சகுனியின் தாயம்



‘‘புரியவில்லை...’’
பளிச்சென்று சொன்ன தளபதியை உற்றுப் பார்த்தான் இளமாறன்.
‘‘என்ன புரியவில்லை?’’
‘‘ஓநாய் நமக்குத் துணை புரியும் என்றீர்கள்...’’
‘‘ஆம்...’’
‘‘அதையே விரிவுபடுத்தி ஓநாய் குலச் சின்னமான சீன சக்கரவர்த்தி என்றார் யவன ராணி...’’
‘‘ம்...’’

‘‘இது எப்படி சாத்தியம்?’’
‘‘ஏன் சாத்தியமில்லை..?’’
‘‘காரணங்கள் இருக்கின்றன...’’
‘‘அவற்றை அடுக்குங்கள்...’’

‘‘தெளிவாகவே முன்வைக்கிறேன்...’’ என்றபடி பட்டியலிட ஆரம்பித்தான். அங்கிருந்தவர்களின் கருவிழிகள் தளபதியையே மொய்த்தன. ‘‘நமக்குக் கிடைத்த தகவல்களின்படி சீன சக்கரவர்த்தி நேசம் பாராட்டுவது சோழ - சேர மன்னர்களுடன். சொல்லப் போனால் நீங்கள் இருவரும் புகாரில் இருந்த போது உங்களை சிறை செய்ய முற்பட்டவர் அவர்தான்...’’ என்று சொல்லிக் கொண்டே போன தளபதியை இடைமறிக்க யவன ராணி முற்பட்டாள். கைகளை அசைத்து ராணியைத் தடுத்தவன் தொடர்ந்தான்.

‘‘நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது ராணி... பகைவர்களிடம் அவர் நட்பு பாராட்டுவது வெறும் நடிப்புக்குத்தான் என்கிறீர்கள். ஆதாரங்களை கேட்காமல் அதை அப்படியே ஒப்புக் கொள்கிறேன். ஏனெனில் இளமாறன் அவ்வளவு சுலபத்தில் யாரையும் நம்பக் கூடியவர் அல்ல. அப்படிப்பட்டவரே சீன சக்கரவர்த்தி நமக்கு உதவுகிறார் என்று சொல்லும்போது அதை கண்களை மூடிக் கொண்டு ஏற்கத்தான் வேண்டும். எனது சந்தேகம் அது குறித்தல்ல...’’‘‘பிறகு?’’ இளமாறன் புருவத்தை உயர்த்தினான்.

‘‘இதற்கு பிரதி உபகாரமாக சீன சக்கரவர்த்தி என்ன எதிர்பார்க்கிறார்..? சோழ, சேர மன்னர்களால் கொடுக்க முடியாத எதை நம்மால் அவருக்கு வழங்க முடியும்?’’
‘‘சந்தை...’’ சட்டென்று இளமாறன் பதிலளித்தான்.‘‘அதாவது..?’’‘‘சீன பட்டுக்கான சந்தை. உடனே புகாரில் இல்லாத சந்தையா என உங்களுக்குள் கேள்வி எழும். அது நியாயமும் கூட. ஆனால், புகாரை விட பாண்டிய நாடு அவரளவில் வலுவானது...’’‘‘எந்த வகையில்?’’

‘‘முத்துக்கள்... கொற்கை முத்துக்கள்... எனவே தேசம் கடந்த சந்தை கொற்கையில் உண்டு. அதில் தனக்கும் இடம் கேட்கிறார். சுங்க வரியிலிருந்து தீர்வை எதிர்பார்க்கிறார். தவிர...’’
‘‘தவிர?’’‘‘கடல் வழியே தங்கள் நாட்டு பொருட்களைக் கொண்டு வரும்போது இடைஞ்சல் ஏதும் ஏற்படக் கூடாது என்று நினைக்கிறார். குறிப்பாக கடற் கொள்ளையர்களிடமிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு. இதை நம்மால் வழங்க முடியும் என நினைக்கிறார்...’’‘‘எப்படி?’’

‘‘யவனர்கள் இப்போது நமக்குத் துணையிருப்பதால்...’’அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். இளமாறன் எதைக் குறிப்பிடுகிறான் என்பது சகலருக்கும் புரிந்தது. கடல் கடந்து வாணிபம் செய்வதில் யவனர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். இதற்கென்றே ஒவ்வொரு யவன வணிகரும் தனிப்பட்ட முறையில் கடற் படையையும் வைத்திருக்கிறார். அந்தப் படைகளின் உதவியை சீன சக்கரவர்த்தி எதிர்பார்க்கிறார்...‘‘அடுத்த சந்தேகம்...’’ தளபதி எழுப்பினான்.

