வடக்கிலிருந்து ஒரு தமிழ்க் குரல்...



பாரதியும் வள்ளுவரும் பொக்கிஷங்கள்!

‘‘தமிழ் மொழியை வட மாநிலங்களில் பரப்ப 500 சிறப்பு மையங்கள் அமைப்பேன்... திருவள்ளுவர், பாரதியாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்... மகாகவி பாரதி வாழ்ந்த வாரணாசி இல்லத்தை புதுப்பொலிவாக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்...

சென்னை ஐகோர்ட்டில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்...’’ - இப்படி தொடர்ந்து தமிழை உயர்த்திப் பிடிக்கிறது தருண் விஜய்யின் குரல். இதனாலேயே, அவரை ‘தமிழ் தருண் விஜய்’ என்று அழைக்கிறார்கள் சக எம்.பி.க்கள். ஆனால், இவர் சாட்சாத் இந்தி பேசும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதாவின் ராஜ்யசபா உறுப்பினர்.

கடந்த வாரம் கவிப்பேரரசு வைரமுத்து ஏற்பாட்டில் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்த தருண் விஜய்யை சந்தித்தோம். அச்சு அசல் வடநாட்டு ‘வண்க்கம்...’தான் நம்மை வரவேற்றது என்றாலும் அவரின் கருத்தில் ஓங்கி ஒலிக்கிறது தமிழ் ஆர்வம்.   ‘‘எப்படி இவ்வளவு தமிழார்வம்?’’

‘‘நான் வளர்ந்த ஆன்மிகப் பின்னணியில் பிரார்த்தனையின்போது ராஜேந்திர சோழர், திருவள்ளுவர், கண்ணகி, ராமானுஜர், பாரதி போன்ற மாபெரும் தமிழ் ஆளுமைகளுக்கு வந்தனம் செய்வது வழக்கம். அப்படித்தான் அவர்கள் என்னுள் வந்தார்கள். கல்லூரிக் காலத்தில் இவர்களைப் பற்றி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. திருக்குறள் சொல்கின்ற கருத்துகள் வேறு எதிலும் இல்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்த மாபெரும் பண்பாட்டு அறிவுக் களஞ்சியம் அது!’’‘‘தமிழுக்காக எப்போது குரல் கொடுக்க ஆரம்பித்தீர்கள்?’’

‘‘இவ்வளவு சிறப்பு வாய்ந்த தமிழ்க் கலாசாரம் பற்றி மற்ற இந்திய மாநிலப் பள்ளிகளில் கற்றுத் தருவதில்லை. வட இந்திய மக்களும் இதைப் புரிந்துகொள்ளவில்லை. இதனால், தமிழ் மொழி பாராட்டப்படாமலே போய்விட்டது. இதனால் நமக்குத்தான் இழப்பு என்று எனக்குத் தோன்றியதால், இதைப் பற்றியெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசினேன்.

அதே நேரம், வடக்கு பற்றி எதிர்மறையான போக்கும் தெற்கில் இருப்பவர்களுக்கு இருக்கிறது. திராவிட மக்கள் எங்கள் மொழியை வெறுக்கிறார்கள். இது தவறான கருத்தோட்டம். ஆனால், நான் தமிழ் எம்.பிக்களிடம் பேசியதிலிருந்து ‘அவர்கள் இந்தி மொழியை எதிர்க்கவில்லை... தமிழ் மொழியைப் பாதுகாக்கவே நினைக்கிறார்கள்’ என்பதைப் புரிந்துகொண்டேன். இந்தக் கருத்தை நான் வரவேற்றேன்!’’

‘‘சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டுமென குரல் எழுப்பியுள்ளீர்களே?’’

‘‘ஆமாம். பாரம்பரியம் மிக்க தமிழும் வழக்காடு மொழியாக வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து கோரிக்கை வைத்தேன். அவர் நெகிழ்ந்து போனார். பிறகு அவரே என்னிடம், தமிழின் சிறப்பு பற்றி பேசினார்.

