பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியமா?



பாலியல் வன்முறைகளும், அத்துமீறல்களும் அதிகரித்து வருகின்றன. பால்யம் விலகாத பிஞ்சுகள் கூட வெறியர்களுக்கு இரையாகிறார்கள். பெரிய பெயர் வாங்கிய பள்ளிகளில்கூட பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லாத நிலை. நீர்நிலைகளில் பிண்டங்களாய் மிதக்கின்றன குழந்தைகளின் சிதைந்த உடல்கள்.

பாலியல் குழப்பத்திலும், வக்கிரத்திலும், வறட்சியிலும் இளம் தலைமுறை தத்தளிக்கிறது. இப்படியான சம்பவங்கள் நிகழும்போதெல்லாம் ‘‘பள்ளிகளில் பாலியல் கல்வியைக் கொண்டுவர வேண்டும்’’ என்ற குரல்கள் ஒலிப்பதும், எழுந்த வேகத்தில் எதிர்ப்புகளில் அடங்கிப் போவதும் இயல்பாகி விட்டது. இப்போது மீண்டும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது பாலியல் கல்வி!

தற்போதைய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தலைமையிலான மாநிலங்களவை எம்.பி.க்கள் குழு சில வருடங்களுக்கு முன்பு நாடெங்கும் பயணித்து பாலியல் கல்வியைக் கொண்டு வருவது பற்றி கருத்துக் கேட்டது. இறுதியில், ‘பாலியல் கல்வி இந்தியாவுக்கு இப்போது அவசியமில்லை’ என்று அறிக்கை கொடுத்து நழுவி விட்டது.

இச்சூழலில், வழக்கறிஞர் சித்ராதேவி, ‘உடனடியாக பள்ளிகளில் பாலியல் கல்வியைக் கொண்டு வர வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவைத் தட்டியிருக்கிறார். உயர் நீதிமன்றம், ‘‘இது பற்றி 2 மாதங்களில் அரசு முடிவெடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளது.

‘செக்ஸ் க்ரைம்’ எனப்படும் பாலியல் குற்றங்கள் கடந்த 10 ஆண்டுகளில் பலநூறு மடங்கு அதிகரித்துள்ளது. இக்குற்றங்களில் இளவயதினரே அதிகம் ஈடுபடுகிறார்கள் என்பது பெரும் சோகம். சினிமா, இணையம், ஊடகங்களின் போக்கில் சிறுவர்கள் பாலியல் பற்றி தவறான புரிதலைக் கொண்டு தவறுகளில் தள்ளப்படுகிறார்கள்.

 ‘பள்ளி யில் பாலியல் கல்வியைக் கொண்டுவந்து தெளிவான புரிதலை உருவாக்கினால் மட்டுமே இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க முடியும்...’ என்கிறார்கள் சில சமூக ஆர்வலர்கள். ஆனால் இதை எதிர்ப்பவர்கள், ‘பாலியல் கல்வி கலாசாரத்துக்கு எதிரானது. அது இன்னும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்’ என்கிறார்கள்.

பாலியல் கல்வியைக் கொண்டு வருவது சாத்தியம்தானா? பள்ளிகளிலேயே பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்துவரும் சூழலில் அது மேலும் நிலைமையை சீர்குலைத்து விடாதா?

வழக்கறிஞர் சித்ராதேவியிடமே கேட்டோம்.‘‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் ஏராளம் நடக்கிறது. பெரும்பாலானவை பதிவாவதே இல்லை. குழந்தைகளுக்கு தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தெரிவதில்லை. பெற்றோரிடம் சொல்லவும் பயம். 65 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஏதோ ஒரு விதத்தில் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு பாலியல் பற்றிய புரிதலை உருவாக்கி, ‘குட் டச்’, ‘பேட் டச்’ சொல்லிக் கொடுத்து, விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

குறைந்தபட்சம் அத்துமீறலைப் புரிந்துகொள்ளவாவது பழக்க வேண்டும். அதற்கு பாலியல் கல்விதான் வழி. வயதுக்கும், தன்மைக்கும் ஏற்றவாறு, பாடங்களை உருவாக்க வேண்டும். வெளிநாடுகளில் கார்ட்டூன் மூலம் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதுபோலவே இங்கும் முயற்சிக்கலாம்’’ என்கிறார் அவர்.