‘‘விடையளிக்கக் காத்திருக்கிறேன்...’’ இளமாறன் புன்னகைத்தான். ‘‘நீங்கள் இருவரும் புகாரில் பல திங்கள் இருந்திருக்கிறீர்கள்...’’‘‘ஆம்...’’‘‘அவை அனைத்தும் முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட ஆட்டின் உருவமான இந்த போர் வியூகத்துக்குத்தான் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை...’’இளமாறனின் கண்கள் பளிச்சிட்டன. கணத்துக்கும் குறைவான நேரத்தில் யவன ராணி பக்கம் திரும்பினான். மீண்டான். தளபதியை ஏறிட்டான்.

‘‘இதற்கான பதிலை நாளை பாண்டிய மன்னர் முன்னிலையில் நடைபெறும் மந்திராலோசனைக் கூட்டத்தில் சொல்கிறேன். அதுவரை காத்திருக்கலாம் அல்லவா?’’
‘‘என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்... உங்களை நாங்கள் சந்தேகப்படவில்லை. விவரம் அறியவே முற்படுகிறோம். அது கூட நீங்களாக தெரிவித்தால்தான். இல்லையெனில் உள்ளது உள்ளபடி ஏற்கவே சித்தமாக இருக்கிறோம்...’’

‘‘தளபதி... நெகிழ்ச்சிக்கு இங்கு இடமில்லை. போலவே ஒருவர் மீது மற்றவர் கொண்டிருக்கும் மதிப்பையும் பகிரங்கப்படுத்த நாம் கூடவில்லை. ஐயங்களை தெளிவுபடுத்தவே குழுமியிருக்கிறோம்...’’
‘‘புரிந்து கொண்டதற்கு நன்றி...’’‘‘நல்லது... இனி நாம் கலையலாம் அல்லவா?’’
‘‘இறுதியாக ஒரேயொரு கேள்வி...’’‘‘என்ன?’’

‘‘எப்படி ஆடுகள் ஒன்று சேர்ந்து புலியை வெல்லும்?’’‘‘ஓநாயாக மாறும்போது...’’‘‘என்ன?’’‘‘எதற்கு திடுக்கிடுகிறீர்கள் தளபதி... இடத்துக்குத் தகுந்த படி ஆடுகள் ஓநாயாக மாறலாம்... மாறும்...’’
என்று இளமாறன் சொல்லி முடித்த அதே நேரம் -புகார் தளபதி மாளிகையில் சோழ மன்னர் பெருநற்கிள்ளியும், சேரமன்னர் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
‘‘சேர மன்னரே... இதுதான் நமது திட்டம். ஆடாக மாற நினைக்கும் ஓநாயை மீண்டும் அதன் இயல்புக்கே கொண்டு வரப் போகிறோம்...’’ என்றபடி தன் திட்டத்தை சோழ மன்னர் விவரித்து முடிக்கவும் - புகாரை நோக்கி வந்து கொண்டிருந்த சீன வணிகக் கப்பலை கடற் கொள்ளையர்கள் சூழவும் சரியாக இருந்தது.

திடுக்கிட்ட சீனர்கள் என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள் -அந்த விபரீதம் நடந்தது.சீனக் கப்பலின் பாய்மரத்தை குறி பார்த்து கடற் கொள்ளையர்கள் சரமாரியாக எரி அம்பை எய்தார்கள்.
அதனை அடுத்து அந்த சீனக் கப்பல் நடுக் கடலில் பற்றி எரிய ஆரம்பித்தது. அந்த கப்பலுக்குள்தான் இளமாறனும் யவன ராணியும் எதிர்பார்த்த பொருள் இருந்தது.
‘‘கலெக்டர் வந்திருக்காராம்...’’‘‘எதுக்கு?’’
‘‘தெரியல... அநேகமா நிவாரணம் அளிப்பாரா இருக்கும்...’’
‘‘அப்படியா? தலைக்கு எவ்வளவு கிடைக்கும்?’’
‘‘அண்டாதான்...’’

