மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

வாழ்க்கையின் எல்லா நிகழ்வுக்குப் பின்னாலும் முன்னதின் தொடர்ச்சி இருக்கிறது. அது முதல்நாள் செயலின் விளைவாகவும் இருக்கலாம். மூன்று ஜென்மத்து தீராக் கணக்காகவும் இருக்கலாம். தன் கால் மீது வண்டிச் சக்கரம் ஏறி இறங்கியபோது, இது எதன் மிச்சம் என்கிற எண்ணம்தான் பாம்பன் சுவாமிகளின் மனதில் தோன்றி மறைந்தது.

‘இதையும் அனுபவி’ என உடலுக்குக் கட்டளையிட்டார்.சக்கரம் ஏறி இறங்கிய வேகத்தை வைத்தே நிச்சயம் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கும் என முடிவு செய்துகொண்டார். அதீத வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாத மூளை, வலி உணர்த்தும் நரம்புகளுக்கு தற்காலிக ஓய்வு தந்திருந்தது. சுவாமிகள் கால்கள் துவள, நிலை தடுமாறி சாயும்போது சுற்றி இருந்தவர்கள் தாங்கிப் பிடித்துக்கொண்டார்கள்.

அருகில் வந்த ஒரு வண்டியை நிறுத்தி, அதில் பாம்பன் சுவாமிகளை அமர்த்தினார்கள். ‘‘எங்கு செல்ல வேண்டும் சுவாமி?’’ எனக் கேட்டார்கள்.‘‘எலும்பு முறிந்திருக்கிறது. எங்கு சென்றால் நல்லதோ அங்கு அழைத்துச் செல்லுங்கள்’’ என்று சொல்லிவிட்டு கண்களை மூடி, கால் நீட்டி சாய்ந்துகொண்டார். வண்டி நகர்ந்தது. ‘எதனால் இந்த துன்பம்? இந்த வலி எதைத் தாண்டி அழைத்துச் செல்லப் போகிறது? முருகா! நீ என்ன திட்டம் வைத்திருக்கிறாய்?’ என்றெல்லாம் மனதுள் அடுக்கடுக்காகக் கேள்விகள் எழுந்தன.

வண்டி, அரசு பொது மருத்துவமனை வளாகத்துள் நுழைந்தது. வரிசையாக உயர்ந்து நிற்கும் அசோக மரங்கள் மெல்ல காற்றை மருத்துவமனைக்குள் அனுப்பி நோயாளிகளின் வேதனையை மட்டுப்படுத்திக் கொண்டிருந்தன. மூன்று மாடிகள் கொண்ட அந்த மருத்துவமனைக் கட்டிடத்தை சுவாமிகள் சோர்வான கண்களால் பார்த்தார். இங்கு எத்தனை நாள் வாசம் என கணக்குப் போட்டுவிட்டு மெல்ல சிரித்தார். கீழ்த்தளத்தில் மன்றோ வார்டில் 11ம் எண் கொண்ட அறையில் சுவாமிகள் அனுமதிக்கப்பட்டார்.

அதற்குள் பாம்பன் சுவாமிகள் விபத்துக்குள்ளான செய்தி அவரது அன்பர்கள் மத்தியில் தீயாய்ப் பரவ, அனைவரும் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் இருந்தார்கள். திருவல்லிக்கேணி ஜோதிடர் சின்னசாமிப் பிள்ளையும் அவரது மனைவியும் சுவாமிக்கு நேர்ந்த விபத்தை நினைத்து நினைத்து வருந்தினார்கள்.

மருத்துவர்கள் சுவாமிகளின் உடல்நிலையைப் பரிசோதித்தார்கள். சுவாமிகளிடம் இதுவரை சாப்பிட்டு வந்த சாத்வீகமான... உப்பு இல்லாத, புளிப்பு இல்லாத உணவு அவரது ஆன்ம பலத்தைக் கூட்டி இருந்தது. ஆனால், உடல் நலனுக்கு உவப்பானதாக இல்லை என்பதைக் கண்டுகொண்டார்கள். முறிந்த எலும்புகள் இணைவது கடினம் என்றார்கள். இதைக் கேட்ட அன்பர்களின் கவலை இரட்டிப்பானது.

