குழந்தைகள் மரணம்



ஒரு தேசியத் துயரம்!

தேசமே பதறுகிறது. தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றே நாட்களில் 13 பச்சிளம் சிசுக்களின் உயிர் பறி போயிருக்கிறது. பிரசவ வேதனை கூட தீர்ந்திராத நேரத்தில் குழந்தையைப் பறிகொடுத்துத் துடிக்கும் தாய்களைப் பார்க்க இதயம் நொறுங்குகிறது. ‘‘ஒவ்வொரு மாதமும் இங்கு 45 முதல் 60 குழந்தைகள் உயிரிழப்பது வழக்கம்தான். இதற்கெல்லாம் ஏன் பதறுகிறீர்கள்?’’ என்று சாதாரணமாகக் கேட்கிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.

குழந்தைகளின் இறப்புக்கு எடை குறைவு, குறைப்பிரசவம்தான் காரணம் என்று சப்பைக் கட்டு கட்டுகிறார் முதல்வர். ஆனால் மருத்துவத்துறையில் இருக்கும் மனசாட்சி உள்ள மனிதர்கள் இதை ‘தேசியத் துயரம்’ என்கிறார்கள். அலட்சியமும், நிர்வாகக் குளறுபடிகளுமே 13 குழந்தைகளின் உயிரைப் பறித்திருக்கிறது என்று குமுறுகிறார்கள் அவர்கள்.

தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. 43 தலைமை மருத்துவமனைகள், ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 30 மாவட்ட மருத்துவமனைகள், 240 தாலுகா மருத்துவமனைகள், 1751 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதுதவிர 5000 மக்கள் கொண்ட பகுதிக்கு ஒரு கிராம செவிலியர் உள்ளார். இவர் கிராமங்களிலேயே தங்கி, கர்ப்பிணிகளை கவனித்து பதிவேடு பராமரிக்க வேண்டும். கர்ப்பிணிகளின் எடை குறையும் பட்சத்தில் அவர்களுக்கு இணை உணவுகள் பெற்றுத்தர வேண்டும்.

முக்கியமான ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும். அங்கு பிரசவம் சிக்கலானாலோ, ஆபத்தான நிலை ஏற்பட்டாலோ அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கோ, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கோ அனுப்பி வைக்க வேண்டும். மாவட்ட, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான அவசர சிகிச்சைப் பிரிவு, பயிற்சி பெற்ற மருத்துவர் குழு, செவிலியர்கள் தயாராக இருக்க வேண்டும். ‘‘தற்போது நேர்ந்துள்ள மரணங்கள், இந்த அத்தனை நடைமுறைகளிலும் ஏற்பட்ட தோல்வியையே காட்டுகிறது’’ என்கிறார்கள் சமூக ஈடுபாடுள்ள மருத்துவர்கள்.

‘‘இந்த சம்பவத்தை ஒரு படிப்பினையாகக் கொண்டு குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும். ஆனால் அரசும் மருத்துவத்துறை யும் அதற்குத் தயாராக இல்லை என்பதையே அவர்களின் அறிக்கைகளும், பேச்சுகளும் காட்டுகின்றன’’ என்று வருந்துகிறார் மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் தேசியக்குழு உறுப்பினர் க.அமீர்கான். ‘‘தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் போதிய உபகரணங்கள் இல்லை என்கிறார்கள்.

28 குழந்தைகள் இருந்த நிலையில் 10 வார்மர்கள்தான் இருந்துள்ளன. எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இதுதான் நிலை. மேலும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதிலும் முறைகேடு. எங்கு தேவையோ அங்கு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. சில வருடங்களுக்கு முன்பு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தோம். அங்கு பச்சிளம் குழந்தைகளுக்குப் பயன்படும் வார்மர் கருவிகள் பராமரிப்பே இல்லாமல் வீணாகிக் கிடந்தன. ஆனால் தர்மபுரியில் ஒரே வார்மரில் இரண்டு மூன்று குழந்தைகளைப் படுக்க வைக்கும் அளவுக்கு பற்றாக்குறை.

‘எடைக்குறைவு, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து இல்லை’ என்றெல்லாம் காரணம் சொல்கிறார்கள். ஒருவேளை அது உண்மையாக இருக்குமானால் அடிப்படை சுகாதார நடவடிக்கைகளே தோற்றுப்போய் விட்டதாகத்தான் பொருள். கிராமங்களில் உள்ள சப்-சென்டர்களில் கர்ப்பிணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்திருக்க வேண்டும்.