‘‘யோவ்...’’
‘‘பின்ன என்னய்யா... வீட்டுக்கு இவ்வளவுன்னுதான் கொடுப்பாங்க...’’
‘‘அதுதான்... எவ்வளவு கிடைக்கும்?’’
‘‘சரியா தெரியல... ஒரு லட்ச ரூபா வரைக்கும் கிடைக்கலாம்...’’

‘‘அவ்வளவுதானா? எரிஞ்சு சாம்பலான பொருட்களோட மதிப்பு இதை விட அதிகம் இருக்குமே?’’
‘‘கரெக்ட்தான். ஆனா, எரிஞ்சு சாம்பலானது மூணு கிராமங்களாச்சே... அத்தனை வீடுகளுக்கும் நிவாரணம் தரணும்னா ஏகத்துக்கு செலவாகும். அவ்வளவு பணத்துக்கு கவர்மென்ட் எங்க போகும்? அதனால அதிகம் தர மாட்டாங்கன்னுதான் நினைக்கறேன்...’’
‘‘இது வேலைக்கு ஆகாது. புதுசா வீட்டை கட்டவே ஏகத்துக்கு செலவாகும். அதனால நாம ஒண்ணு செய்வோம்...’’
‘‘என்ன?’’

‘‘நிவாரணத் தொகை எல்லாம் வேண்டாம்... வீட்டை கட்டிக் கொடுங்கன்னு கேட்கலாம்...’’‘‘சரியான யோசனை...’’ பள்ளி மைதானத்தில் குழுமியிருந்த மக்கள் தங்களுக்குள் கசமுசா என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அனைவரது பார்வையும் மேடையின் மீதே இருந்தன. கூட்டத்தோடு கூட்டமாக தோழர் தமிழரசனும் நின்றிருந்தார். அவருக்கு சற்றுத் தள்ளி ரங்கராஜனும் தேன்மொழியும் அருகருகே நின்று கொண்டிருந்தார்கள். இரு வரிசைகளுக்கு முன் நின்றிருந்த கதிர், அவ்வப்போது திரும்பி இவர்களைப் பார்த்தான்.திடீரென பேச்சு சத்தம் குறைந்தது.
அனைவரது பார்வையும் மேடையையே மொய்த்தது.

வெள்ளை பேன்ட், வெள்ளை சட்டையில் மாவட்ட கலெக்டர் தோன்றினார். சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தார். தொண்டையைக் கனைத்தபடி பேச ஆரம்பித்தார்.‘‘உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியலை. பெரிய இழப்பை சந்திச்சிருக்கீங்க. நல்லவேளையா உயிர்சேதம் எதுவும் ஏற்படலை. ஆனா, அதுக்காக மகிழ்ச்சியடைய முடியாது. ஏன்னா, உங்க வாழ்வாதாரம் மொத்தமா பாதிக்கப்பட்டிருக்கு. இதுக்கெல்லாம் யார் காரணமோ அவங்களை கைது செய்திருக்கோம்... தப்பிச்சவங்களை இன்னும் சில நாட்கள்ல பிடிச்சிடுவோம். நீங்க எதுக்கும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவ அரசு தயாரா இருக்கு...’’

சற்று இடைவெளி விட்ட கலெக்டர், மௌனமாக கூடியிருந்தவர்களைப் பார்த்தார். எல்லோரும் தன்னையே கவனிக்கிறார்கள் என்று புரிந்ததும் தொடர்ந்தார்.‘‘திரும்பவும் உங்களுக்கு வீடு கட்டித் தர அரசு முடிவு செய்திருக்கு...’’‘‘ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...’’ என மக்கள் கூச்சல் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தன் வலக்கையை உயர்த்தி அவர்களை அமைதிப்படுத்திய மாவட்ட ஆட்சியர், தொடர்ந்தார். ‘‘அது மட்டுமில்ல... இழப்பீடா ஒவ்வொரு வீட்டுக்கும் ரூபாய் ஐம்பதாயிரம் தரவும் முடிவு செய்திருக்கோம்... அதோட ஆணோ, பெண்ணோ, பிளஸ் 2 வரைக்கும் படிச்ச எல்லாருக்கும் வேலை தரவும் அரசாங்கம் முடிவு செய்திருக்கு. மேல் விவரங்களை உங்களைத் தேடி வர்ற அரசு அதிகாரிகள் சொல்வாங்க...’’

