புரியணும்னு எதிர்பார்க்கறீங்க?

இதுவரைக்கும் நடந்ததை யோசிச்சுப் பாருங்க... தங்கப்பன் தலைமைல ஸ்காட் வில்லியம்ஸை கடத்தினாங்க. ஆனா, சின்ன செய்தியா கூட அது வரலை. சொல்லப்போனா வெளியுலகுக்கு இதைப்பத்தியே தெரியாது. பதிலா அதிரடிப் படையோட சத்தியமங்கலம் காட்டுக்கு வால்டர் ஏகாம்பரம் போனது தான் நியூஸா வந்தது. இதுக்குப் பிறகு என்ன ஆச்சு?’’

‘‘...’’
‘‘மூன்று கிராமங்கள் தீக்கிரை யாச்சு. அடித்தட்டு உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிக்கறாங்க. அந்த ரணம் மறையறதுக்குள்ள அடுத்த தாக்குதல். இளவரசனும், திவ்யாவும் படுகொலை செய்யப்பட்டிருக்காங்க. இதுலேந்து என்ன தெரியுது?’’‘‘நீங்களே சொல்லுங்க...’’‘‘எதேச்சையா நடந்த கடத்தலை தங்களுக்கு சாதகமா ஆளும் தரப்பு பயன்படுத்தியிருக்கு...’’‘‘அதாவது ஸ்காட் வில்லியம்ஸை இவங்க கடத்தலைன்னாலும் இந்த மூன்று கிராமங்களும் சூறையாடப் பட்டிருக்கும்னு சொல்றீங்க...’’
‘‘ஆமாம்...’’

‘‘ஏன்? எதுக்காக இந்த மூன்று கிராமங்களையும் குறி வைக்கணும்?’’‘‘அதைத்தான் நாம கண்டுபிடிக்கணும். புரட்சியாளர்களோட கடமையே நிகழ்விலிருந்து உண்மைகளை வெளிக் கொண்டு வருவதுதான்...’’சொன்ன தமிழரசன், அந்த பேப்பரை எடுத்தார்.பென்சிலால் அதில் வரையப்பட்டிருந்த ஆட்டின் உருவத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார்.அதே நேரம் -தன் அலுவலகத்தில் இருந்த ப்ளூ பிரின்ட்டையே ஸ்காட் வில்லியம்ஸ் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இதழ்களில் புன்னகை பூத்தது.நிமிர்ந்தான். ‘‘எல்லாம் ஓகேதானே?’’‘‘டிரிபுள் ஓகே’’ என்றபடி தன் மீசையை நீவினார் வால்டர் ஏகாம்பரம்.

‘‘அப்ப அறிவிப்பை வெளியிடலாம் இல்லையா?’’‘‘தாராளமா... ஒரு பிரச்னையும் வராது...’’‘‘குட்...’’ என்றபடி மீண்டும் அந்த ப்ளூ பிரின்ட்டை பார்த்தான். முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட ஆட்டின் உருவம் அதில் வரையப்பட்டிருந்தது.‘‘அப்படியானால் பூட்டு..?’’கேட்ட அர்ஜுனனைப் பார்த்து புன்னகைத்தார் கிருஷ்ணர்.

‘‘வேறென்ன... நிலப்பரப்புதான்!’’‘‘என்ன... நிலமா?’’‘‘ஆமாம்... ஆட்சி செய்வதற்கான இடம். அதைத்தான் தன் மாமனான திருதராஷ்டிரரிடம் கேட்டான் சகுனி. அவர் கொடுக்க வில்லை. பிறகு துரியோதனனிடம் அதே கோரிக்கையை வைத்தான். மருமகனும் அதற்கு செவி சாய்க்கவில்லை...’’

‘‘உடனே ரகசியமாகப் படைகளைத் திரட்டி ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கிறாரா?’’
‘‘ஆமாம்...’’‘‘இதெப்படி சரியாகும்?’’‘‘ஏன் சரியாகாது?’’‘‘என்ன கிருஷ்ணா இப்படிக் கேட்கிறாய்? குரு வம்சத்தினர் ஆளும் பிரதேசத்தின் ஒரு துளியைக் கூட எப்படி காந்தார இளவரசனுக்கு தாரை வார்க்க முடியும்?’’
‘‘இது உங்களுக்கான நியாயம்...’’
‘‘அப்படியானால் சகுனியின் நியாயம் வேறா?’’