ஒரு இந்தியப் பெண் தன் கர்ப்ப காலத்தில் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரித்தால்தான், சுமார் 3 கிலோ எடையுள்ள ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். கர்ப்பிணிகளை கிராம செவிலியர்கள் 4 முறை பரிசோதனை செய்யவேண்டும். ரத்தம், எடை, ஸ்கேன் எடுக்கவேண்டும். எடை குறைவாக இருந்தால் இணை உணவு பெற்றுத்தர வேண்டும். இதையெல்லாம் ஏன் அவர்கள் செய்யவில்லை?

இந்தியாவில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 44 குழந்தைகள் இறந்து விடுகின்றன. தமிழகத்தில் இந்த இறப்பு விகிதத்தை 22 ஆகக் குறைத்துவிட்டோம் என்று பெருமைப்படுகிறார்கள். இப்படி கணக்குக் காட்ட பெரும்பாலான குழந்தைகளின் இறப்புகளை, ‘பிறக்கும்போதே இறந்து பிறந்தது’ என்று பதிவு செய்கிறார்கள்.

எந்த மருத்துவமனையிலும் குழந்தைகளின் இறப்பை ஆடிட் செய்வதில்லை. காரணங்களை ஆராய்வதில்லை. எல்லா அரசு மருத்துவமனைகளிலுமே மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கிறது.

தர்மபுரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் மிகக்குறைந்த செவிலியர்களே இருந்துள்ளார்கள். அவர்களில் பலருக்கு போதிய பயிற்சியே இல்லை. இந்தக் குழந்தைகளின் இறப்புக்கு நிஜமான நியாயம் செய்வதாக இருந்தால், இந்த நேரத்தில் எல்லா தவறுகளையும் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார் அமீர்கான். ‘‘இந்த சம்பவத்தை சாதாரணமாகக் கையாளாமல் தேசிய அளவிலான ஒரு மருத்துவர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்’’ என்கிறார் முன்னாள் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் இளங்கோ.

‘‘பச்சிளம் குழந்தைகள் சிறப்புப் பிரிவில், பயிற்சி பெற்ற செவிலியர்கள் குழந்தைக்கு அருகிலேயே இருக்க வேண்டும். 1 மணி நேரத்துக்கு ஒருமுறை மருத்துவர் குழந்தையைப் பரிசோதித்து கேஸ் ஷீட் எழுத வேண்டும்.

 தர்மபுரியில் இதெல்லாம் நடந்ததாகத் தெரியவில்லை. 1960களில் இந்தியாவின் மொத்த கருவள விகிதம் நான்காக இருந்தது. இப்போது 1.6 ஆக குறைந்துவிட்டது. அதாவது ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் அளவுக்கு குடும்பங்கள் சுருங்கி விட்டன.  தற்போது குழந்தைகளைப் பறிகொடுத்த தாய்மார்களில் பலர் கருத்தடை செய்திருப்பார்கள். எந்த இழப்பீடும் அவர்களின் துயரத்தை ஈடு செய்யாது.

அரசு மருத்துவமனைகளின் நிர்வாகம் சீர்குலைந்து கிடக்கிறது. தவறு செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு அதிகாரம் இல்லை. கிராம செவிலியர்களை கண்காணிக்கவும் ஏற்பாடுகள் இல்லை. கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு உதவித்தொகையாக மாநில அரசு சார்பாக 3 தவணைகளில் 12,000 ரூபாயும் மத்திய அரசு சார்பாக 700 ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்தத் தொகையை ஊட்டச்சத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறது அரசு.

ஆனால் அதைக் கண்காணிக்க யாருமில்லை. பெரும்பாலான குடும்பங்களில் அந்தப் பணம் பெண்களின் கைக்கே வருவதில்லை. கணவன்மார்களே காலி செய்துவிடுகிறார்கள். ஒவ்வோராண்டும் நடக்கும் 11 லட்சம் பிரசவங்களில் 60% கர்ப்பிணிகள் இந்தப் பலனைப் பெறுகிறார்கள். ஆனால் உரிய பயன் இல்லை’’ என்கிறார் இளங்கோ.குழந்தைகளின் மரணத்துக்குப் பொறுப்பேற்று, திறந்த மனதோடு தவறுகளைக் களைய அரசு முன்வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

வெ.நீலகண்டன்