சின்னசாமிப் பிள்ளையும் அவரது மனைவியும் தினமும் சுவாமிகளுக்கு வேண்டிய உணவு, பழம், பால் ஆகியவற்றைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். கருத்துடன் பார்த்துக்கொண்டார்கள்.சிவசங்கரத் தம்பிரான், ஞானசாகர முதலியார், சின்னசாமிப் பிள்ளை மூவரும் சுவாமிகளின் கால் குணமாக வேண்டி முருகனைத் தொழுது மன்றாடினார்கள். சண்முகக் கவசத்தை இடையறாது பாராயணம் செய்தார்கள்.

 அதிலும் சின்னசாமிப் பிள்ளைக்கு சண்முகக்கவசத்தின் மீது தீவிர நம்பிக்கை. அதைப் பாராயணம் செய்யும்போது, ‘‘ஏரகத் தேவன் என்தாள் இருமுழங் காலும் காக்க சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலை வாய்த்தே காக்க’’ என்ற வரிகளைப் படிக்கும்போது ஓர் அற்புதக் காட்சியை மனதில் கண்டார்.

இரண்டு வேல்களின் அலகுகள் பாம்பன் சுவாமிகளின் முறிந்த பகுதியை இணைத்துப் பொருத்துகின்றன. மற்றொரு வேலின் முனை அதைத் தாங்கி நிற்கிறது. இந்தக் காட்சியைக் கண்டதும் அவர் அகம் மகிழ்ந்து போனார்.

பாம்பன் சுவாமிகள் பழையபடி எழுந்து நடமாடுவார் என்கிற நம்பிக்கை அவருள் பிறந்தது. கடவுள் என்கிற சக்தி, தன்னிடம் சரணாகதியான ஒருவரின் மீது கொண்டிருக்கும் தீவிர அன்பு சிலிர்க்க வைத்தது. குகன் பாம்பன் சுவாமிகள் மீது கொண்டிருப்பது சாதாரண கருணையா? பல பிறவிகளாய் தொடரும் தெய்வீக பந்தம் அல்லவா அது!

ஆனால் பாம்பன் சுவாமியோ இது குறித்தெல்லாம் கவலைப்படாமல் மருத்துவமனையில் படுத்திருந்தார். வலிகளை அனுபவிக்க அனுபவிக்க வினைகள் குறைகின்றன. வினைகள் குறையக் குறைய குகனுக்கும் தனக்குமான தூரம் குறைகிறது. கூடவே இருக்கும் குகனோடு, ‘நீ வேறில்லை நான் வேறில்லை’ என இரண்டறக் கலக்கும் நேரம் சமீபித்திருக்கிறது என்கிற நினைவு அவரை நெகிழ்த்திக் கொண்டிருந்தது.

முருகா என்கிற பெயரைச் சொல்லும்போதே மனதுள் பூக்கும் கோடி கோடி இன்பப் பூக்களின் மகரந்த வாசனை அத்தனை வலிகளையும் தூசாக்கி இருந்தது. உன் அண்மை நித்தியமெனில், நிரந்தரமெனில், இன்னொரு பிறவி இனி இல்லை எனில் இன்னும் வலி கொடு என உள்ளம் கேட்டது.

கால் முறிந்த 11ம் நாள். சூரியன் சோர்வாகி பூமியின் அடுத்த பக்கத்திற்கு நகர்ந்திருந்தான். நிலா இல்லாத வானத்தில் நட்சத்திரங்கள் பிரகாசமாய் ஒளி சிந்திக் கொண்டிருந்தன. மார்கழி மாத மெல்லிய குளிரில் ஊர் உறங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. இரவுப் பூக்களின் வாசனை ஈரமான காற்றில் கலந்து அந்த இடத்தை ரம்மியமாக்கி இருந்தது. வண்டுகளின் ரீங்காரம் விட்டு விட்டு ஒரு கதியில் தொடர்ந்தன. பாம்பன் சுவாமிகளின் மனம், முருகன் என்கிற அழகிய புள்ளியில் நிலைத்திருந்தது.

