குட்டிச்சுவர் சிந்தனைகள்



இதுதான் மிடில் கிளாஸ்!

* ஊட்டி, கொடைக்கானலுக்கு கல்யாணமானவுடன் போலாம்னு கனவு கண்டு, அப்புறம் கைல ஒரு குழந்தையுடன் செல்பவர்கள்.

* குழந்தையை ஸ்கூல்ல சேர்க்கிறதுக்கு முன்னாடி வீடு கட்டிடலாம்னு நினைச்சு குழந்தையோட கல்யாணத்துக்கு முன்னால கட்டி முடிக்கிறவர்கள்.

* தங்க நகைய வாங்கி, அதை வங்கில அடமானம் வச்சு, அதுல வர்ற பணத்துல நகை வாங்கி தங்கம் சேர்க்கிறவர்கள்.

* தோட்டம் வைக்கணும்னு ஆசைப்பட்டு தொட்டில பூச்செடி வளர்க்கிறவர்கள்.

* சினிமா தியேட்டரில் பாப் கார்னை வாழ வைப்பவர்கள்.

* மாடு மாதிரி உழைச்சு சேர்த்த பணத்தை ஈமு கோழி மேல கட்டி ஏமாந்து போகிறவர்கள்.

* வெளிய போய் வாங்குற தண்ணி பாட்டில நம்பாம, வீட்டுலயே சுடு தண்ணிய எடுத்துட்டு போகிறவர்கள்.

* அவனவன் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுனு அலையறப்ப, ஆதார் கார்டுக்கும் ரேஷன் கார்டுக்கும் அலைகிறவர்கள்.

* புத்தாண்டுக்கு ஓசில டைரி வாங்கி முதல் 5 பக்கம் கவிதையும், அதுக்கப்புறம் வீட்டு செலவுக்கணக்கும் எழுதுகிறவர்கள்.

* பத்து செகண்ட் சிக்னல்ல நிக்கிறப்பவும் வண்டி இஞ்சின ஆஃப் செஞ்சு ஆன் செய்கிறவர்கள்.

* 50000 சம்பளத்துல வேலை கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டு, 25 ரூபாய்க்கு தேங்காய் உடைச்சு பிள்ளையாருக்கு ஐஸ் வைக்கிறவர்கள்..

* மாசா மாசம் பயன்படுத்த காபித்தூள் வெறும் 100 கிராம் வாங்கினாலும், அட்சய திரிதியை அன்னைக்கு அரை கிராம் தங்கமாவது வாங்கணும்னு ஆசைப்படுகிறவர்கள்.

* செல்போனுக்கு சட்டையும், டி.வி ரிமோட்டுக்கு ஜட்டியும் போட்டு விடும் நல்ல உள்ளங்கள்.

* கிரிக்கெட் பேட் வாங்கிக்கொடுத்தாவே பையன் சச்சின் ஆவான், டென்னிஸ் ராக்கெட் வாங்கிக் கொடுத்தாவே பொண்ணு சானியா மிர்சா ஆவாள்னு கனவு காண்பவர்கள்.

இவ்வளவு ஏன், இந்தியாவ இயங்க வைக்க இழுத்துப் போவதே மிடில் கிளாஸ்தான்!

செல் குறள்

செல்போனில் சூப்பர்போன் ஸ்மார்ட்போன், அப்போன்
செல்போனில் எல்லாம் தலை.
தந்தை மகற்காற்றும் நன்றி சேம்சங்கில்
ஸ்மார்ட் போன் தந்துவிடல்
மகன் தந்தைக் காற்றும் உதவி அப்பாமுன்

போனை நோண்டாதிருக்கும் செயல்
2நியினால் ஸ்லோவாகும் மொபைல்டேட்டா ஆகாதே
3நியினால் போட்ட டேட்டா
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் சார்ஜர்

பட்டனைத் தடவும் மணற்கேணி மாந்தர்க்குக்
டச்ஸ்க்ரீன் தூறும் அறிவு
முகநக நட்பது நட்பன்று வாட்ஸப்பில்
அகநக நட்பது நட்பு
மிஸ்ட்கால் செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
கால்செய்து பேசி விடல்

ரேட்கட்டரோடு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
பில் கட்டியே சாவார்
8மெகாபிக்சல் கேமராவோடு வாங்குக அஃதிலார்
வாங்குதலின் வாங்காமை நன்று.
ஆப்பிள்இனிது ஐபோன் இனிது என்பதம் மக்கள்
ஆண்ட்ராய்ட் புகழ்கேளா தவர்

என்பி லதனை வெயில்போலக் காயுமே
சிக்னல் இல்லதனை நெட்வொர்க்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்பேட்டரி
fullcharge எனக்கேட்ட மொபைல்
வாட்ஸப் நாடி வைபர் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

wireநீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் சார்ஜ் இல்லாவிடின்
சிக்னலுக்கும் உண்டோ அடைக்குந்தாழ் நாட்ரீச்சபள்
புன்கணீர் பூசல் தரும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை மிஸ்ட்கால் மறந்த மகற்குகீபேட்லாக் போட்டவர் தமக்குரியர் அன்லாக்குடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

(புதிதாக) மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவரை கண்டுபிடிப்பது எப்படி?

*‘செல்போன்’ என சொல்ல மாட்டார், ‘ஐபோன்’ என்பார்

*‘‘சட்டை வாங்கினேன்’ என சொல்ல மாட்டார், ‘ஆலன் சோலேல வாங்கினேன்’ என்பார்

* டாடா / மாருதி கார்களை சுமார் என சொல்லுவார்

*ரிதிசில பக்கெட் சிக்கன் தின்னுட்டு பசியடங்காமலே படுத்துக்குவார்

* மினிமம் 2 பாடி ஸ்ப்ரே வைத்திருப்பார்

*பஸ் பயணம் திடீரென ஒத்துக்கொள்ளாமல் போகும்

*வெறும் 76 ரூபாய் பில்லுக்கும் டெபிட் / கிரெடிட் கார்டு உரசுவார்

* சொந்த ஊருக்கு போகும் எண்ணிக்கை குறையும்

* ஏ.சி இல்லாத இடங்களில் ‘‘வேர்ப்பது போலிருக்கு’’ என்பார்

*கருப்பு, வெள்ளை, பிரவுனில் மூணு செட் ஷூ இருக்கும்

* மணிக்கட்டை விட கைக்கடிகார டயலின் சைஸ் பெருசா இருக்கும்

*‘அப்படியில்ல’, ‘நீ சொல்றது தப்பு’ என்ற வார்த்தைகள் அடிக்கடி வரும்

* சரியாக ஃபிட் ஆகாட்டியும் ஜாக்கி ஜட்டி அணிவார்

* தலைக்கு தேய்ப்பதில் தேங்காய் எண்ணெய் குறைந்து, மற்றதெல்லாம் அதிகரிக்கும்

*காய்கறிக்கடை முதல் கறிக்கடை வரை பேரம் பேசுவது முற்றிலும் குறையும்

*ரோட்டோர கடைகளில் ஐஸ்கிரீம் முதல் டிபன் வரை சாப்பிடுவது குறையும்

*டூத் பேஸ்ட் கொஞ்சம் தாராளமாய் செலவாகும்

*குளியல் சோப்புகள் கொஞ்சம் விலையுயர்ந்ததாய் வாங்கப்படும்.

* சனிக்கிழமை இரவு தூங்க லேட்டாகும்

ஆல்தோட்ட பூபதி