‘‘அதிலென்ன சந்தேகம்?’’
‘‘கிருஷ்ணா...’’‘‘எதற்காக குரலை உயர்த்துகிறாய் அர்ஜுனா... நிதானமாக யோசித்துப் பார். பீஷ்மர் தலைமையிலான படைகள் காந்தார தேசத்தையே சூறையாடியிருக்கிறது. அவர்களுக்குச் சொந்தமான இடத்தை நீங்கள் அபகரித்திருக்கிறீர்கள்... உங்கள் நாட்டின் எல்லையாக அதை அமைத்திருக்கிறீர்கள். அதற்கு நஷ்ட ஈடாக வேறொரு இடத்தை அந்த நாட்டு இளவரசர் கேட்கிறார். இதை எப்படி தவறென்று சொல்ல முடியும்..?’’

‘‘நீங்கள் சகுனி சார்பாகப் பேசுகிறீர்கள்...’’
‘‘இல்லை. அவர் தரப்பு நியாயத்தை உனக்குப் புரிய வைக்கிறேன்...’’
‘‘அப்படியானால் அவர் கோரிக்கையை கௌரவர்களும் பாண்டவர்களும் ஏற்க வேண்டுமா?’’
‘‘அவசியமில்லை...’’

‘‘கிருஷ்ணா... நீ என்னதான் சொல்ல வருகிறாய்?’’
‘‘உண்மையை...’’
‘‘சற்று புரியும்படியாக சொல்...’’
‘‘நியாயங்களும், தர்மங்களும் அவரவர் தரப்புக்கு ஏற்ப மாறும். ஆள்பவர்களுக்கான நீதிகள் வேறு. மக்களுக்கான தர்மங்கள் வேறு. மக்கள் சார்பில் அரசன் யோசிக்கக் கூடாது... மக்கள் அரசராக முயற்சிக்கக் கூடாது...’’

‘‘அதாவது..?’’
‘‘சகுனியின் கோரிக்கையை ஒருபோதும் குரு வம்சத்தினர் ஏற்கக் கூடாது...’’
‘‘...’’‘‘காந்தார தேசம் என்பது என்ன? வெறும் பாலைவனம். அந்த வனத்தின் ஓநாய்தான் சகுனி. எப்பொழுதுமே பசுமையான இடத்தை நோக்கித்தான் ஓநாய் நகரும். அப்படியொரு இடம் கிடைத்ததும் என்ன செய்யும்? அதை பாலைவனமாக்கும். பிறகு? மீண்டும் பசுமையான

இடத்தைத் தேடி நாக்கைத் தொங்கவிட்டபடி நகரும். இதுதான் ஓநாயின் இயல்பு. இதுவேதான் சகுனியின் குணம்...’’
‘‘அதாவது அஸ்தினாபுரியை பாலைவனமாக்க சகுனி முயற்சிக்கிறார்... அப்படித்தானே?’’
‘‘இப்பொழுதாவது புரிந்து கொண்டாயே...’’
‘‘முழுக்க விளங்கவில்லை கிருஷ்ணா...’’
‘‘அதாவது..?’’

‘‘இது எப்படி சாவியாகும் என்பது இன்னமும் புரியவில்லை...’’ என்றபடி கிருஷ்ணனின் கையில் இருந்த மெல்லிய கம்பியை ப் பார்த்தான் அர்ஜுனன். ‘‘இன்னும் சில நாட்களில் நீயே அதை புரிந்து கொள்வாய்...’’என்று கிருஷ்ணர் சொல்லி முடித்த அதே கணம் -தனது விசுவாசிகள் மத்தியில் சகுனி உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது கண்கள் சிவந்திருந்தன.

