த்ரிஷாவுக்கு கிடைக்காத அஜித் ஸ்பெஷல்!



ஓர் அழகான சண்டே... ‘என்னை அறிந்தால்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் கமகமக்கிறது பிரியாணி. யூனிட்டில் அத்தனை பேருக்கும் தன் கையால் சமைத்தளித்திருக்கிறார் தல! ‘‘ ‘மங்காத்தா’வில் அஜித் சார் பிரியாணியை மிஸ் பண்ணிட்டேன்.

அன்னிக்கு நான் ஸ்பாட்ல இல்லை. மறுநாள் ஷூட்டிங் வந்தால் எல்லாருமே பிரியாணி டேஸ்ட்டை புகழுறாங்க. ப்ச்... இந்தத் தடவையும் நான் ஸ்பாட்ல இல்லை..!’’ என்கிறார் த்ரிஷா ஃபீலிங் பறவையாய்! ‘‘அஜித்துக்கு பிரியாணியில் ஆர்வம் வந்தது எப்படி?’’ - அவரின் நெருங்கிய வட்டத்தில் விசாரித்தால், அள்ள அள்ள ஆச்சரியம்.

‘‘பிரியாணி மட்டுமில்ல... வெஜ் சமையலிலும் அவர் வெயிட்டு காட்டுவார். மாங்காய், முருங்கைக்காய் போட்டு சாம்பார் வச்சா டேஸ்ட் அள்ளும். ‘தல பிரியாணி சமைக்கிறார்’னு இன்னிக்கு வேணா பரபரப்பா தெரியலாம்.

ஆனா, நடிக்க வந்த புதுசுல இருந்தே அஜித் கிச்சன் கிங்!’’ என்கிறார்கள் அவரின் நண்பர்கள்.‘‘ஃபேமிலி கெட் டுகெதர்ல, அங்கே வந்திருக்கிற ஒவ்வொருத்தருக்கும் யாருக்கு என்ன டிஷ் பிடிக்கும்னு தெரிஞ்சு, அதை சமைச்சு வச்சிருப்பார். எந்த நாட்டுல என்ன ஸ்பெஷல், அதை எப்படித் தயாரிக்கிறாங்கன்னு நெட்ல படிப்பார்.

 யூ டியூப்ல அதோட மேக்கிங் வீடியோ பார்த்து, குறிப்பு எடுத்துக்குவார். நமக்கெல்லாம் சைனீஷ், இட்டாலியன் டிஷ் வேணா தெரியும். மெக்ஸிகன் சமையல் தெரியுமா? அதையும் தெரிஞ்சு வச்சிருப்பார் அஜித். அதுல என்னென்ன வெரைட்டீஸ் இருக்கு, எது ஸ்பெஷல், எது ஸ்பைஸி, எது ஆயிலி, அதோட விலை என்னன்னு எல்லா விபரங்களையும் ஃபிங்கர் டிப்ல வச்சிருப்பார். சிக்கன் பீட்சா செய்யிறதில் அவர் ஸ்பெஷலிஸ்ட்!’’ என்கிறார்கள் அவர்கள்.

ஆனால், இப்போதெல்லாம் சிக்கன் வெரைட்டிகளை அடுத்தவருக்கு சமைத்துக் கொடுப்பதோடு சரி... நான்-வெஜ் விடுத்து அஜித் சுத்த சைவத்துக்கு மாறி வெகுநாளாகிறதாம். ‘‘சமைக்கிறவங்க கிட்ட ஒரு டிஷ்ஷை செய்யச் சொல்லணும்னா நாம் அதோட பேரை மட்டும்தான் சொல்வோம். ஆனா அஜித், அதை எப்படி செய்யணும்...

முதல்ல எதை வதக்கணும்ங்கிற வரைக்கும் ரெஸிபியோட சொல்வார். ஒரு சூப் வேணும்னா, அதுக்கு வெங்காயம் என்ன சைஸ்ல வெட்டணும்ங்கிறது வரை அவர் இன்ஸ்ட்ரக்ஷன்ல இருக்கும். ஸோ, அவர்கிட்ட சமையல்காரனா யார் வேணாலும் இருக்கலாம்’’ என்கிறார்கள் தல டைனிங் டேபிளை பக்கத்தில் இருந்து பார்த்தவர்கள்.

