கேஸ் மானியம் பெற ஆதார் அவசியமா?



ஆதார் அட்டை குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த இத்திட்டத்தை புதிய அரசு ஒதுக்கிவிடும் என்றார்கள். ஆனால், ஆதார் அட்டையை ஆதாரமாகக் கொண்டே பல திட்டங்களை அறிவிக்கிறது மோடி அரசு.

முக்கியமாக கேஸ் மானியம். வரும் ஜனவரி முதல் கேஸ் மானியம் நமது வங்கிக் கணக்கில்தான் கிரெடிட் ஆகும் என்கிறார்கள். அதற்காக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் ஆதார் அட்டை விவரங்களைக் கேட்டுப் பெறுவதில் துரிதம் காட்டுகின்றன.

‘இன்னும் ஆதார் அட்டை பெறாதவர்கள் என்ன செய்வார்கள்? இப்போது எல்லாம் நன்றாய்த்தானே போய்க்கொண்டிருக்கிறது. ஏன் இப்படியொரு சிக்கலான மாற்றம்?’ - மக்களின் கேள்விகளோடு இண்டியன் ஆயில் நிறுவனத்தின் சென்னை அலுவலக முதன்மை கார்ப்பரேட் தொடர்பு மேலாளர் வெற்றி செல்வகுமாரைச் சந்தித்தோம்...

வங்கிக் கணக்கில் மானியம் ஏன்?


‘‘ஒரு குடும்பத்துக்கு வருடத்துக்கு பத்து கேஸ் சிலிண்டர் கிடைக்கிறது என்றால், அந்தப் பத்தையும் அவர்கள் பயன்படுத்திவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. தேவைக்கு மீறி மானிய விலையில் கிடைக்கும் சிலிண்டரை சிலர் அதிக விலைக்கு விற்கிறார்கள். இதனால் அரசு தரும் மானியம் விரயமாகிறது. அரசுப் பணம் என்றால் அது மக்கள் பணம்தானே? அதைப் பாதுகாக்கத்தான் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கே மானியத்தை வழங்க அரசு முடிவெடுத்தது.’’

இதில் ஆதார் அட்டை எதற்கு?

‘‘ஒருவருக்கு இங்கே நிறைய வங்கிக் கணக்குகள் இருக்கலாம். அது அனைத்தின் மூலமும் அவர் தனித்தனியே சிலிண்டர் மானியத்தைப் பெற்றுவிட முடியாது; அப்படிப் பெறவும் கூடாது. அதைத் தடுக்கத்தான் ஆதார் அட்டை மூலம் அவரின் அடையாளம் சரிபார்க்கப்படுகிறது. ஆதார் அட்டையும் வங்கிக் கணக்கும் ஒருங்கிணைக்கப்பட்டுவிட்டால், ஏமாற்றுவது கடினம். எனவேதான் வங்கிகள் ஆதார் விவரங்களைக் கேட்டுப் பெறுகின்றன.’’

ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு..?


‘‘தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆதார் அட்டை எல்லோரிடமும் சென்று சேரவில்லை. இதனால், இந்த மானிய முறையை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருந்தது. இப்போது ரூல்ஸ் தெளிவாக உள்ளது. ஆதார் அட்டை இல்லை என்றாலும் பரவாயில்லை. ஏதேனும் ஒரு வங்கிக் கணக்கு இருந்தால் போதும். ‘டைரக்ட் பெனிஃபிட் டிரான்ஸ்ஃபர் எல்.பி.ஜி ஸ்கீம்’ என்கிற இந்த மானிய ஸ்கீமில் நீங்கள் இணைந்துகொள்ள முடியும்.

ஆதார் கார்டும் வங்கிக் கணக்கும் இருப்பவர்களுக்குக் கவலை இல்லை. அவர்கள் தங்கள் கேஸ் விநியோகஸ்தர்களிடம் உள்ள ‘ஃபார்ம் 1’ விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து வங்கியில் கொடுக்க வேண்டும்.

