அழியாத கோலங்கள்



இன்று காந்திஜி ரோட்டிலிருந்து பிரிந்து பாலத்தில் வைகையாற்றைக் கடந்து அக்கரைக்குப் போனால் இடது புறம் மஞ்சள்பட்டினம். வலதுபுறம் திரும்பி ஹைவே எமனேஸ்வரம் வழியாக இளையாங்குடி செல்லும் நெடுஞ்சாலை.

அதன் வடபுறம் சிவகங்கை வெகு சமீபத்தில் உள்ளது. அன்று அந்தப் பாலம் இல்லாதபோது, இன்றும் இருக்கும் சங்கர மடம் வழியாக ஒரு பாதை வைகை ஆற்றுக்குப் போகும். சங்கர மடத்தின் பின்புறம் ஒரு பிள்ளையார் கோயில். அதைத் தாண்டியதும் ஒரு படித்துறை... இன்று இருக்கிறதோ இல்லையோ! நான் படித்துறையைப் பார்த்து 40 ஆண்டுகள் இருக்கும். 

80 ஆண்டுகளுக்குமுன் அந்தப் பாலத்துக்குச் செல்லும் வழி ஒரு பொது காலி இடமாக இருந்திருக்க வேண்டும். இன்றும் நினைவிருக்கிறது... அந்த காலியிடத்தில் ஒரு பெரிய வெள்ளை சதுரத் துணி. ஒரு ஆள் உயரத்துக்குமேல் நீள, அகலம் இருக்கலாம். அதிலே ராத்திரியில் ஊமைப் படம் ஓடும். அதில் சத்தமே வராது. பக்கத்தில் ஒருவர் ஒரு மெகபோன் குழாயை வைத்துக்கொண்டு, ‘‘அதோ எடிபொலோ வருகிறார்...’’ என்றது காதில் விழுந்த விஷயம். அது மட்டில் ஞாபகம் இருக்கிறது. கண்ணால் பார்த்த எதுவும் மூளையில் பதியவில்லையோ என்னவோ!

பக்கத்தில்தான் நயினா நாராயணசாமி நாயுடு கடை. ஊமைப்படம் பார்க்க வருபவர்கள் வெற்றிலை - பாக்கு, பீடி வாங்கியே எங்க நயினா பரமக்குடியில் ஒரு பிரபலஸ்தர் ஆகி விட்டார்.நயினா விடுதலைப் போராட்ட வீரர். இருந்தாலும் காங்கிரஸ்காரர்கள் அவரை போலீஸ் உளவாளி, இன்ஃபார்மர் என்று வசைமாரி பொழிவார்கள். எங்கப்பா ‘பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்’ ரகம்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும், நாராயணசாமிக்கும் தோழர். கிரிமினல் கோர்ட்டு பக்கம் போனால் தெரியும், வக்கீலும் போலீஸும் அண்ணன் - தம்பியாகப் பழகுவார்கள். அதனால் நாயுடுவும் இன்னொரு தம்பியாகி விட்டார். நான் முன்புறம் வக்கீலாபீசில் பிஸியாக இருப்பதும்... என் தந்தையார் பின் வீட்டில் ஈஸி சேரில் உட்கார்ந்து, பொழுது போகாமல் படித்த பேப்பரையே திரும்பப் படிப்பதும்... பேரப் பிள்ளைகளிடம் விளையாடுவதும் சராசரி நடப்பாகி விட்டது.

நானும் ஊரில் ஓரளவு பெயர் பெற்ற வக்கீல் ஆகிவிட்டதில் எனக்கு புத்திமதி சொல்லும் உரிமையை நாயுடுவிடம் என் தந்தையாரே இனாம் சாசனம் செய்திருப்பார் என்று ஒரு சந்தேகம்.

என் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் ஸ்வர்ணாம்பிகா ஹோட்டல் சோமு, அருமைபிச்சை, சாந்தி தியேட்டர் சோமு ஆகிய மூன்று பேரும் ஒரு டூரிங் டாக்கீஸுக்கு மனு செய்திருந்தார்கள். நான் காங்கிரஸ்காரரின் மகன் என்பதால் என் நண்பர்கள் அவர்கள் மனு விவகாரம் பற்றிப் பேசியதில்லை.

 பரமக்குடியில் அன்றைய ரவி தியேட்டர் முதலாளி திரு அப்துல் ரஹ்மான், என் தந்தையாருக்கு மிகவும் வேண்டியவர். அதைத் தவிர என் தந்தையார் ஒரு லிமிடெட் கம்பெனி தொடங்கி, பலரை முதலீடு செய்யச் சொல்லி, முதலில் ஆரம்பித்த பரமக்குடியின் முதல் பெர்மனன்ட் சினிமா கொட்டகை ஜெய்ஹிந்த் டாக்கீஸ்.

 பின்பு அதன் பெயர் ஓம் ஷண்முகா என்று மாற்றப்பட்டு, இன்று கிருஷ்ணா தியேட்டர் காம்ப்ளக்ஸ் ஆகிவிட்டதாம். அதன் அடிக்கல்லில் அந்த நாட்களில் டி.சீனிவாசன் என்ற பெயர் இருந்தது. இன்று அரசியல் மாறுதலில் பரமக்குடியில் டி.எஸ் பெயர் டெல்லியில் நேருஜி குடும்பம் அளவுக்கு மதிக்கப்பட்டு... அந்த அடிக்கல் நீக்கப்பட்டிருக்கலாம்.