‘‘இக்கட்டான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாட்டை ஆள்வது க்ஷத்திரியர்களின் கடமை. ஆனால், யாதவ குலத்தைச் சேர்ந்த ஓர் இடையன் இதற்கு சவாலாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறான். மாடு மேய்ப்பதை விட்டு விட்டு நாட்டை ஆள அவன் முயற்சிக்கிறான். இதைத் தட்டிக் கேட்க வேண்டிய துரியோதனன் அந்த இடையனையே மரியாதைக்குரியவனாகக் கருதுகிறான்... தன் பக்கம் அவனை இழுக்க முயற்சிக்கிறான்...

தனது பகையாக பாண்டவர்களை மட்டுமே கருதுகிறான்... எவ்வளவு வெட்கக்கேடு... இதை அனுமதித்தால் நாளை பாரத தேசமே க்ஷத்திரிய - யாதவ முரண்பாட்டால் இரண்டு படும். இப்படியொரு இழிநிலை நமக்குத் தேவையா? இதைப் பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருக்கலாமா..?’’ ‘‘கூடாது... கூடாது...’’

‘‘அதனால்தான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்... நம்மை ஓநாயாக நினைத்துக் கொண்டிருக்கிறான் அந்த இடையன்... உண்மையில் க்ஷத்திரியர்களை கூண்டோடு அழிக்கப் புறப்பட்டிருக்கும் வெறி பிடித்த ஓநாய் அவன்தான். எனவே ஆடுகளைத் திரட்டி அந்த ஓநாயை வீழ்த்தப் போகிறேன். இதற்கு உங்கள் அனைவரது சம்மதமும் தேவை...’’அங்கிருந்த அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருப்பதாக சத்தியம் செய்தார்கள்.

நிம்மதியுடன் தன் இடுப்பில் இருந்த தாயத்தை எடுத்து உருட்டத் தொடங்கினார் சகுனி...சட்டென்று சுதாரித்தவன் மகேஷ்தான்.ஹாரி பார்ட்டரும், மந்திரவாதி தாத்தாவால் ஏவிவிடப்பட்ட தேவதையின் தங்கையும் எந்தப் புறாவைப் பிடிக்க முயன்றார்களோ -அந்தப் புறாவைத் தாவிப் பிடித்தான் மகேஷ்.

அத்துடன் புறாவின் உடலுக்குள் இருந்த டார்க் லார்ட்டின் உயிரையும் எடுத்தான்.‘‘டார்க் லார்ட்... உன்னை கெஞ்சிக் கேட்டுக்கறேன்... தயவுசெஞ்சு இங்கேந்து போயிடு...’’‘‘ஏன்?’’ எறும்பு போல் இருந்த உயிர் துடித்தது.

‘‘ஹாரி பார்ட்டருக்கும் உனக்குமான பிரச்னை இப்போதைக்கு தீராது. அப்படியிருக்கிறப்ப இந்த இடத்துல அது முடிவு பெறுமா... சான்ஸே இல்லை. நாங்க அலாவு தீனுக்கு சாப விமோசனம் கொடுக்க வந்திருக்கோம். இடைல புகுந்து குட்டையைக் குழப்பாத. ப்ளீஸ்...’’ ‘‘குட்டையைக் குழப்பறது நீதான்...’’ என்று துள்ளிய டார்க் லார்ட் - முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட ஆட்டின் உருவத்தை எடுத்தான்.அதைப் பார்த்து அனைவரும் திகைத்து நின்றார்கள்.

‘‘தலைவர் நிறைய கால்குலேட்டரா வாங்கி வச்சிருக்காரே... ஏன்?’’
‘‘நிறைய அரசியல் கணக்கு போட வேண்டியிருக்காம்..!’’

‘‘டாக்டர்! என்னால ஒரு இட்லிக்கு மேலே சாப்பிட முடியலை...’’
‘‘அது போதும்! எனக்கு ஃபீஸ் கட்ட வேண்டாமா?’’

‘‘இந்த டாக்டர் சரியான சினிமா பைத்தியமா இருக்காருப்பா!’’
‘‘சரி! அதுக்காக ஊசி போட கூடவா லொகேஷன் பார்க்க ணும்?’’

- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

(தொடரும்)

கே.என்.சிவராமன்