‘‘பாலியலை ‘புதிரா? புனிதமா?’ என்று ஆராய்ச்சி செய்யும் அளவுக்குத்தான் நமக்குப் புரிதல் இருக்கிறது. அது புதிரும் இல்லை; புனிதமும் இல்லை; இயற்கையானது என்பதை நாம் ஏற்றுக்கொண்டால்தான் பிள்ளைகளுக்குப் பயிற்றுவிக்க முடியும்.

பாலியல் பற்றி கட்டுப்பாடு இருக்கும் அளவுக்கு நெறிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் ஏதுமில்லை. வளர் இளம் பருவத்தில் குழந்தைகள் ஏகப்பட்ட குழப்பங்களுக்கு உள்ளாகிறார்கள். அவர்களின் சந்தேகங்கள், உணர்வுகளை எங்கேயும் சொல்ல முடியவில்லை. ‘வளர, வளர... உடல் மற்றும் உணர்வுகளில் மாற்றங்கள் வரும்.

சில உறுப்புகள் பெரிதாகும். முடி வளரும். எதிர் பால் மீது ஈர்ப்பு வரும். பெண்களுக்கு கெட்ட ரத்தம் வெளியேறும்’ என்றெல்லாம் சொல்லிக் கொடுக்க நாம் பழகவில்லை. அதற்கான ஒரு ஏற்பாடு தான் பாலியல் கல்வி.

குழந்தைகள் தங்கள் உடலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். கல்லீரல், இதயம் மாதிரி பிறப்புறுப்பு பற்றியும் கற்றுத் தர வேண்டும். வீட்டிலோ, பள்ளியிலோ கற்றுக் கொடுக்காவிட்டால், வெளியில் அவர்கள் தவறாகக் கற்றுக்கொள்வார்கள். நிழல் எது, நிஜம் எது எனத் தெரியாமல் குழம்பிப் போவார்கள்.

பாலியல் கல்வி என்றாலே கலாசாரக் காவலர்கள், பண்பாடு கெட்டு விட்டதாகக் கொடி பிடிக்கிறார்கள். காலத்தின் வேகத்துக்குத் தக்கவாறு பண்பாடு தன்னைத் தகவமைத்துக் கொள்ளும். நாமும் மாறவேண்டும். ஒருகாலத்தில் பெண் பூப்பெய்தினால், ‘எங்கள் வீட்டில் திருமணத்துக்குத் தயாராக ஒரு பெண் இருக்கிறாள்’ என்று ஊருக்குச் சொல்வதற்காக பூப்புனித நீராட்டு விழா நடத்தினார்கள். இன்று அதற்கு அவசியமே இல்லை.

ஆனால், சிறுமியின் படத்தைப் போட்டு பெரிய பிளக்ஸ்கள் வைத்து பூப்புனித நீராட்டு விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதன்பிறகு அந்தக் குழந்தை சக குழந்தை களோடு இணைந்து பேச முடியுமா? விளையாட முடியுமா?

இன்றும்கூட மாதவிடாயை தீட்டு என்று கூறி ஒதுக்கி வைக்கிறார்களே... அந்தப் பண்பாட்டை எந்தக் கல்வி மூலம் திருத்துவது? பாலியல் கல்வி என்பது உணர்வுகளை நெறிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட வேண்டும்’’ என்கிறார் குழந்தை உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன். வழக்கறிஞர் வானதி சீனிவாசனும் பாலியல் கல்வியை வரவேற்கிறார்.

