நியூஸ் வே



மும்பையைச் சேர்ந்த லட்சுமிநாராயணன், ‘ஸ்நாப்டீல்’ இணையதளத்தின் தீபாவளித் தள்ளுபடி விற்பனையில் ஒரு சாம்சங் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்து பணம் செலுத்தினார். சில நாட்களில் அவருக்கு வந்த பார்சலில் போன் இல்லை. பாத்திரம் துலக்கும் விம் சோப்பும், சிறிய துண்டு செங்கல்லும் இருந்தது.

அவர் இந்தப் படத்தை இணையத்தில் வெளியிட, ‘கூரியர் சர்வீஸ் செய்த தவறு’ எனச் சொல்லி ஸ்நாப்டீல் நிறுவனம் அவருக்குப் பணத்தைத் திரும்பத் தந்துவிட்டது. இந்த விவகாரத்தில் தங்கள் பெயர் அடிபட்டதால், விம் நிறுவனம் அவருக்கு புது போன் வாங்கிக் கொடுத்து, கூடவே தங்கள் தயாரிப்புகளையும் கொடுத்து பெயர் தட்டிச் சென்றுவிட்டது.

பிடிவாதங்களை விட்டு விட்டு, விக்ரம் பிரபு நடிக்கும் படத்தில் மெயின் காமெடியனாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் வடிவேலு. ‘‘இப்படியே கலகலவென அடுத்தடுத்து நகர்ந்து விடுவோம்’’ எனச் சொல்கிறார் வைகைப்புயல். நகரக்கூடாது... புயலாக அடிக்கணும்.

சீனப் பிரதமர் ஜி ஜின்பிங் முதல்முறையாக தான்சானியா நாட்டுக்குப் போனாலும் போனார். அவரோடு போன தொழிலதிபர்களும் அதிகாரிகளும் யானைத் தந்தத்தை வாங்கிக் குவித்து விட்டார்கள். உலகிலேயே கள்ளக் கடத்தல் தங்கத்தை அதிகம் விற்கும் நாடு தான்சானியா; அதிகம் வாங்கும் நாடு சீனா. வியாபாரத்துக்குக் கேட்கவா வேண்டும்? கிலோ 350 டாலர் விற்ற யானைத் தந்தம் இவர்களால் இரண்டு மடங்கு எகிறி விட்டது. பிரதமரின் விமானத்திலேயே எல்லாவற்றையும் எடுத்து வந்ததுதான் கொடுமை!

தேர்தல் பரபரப்பால் பல நாட்கள் ஜிம்முக்குப் போகாமல் இருந்த ராகுல் காந்தி மீண்டும் இப்போது லோதி ஹோட்டலின் ஜிம்மில் தென்படுகிறார். விட்டதைப் பிடிக்கும் பர
பரப்பில் ஒரு நாளில் நான்கு மணி நேரம்கூட வொர்க் அவுட் செய்கிறாராம். அவரது மைத்துனர் ராபர்ட் வதேரா இதே
ஜிம்முக்குத்தான் வருகிறார். ஆனால் இருவரும் சொல்லி வைத்துக்கொண்டு வெவ்வேறு நேரங்களில் வருகிறார்கள்.

கொஞ்சம் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆனதுடன், தன் ஸ்கின் கலரையும் ஏற்றியிருக்கிறார் அஞ்சலி. பிரச்னையினால் ஸ்டேட் விட்டு ஸ்டேட் மாறியதற்குப் பின் முதன்முறையாக ‘கயல்’ பட விழாவிற்கு மினி கவுனில் வந்திருந்தார். விழாவிற்கு வந்திருந்த ஆர்யாவிடம், ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்கக் கேட்டு அப்ளிகேஷனைத் தட்டி விட்டிருக்கிறார். ஏற்கனவே ‘சேட்டை’யில் அஞ்சலியுடன் நடித்திருப்பதால், பதிலுக்கு ஒரு ஸ்மைலியைத் தட்டி விட்டுள்ளாராம் ஆர்யா.

நண்பர்களுக்கு உதவுவதற்காகவே அஜித் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்துவிட்டார் போல. ‘சிறுத்தை’ சிவா படத்தில் நடித்து முடித்த பின்னர் அடுத்து விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ‘‘அதை நீங்களே தயாரித்தால் என்ன?’’ என்று விஷ்ணுவிடம் ஆலோசனையும் சொல்லியிருக்கிறார். நண்பேன்டா!

