பாட்டு நாங்க... துட்டு நீங்க..!



நிதி திரட்டி ஒரு ஆல்பம்

''சுதந்திரம் ஒரு டப்பா...
இந்த நாலு சுவத்துக்குள்ளே...
நாம வாழ்க்கை வாழ்ந்தா தப்பா..!’’

- விரல்கள் கிடாரில் விளையாட விழி மூடி ‘ஃபோக் ராக்’ பாடுகிறார் கோபர் வாசுகி. பொதுமக்கள், நண்பர்களிடமிருந்து பணம் திரட்டி, ‘க்ரவுட் ஃபண்டட்’ முறையில் ரெடியான தமிழின் முதல் இசை ஆல்பத்தின் பாடகர் இவர். கன்னடத்தில் இப்படிப்பட்ட நிதி திரட்டலில் ‘லூசியா’ என்ற சினிமாவையே எடுத்து ஹிட் பண்ணியிருக்கிறார்கள். ஆனால், தமிழில் இப்படி நிதி திரட்டிச் செய்வது புது முயற்சி!

‘‘ஹிப் ஹாப் ஆதி மாதிரி நானும் ஒரு தனிப்பாடகர்னு சொல்லிக்கலாம். என்னோட ஆல்பத்தின் பெயர் ‘அழகுப்புரட்சி’. மொத்தம் ஆறு பாடல்கள். அதுல ஒரு பாடலை மட்டும் வீடியோ பண்ணலாம்னு ப்ளான்!’’ - துடிப்பாகப் பேசுகிறார் இந்த க்யூட் இளைஞர்.‘‘நான் கோயம்புத்தூர் பையன்.

இப்போ சென்னையில இருக்கோம். அம்மா -அப்பா, தங்கை... இவ்ளோதான் என் ஃபேமிலி. என்னோட பெயர் வித்தியாசமா இருக்கறதுக்கு என்ன ரீஸன்னு எனக்குத் தெரியாது... வீட்ல வச்ச பேர்தான். காலேஜ் படிக்கிறப்பவே கவிதை எழுதுவேன். பாட்டுன்னா இன்ட்ரஸ்ட். ஆனா, மியூசிக் பத்தி எதுவும் தெரியாது.

இங்கிலீஷ்ல ராக் அண்ட் ரோல் மாதிரி ஆல்பம்ஸ் கேக்கறப்ப, தமிழ்ல இப்படிப் பாடல்கள் ஏன் இல்லைனு தோணும். கொஞ்சம் சமூகம், கொஞ்சம் வாழ்க்கைன்னு யோசிச்சு, மெட்டு போட்டு, நானே பாட ஆரம்பிச்சேன். என் பாட்டுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க. சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமனோட ‘ஜஸ்டீஸ் ராக்’ இசைக்குழு மூலம் பெச ன்ட் நகர் கடற்கரையில் இருக்கும் குப்பத்து மக்கள் மத்தியில் பாட ஆரம்பிச்சோம்.

 அடுத்து, ‘சப்போர்ட்டிவ் சிட்டீஸ்’ அமைப்போட ஒருங்கிணைப் பாளர் ஹண்டேவோட நட்பு கிடைச்சது. இவங்க மூலமா நிறைய நிகழ்ச்சிகள்ல பாட ஆரம்பிச்சேன். அவங்கதான் நிகழ்ச்சி களுக்கு டிக்கெட் கட்டணம் வசூல் பண்ணி, புதுசாவும் கிரியேட்டிவாவும் பண்ற என்னை மாதிரி ஆட்களுக்கு அந்தத் தொகையைப் பரிசா கொடுத்தாங்க.

‘உன் பாடல்களை நீ ஏன் ஆல்பமா போடக் கூடா து?’ன்னு என்னை உசுப்பிவிட்டது அவங்கதான். ‘தரை மேல் பிறக்க வைத்தான்... எங்களை தண்ணீரில் தவிக்க வைத்தான்’ங்கற மாதிரியான வாலி சார் பாடல்களும், கண்ணதாசன் பாடல்களும்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். என்னோட சிந்தனையை பகிர்ந்துக்குற விஷயமாத்தான் பாடல்களை எழுத ஆரம்பிச்சேன். ஆனா, கருத்து கந்தசாமியா நினைச்சிடக் கூடாதுங்கறதுலயும் கவனமா இருந்தேன். ஆல்பத்துக்கு  எவ்வளவு ஆகும்னு பட்ஜெட் போட்டேன்.

 இறுக்கிப் பிடிச்சாலும் 75 ஆயிரம் ரூபாய்க்கு கணக்கு வந்துச்சு. அவ்வளவு காசு என்கிட்ட இல்லை. என்ன பண்ணலாம்னு நித்யானந்த் ஜெயராமன், ஹண்டேகிட்டே எல்லாம் டிஸ்கஸ் பண்றப்பதான், க்ரவுட் ஃபண்ட் கலெக்ட் பண்ணலாம்னு ஐடியா தோணுச்சு. இதுக்கான ஒரு பிரத்யேக வெப்சைட்ல என் ஆல்பம் ஆசையைப் பகிர்ந்துக்கிட்டேன்.

அவ்வளவுதான்... உள்ளூர்ல இருந்து வெளிநாடு வரை நண்பர்கள், பொதுமக்கள்கிட்ட இருந்து அமவுன்ட் குவிய ஆரம்பிச்சிடுச்சு. 40 பேருக்கு மேல இதில் காசு போட்டிருக்காங்க. எதிர்பார்த்ததுக்கும் மேல மொத்தம் 85 ஆயிரம் சேர்ந்துடுச்சு. இந்த ஆல்பத்துக்கு இசை, என் நண்பன் திபுஷியஸ் வி.ரூபன். இதோ, ஆல்பம் ரிலீஸுக்கு ரெடியாகிடுச்சு’’ - சொல்லிவிட்டு, கிடாரில் மூழ்கி தன் பாட்டுக்கு ஃபைனல் டச் கொடுக்கிறார்...

‘‘என் கற்பனையை திரட்டி...
கவியாய் உன் செவியை நோக்கி...
புரட்சி என்னும் பஞ்சால்
உன்னை உடுத்தி
மெல்ல கொளுத்தி...

உன் கற்பனையை கடத்தினால்
என்னை கவனிப்பாயா...
அல்ல மீண்டும் மறுப்பாயா...’’

- மை.பாரதிராஜா
படங்கள்: புதூர் சரவணன்