நல்ல பையன் இல்ல... நான் தெளிவான பையன்!



ஆதி அடடே

போன மாதம் வரை ஆதியின் அலுவலகத்தை ‘அரவான்’ போஸ்டர்கள்தான் அலங்கரித்திருந்தன. இரண்டு வருட இடைவெளிக்குப் பின், அவரின் ‘யாகாவாராயினும் நாகாக்க’ படம், ஆடியோ ரிலீஸுக்கு ரெடி. அப்பா ரவிராஜா  தயாரிக்கிறார்... அண்ணன் சத்யபிரபாஸ் இயக்குகிறார்...

ஸோ, ஆதிக்கு இது ‘ஃபேமிலி படம்’. ‘‘எப்படி வந்திருக்கு?’’ - ஆதியிடம் கேட்டால் சிரிக்கிறார். ‘‘என் படத்தைப் பத்தி என்கிட்ட கேட்டா, சூப்பரா வந்திருக்குன்னுதான் சொல்வேன்’’ - யதார்த்தமாக ஆரம்பித்தது உரையாடல்.

‘‘இந்தப் படத்தில் மிதுன் சக்ரவர்த்தி, பசுபதி, ‘ரௌத்ரம்’ கேமராமேன் சமி... இப்படி சொல்றதுக்கு பெரிய லிஸ்ட்டே இருக்கு. தென்னிந்தியாவிலேயே முதல் முறையா ‘4கே’... அதாவது, அல்ட்ரா ஹெச்.டி குவாலிட்டியில படத்தைப் பண்ணியிருக்கோம். யு.ஹெச்.டி. வசதி கொண்ட தியேட்டர்கள்ல இந்த டெக்னாலஜியை நீங்க ஃபீல் பண்ண முடியும். படத்துக்கு மொத்தம் 3 மியூசிக் டைரக்டர்கள். எல்லாருமே புதுசு.

மிடில் கிளாஸ் பையன் நான். ஹீரோவுக்கான பில்டப் எதுவும் இருக்காது. 4 இளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் யதார்த்தமான சம்பவங்கள்தான் படம். நிஜ வாழ்க்கைன்னா அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு நமக்குத் தெரியாதுதானே... அப்படி ஒரு கதை இது. என் கேரக்டர் பெயர் சகா. சித்தார்த், கார்த்திக், ஷ்யாம்னு 3 பேர் என் ஃப்ரெண்ட்ஸா வர்றாங்க. என் அண்ணன் சத்யபிரபாஸ், அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல படிச்சவர். ஹாலிவுட் டைரக்டர்கள் நிறைய பேர் படிச்ச ஸ்கூல்ல இவரும் 2 வருஷ கோர்ஸ் முடிச்சிருக்கார்.

ஒரு நிஜ சம்பவத்தை வச்சு, இந்தக் கதையை எழுதி, இயக்கியிருக்கார். கோவா, மும்பை, சென்னைன்னு ஷூட்டிங் போயிட்டு வந்திருக்கோம். தெலுங்கில் கிட்டத்தட்ட 55 படங்கள் பண்ணினவர் எங்க அப்பா ரவிராஜா பினிசெட்டி. முதல் முறையா தமிழ்ல தயாரிக்கிறார்!’’ ‘‘தமிழில் மிதுன் சக்ரவர்த்தி..?’’‘‘ஆமாம்.

தமிழ்ல டப் ஆன ‘குரு’ல அவர் நடிச்சிருந்தார். அது தவிர, தமிழ் ரசிகர்கள் அவரைப் பார்த்ததே இல்லை. 3 தேசிய விருது வாங்கினவர். ஒரு தென்னிந்திய மொழியில அவர் நேரடியா நடிக்கிறது இதுதான் முதல் முறை. முதலியார்னு ஒரு கேரக்டர் பண்ணியிருக்கார். 30 நாள் அவரோட ஷூட்டிங்ல இருந்ததே ஹேப்பி அனுபவம்!’’‘‘பசுபதி...’’

‘‘ ‘அரவான்’ல நடிக்கிறப்ப, அவரை ‘அண்ணன், அண்ணன்’னுதான் கூப்பிட்டுவேன். அவரும் ஒரு தம்பியா நினைச்சு என் மீது அன்பைப் பொழிவார். படத்துக்காக அப்படிச் சொல்லப் போய், இப்ப நிஜமாவே ஒரு அண்ணன் கிடைச்ச ஃபீலிங். செட்ல ஜாலியா, செம கலாட்டா பண்ணிட்டிருப்பார். ஷூட்டிங் முடிஞ்சதும் ஊர் கதையெல்லாம் ஓடும்!’’
‘‘நீங்களாவே சொல்ற மாதிரி, அப்படியே ஹீரோயின் பத்தி...’’

