நடைவெளிப் பயணம்



மரணபயம்

‘முன்னே பின்னே செத்தால்தானே சுடுகாட்டைப் பற்றித் தெரியும்’ என்று சொல்வார்கள். சுடுகாடு சிலருக்குக் கல்விக் கூடமாக இருக்கலாம். ஆனால் சுடுகாட்டுக்கு வெளியே வாழும்போது தான் இந்த மரண பயம் இயங்குகிறது. உயிருள்ள எல்லாப் படைப்புகளும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக ஒரு கணம் அசாத்தியத் துடிப்புடன் நடந்து கொள்வது இந்த பயத்தால்தான்.

உலகில் மரணமடையக் கூடிய எதுவுமே ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதன் உச்ச நிலையை அடைந்து, பிறகு சரியத் தொடங்குகிறது. சரியத் தொடங்கிய பின் மரண பயம் அதிகரிக்கிறது. மனிதர்களுக்கு வயதும் இயலாமையும் அதிகரிக்க அதிகரிக்க... அவர்களின் தற்காப்பு உணர்ச்சியும் அதிகரிக்கிறது.

போர் வீரர்கள் பற்றி கடந்த அறுபது, எழுபது ஆண்டுகளில் ஏராளமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. யுத்த களத்தில் திறமையாகப் போரிட்டவர்கள் பலரும், அடிப்படையில் மரண பயம் மிகுந்தவர்கள். இது யுத்த களத்தில் போரிட்டவர்களுக்குத்தான் பொருந்தும். ஆங்கிலத்தில் ஒரு வரி அடிக்கடி சொல்லப்படும்.

‘போர் வீரர்கள் யுத்தங்களை வெல்கிறார்கள், தளபதிகள் பதக்கங்களைத் தட்டிச் செல்கிறார்கள்’.பயமே இல்லாதவர்கள் உண்டா? இந்து கோயில்களின் விக்கிரகங்கள் பலவும் வலது கரத்தை ‘பயப்படாதே’ என்று கூறுவது போல உயர்த்தியபடி அமைக்கப்பட்டிருக்கும். வரம் அருள்வதைக் காட்டிலும், ‘பயம் வேண்டாம்’ என்ற செய்தி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

 பயம் அறியாதவர்கள் என்று வரலாற்றில் சிலரைக் குறிப்பிடுகிறார்கள். அவர்களிடம் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட படை இருந்திருக்கிறது.   சரத் சந்திரர் ‘ஸ்ரீகண்டன்’ என்றொரு நாவல் எழுதியிருக்கிறார். சிலர் அதை அவரின் சுயசரிதை என்றும் கூறுவார்கள். அதில் ஸ்ரீகண்டனின் சிறு வயது நண்பன் பாம்புகளைப் பிடித்து வீசி எறிவான். நடுநிசியில் ஆற்றைக் கடப்பான். காட்டினுள் எந்தத் தயக்கமுமின்றிப் போவான். அங்கே ஒரு பாம்புப்பிடாரனின் மனைவிக்கு உதவுவான்.

வரலாற்றில் பார்த்தால், பல ராஜபுத்திர ராஜாக்கள் முகலாயர்களோடு சமாதானமாக இருக்கச் சம்மதித்து விடுகிறார்கள். அவர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணை அந்த முகலாய அரசனுக்கு மணம் செய்தும் தந்திருக்கிறார்கள். முகலாய மன்னன் ஜஹாங்கீர், ஒரு ராஜபுத்திரப்  பெண்ணுக்குப் பிறந்தவன்.

 ஷாஜஹானும் அப்படியே; ஔரங்கசீப் கூட. ஆனால் ராஜபுத்திரர்களில் ராணா பிரதாப் சிங் மட்டும் போரிட்ட வண்ணமே இருக்கிறான். ஒருமுறை அவன் கோட்டை பறிபோய்விடும் போலிருக்கிறது. அங்கிருந்த ராஜபுத்திரப் பெண்கள் சுமார் பதினைந்தாயிரம் பேர் தீயில் குதித்துத் தங்களை மாய்த்துக் கொள்கிறார்கள். பிரதாப் கடைசி வரை பணியாமல் காடு, மலைகளில் வசித்து உயிரை விடுகிறான்.

இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பானியப் போர் வீரர்கள் தங்களுடைய குரூரத்தினால் பாதி ஆசியாவை அடக்கி வைத்துக் கொள்ள முடிந்தது. அவர்களுக்கு வெள்ளைக்காரர்கள், ஆசியர்கள் என்ற பாகுபாடு கிடையாது.

