அசைவது இரண்டே விரல்...



ஓவியத்தில் கலகக் குரல்!

‘கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரி’ என்பதே நமக்கெல்லாம் கையறு நிலை. சில நிமிடங்களுக்கே தவித்துப் போவோம். கண்ணோடு கை, கால், கழுத்தையும் கட்டிவிட்டால்..? நினைக்கவே நரகவேதனை தரும் இந்த நிலைதான் உதயகுமாருக்கு நிரந்தர வாழ்க்கை! வலது கை கட்டை விரலையும் சுட்டு விரலையும் தவிர இவர் உடலில் வேறெந்த பாகமும் அசையாது. ஆனால், அந்த விரல்களிலிருந்து வெடித்துக் கிளம்பும் ஓவியங்கள் உலகமெங்கும் பறக்கும்... பாறை இதயங்களையும் அசைக்கும்!

‘‘பத்து மாசக் குழந்தையிலயே இந்த நோய் வந்துருச்சுங்க. ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோஃபின்னு இதுக்குப் பேர் சொல்றாங்க. அதாவது, தசைச் சிதைவு நோய்’’ எனத் துவங்குகிறார் உதயகுமாரின் தந்தை ரங்க நாதன்.‘‘பத்தாவது மாசத்துல இருந்தே அவன் உடம்புல ஒவ்வொரு பாகமா செயலிழக்க ஆரம்பிச்சிடுச்சு. சின்னப் பையனா இருக்கும்போதே மூட்டுக்குக் கீழ இயங்காமப் போச்சு.

முட்டி போட்டு, தவழ்ந்துதான் ஸ்கூலுக்குப் போனான். பத்தாவது வரைக்கும் படிச்சான். அதுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா உடம்பில் மிச்சமிருந்த பாகங்களும் செயலிழந்து போச்சு. பேச்சு இல்ல. வாயசைச்சு சாப்பிடக் கூட அவனால முடியாது. இதோ... இருவது வருஷமா அவனுக்கு இந்தப் படுக்கைதான் உலகம்!’’ - சொல்லும்போதே கலங்கிப் போகி றார் ரங்கநாதன்.

ஆனால், உதயகுமார் சோர்ந்து போய் விடவில்லை. இந்த நோயையே தன் சுதந்திரத்துக்கான திறவுகோலாக பாவித்து, அவர் எடுத்துக்கொண்ட ஆயுதம்தான் ஓவியங்கள். ‘‘சின்ன வயசுலயே இவனுக்கு ஓவியத்துல ஆர்வம்ங்க. கஷ்டப்படுறதுனாலயோ என்னவோ... மக்கள் படுற கஷ்டங்களைத்தான் இவனும் ஓவியமாக்குறான். போபால் விஷவாயு சோகம், குழந்தைகள் ஆழ்துளைக் குழாய்கள்ல விழுந்து மரணத்தைச் சந்திக்கறது, பாபர் மசூதி இடிப்பு, பி.டி. கத்திரிக்காயின் அபாயம், விதர்பா விவசாயிகள் தற்கொலைன்னு இவன் ஓவியங்களைப் பார்த்தா உங்களுக்கே புரியும்!’’ என மகனின் படைப்புகளை ஆசையாய் விரிக்கிறார் அம்மா சாந்தகுமாரி.

உதயகுமாரின் ஓவியங்கள் சமீபத்தில் சென்னையில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. நடிகர் சிவகுமார் தலைமையேற்ற அந்நிகழ்வில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்களில் தென்படுவதெல்லாம் குதிரைகளும், காளைகளும், சேவல்களும், தும்பிகளும் தான். வேகமும் வீரியமும் மிக்க இந்த உயிரினங்களை வரைவதன் மூலம், உதயகுமார் தன் படுக்கை வாழ்வுக்கு மருந்து தேடிக்கொள்வதாகச் சொல்கிறார்கள் அவரின் அம்மாவும் அப்பாவும். உதயகுமா ரின் சிறு வயது ஆர்வம், ஏரோநாட்டிகல் எஞ்சினியர் ஆவதாம்!

‘‘ஆரம்பத்துல எல்லா சிகிச்சையும் செய்து பார்த்தோம். ‘இதுக்கு மருந்தே இல்ல’ன்னு டாக்டர்கள் ஒரு கட்டத்துல கைவிரிச்சுட, வேற வழியில்லாம கடவுள்கிட்ட பாரத்தைப் போட்டுட்டோம். இப்ப சாப்பாட்டைக் கூட மிக்ஸியில அடிச்சு வாயில ஊத்த வேண்டிய நிலைமை. இவன் வரையணும்னா மொதல்ல தலையணைகளை முட்டுக் கொடுத்து உட்கார வைக்கணும், பிரஷ்ஷை அவன் கையில கொடுத்து, பக்கத்துலயே இருந்து நாம பேப்பரை வரையிறதுக்கு ஏத்த மாதிரி அசைக்கணும்.

தேவைப்படுற கலரை பிரஷ்ல நனைச்சும் கொடுக்கணும். முன்னெல்லாம் ஒரு ஓவியத்தை நாலு நாள்ல முடிச்சிடுவான். இப்ப மூணு வாரமாவது ஆகுது. எங்களுக்கும் வயசாயிடுச்சு. முடியல. ஆனா, அவனைக் கேளுங்க... ‘900 ஓவியம் வரைஞ்சுட்டேன். இன்னும் நூறு வரையணும்’னு சொல்வான். அவனுக்கு இவ்வளவு வேகம் இருக்கும்போது, நாங்க சளைக்க முடியுமா?’’ - தீர்மானமாகச் சொல்கிறார்கள் அவர்கள். ‘‘உதயகுமாரின் அடுத்த ஓவியம் என்ன?’’ ‘‘இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரில் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள்...’’உலகத்தில் என்ன நடந்தாலும் தேமேவென இருப்பவர்களை அசைக்குமா உதயகுமாரின் ஓவியங்கள்!

- டி.ரஞ்சித்
படங்கள்: புதூர் சரவணன்