சிபாரிசு



தொழிலதிபர் தேவராஜ் தனது கம்பெனிக்கு சூப்பர்வைசர் வேலைக்கு நேர்காணல் நடத்தத் தயாரானார். வந்திருந்த ஐந்து பேரில் மூன்று பேரிடம் சிபாரிசுக் கடிதம் இருந்ததைக் கண்டு முகம் சுளித்தார். அவர்களை அனுப்பிவிட்டு சிபாரிசுக் கடிதம் இல்லாமல் வந்த சுதாகரை நேர்காணல் நடத்திக்கொண்டிருந்தார். திடீரென்று அவரது மொபைல் போன் அடித்தது. எடுத்துப் பார்த்தார். கூப்பிடுவது அவரது நெருங்கிய நண்பர் தர்மராஜ்.

‘‘நான் தர்மராஜ் பேசறேன். அங்க சுதாகர்னு ஒருத்தன் இன்டர்வியூவுக்கு வந்திருக்கான். அவன்கிட்ட என் ரெகமெண்டேஷன் லெட்டர் குடுத்தனுப்பியிருக்கேன். பார்த்து செய்..!’’ தேவராஜுக்கு கடுப்பேறியது. ‘‘நீ தர்மராஜுக்கு தெரிஞ்சவனா..? அவர் குடுத்த லெட்டர குடு..!’’ - கோபமாகக் கேட்டார்.‘‘சாரி சார்...

நான் இங்க இன்டர்வியூவுக்கு வர்றேன்னு தெரிஞ்சதும் என் அப்பா தர்மராஜ் சார்கிட்ட பேசி ரெகமெண்டேஷன் லெட்டர் வாங்கிக் கொடுத்துட்டாரு. மத்தவங்க சிபாரிசுல வேலைக்கு சேர எனக்கு விருப்பம் இல்ல. என்னோட திறமையப் புரிஞ்சி வேலை தந்தா தரட்டும்னு அந்த லெட்டரை அப்பாவுக்குத் தெரியாம கிழிச்சிட்டேன்..!’’ - சொல்லிவிட்டு இருக்கையை விட்டு எழுந்த சுதாகரை அமரச் சொல்லி, நியமனக் கடிதத்தில் கையெழுத்திட்டார் தேவராஜ்.   
     
ஐரேனிபுரம் பால்ராசய்யா