அவனது திவ்ய ரூபத்தை மனதுள் அசை போடத் தொடங்கினார். மனதுக்கு இனியவனின் நினைவு பொங்கிய வேளையில் பிரிவுத் துயர் அதிகமானது. ‘காற்றும் கடலும் நதியும் மலையும் மறையும் காலம் வந்தாலும் முருகா நீ எனைப் பிரியாதிரு’ எனக் கெஞ்சினார். மருத்துவமனை ஜன்னல் வழியே இலக்கில்லாமல் பார்வை வீசிப் படுத்திருந்தார். விழியோரம் வழியும் கண்ணீர்த் துளிகள் குகனின் பாதம் தொட, பரிதவித்தான் பார்வதி புத்திரன்.

அந்த நட்சத்திரப் பூ பூத்த வானில் பெரிதும் சிறிதுமாக இரண்டு மயில்கள் தோன்றின. தமது அழகிய தோகையை விரித்த வண்ணம் அவர் முன் அழகாய் நடனமாடின. அதன் கால்கள் பூமியில் படாமல் மிதந்தன. ஆடிய மயில்கள் சற்றுக்கெல்லாம் மெல்ல வானில் மிதந்து மறைந்தன. மயிலின் நடனத்தில் தன்னை மறந்த பாம்பன் சுவாமிகள், அனிச்சையாகத் தன் படுக்கை அருகே பார்த்தார். அங்கே குழந்தை வடிவாய் குகன் காட்சியளித்தான்.

குழந்தையைக் கண்டு குதூகலமான பாம்பன் சுவாமிகள் வாரியணைத்து உச்சி முகர யத்தனிக்கையில் அழகு ரூபம் மறைந்து போனது.தனது படுக்கையில் குழந்தையாய்த் தோன்றி அருளிய குகன், ‘எப்போதும் உன்னோடு இருக்கிறேன்’ என உணர்த்தத்தான் உதயமானானா என எண்ணிச் சிலிர்த்தார்.

இந்நிலையில், ‘சண்முகக் கவசம் பாராயணம் செய்தால் எந்த ஆபத்தும் நேராது எனச் சொன்ன பாம்பன் சுவாமிகளே விபத்தில் சிக்கிக் கொண்டாரே... அவர் காலே முறிந்துவிட்டதே? முருகனின் அருள் சக்தி இவ்வளவுதானா?’ என்பது போன்ற விமர்சனமெல்லாம் எழத் துவங்க, வேலவன் வேறொரு விளையாட்டை நிகழ்த்தினான்.

அடுத்த இரண்டு நாட்களுக்கெல்லாம் மருத்துவர்கள் பாம்பன் சுவாமிகளின் கால்களை எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தார்கள். முறிந்திருந்த எலும்புகள் ஒன்று சேர்ந்திருந்தன. ‘இன்னும் 15 நாட்களில் காயம் ஆறிவிடும். அதுவரை மருத்துவமனையில் தங்கி இரு’ என முருகன் பாம்பன் சுவாமிகளின் செவியில் சொன்னான். சுவாமிகளும் முருகனின் வார்த்தையை வேதமாய் கொண்டு ‘ம்ம்’ என்றார்.

 மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு ஆங்கிலேயப் பெண்மணி சுவாமிகளின் கால் நலமானதை அறிந்து, ‘‘உப்பை அறவே நீக்கிவிட்ட உங்களது கால்கள் இணைந்தது அதிசயம். நீங்கள் உயிர் பிழைத்தது கடவுளின் பேரருள்’’ என்று சொன்னாள்.சுவாமிகளை வண்டியில் இடித்துத் தள்ளி விபத்துக்குள்ளாக்கிய வண்டிக்காரனும் மருத்துவமனைக்கு வந்து சுவாமிகளிடம் மன்னிப்புக் கேட்டான்.

