குட்டிச்சுவர் சிந்தனைகள்



‘‘வணக்கம்! இன்னிக்கு நாம பேட்டி எடுக்கப் போறது, ஆஸ்கர் பரிசு, நோபல் பரிசு, ஒலிம்பிக் ஓட்டப்பந்தய பரிசு... ஏன், சிக்கிம், பூடான் லாட்டரி பரிசு வரை வாங்கின இயக்குனர் திரு.ரப்சர்ராஜா அவர்களை! வணக்கங்கய்யா!’’‘‘வணக்கம் தம்பி...

’’‘‘எல்லா ரசிகர்களும் ஒவ்வொரு படம் ரிலீஸாகறப்பவும் படம் சூப்பரா இருக்கும்னுதான் போறாங்க, ஆனா சில சமயம் மிஞ்சுறது என்னவோ ஏமாற்றம்தான். இது உங்க படத்துலயும் இருக்கு. இதுக்கு காரணம் என்னங்கய்யா?’’

‘‘என்ன சொல்றீங்க நீங்க? தொப்புள்ல கப்பல் விடுறது, அக்குள்ல ஏரோப்ளேன் விடுறது, கழுத்துல மோப்பம் புடிக்கிறது, கைல ஏப்பம் புடிக்கிறதுன்னு எத்தனை விஷயத்த தமிழ் சினிமாவுக்கு தந்திருக்கேன். வண்ணாரப்பேட்டைல தூக்கி வீசுற தாவணிய வாஷிங்டன்ல கேட்சிங் புடிச்சு மேட்சிங் டிரஸ் போட்டு ஆட விடுறத அறிமுகப்படுத்தினவனே நான்தான். இவ்வளவு ஏன்? ப்ளாக்ல கூட என் பட டிக்கெட் விலை ஏறியிருக்கு. கடந்த 10 வருஷத்துல என் படம் எதுவாவது ஒரு நாளைக்குக் கம்மியா ஓடியிருக்கா, சொல்லுங்க?’’

‘‘அய்யா, உங்க திறமைய குத்தம் சொல்லல. ஆனா பாரையும் பீரையும் காட்டாம ஒரு படம் எடுக்கறீங்களா? முத்தக்காட்சியும் ரத்தக்காட்சியும் இல்லாம படம் வர்றதில்ல. யு.கே.ஜி குழந்தையோட யூனிபார்ம எடுத்து ஹீரோயினுக்கு காஸ்ட்யூமா தர்றீங்க. பாசப் படங்களா வந்த தமிழ் சினிமாவுல இப்ப ஆபாசப் படங்களா வருது. வசனங்கள் ஒண்ணு மீனிங் இல்லாம இருக்கு; இல்ல, டபுள் மீனிங்கா இருக்கு!’’

‘‘குத்தம் சொல்றவன் சொல்லிக்கிட்டேதான் இருப்பான். தம்பி, நான் எடுத்த ‘கரடியும் கிழவியும்’ படம் 3000 கோடி ரூபா வசூல் பண்ணியிருக்குன்னு அமெரிக்க பத்திரிகை சொல்லுது...’’

‘‘ஆனா அது மூணு நாள்தான் ஓடுச்சுன்னு உள்ளூர் பத்திரிகை சொல்லுதேய்யா!’’‘‘என்னோட ‘கதை திரைக்கதை வாந்தி மயக்கம்’ படம் செவ்வாய்க் கிரகத்துல சூப்பர் டூப்பர் ஹிட்னு மங்கள்யான் சொல்லுது...’’‘‘அய்யா, அது செவ்வாய்க் கிரகம் போய்ச் சேரவே இன்னொரு வருஷம் ஆகும்னு இஸ்ரோ சொல்லுது!’’

‘‘என்னோட ‘கிஸ்வரூபம்’ படம் ரிலீஸான மொத நாளே 400 கோடி ரூபா வசூல் பண்ணுச்சு...’’‘‘ஆனா, அது ரிலீசாகவே ஒரு மாசம் ஆச்சேய்யா. வெண்கலப் பதக்கம் வாங்குறத விட வெள்ளிக்கிழமை ரிலீசாகறதுதானேய்யா முக்கியம்!’’‘‘தம்பி, புள்ளிவிவரம் சரியா தெரிஞ்சுக்கிட்டுதான் பேசணும்...’’‘‘ஓகே, ஒரு நிமிஷம்யா... இது எபோலா வைரஸ் ரிப்போர்ட், இது எலிக்காய்ச்சல் ரிப்போர்ட், இது என்னோட பிளட் டெஸ்ட் ரிப்போர்ட், இது என்னோட யூரின் டெஸ்ட் ரிப்போர்ட்...

போதுமா? இதுவரைக்கும் உங்க ‘பன்னு டீயும் பாதாள சாக்கடையும்’ படத்துல வர்ற குழாய்க்குள்ள குத்தாட்டம் போடுற சீனைப் பார்த்துட்டு குழாய்க்குள்ள குடித்தனம் நடத்துற தம்பதிகள் எண்ணிக்கை 157868. டிப்பர் லாரிய திருப்பிப் போடுற மாதிரி நீங்க எடுத்த சீனைப் பார்த்துட்டு டிவிஎஸ் 50ய திருப்பிப் போடப் பார்த்து கழுத்து திருப்பிக் கொண்டவங்க எண்ணிக்கை 12452. உங்க படத்த பார்த்துட்டு புருஷன அடிக்கிறத பல பெண்கள் கை விட்டிருக்காங்கன்னு சொல்றீங்களே, அதுக்கு ஆதாரம் இருக்காய்யா?’’