மக்கள் ஆர்ப்பரித்தார்கள். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.‘‘பரவாயில்லையே... அரசு இந்தளவுக்கு இறங்கி வரும்னு நான் நினைச்சுக் கூட பார்க்கலை...’’ நெகிழ்ச்சியுடன் அருகிலிருந்த ரங்கராஜனிடம் முணுமுணுத்தாள் தேன்மொழி.‘‘ரொம்ப சந்தோஷப்படாதீங்க தோழர்... ஆபத்தே இனிமேதான் ஆரம்பமாகப் போகுது...’’
‘‘என்ன சொல்றீங்க?’’‘‘உண்மையை...’’‘‘எது உண்மை?’’‘‘இப்ப கலெக்டர் பேசினதை கவனிச்சீங்களா?’’
‘‘ம்...’’

‘‘அவர் என்ன சொல்ல வந்தார்னு புரிஞ்சுதா?’’‘‘...’’‘‘பாதிக்கப்பட்ட மூணு கிராம மக்களுக்கும் வீடு கட்டித் தரப் போறதா சொன்னார் இல்லையா?’’‘‘ஆமா...’’‘‘ஆனா, எங்க கட்டித் தரப் போறோம்னு சொல்லலை...’’ ‘‘நீ...ங்...க... என்ன சொல்ல வர்றீங்க...’’‘‘இதுவரைக்கும் இந்த மக்கள் எங்க வாழ்ந்தாங்களோ... பல தலைமுறைகளா எந்த மண்ணுல புரண்டு வளர்ந்தாங்களோ... அங்க இனி இவங்களால வசிக்க முடியாது. பல கிலோ மீட்டர் தள்ளி வேற எங்கயோ காட்டுல வீடு கட்டித் தரப் போறாங்க...’’

‘‘என்னது...’’‘‘ஆமா. கண்ணகி நகரும், செம்மஞ்சேரியும் எப்படி சென்னையைத் தாண்டி உருவாச்சோ... அப்படி தர்மபுரி பக்கம் புதுசா ஒரு ஏரியா தோன்றப் போகுது...’’‘‘அப்ப இதுவரைக்கும் இந்த மக்கள் வாழ்ந்த இடம்?’’அதிர்ச்சியுடன் தேன்மொழி கேட்ட அதே நிமிடம் -‘‘அங்கதான்... அந்த மூன்று கிராமங்கள் இருந்த இடத்துலதான்... ‘மெடிகோ’ நிறுவனம் வரப் போகுது. கட்டப் போற கட்டிடம் இப்படித்தான் இருக்கும்...’’ என ப்ளூ பிரின்ட்டைக் காட்டினான் ஸ்காட் வில்லியம்ஸ்.

மீசையைத் தடவியபடியே அதைப் பார்த்தார் வால்டர் ஏகாம்பரம்.இறக்குமதி செய்யப்பட்ட 555 சிகரெட்டை புகைத்தபடியே ஸ்காட் வில்லியம்ஸ் தொடர்ந்தான்.‘‘முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட ஆடு... இதுதான் பில்டிங் தோற்றம். மேலுக்குதான் மெடிசன் தயாரிக்கறது. உள்ளுக்குள்ள நாம செய்யப் போற வேலை வேற... யெஸ், ஓநாயா மாறி ரெட் மார்க்கெட் பிசினசை செய்யப் போறோம்... மனித உறுப்புகளை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு ஏற்றுமதி செய்யப் போறோம். அதுக்கு சரியான இடம் வறண்ட பூமியான தர்மபுரிதான்...’’
‘‘இது இயற்கைக்கு விரோதமல்லவா?’’

கேட்ட இளம் சார்வாகனரை உற்றுப் பார்த்தார் முதிய சார்வாகனர். ‘‘எது?’’
‘‘ஆடு, ஓநாயாக மாறும் என்பது...’’
‘‘ஏன், மாறக் கூடாதா?’’
‘‘எப்படி மாறும்?’’
‘‘மனிதர்கள் மனம் வைத்தால்...’’‘‘புரியவில்லை...’’

‘‘புரிவதற்கு இதில் என்ன இருக்கிறது? வல்லான் வகுத்ததே சட்டம் என்பதுதான் இயற்கை. அதை அப்படியே ஏற்க முடியாது. கூடாது. அப்படிச் செய்தால் ஏற்றத்தாழ்வு என்பதும் இயல்புதான் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். இதற்காகவா மனித குலம் தோன்றியது? நிச்சயமாக இல்லை.