‘16 வயதினிலே’ படத்தில் மயிலுவைக் காதலித்து ஏமாற்றும் டாக்டர் கேரக்டரில் நடித்த சத்யஜித், அதே காஸ்ட்யூமோடு அந்தக் கேரக்டரை, டைட்டில் வைக்காத இன்னொரு படத்தில் தொடர்கிறார். ‘‘டாக்டருக்கு மகன் பிறந்து, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. ‘16 வயதினிலே’ படத்தின் ரீமேக் அல்ல இது. அந்த டாக்டர் கேரக்டரை மட்டும் எடுத்துக்கொண்டு கதை
டெவலப் செய்துள்ளேன்’’ என்கிறார் இந்தப் படத்தின் அறிமுக இயக்குநரான கார்த்திக்.

‘லிங்கா’ படத்தை எப்படியும் டிசம்பர் 12க்கு கொண்டு வரத்தான் முயற்சி நடக்கிறது. அன்று வெள்ளிக்கிழமையாக இருப்பது கூடுதல் ப்ளஸ்! ஆனால், அது முடியாவிட்டால் அடுத்து 19ம் தேதி வர வேண்டும் என்பது ரஜினியின் அன்பான கட்டளையாம். டீம் முழுவதும் தூக்கமே இல்லாமல் வேலை செய்கிறார்கள்.

இன்னும் ‘ஐ’ படத்தின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யவில்லை. இருக்கிற தினுசைப் பார்த்தால் பொங்கல் வெளியீடாக வரலாம் என்பதுதான் இப்போது முடிவாக இருக்கிறதாம். அதற்குள் விஜய் மில்டனின் படத்தை விக்ரம் முடித்து விடுவார் போலிருக்கிறது.

‘திருஷ்யம்’ படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்தவர் அன்ஷிபா. தமிழில் அதன் ரீமேக்கில் கமலின் மகளாக நடிக்கும் சான்ஸை மிஸ் பண்ணிய அன்ஷிபா, அடுத்து ‘பந்து’ என்ற படத்தில் ஹீரோயினாகக் கிடைத்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்திருக்கிறார்.

இந்த வருட பிறந்த நாள் நயன்தாராவிற்கு ரொம்பவே ஸ்பெஷல். தமிழில் நான்கு படங்கள், மலையாளத்தில் ஒன்று என இந்த வருடம் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. இந்த பிறந்தநாளை நட்புகள், உறவினர்கள் சூழ மாலத்தீவில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் நயன்.

தனது அசிஸ்டென்ட் இயக்கிய ‘கப்பல்’ படத்தை வாங்கி, ரிலீஸ் செய்கிறார் ஷங்கர் என்பது தெரிந்த நியூஸ்தான். அதோடு இப்படத்தின் ஹீரோயின் புதுமுகம் சோனம் பஜ்வாவை வெகுவாக பாராட்டி இருக்கிறார் ஷங்கர். ‘‘தமிழில் நிச்சயமா ஒரு ரவுண்ட் வரக்கூடிய பொண்ணு’’ என சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் ஷங்கர்.

‘இவர் இப்படியும் செய்வாரா?’ என திகைத்துப் போயிருக்கிறார்கள் வங்காளப் பட ரசிகர்கள். ஒரு திரைப்பட விழாவுக்காக சிங்கப்பூர் போன நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி, அங்கிருக்கும் ஷாப்பிங் மாலுக்குப் போயிருக்கிறார். ஒரு நகைக்கடையில் சுமார் 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காதணிகளை நைசாகத் திருடி கைப்பையில் வைத்துக் கொண்டார். கண்காணிப்பு கேமராவில் பார்த்து கடைக்காரர்கள் பிடித்துவிட,

‘‘அது எப்படி என் பைக்குள் வந்தது என்றே தெரியவில்லை’’ எனச் சொல்லி பணம் செலுத்தினார். சிங்கப்பூர் சட்டப்படி ஒருவேளை அந்தக் கடைக்காரர்கள் போலீசில் புகார் செய்திருந்தால், ஸ்வஸ்திகாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்திருக்கும்.

சிம்பு தன் சொந்தப் படத்துக்கு முன்பாக ‘வாலு’ படத்தைக் களமிறக்க முடிவு செய்துவிட்டார். அனேகமாக கிறிஸ்துமஸ் லீவில் ரிலீஸ் இருக்கலாம். சிம்புவிடம் தொடர்புகொண்டு அஜித் பேசியபிறகுதான் இந்த ஏற்பாடாம். என்ன இருந்தாலும் அஜித்துக்கு சிஷ்யன் இல்லையா?