எந்த நாட்டை ஆக்கிரமித்தாலும், அந்நாட்டுப் பெண்கள் அனைவரையும் திரட்டி ஜப்பானியப் படைகள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி விடுவார்கள். போர் வீரர்களின் வசதிக்காக ராணுவ முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை அனுபவித்த பல கொரிய பெண்களிடம் இன்றுவரை ஜப்பான் ஆட்சியாளர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

யுத்த காலத்தில் சிறுவர்களாக இருந்தபோது ஒரு கொரிய நாட்டு இளைஞன், ஒரு சீனர் ஆகியோரிடம் பல மாதங்கள் பழக வாய்ப்புக் கிடைத்தது. ‘ஜப்பான்’ என்ற பெயரைக் கேட்டாலே அவர்கள் பொங்கி எழுவார்கள். விம்மி விம்மி அழுவார்கள். வரலாறே பல பிரச்னைகளை உட்கொண்டது. சமகாலத்தில் சுமுகமாக வாழ வேண்டும், வரலாறையும் மறக்கக் கூடாது என்பது சிரமமான விஷயம்தான்.

 ஐ.என்.ஏ. என்று நேதாஜி ஓர் அமைப்பு தொடங்கி அதில் சிங்கப்பூர், மலேயா, பர்மா ஆகிய நாடுகளில் இந்தியர்களைச் சேர வைக்காமல் இருந்திருந்தால் கொரியா, சீனா நாட்டவருக்கு நடந்தது இந்தியர்களுக்கும் நடந்திருக்கும்.

‘மரண ரயில்’ என்றழைக்கப்பட்ட ரயில் பாதையின் கதையை அவ்வளவு எளிதாக மறக்கமுடியாது. பர்மாவுக்கும் தாய்லாந்துக்குமாக அமைக்கப்பட்ட பாதை. பொறியியல் வல்லுநர்கள் அந்த ரயில் பாதையை அமைக்க ஆறு ஆண்டுகள் ஆகும் என்று திட்டமிட்டனர். யுத்தக் கைதிகளை விரட்டி வேலை வாங்கி ஒரே ஆண்டில் ஜப்பான் முடித்தது. அந்தப் பாதையின் ஒரு ஸ்லீப்பர் - அதாவது ஒரு குறுக்குக் கட்டைக்கு - ஒரு கைதி இறந்திருக்கிறான் என்று இன்று கணக்கிடுகிறார்கள்.

‘தி பிரிட்ஜ் ஆன் தி ரிவர் குவாய்’ என்ற திரைப்படத்தில் தணிக்கையாளர்கள் கருதி நிஜத்தில் நிகழ்ந்த குரூரம் குறைவாகவே காட்டப்பட்டது. உண்மையில் அந்தப் பதினைந்து, பதினாறு மாதங்கள் அந்தப் பிரதேசம் பல மைல்கள் கொண்ட திறந்தவெளி சித்திரவதைக் கூடமாகவும் இடுகாடாகவும் இருந்திருக்கிறது. ஆயிரக்கணக்கில் ஆங்கிலேய, சீனக் கைதிகள் மடிந்து விழுந்திருக்கிறார்கள்.

இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஐரோப்பாவில் பல நாடுகள் - குறிப்பாக ஜெர்மனியும் போலந்தும் - திறந்தவெளிச் சித்திரவதைக் கூடங்களாகவும் கொலைத் தொழிற்சாலைகளுமாக இருந்திருக்கின்றன. ஹிட்லர் பதவிக்கு வந்தவுடனேயே போட்ட முதல் உத்தரவு, ‘எல்லா யூதர்களும் அவர்கள் யூதர்கள் என்று தெரியும்படியாக உடையில் அடையாளமிட்டுக் கொள்ள வேண்டும்’ என்பதுதான். அதற்கடுத்தபடியாக அவர்களுடைய வீடுகள், கடைகள் யூதன் என்ற தனி அடையாளம் கொண்டிருக்க வேண்டும் என்றான்.

அடுத்த கட்டமாக அவர்கள் தனி முகாமில் அடைக்கப்பட்டனர். அதற்கடுத்த கட்டம், மரண முகாம். மலை மலையாகக் குவியும் யூதப் பிணங்களுக்கு யூதர்களே குழி தோண்ட வேண்டும். இது இன்று பல கோணங்களில் ஆராயப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு விஷயம் புதிராக இருக்கிறது. ‘தாங்கள் நிச்சயம் கொல்லப்படுவோம்’ என்று தெரிந்தும் ஏன் ஓரிடத்தில்கூட அவர்கள் எதிர்த்துப் புரட்சி செய்யவில்லை?