 அதனால்தான் இயற்கையைக் கட்டுப்படுத்த தொடக்கம் முதலே மனிதன் முயல்கிறான். அப்படிக் கட்டுப்படுத்தும்போதே அவன் நாகரிகம் அடைகிறான். இன்றைய மனிதன் காடுகளிலும், குகைகளிலும் பயந்து பயந்து வாழ்பவன் அல்ல. நகரங்களை உருவாக்கி அதில் வசிப்பவன். இதற்கு இந்த அஸ்தினாபுரியே ஓர் உதாரணம்தான். இப்படியொரு மாநகரத்தை இதற்கு முன் வாழ்ந்தவர்கள் யோசித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று அது சாத்தியமாகியிருக்கிறது. எப்படி? மனிதன் சிந்தித்ததால்... இயற்கையை கட்டுப்படுத்த முயற்சிப்பதால்...’’
‘‘இதற்கும் என் வினாவுக்கும்...’’

‘‘நிறைய தொடர்பிருக்கிறது. சார்வாகனர்களாகிய நம்மையே எடுத்துக் கொள். அஷ்டமா சித்திகளையும் நாம் கைவரப் பெற்றிருக்கிறோம். காற்றில் பறக்கிறோம்... நீரில் நடக்கிறோம்... பாறையை புரட்டுகிறோம்... இதெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று? இயற்கையை வசப்படுத்தியதால்தான். அந்த வகையில்தான் ஆடுகள் ஓநாயாக மாறுவதும் ஓநாய்கள் ஆடுகளாக மாறுவதும்...’’
‘‘அதாவது சமயத்துக்குத் தகுந்தபடி இல்லையா?’’

‘‘ஆம். அதனால்தான் ஓநாயின் குடும்பத்தை சேர்ந்த பைரவரை பழக்கி வீட்டு விலங்காக மனிதன் மாற்றியிருக்கிறான். தன் சொல் பேச்சு கேட்கும்படி செய்திருக்கிறான்...’’
‘‘நீங்கள் சொல்வதை இன்னொரு விதமாகவும் புரிந்து கொள்கிறேன்...’’‘‘எப்படி?’’‘‘ஆடோ, ஓநாயோ... அவை இரண்டுமே மனிதனின் குணங்கள்தான் இல்லையா?’’
முதிய சார்வாகனர் புன்னகைத்தார். ‘‘சரியாகச் சொன்னாய். ஒருநேரம் ஆடாக இருக்கும் மனிதன், அடுத்த கணமே புறச் சூழல் காரணமாக ஓநாயாக மாறலாம். போலவே ஓநாயாக இருப்பவன் ஆடாகலாம். காலமே இந்த மாறுதலைத் தீர்மானிக்கிறது. எனவேதான் காலத்தை வெல்ல மனிதர்கள் முயற்சிக்கிறார்கள்...’’

என்று முதியவர் சொல்லி முடித்ததும் -எங்கிருந்தோ பறந்து வந்த அம்பு மழை இளைய சார்வாகனரின் உடலை ஊசியாய் தைத்தது.எய்தவர் யாரென்று முதியவர் பார்த்தார்.பீஷ்மர் அங்கே நின்றிருந்தார்.

‘‘நம்ம கட்சிக் கூட்டத்துல ரகளை பண்ண வந்திருந்த எதிர்க்கட்சிக் கூட்டத்தை எப்படி விரட்டி அடிச்சீங்க?’’
‘‘முதல் பேச்சாளரா நம்ம தலைவர் பேசுவாருன்னு சொல்லித்தான்!’’

‘‘தலைவரோட பிறந்த நாள் விழாவுக்கு ஏன் ஒருத்தரையும் காணோம்..?’’
‘‘அவர் இப்ப எந்தக் கட்சியில இருக்காருன்னு தெரியாம தொண்டர்கள் குழம்பிப் போயிட்டாங்களாம்!’’

‘‘கூட்டத்தை ஏற்பாடு செஞ்சவர் மேல தலைவர் ஏன் கோவமா இருக்காரு?’’
‘‘கூட்டத்துக்கு கூலி கொடுத்து ஆட்களை கூட்டி வரச்சொன்னா, தலைவர் மேல செருப்பு வீசவும் கூலி
ஆட்களை கூட்டி வந்துட்டாராம்!’’

 எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

(தொடரும்)

கே.என்.சிவராமன்