‘‘இது விதியப்பா! உன்னால்தான் மயில் நடனமும் குழந்தை முருகனின் அழகு தரிசனமும் கிடைத்தது’’ எனச் சொல்லி அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.சில நாட்களுக்குப் பிறகு நல்ல படி உடல்நலம் தேறி புதுப்பாக்கம் குழந்தைவேல் முதலியார் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

 மருத்துவமனையில் தாம் கண்ட மயில் நடனத்தை மனதில் கொண்டு ‘மயூர வாகன சேவகம்’ என்கிற வைபவத்தை நடத்த முடிவு செய்து, அதற்கான திட்டங்களை வகுத்தளித்தார். அதன்படி மயூர வாகன சேவகத்தை மார்கழி மாதம் சுக்ல பட்ச பிரதமை தினத்திலும் மறுநாளிலும் தொடர்ந்து நடத்த ஆவன செய்தார். சுவாமிகளின் விருப்பப்படி முதல் மயூர வாகன சேவகம், நம்புலையர் தெருவில் இருந்த ஜகந்நாத முதலியார் வீட்டில் பாம்பன் சுவாமிகளால் அன்பர்கள் புடைசூழ நடந்தேறியது.

அதன் பிறகு, தமக்கு ஏற்பட்ட கால்முறிவு, வேல் தோன்றி இணைத்தது, மயில் நடனம் செய்தருளியது முதலியவற்றைப் படிமமாகக் கொண்டு ‘அசோக சால வாசம்’ எனும் பிரபந்தம் எழுதி அருளினார். வடமொழிச் சொல் ஒன்று கூட கலவாத ‘சேந்தன் செந்தமிழ்’ என்னும் தீந்தமிழ் பாடலைத் தந்தார்.

இது 1906ல் முதல் பதிப்பாக வெளியானது.இந்நிலையில் சுவாமிகள் மனதில் முருகனோடு சேர்ந்து இனி பிறவா நிலைக்குச் செல்வது குறித்த ஆவல் தீவிரமானது. ஒருநாள் சின்னசாமிப் பிள்ளையை அழைத்தார். தன் சொந்தப் பணத்தைக் கொடுத்து திருவான்மியூரில் இடம் வாங்கச் சொன்னார். சுவாமிகளின் வார்த்தையைச் செயலாக்கினார் சின்னசாமிப் பிள்ளை. சரி, எதற்கு அந்த இடம்? அது, அந்த இடம் செய்த தவம்!

கவசமாய் காக்கும் சுவாமிகள்!

‘‘எனக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள வையூர். அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். 71 வயதாகும் நான், கடந்த 14 ஆண்டு காலமாக பாம்பன் சுவாமிகளின் தீவிர பக்தன். என் பேத்திக்கு மூன்று வயது கடந்தும் பேச்சு வரவில்லை. பாம்பன் சுவாமிகளை வேண்டிக்கொண்டோம்.

அவர் அருளால் இன்று வாய் நிறையப் பேசுகிறாள். என் மனைவி இதய நோயால் பாதிக்கப்பட்டபோது நம்பிக்கையோடு சண்முகக் கவசம் பாராயணம் செய்தேன். அவளையும் குணமாக்கித் தந்தது பாம்பன் சுவாமிகள்தான். எனக்கு ஒரு கஷ்டம் என வந்தால் நான் அவரை சரணடைந்துவிடுகிறேன். அவர் அருள் என்னைக் கவசமாய் இருந்து காக்கிறது’’ என நெகிழ்கிறார், வி.ஏ.சண்முகம்.

துன்பம் நீக்கும் மந்திரம்

மயிலொத் தமடச் சூர்மா மகளுக் கினியோ யெனையாள்
வெயிலொத் தாவொளிப் பலபூண் மின்னும் படிபன் னடனம்
பயிலொப் பொலியே யெலியூர் பரனார் துணைவா பதிநூல்
குயிலொட் பமகா முனியே குகனே சரணஞ் சரணம்
-பாம்பன் சுவாமிகள் அருளிய இந்த மந்திரத்தைச் சொல்ல,
எத்தகைய துன்பமாக இருந்தாலும் சட்டென நீங்கும்!

(ஒளி பரவும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்