ஒருவேளை வங்கி வரை அலைய வேண்டாம் என நினைத்தால் அங்கேயே ‘ஃபார்ம் 2’ என்ற விண்ணப்பத்தை வாங்கி, அதையும் பூர்த்தி செய்து கொடுக்கலாம். ஆதார் அட்டை இல்லாதவர்கள், தங்கள் வங்கியில் சென்று ஃபார்ம் மூன்று அல்லது நான்கை பூர்த்தி செய்து வங்கியிலேயே கொடுக்கலாம். இந்த நான்கு விண்ணப்பத்தில் எதைப் பூர்த்தி செய்து கொடுத்தாலும் அவர்கள் இந்த புதிய ஸ்கீமில் இணைக்கப்பட்டு விடுவார்கள்.’’

காலக் கெடு!

‘‘தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கும் கேஸ் இணைப்புகளில் சுமார் பத்து சதவீதம் பேர்தான் இந்தத் திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள். வரும் ஜனவரிக்குள் இந்தியாவின் எல்லா மாவட்டங்களுமே புதிய மானியக் கொள்கையின் கீழ் வந்து விடும். பதிவு செய்து கொண்டவர்களுக்கு ஜனவரி முதல் கேஸ் மானியம் வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்படும். பதிவு செய்யாதவர்களும் மார்ச் வரை மானிய விலையில் கேஸ் வாங்கலாம்.

 அவர்களும் இத்திட்டத்தில் இணைய ஏப்ரல் முதல் ஜூன் வரை இன்னுமொரு காலக்கெடுவை அரசு கொடுக்கும். அப்போதும் பதிவு செய்து கொள்ளாதவர்கள், சந்தை விலைக்குத்தான் கேஸ் சிலிண்டர் வாங்க வேண்டியிருக்கும்!’’ என்றார் அவர் தெளிவாக!

எல்லோருக்கும் ஆதார் எப்போது?

இதுவரை கிடைக்காதவர்களுக்கு ஆதார் அட்டை எப்போது கிடைக்கும்? மத்திய அரசின் சென்சஸ் துறை அதிகாரியான கிருஷ்ணராவிடம் பேசினோம்...‘‘2011 சென்சஸ்படி தமிழ்நாட்டின் மக்கள்தொகை சுமார் 7.21 கோடி. ஐந்து வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆதார் அட்டையை வாங்கத் தகுதியுள்ளவர்கள். அப்படிப் பார்க்கும்போது சுமார் 6 கோடியே 74 லட்சம் பேர் ஆதார் அட்டையை வாங்கத் தகுதியுள்ளவர்கள்.

அதில் இதுவரை சுமார் 5 கோடிப் பேருக்கு ஆதார் அட்டைக்கான பயோமெட்ரிக் கணக்கீடு எடுத்திருந்தாலும் சுமார் 4.71 லட்சம் பேருக்குத்தான் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைவருக்கும் வழங்க, தமிழ்நாட்டில் மொத்தம் 469 சென்டர்களை நிறுவத் திட்டமிட்டுள்ளோம்.

அதில், சுமார் 308 சென்டர்கள் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன. மக்கள் தொகைக் கணக்கீட்டின்போது வீட்டில் இல்லாதவர்களுக்காக பக்கத்து வீடுகளில் விபரங்களைப் பெற்று ஒரு சீட்டு கொடுத்திருப்போம். இந்தச் சீட்டை சென்டர்களில் சமர்ப்பித்து அங்கேயே பயோமெட்ரிக் கணக்கீடுகளைக் கொடுத்துவிட்டால் ஆதார் அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

பயோமெட்ரிக் தகவல்களைக் கொடுத்தும் ஆதார் அட்டை வராதவர்களுக்கு ஒருவேளை கைரேகைகளில் பிழை இருக்கலாம். அவர்கள் ஆதார் அடையாளம் வழங்கும் நிறுவன வெப்சைட்டை (www.uidai.gov.in) பார்த்து அதில் தங்கள் அடையாள எண் இருந்தால் அதன் நகலை காப்பி பண்ணி எடுத்துக்கொள்ளலாம்’’ என்றார் அவர்.

டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்