சில்லறை



சார் பேலன்ஸ்...’’ என்று ஆரம்பித்தான் குமார். ‘‘பொறுய்யா, ரெண்டு வண்டில ஏத்த வேண்டிய கூட்டம் ஒரு வண்டியில ஏறியிருக்கு. அத்தனை பேருக்கும் டிக்கெட் போட வேண்டாமா? வரும்போது தர்றேன்!’’ - கூட்டத்தில் கரைந்து மறைந்தார் நடத்துநர்.

‘‘சார் பேலன்ஸ்...’’ - திரும்பி வந்த நடத்துநரிடம் மீண்டும் ஆரம்பித்தான் குமார்.‘‘இருய்யா, உன்னோட அம்பது பைசா, ஒரு ரூபா சில்லரையை எல்லாம் எடுத்துட்டுப் போய் சிட்டி நடுவுல ரெண்டு கிரவுண்டு இடமா வாங்கிடப் போறேன். சரியான நச்சரிப்பு கிராக்கி! இறங்கும்போது கேளு... தர்றேன்!’’ - சென்று விட்டார்.

நடத்துநரின் தலை மீண்டும் தென்பட்டது. இந்த முறை எப்படியும் காரியத்தை சக்சஸ் பண்ணிவிட வேண்டும் என்ற முடிவுடன், ‘‘சார்...’’ என்றான் குமார்.

‘‘எத்தனை வாட்டிய்யா சொல்றது, இறங்கும்போது வாங்கிக்கன்னு?’’ - மீண்டும் டென்ஷனில் கத்தினார் நடத்துநர்.‘‘சார்... நான் இறங்க வேண்டிய ஸ்டேஜ் வந்திருச்சு. எனக்கு பேலன்ஸ் கொடுக்கும்போது எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் சேர்த்துக் கொடுத்துட்டீங்க. அதைத் திருப்பிக் கொடுக்கத்தான் ரெண்டு தடவை கூப்பிட்டேன். இந்தாங்க பத்து ரூபாய்’’ - கொடுத்து விட்டு, நடத்துநரின் பதிலுக்குக் கூட காத்திராமல் வேகமாக இறங்கினான் குமார்.
                 
நெல்லை தேவன்