‘‘அது ஆயிரம் பக்க ரிப்போர்ட்டு தம்பி. மொத பக்கம் ஒரிஜினலு, மிச்ச பக்கமெல்லாம் ஜெராக்ஸு... 15 ரூபா கட்டி என் பொண்டாட்டி நடத்துற மகளிர் மன்றத்துல மெம்பர் ஆகணும். அப்பதான் ஒரு டீ, ஒரு வடையோட எல்லாத்தையும் விளக்குவாங்க.

அயனாவரத்துல அயர்ன் பண்றவங்கள்ல இருந்து டோக்கியோவுல டாக்டரா இருக்கிறவங்க வரை இதுல மெம்பரா இருக்காங்க. கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு பேட்டி கொடுக்கணும், டிவில குத்து டான்ஸ் ஆடுறவங்களுக்கு மார்க் போடணும். இதெல்லாம் உனக்குத் தெரியாது தம்பி. அடுத்த கேள்வி...’’‘‘சமீபத்துல நீங்க எடுத்து ஒரு வாரம் கூட ஓடாத படத்தோட கதை என்னோடதுன்னு ஒருத்தர் கேஸ் போட்டிருக்காரே?’’

‘‘நல்லா கேட்டீங்க தம்பி, என்னைக்காவது என் படத்துல கதைன்னு ஒண்ணு இருந்திருக்கா?’’‘‘பாட்டுக்கு அரை மணி நேரம், ஃபைட்டுக்கு அரை மணி நேரம் போக மீதி இருக்கும் ஒரு மணி நேரத்துல எப்படிய்யா கதையே இல்லாம எடுக்கறீங்க?’’‘‘இது அபாண்டமான குற்றச்சாட்டு. கேமராவ ஆஃப் பண்ணச் சொல்லு... கேமராவ ஆஃப் பண்ணச் சொல்லு...’’‘‘கவலைப்படாதீங்க, இது தமிழ்நாடு. கேமராவுலயும் கரன்ட் இல்ல!’’

‘‘அப்ப பேட்டி முடிஞ்சதுல்ல? போலாம்ல?’’‘‘ஐயா, பேட்டி இன்னமும் முடியல. என் மொபைல் கேமரா ஆன்லதான் இருக்கு. வாட்ஸ்சப்ல போட வேற ஆடியோ ரெக்கார்ட் ஆயிட்டு இருக்கு. சோ, ப்ளீஸ்! உட்காருங்க...’’‘‘ஓஹோ! ட்விட்டர், ஃபேஸ்புக்ல என்னைக் கலாய்க்க மத்த டைரக்டர்கள் எவ்வளவு கொடுத்தாங்க?’’‘‘உங்க எதிரி படம் வரப்போ நீங்க எவ்வளவு கொடுத்தீங்க?’’

‘‘ஏன்யா, பால் கார்டுக்கு பின்னால பழைய பால்பாயின்ட் பேனாவுல எழுதி வச்சுக்கிட்டு நீங்க மொக்க கேள்வி கேட்பீங்க, நான் பதில் சொல்லணுமா? படம் எடுக்கிறதுன்னா என்னன்னு தெரியுமாய்யா உனக்கு? என்னைக்காவது பவர்ஸ்டார வச்சு ஷூட்டிங் நடத்தியிருக்கியா? இல்ல, சோலார் ஸ்டார் நடிக்கிற ஷூட்டிங் பார்த்திருக்கியா? வந்து பாரு... ஒரு நாளைக்கு எத்தனை பேரு கண்டபடி கலாய்க்கிறாங்க, எத்தனை பேரு கேவலமா கிண்டலடிக்கிறாங்கன்னு தெரியும்.

எவ்வளவு சண்டை, எவ்வளவு சமாதானம், எவ்வளவு திட்டு, எவ்வளவு பிட்டுன்னு புரியும்...’’
‘‘ஒரு சிரிப்புல தீர்க்க வேண்டிய பிரச்னைகள பெருசாக்கிட்டு இப்படி சொல்றீங்களே?’’‘‘சோறுக்குள்ள பீர விட்டா செமையா இருக்கும்ங்கிறேன், உனக்கு புரியல... நீ தின்னு பாரு. அப்ப தெரியும். ஒரு நாள், ஒரு நாள் நீ ஒரு ஸீன் சோலார் ஸ்டார வச்சு ஷூட்டிங் எடுத்து பாரு, அப்ப புரியும்!’’

‘‘இது சரியான பதில் இல்லையே... நான் எப்படிங்க படம் எடுக்க முடியும்?’’‘‘ஹா... ஹா... ஹா... என்ன, பயப்படுறியா?’’‘‘அது இல்லீங்க, உங்கள மாதிரி மொக்க படம் எடுக்கிறதுக்கு பதிலா நான் செல்போன்ல போட்டோ எடுத்துட்டு போயிடுவேன்!’’         

ஆல்தோட்ட பூபதி