சீரியஸ் இல்லை... சிரியஸ்!



கெக்கே பிக்கே இணையதளம்

குதிச்சு சாகலாமா? அவ மிதிச்சு சாகலாமா?

உலகத்தைத் திருத்தறேன்னு கலகத்துல இறங்குற ஆசாமிகளை விட, ஜாலியா ஜோலியப் பார்த்துட்டுப் போறவன் பெஸ்ட். அந்த வகையில நாங்க சீரியஸ்க்கு எதிர்க்கட்சி என சீரியஸை சீரியஸாக எதிர்க்கிறது ஒரு இணையதளம். ‘ஆன்டிசீரியஸ்.காம்’ (www.antiserious.com) எனும் அந்தத் தளம் இப்போது இளசுகள் மத்தியில் செம ஹிட். அவர்களின் குசும்புகளில் ஒரு சில சாம்பிள்ஸ்...இந்திய அப்பாக்கள் எப்படி இருப்பார்கள்?

மனைவி கணவனை அடிக்கும் சீரியல்களை தன் மனைவியும் குழந்தைகளும் கை கொட்டி ரசிப்பதை ரொம்ப பலகீனமாகப் பார்த்துக்கொண்டிருப்பார். மனைவியிடம் அடி வாங்கினாலும் அவமானமில்லை; ஆனால் அந்த துர்சம்பவத்தை தன் நண்பர்களிடம் மறைப்பதையே கௌரவமாகக் கருதுவார்.

மகள்தான் தன்னைப் போல வருவாள் என உறுதியாகத் தெரிந்தாலும் மகன்தான் தன்னைப் போல வருவான் என அடிக்கடி சொல்வார்.மகனுக்கு பன்னிரண்டு வயதாகும் வரைதான் ஒரு அப்பாவாக இருப்பார். அப்புறம் தாத்தாவாகிவிடுவார். அதாவது தன்னுடைய அப்பா தன்னிடம் எதையெல்லாம் எதிர்த்தாரோ... அதையெல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகப்படுத்தி தன் மகனிடம் உள்ள அதையெல்லாம் எதிர்ப்பார்.

பிள்ளைகளின் இப்போதைய தேவையை கவனிக்காமல், அடுத்த ஐம்பது வருடத்துக்குப் பிறகு என்ன தேவையோ அதை வாங்கிப் போடுவதில் தீவிரமாக இருப்பார். நகை, நிலம், வங்கி பற்றியெல்லாம் இப்போதுதான் யோசிப்பார். இந்தக் காலகட்டத்தில் பிள்ளைகளைக் கட்டிப் பிடித்து அன்பைத் தெரிவிக்கிற பழக்கத்தை அவர் விட்டிருப்பார். காரணம், கட்டிப் பிடித்தால் தன் பாக்கெட் மணி காணாமல் போகும் என்ற நினைப்பு.

மேற்கு வங்காளம் பக்கத்தில் சிலிகுரி என்ற ஒரு மலைக்கிராமம். இன்டர்நெட் சென்டர்... இரண்டு மாக்கான்கள் புதிதாக இ மெயில் ஐடி ஆரம்பிக்க வேண்டி அங்கிருக்கும் பெண்ணுக்கு டார்ச்சர் கொடுக்கிறார்கள்...பெண்: நீங்க கொடுத்த பாஸ்வேர்டு வீக்கா இருக்கு. வேற சொல்லுங்க!பையன் : என்ன சொல்லணும்?
பெண்: உங்க அம்மா பேரைச் சொல்லுங்க?
பையன் 1: ஏன், அதெல்லாம் முடியாது. அவங்களுக்கு நான் என்ன செய்யறேன்னெல்லாம் தெரியக் கூடாது!
பெண்: அவங்களுக்கு ஒண்ணும் தெரியாது. உங்களுக்கு மட்டும்தான் அவங்க பேர் தெரியும். அதனால இந்த அக்கவுன்ட்டை யாரும் ஹேக் பண்ண முடியாது!
பையன் 1: ஹேக்னா என்ன?
பெண்: கடத்துறது!
பையன் 1: ஐயய்யோ, சப்போஸ் கடத்திட்டா..? எனக்கு இருக்குறது ஒரே ஒரு அம்மா!
பெண்: அப்போ அப்பா பேர் சொல்லுங்க!
பையன் 1: ம்ம்... நான் வேணா என்னோட முதல் கேர்ள்
ஃப்ரெண்ட் பேரைச் சொல்லட்டுமா? ரீட்டா!
பையன் 2: டேய், வேணாம்டா! அது இப்போதைய கேர்ள்
ஃப்ரெண்டுக்குத் தெரிஞ்சா பிரச்னை ஆகிடும்!
பெண்: வேணாம்னா, நீங்க பின்னாடி மாத்திக்கலாம் சார்!
பையன் 1: மாத்திக்கலாமா? ஹை... புது கேர்ள் ஃப்ரெண்ட், புது பாஸ் வேர்டு! சூப்பர்.
பெண்: சூப்பர்... அதுவும் வீக்னு சொல்லுது!
பையன் 2: ஸ்ட்ராங்கா வேணும்னா சல்மான் கான்னு போடுங்க!
பெண்: அதுவும் வீக்னுதான் வருது...
பையன் 1: என்னது, சல்மான் கானே வீக்கா? அப்போ ‘ஹனுமான் ஜீ’ன்னு போடுங்க!
பையன் 2: இல்லாட்டி 100 கிலோ... இல்ல, இல்ல, 100 குவிண்டால்னு போடுங்க!
பெண்: ஓகே. உங்க பாஸ்வேர்டை எழுதிக்கோங்க... ‘ஹனுமான் ஜீ, 100 குவிண்டால்’!
பையன் 2: ஏங்க, ஒரு ஸ்ட்ராங் பாஸ்வேர்டு வேணும்னா எவ்வளவு ஆகும்?
பெண்: பாஸ்வேர்டை எல்லாம் எங்கயும் வாங்க முடியாது. இமெயில் ஐ.டியை வேணா வாங்கலாம்!
பையன் 1, பையன் 2: இதென்னங்க அநியாயமா இருக்கு. நீங்க பூட்டு விப்பீங்க... அதுக்கு சாவி விக்க மாட்டீங்களா?

ஆனானப்பட்ட ரஜினிகாந்தால்கூட முடியாத காரியம்...மிஸ்டர் மன்மோகன் சிங்கை பேச வைப்பது!

தூங்கு பாராளுமன்றம்!

நம் சட்டமன்றங்கள், பாராளுமன்றங்களில் 18 அமைச்சர்கள் தூங்கியிருப்பதற்கான ஆதாரத்தை ஒரு டி.வி சேனல் வெளியிட்டது. புகழ்பெற்ற அரசியல் தலைவரான சர்ச்சில் கூட, ‘‘மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் சுறுசுறுப்புக்கு உதவும்’’ என்று சொல்லியிருக்கிறார். நம் அமைச்சர்கள் எந்தளவுக்கு சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் என்பதை அவர்களின் தூக்கத்தை வைத்துத்தான் முடிவு செய்ய முடியும். ஸோ, தூங்குவதைப் படம் பிடிப்பதையும் இனி மனித உரிமை மீறலாக்க வேண்டும்.

 டி.ரஞ்சித்