‘‘ஷூட்டிங்ல அவருக்கான உணவை அவரே சமைச்சுக்குவார். வெளியூர் ஷூட்னா கூட எலெக்ட்ரிக் குக்கர், இண்டக்ஷன் ஸ்டவ்னு எல்லாம் அவர் லக்கேஜ் கூட சேர்ந்து போயிடும். புரொடக்ஷன்ல தர்ற சாப்பாட்டை சாப்பிட்டாலும் கூட, மெயின் அயிட்டமா அவரே சமைச்ச உணவுதான் இருக்கும். சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் மத்தவங்க மனசையும் வயித்தையும் நிறைய வச்சிப் பார்க்குறதுதான்.

அது அஜித்தோட பிறவிக் குணம். இன்னைக்கு யூனிட்ல ஃபைட்டர்ஸ், டான்ஸர்ஸ்னு நிறைய பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சா, அன்னிக்கு எல்லாருக்கும் பிரியாணிதான்! இப்படித்தான் அவர் பிரியாணி சமைக்க ஆரம்பிச்சது’’ என்கிறவர்கள் அஜித்தின் பிரத்யேக டயட் பற்றியும் ரகசியம் உடைக்கிறார்கள்.

‘‘ஷூட்டிங் சமயத்தில் ராகி கஞ்சி, வேக வைத்த காய்கறிகள், சூப் இதெல்லாம் அதிகம் எடுத்துப்பார். பெப்ஸி, கோக் போன்ற பானங்களை அவர் எந்தக் காலத்திலும் சாப்பிட்டதில்லை. பிளாக் டீ நிறைய சாப்பிடுவார். ஃபுட்ல கான்ஷியஸா இருப்பார். ஐஸ் வாட்டர் குடிச்சா கோல்ட் வரும்னெல்லாம் சொல்ல  மாட்டார். டைமுக்கு சாப்பிடணும்ங்கிறதில் மட்டும் ஸ்ட்ரிக்ட். இது அவருக்கு மட்டும் இல்ல... மத்தவங்களுக்கும்தான். ‘நம் உடம்பில பாதி பிரச்னைகள் நேரத்துக்கு சரியா சாப்பிடாததால தான் வருது’ன்னு சொல்வார்.

அவர் சாப்பிட்டுக்கிட்டு இருந்தால் அவரைப் பாக்கப் போனவங்களையும் கூட உட்கார்ந்து சாப்பிட வச்சிடுவார். அவர்கிட்ட வேலை பார்க்குறவங்க எல்லாரையுமே டைமுக்கு சாப்பிடச் சொல்லுவார். இதுக்குத்தானே உழைக்கிறோம்னு அடிக்கடி சொல்வார்!ஹோட்டலில் சாப்பிட்டு முடிச்சதும் அந்த ஹோட்டல் செஃப்பைக் கூப்பிட்டுப் பாராட்டுவது அவர் குணம். புது டிஷ்ஷா இருந்தா, ‘எப்படி செஞ்சீங்க?’னு கேட்டு குறிப்பெடுத்துக்குவார். ஆனா, அதோட நிறுத்திக்க மாட்டார்.

அந்த டிஷ்ஷை சமைச்சு, அந்த செஃப்புக்கே அனுப்பி வச்சி ஒப்பீனியன் கேட்பார். சமைக்கிறது ஒரு கலைன்னா, அதைப் பரிமாறு றது இன்னொரு தனிக் கலை. அந்த ஆர்ட் அவர்கிட்ட இருந்து கத்துக்க வேண்டிய விஷயம். ரொம்ப ரொம்ப அழகா, கிரியேட்டிவா, டிசைனா அவர் பரிமாறும் அழகே தனி. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்... சாப்பிடும்போது போட்டோ எடுத்துக்கறது அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. சாப்பிடும்போது யாராவது போட்டோ எடுக்கறதை ப் பார்த்தா, ‘நோ’ன்னு கண்ணாலயே ரெட் சிக்னல் காட்டிடு வார்!’’ என நெகிழ்கிறார்கள் அவர்கள்.

மகள் அனோஷ்கா ஸ்கூலுக்குக் கிளம்பும்போது ‘டாடி! எனக்கு இது வேணும்’ என எந்த டிஷ்ஷைக் கேட்டாலும், ஷூட்டிங் கிளம்பும் முன்பு அதைச் செய்து வைத்துவிட்டுத்தான் கிளம்புவாராம் அஜித். ஷூட்டிங் இல்லாத நாளில் ‘இன்னிக்கு என்ன வேணும்? லிஸ்ட் கொடுங்க’ எனக் கேட்டு சமைத்துக் கொடுத்து, செல்ல இளவரசி உண்பதை ரசிப்பாராம்!

- மை.பாரதிராஜா