யூதர்களுக்கு மாறாக போலந்து, பிரான்ஸ், இத்தாலி, ஹாலந்து, செக்கோஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில் நாஜிக்களுக்கு எதிராகப் பல புரட்சிக் குழுக்கள் இயங்கியிருக்கின்றன. மாட்டிக்கொண்டால் குரூரமான சித்திரவதைக்குப் பின் மரணம் நிகழும் என்பதை உணர்ந்தே இயங்கினார்கள். உண்மையில் இந்தப் புரட்சியாளர்களால் நாஜிக்களின் பல யுத்த முயற்சிகள் பாதிக்கப்பட்டன. ஆனால் அறுபது லட்சம் யூதர்கள் அவர்களுக்கே குழி தோண்டினார்கள்! எப்படியும் சாவு. எதிர்ப்பு காட்டியிருக்கலாம் அல்லவா?

இருத்தலியல் (‘எக்சிஸ்டென்ஷியலிஸம்’) தத்துவத்தின் முக்கிய குருவாகக் கருதப்படும் சார்த்தர், ‘மரண பயத்தை விட சித்திரவதை எதிர்பார்ப்பு இன்னும் கடுமையானது’ என்று கருதினார். அவர் ஒரு நாஜி எதிர்ப்புக் குழுவில் இயங்கினார். ‘சித்திரவதையும் தொடங்கிய பின்னர் அநேக மனிதர்கள் ஜடங்களாகி உணர்ச்சியற்றுப் போய் விடுகிறார்கள்’ என்று அவர் கருதினார். இதை விளக்குவது போல அவர் ‘சுவர்’ என்றொரு கதையை எழுதியிருக்கிறார்.

ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் பிரெஞ்சு காவல் துறை நாஜிக்களுக்குப் பணிந்துதான் இயங்க வேண்டியிருக்கிறது. அப்போது ஓர் எதிர்ப்புக் குழுக்காரன் வகையாகக் காவல்துறையிடம் மாட்டிக் கொள்கிறான். குழுத் தலைவன் எங்கிருக்கிறான் என்று அவனிடம் விசாரிக்கிறார்கள். அவனுக்குத் தெரியும். ஆனால் சித்திரவதை, அதற்குப்பின் சுடப்படுவதைத் தாமதப்படுத்த வேண்டுமென்றே ஒரு தவறான இடத்தைக் குறிப்பிடுகிறான். காவல்துறையினர் அவனை எச்சரிக்கை செய்கிறார்கள்...

‘நீ பொய் சொல்லியிருந்தால் விளைவு இன்னும் குரூரமாக இருக்கும்’. அடுத்தடுத்த நிமிடங்களில் இவன் சித்திரவதையை எதிர்பார்த்துத் தவிக்கிறான். ஒரு மணி நேரம் பொறுத்து அவனை ஒரு துரும்பு போலப் பார்த்து, ‘‘நீ போகலாம்’’ என்கிறார்கள். துரோகியை விரோதி கூட மதிப்பதில்லை. அவன் தவறு என்று எண்ணி பொய்யாகச் சொன்ன இடத்தில்தான் உண்மையில் அவன் தலைவன் இருந்திருக்கிறான்!

யுத்த களத்தில் திறமையாகப் போரிட்டவர்கள் பலரும், அடிப்படை யில் மரண பயம் மிகுந்தவர்கள். ஆங்கிலத்தில் ஒரு வரி அடிக்கடி சொல்லப்படும். ‘போர் வீரர்கள் யுத்தங்களை வெல்கிறார்கள், தளபதிகள் பதக்கங்களைத் தட்டிச் செல்கிறார்கள்’.

படிக்க


பிரேம்சந்த், தாகூர், பகவதி சரண் வர்மா எனப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர்கள் இத்தொகுப்பில் இருக்கிறார்கள். மணி மணியான 12 கதைகள். ‘லாகூர் எவ்வளவு தொலைவு?’ என்ற பஞ்சாபிக் கதை, லாகூரில் வாழ்ந்து, பிரிவினையால் வெளியேற வேண்டியிருந்த இந்தியர்கள் இன்னும் எப்படி அந்த நகரத்துக்காக ஏங்குகிறார்கள் என்பதை விவரிக்கிறது. நூர்ஜஹானின் முதல் படத்திலிருந்த பாட்டு, ஓ.பி.நய்யார் வசித்த வீடு எனப் பல தகவல்கள் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

இதேபோலப் பல முதிய பாகிஸ்தானியர்களும் இந்தியாவில் உள்ள இடங்களுக்காக ஏக்கம் கொண்டிருக்க வேண்டும். மிக நல்ல தேர்வு, மிக நல்ல மொழிபெயர்ப்பு. (வேலி மேல் வாச மலர் - பிற மொழிக் கதைகள் -தமிழாக்கம்: வீ.விஜயராகவன், தளம் வெளியீடு, 46/248 பீட்டர்ஸ் சாலை, சென்னை-600014. விலை: ரூ.120/-)

(பாதை நீளும்...)

அசோகமித்திரன்