‘‘சொல்றேன் பாஸ். நிக்கி கல்ரானி. பெங்களூருல செட்டில் ஆன மும்பை பொண்ணு. மலையாளத்தில் ஏற்கனவே 3 படங்கள் பண்ணினவங்க. எல்லாமே பெரிய ஹிட். ரொம்ப பப்ளி, துறுதுறு.

டைமிங், டெடிகேஷன்ல கலக்குறாங்க. தமிழ் நல்லா தெரியுது. அதனால டப்பிங் கூட அவங்களையே பேச வச்சிருக்கோம்.’’ ‘‘ ‘அரவான்’ படத்துக்கு அப்புறம் ஆதியைக் காணோமே... ஏன்?’’‘‘நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ‘ஆடுபுலி’, ‘அய்யனார்’னு பண்ணின படங்கள் தோல்வி. இதையெல்லாம் கவனிச்சப்ப, ‘தப்பு பண்றோமா’ன்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.

அடுத்து செலக்ட் பண்றதுல கவனமா இருக்கணும்னு தோணிடுச்சு. ‘மிருகம்’ படத்துக்கு அப்புறம் ‘ஈரம்’ பண்றதுக்கு முன்னாடி ஒரு வருஷம் இடைவெளி இருந்துச்சு. அந்த கேப் ரொம்ப நல்லதுதான். அப்புறம் ‘அரவான்’.

அந்த ரெண்டு படங்களும் ஒரு நடிகனா என்னை நிலை நிறுத்துச்சு. ‘அரவான்’க்கு அப்புறம், தொடர்ந்து அதே மாதிரி முரட்டுத்தனமான கேரக்டர்களாகவே வந்தது. வேணாம்னு விட்டுட்டேன். கேப் எனக்கு ப்ளஸ்தான்!’’

‘‘ஹீரோக்கள்ல உங்க ஃப்ரெண்ட்ஸ் யாரெல்லாம்?’’‘‘விஷால், ஆர்யா எல்லாம் காலேஜ்மேட்ஸ். இன்னிக்கு வரை நட்பா இருக்காங்க. இதுவரை நான் பண்ணின படங்கள்ல என்னோட நடிச்ச எல்லாருமே என்னோட ஃப்ரெண்ட்ஸ்தான். அது தவிர, நந்தா, வசந்த் விஜய்னு ஒரு லிஸ்ட் ஆஃப் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க.’’‘‘கிசுகிசுக்கள்ல சிக்க மாட்டேங்கிறீங்களே?’’

‘‘அதுக்கு காரணம்... ஒண்ணு, நான் நல்ல பையனா இருக்கணும். இல்ல, தெளிவான பையனா இருக்கணும். எதுன்னு நீங்களே செலக்ட் பண்ணிக்குங்க!’’‘‘புரியலையே..?’’‘‘நல்ல பையன் எந்தத் தப்பையும் பண்ணமாட்டான். தெளிவான பையன் தப்பான விஷயத்தை கரெக்ட்டா பண்ணுவான். தெளிவானவங்க என்னைச் சுத்தி நிறைய இருக்கறதால, நானும் தெளிவா இருக்கக் கத்துக்கிட்டேன்!’’‘‘ஹீரோக்கள் சிக்ஸ் பேக் வச்ச படங்கள் பெரும்பாலும் சரியா போறதில்லை. விஷாலுக்கு ‘சத்யம்’, பரத்துக்கு ‘555’, அதர்வாவுக்கு ‘இரும்புக்குதிரை’, உங்களுக்கு ‘அரவான்’... ஏன் அப்படி?’’

‘‘ஒரு படத்துல கெட் அப்புக்கு ஏற்ற காஸ்ட்யூம் போடுறது அந்த கேரக்டருக்கான சப்போர்ட். அந்த மாதிரி ஒரு சப்போர்ட்தான் சிக்ஸ் பேக்கும். சிக்ஸ் பேக் வைக்கிறதுனால ஒரு படம் ஓடும்னோ, ஓடாதுன்னோ சொல்றதில் எனக்கு உடன்பாடில்லை. சிக்ஸ் பேக்ங்கறது இயற்கையான முறையில கஷ்டப்பட்டு பண்ணிக்கிற ஒரு மேக்கப். அவ்வளவுதான். அதை ஒரு பெரிய விஷயமா நினைக்கிறது நம்ம தப்பு!’’

-மை.பாரதிராஜா