லெக் பீஸக்கு லைக்!



சிறுதானிய உணவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதையே ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் செல்லும் இளைஞர் ராஜமுருகனின் சமூகப் பொறுப்புணர்வு பெருமைப்பட வைத்தது.
- ‘மண்வாசனை’ சாரதாமணி, சுந்தராபுரம்.

உலக நாயகனின் அசத்தல் பேட்டி தெளிந்த நீரோடை. ‘‘எனக்கும் ரஜினிக்கும் போட்டி உண்டு’’ என்ற வெளிப்படை ஸ்டேட்மென்ட்டைப் படித்து அசந்தோம். அதற்கான விளக்கமும்
அட்டகாசம்!
- ஜி.குப்புசுவாமி, சங்கராபுரம்.

ஆண்களால் அவர்களுக்காகவே அவர்களைக்கொண்டே உருவாக்கப்பட்ட கெட்ட வார்த்தைகளால் முற்றிலும் காயப்படுவது பெண்கள்தான் என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய உண்மையே!
- தி.தே.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.

‘காற்றே உணவு, நீரே மருந்து’ என்று ஆகாரமின்றி வாழும் அதிசய மனிதர் இனியன், ஒரு பேராச்சரியம். எல்லோரும் இவரைப் பின்பற்றி னால் நாட்டில் உணவகங்கள் எதற்கு? மருத்துவமனைகளும்தான் எதற்கு?
- பி.ஆர்.மயிலப்பன், ஈரோடு.

இலங்கைத் தமிழர்கள் சுபிட்சமாக வாழ்வதாகக் கூறி வந்த இந்திய-இலங்கை அரசுகளின் முகத்திரையைக் கிழித்த விக்னேஸ்வரனின் பேட்டி நெகிழ வைத்தது!
- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

‘தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க தருண் விஜய்யை ஒரு கருவியாக அவரது கட்சி பயன்படுத்துகிறதோ’ என சிலர் சந்தேகித்தாலும், அவரால் தமிழுக்கு நல்லது நடந்தால், அது வரவேற்க வேண்டியதே!
- எச்.லட்சுமி ரங்கன், சாத்தூர்.

ஒரு கடைக்கு உரிமையாளர் யாரோ... அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர் வாடிக்கையாளர்தான் என்ற எளிய உண்மையை உணர்ந்திருக்கும் பெஸ்ட் கபே, மென்மேலும்
வளரட்டும்!
- எஸ்.மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்.

அடிப்படையில் தமிழரான வி.ஆர்.கிருஷ்ணய்யரின் மனிதநேயப் பண்புக்கு ஈடில்லை. ஆனால், முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழர்களுக்கு எதிராக கேரளத்தில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் அவர் கலந்துகொண்டதுதான் நம் மனதை உறுத்துகிறது!
- இரா.கல்யாணசுந்தரம், மதுரை.

சக கலைஞர்களுக்கு தன் வீட்டு உணவைப் பரிமாறி, நிறைவு செய்யும் அஜித், உண்மையிலேயே கிரேட். இது போன்ற நல்ல குணத்துக்கு ‘தல’யை விட்டா வேறு யாரு இருக்காங்க?
- எச்.கணபதிராவ், புதுச்சேரி.

‘உணவு ஸ்பெஷல்’ கட்டுரைகள், கதைகள் அனைத்துமே அருமை. அதிலும் பார்வதி ஓமனக்குட்டன் பிரியாணி செய்வதாகச் சொல்லி விட்டு லெக் பீஸ் படம் மட்டும் வைத்த உமது புத்திக்கு ஒரு லைக்!
- நெல்சன், சென்னை-92.