இது பரமக்குடி சினிமா கதைகளில் ஒன்று...    என் கம்யூனிஸ்ட் நண்பர்களை எதிர்த்து ரவி தியேட்டர் சார்பில் என் தந்தை ஆஜராகி மனு செய்திருக்கிறார். அன்று மனுக்களை முடிவு செய்வது கலெக்டர்தான். பஸ் ரூட்டிலிருந்து சினிமா கொட்டகை முதல் எந்தவித லைசென்ஸ் கொடுக்கும் அதிகாரியாகவும் கலெக்டரே இருந்தார். இதைத்தான் ராஜாஜி அவர்கள் ‘லைசென்ஸ் ராஜ்’ என்று குறை கூறுவார்.

என் தந்தை ஊரிலில்லாத அன்று கலெக்டர் விசாரணைக்கு வந்து விட்டார் என்று ரஹ்மான் சாஹிப் தன் ஸ்டுடிபேக்கர் காரில் வந்து, ‘‘அய்யா ஊரில் இல்லை. நீங்கள் வர வேண்டும்’’ என்று அழைத்தார். ‘தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி’ என்று நினைத்து காரில் ஏறிவிட்டேன். ரஹ்மான் சாஹிப் அதிர்ஷ்டம், கலெக்டர் என்னோடு லயோலா கல்லூரியில் படித்தவர். ஏற்கனவே முந்திய கலெக்டர் கொடுத்த அனுமதிக்கு ஆறு மாதம் தடை உத்தரவு போட்டு விட்டார்.

இவ்வளவு கதையும் நயினா அறிவார். ‘‘சின்ன வக்கீலய்யா... இப்படி சினேகித துரோகம் செய்யலாமா? அவங்க கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க?’’ என்று கேட்டார்.‘‘நான் உங்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை. என் நண்பர்களுக்கு பதில் கூற எனக்குத் தெரியும்’’ என்றேன். நயினா கோபமாகப் போய் விட்டார்.இரண்டு நாட்கள் கழித்து என் ஆபீஸில் பத்து, பதினைந்து கட்சிக்காரர்கள்...

அவர்கள் வழக்கு சம்பந்தப்பட்ட 20 சாட்சிகள்... அவர்களுக்குப் பாதுகாப்பு கியாரண்டியாக ஐந்தாறு பேர்கள்... ஆக மொத்தம் சட்டையில்லாமல் -அதாவது ஜிளிறிலிணிஷிஷி   ஆக இருபது பேரும், ஓரிரண்டு ஆண்கள் சட்டையுடனும், பாக்கி பெண்களும் கூட்டமாக இருக்கும்போது ஸ்வர்ணாம்பிகா ஹோட்டல் சோமு, அருமைப்பிச்சை மற்றும் சாந்தி தியேட்டர் சோமு ஆகிய என் இடதுசாரி தோழர்கள் மூவரும் நாராயணசாமி நாயுடு பின் தொடர வந்தார்கள்.

ஸ்வர்ணாம்பிகா சோமு ஒரு ஹோட்டல் முதலாளி. கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்னைப் போலவே கொஞ்சம் பொருந்தாத ஆள்! அவர் கொடுத்த தகவலில் நான் ‘வருமுன் காப்போன்’ ஆக தயாராகி விட்டேன். கட்சிக்காரர்களை கொஞ்சம் காத்திருக்கச் சொல்லி விட்டு நண்பர்களை வீட்டுக்குள் வருமாறு அழைத்தேன்.‘‘இல்லை, ஒரே ஒரு கேள்வி கேட்டுவிட்டு போய் விடுகிறோம்!’’

‘‘உட்கார்ந்து கேளுங்க!’’அருமைப்பிச்சை - ஐந்தாம் கிளாஸிலிருந்து என் வகுப்புத் தோழன்-கேட்டான்... ‘‘ஒரு வருஷம் கஷ்டப்பட்டு லைசென்ஸ் வாங்கினோம். எங்களுக்கு எதிரா ஆஜராகி இப்படி பண்ணிட்டியே? உனக்கே நியாயமா தோணுதா? நயினா கேட்டதுக்கு என்கிட்டே நேரே பேசிக்கிறேன்னு சொன்னியாமே?’’ 

நான் எழுந்து நின்று இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு, ‘‘தெரியாம செய்துட்டேன். என்னை மன்னிக்கணும். இனிமே இந்த தவறை செய்ய மாட்டேன்!’’  அருமைப்பிச்சை கண்களைத் துடைத்துக்கொண்டே மற்ற இரண்டு பேரிடமும் திரும்பி, ‘‘நான் சொன்னேனில்லே... அவன் அப்பா சொல்லி போயிருப்பான்னு!’’‘‘இல்லை அருமை! அப்படி இல்லை. எனக்குக் கொழுப்பு. நாம ஒரு வக்கீலாச்சே, ஃபீஸ் வாங்கிட்டு யாரையும் எதிர்த்து ஆஜராகலாம் என்கிற திமிரு. இனிமே இந்த தப்பு பண்ணமாட்டேன்!’’

மூவரும் வக்கீல் மேசையைச் சுற்றித் தாண்டி வந்து என்னைக் கட்டிக்கொண்டு அழுதனர். அன்று பஸ் ரூட்டிலிருந்து சினிமா கொட்டகை முதல் எந்தவித லைசென்ஸ் கொடுக்கும் அதிகாரியாகவும் கலெக்டரே இருந்தார். இதைத்தான் ராஜாஜி அவர்கள் ‘லைசென்ஸ் ராஜ்’ என்று குறை கூறுவார்.

(நீளும்...)

சாருஹாசன்