‘‘இன்றைய சூழலில் பாலியல் கல்வி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. காதலித்து ஏமாறுவது, குழந்தைப் பருவத்திலேயே கருவுறுவது போன்ற கொடுமைகள் நிறைய நடக்கின்றன. இந்தச் சூழலை மாற்ற பாலியல் கல்வி அவசியம். உடற்கூறு, அதன் வளர்ச்சி, மனநலம், பருவ மாற்றங்கள், உணர்வு மாற்றங்கள், உறுப்புகளைத் தூய்மையாகப் பராமரிப்பது என எல்லா அம்சங்களும் அதற்குள் அடங்க வேண்டும்’’ என்கிறார் வானதி.

பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வாதத்திற்கு எதிரான அமைப்பின் நிறுவனர் கொற்றவை, ‘‘பாலியல் கல்வி என்பது, பாலினப் பாகுபாட்டைப் போக்குவதாக இருக்க வேண்டும்’’ என்கிறார். ‘‘பிறப்புறுப்புகள் பற்றியெல்லாம் இப்போதும் அறிவியல் புத்தகத்தில் பாடங்கள் இருக்கின்றன. ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை. மேலோட்டமாகச் சொல்லிவிட்டு அடுத்த பாடத்துக்குப் போய்விடுகிறார்கள் ஆசிரியர்கள். உடலின் அனாடமி போன்றவற்றைப் படிப்பதல்ல பாலியல் கல்வி. பாலின அறிவை ஊட்டுவது.

பாலினத்தைப் புரியச் செய்வது. இணைய யுகத்தில் பாலியல் பற்றி குழந்தைகள் நிறைய செய்திகளை அறிந்து வைத்திருக்கிறார்கள். உடல் ரீதியான ஆர்வம் இயல்பாக ஏற்பட்டு விடுகிறது. மதிப்பீடுகளை மட்டுமே கற்றுத் தரவேண்டும். உடலியல், சமூகவியல், உளவியல் அனைத்தும் இணைந்த ஒரு பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும்’’ என்கிறார் கொற்றவை.
‘‘பாலியல் கல்வியை பள்ளிகளில் கொண்டு வந்தே ஆகவேண்டும்...’’ என்கிறார் செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.

‘‘வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று பாலியல். சாப்பிட, தூங்க, நடக்கவெல்லாம் முறைப்படி கற்றுக்கொடுக்கும் நாம், பாலியலை மட்டும் சொல்லிக் கொடுக்காமல் குழந்தைகளைக் கைவிடுகிறோம். அதனால் அவர்கள் பொதுவெளியில் தவறாகக் கற்றுக்கொண்டு திசைமாறுகிறார்கள். பாலியல் கல்வியை பள்ளிக்குக் கொண்டு வருவதற்கு முன்பு, குழந்தையைக் கையாளுவதற்கு பெற்றோருக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.

பள்ளி களே இன்று பாலியல் குற்றக்கூடங்களாக மாறுகின்றன. அதனால் ஆசிரியர்களுக்கு குழந்தைகள் பற்றிய புரிதலையும், பாலியல் கல்வியைப் போதிக்கும் பக்குவத்தையும் உருவாக்க வேண்டும். எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் விஞ்ஞானபூர்வமாக பாடங்களை அமைக்க வேண்டும். கூடவே ஒரு கவுன்சலிங் நிபுணரையும் பள்ளியில் நியமிக்க வேண்டும்’’ என்கிறார் நாராயண ரெட்டி.

குடும்பச்சூழல், பாலியல் அத்துமீறல்கள், வகுப்பறை வன்முறைகள் என பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகித் தவிக்கும் குழந்தைகளை ஆற்றுப்படுத்த கல்வி மட்டுமே வழி. பாலியல் கல்வியோடு பிள்ளைகளின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் உளவியல் ஆலோசகரையும் பள்ளிகளில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று பாலியல். சாப்பிட, தூங்க, நடக்கவெல்லாம் முறைப்படி கற்றுக்கொடுக்கும் நாம், பாலியலை மட்டும் சொல்லிக் கொடுக்காமல் குழந்தைகளைக் கைவிடுகிறோம்.

வெ.நீலகண்டன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்