‘ராஜேந்திர சோழர்தான் கடற்படையின் தந்தை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே அவர் கடற்படையை வலுவாக வைத்திருந்தவர்’ எனக் கூறினார். அதேபோல் இந்தியாவின் முதல் அணை கட்டியவர் கரிகாலன். இந்தியா வெறுமனே சிவாஜி, கிருஷ்ணதேவராயர் உடன் முடிந்துவிடவில்லை... ராஜேந்திர சோழர், பாண்டியர் எனப் பலரையும் கொண்ட பரந்த ஒருங்கிணைந்த பூமி. இவர்கள் அனைவரும் பேரரசர்கள். தமிழும் பழம்பெரும் மொழி. அதைப் புரிந்து கொள்ள வேண்டும்!

நான் வெளியுறவுத் துறை ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். அதன்மூலம் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் ‘தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள தூதரகங்களில் தமிழ் கலாசார மையத்தை அமைக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்திருக்கிறேன். ‘பல நாடுகளில் விரிந்துகிடக்கும் தமிழர்களின் குழந்தைகள் படிப்பதற்கு புத்தகங்கள் வேண்டும்; அவர்கள் தாய்மண் உறவை இழக்காமல் இருக்க தேவையான கலாசார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ எனவும் கூறியிருக்கிறேன்!’’

‘‘பல வட இந்தியப் பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறை மூடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறதே?’’

‘‘இது வருத்தத்திற்குரியது. போதுமான வசதிகளும், விளம்பரங்களும் இல்லாமல் இருப்பதுதான் இதற்குக் காரணமாக இருக்கும். தமிழ் பேசாத மற்ற மொழி மக்கள் தமிழைக் கற்றுக்கொண்டு நல்ல நிலைக்கு வர இந்தத் துறைகள் பயனுள்ளதாக இருக்கும். தமிழக அரசு மற்ற மாநிலங்களில் தமிழ் மொழியை ஊக்குவிக்க வேண்டும். இதற்கு ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை!’’‘‘திருக்குறள் தவிர்த்து தமிழில் வேறென்ன வாசித்திருக்கிறீர்கள்?’’

‘‘திருக்குறளையே ஆங்கிலத்தில்தான் வாசித்தேன். அதன் பிறகு, வட இந்திய மக்கள் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதற்காக அதனை ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மொழி பெயர்த்தேன். அப்புறம், பாஞ்சாலி சபதம், பாரதி கவிதைகள், கம்ப ராமாயணம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்.’’‘‘சமீபத்தில், மத்திய அரசு ‘சமஸ்கிருத வார விழா’வைப் பள்ளிகளில் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. இது மொழித்திணிப்பு இல்லையா?’’

‘‘முதலில் அனைத்து மொழிகளும் நமது மொழிகள் என்கிற எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும். யாரும் தங்கள் மொழி பெரியது மற்ற மொழி தாழ்ந்தது என நினைக்கக் கூடாது. சமஸ்கிருதமும் அளப்பரிய ஞானத்தை அளிக்கக் கூடிய மொழிதான்.

 அதே நேரத்தில் திணிப்பு என்பதும் நல்லதில்லை. மத்திய அரசு அப்படிச் செய்யாது என என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். பிடித்திருந்தால் படியுங்கள். பிடிக்கவில்லையா? விட்டு விடுங்கள். இதில் விருப்பம்தான் முக்கியம். எனக்கு தமிழ் மொழி பிடித்திருந்ததால்தான் கற்றுக்கொள்கிறேன்.’’‘‘சரி, தமிழக நடைப்பயணம் பற்றி..?’’

‘‘என்னை வள்ளுவரும், பாரதியும் ரொம்பக் கவர்ந்துவிட்டார்கள். அதனால், பொங்கல் அன்று எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீட்டுக்குப் போகலாம் என்றிருக்கிறேன். சென்னையிலிருந்து திருச்சி, மதுரை எனப் போகிற வழியில் தலித்துகள், விவசாயிகள், ஏழை மக்கள் போன்றோரிடம் பேசவிருக்கிறேன்.

தமிழ்க் கலாசாரத்தை பாதுகாத்து வருபவர்கள் அவர்கள்தான். அதோடு இளைஞர்களையும் சந்திக்க இருக்கிறேன். அப்போது கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் சென்று எனது வணக்கத்தைத் தெரிவிக்க இருக்கிறேன்’’ என்கிற தருண் விஜய், ‘‘அடுத்தமுறை உங்களைச் சந்திக்கும்போது நிச்சயம் தமிழில் பேசுவேன்’’ என நம்பிக்கையோடு முடிக்கிறார்.

பேராச்சி கண்ணன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்