திட்டக் கமிஷன் தேவையற்ற அமைப்பா?



‘திட்டக் கமிஷன்’ என்ற பெயரை தினசரி வாழ்வில் சராசரி இந்தியர்கள் அநேகம் பேர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ‘நகரங்களில் 24 ரூபாய் தினசரி சம்பாதிப்பவர்கள் ஏழை இல்லை’ என்பது போன்ற அபத்தமான புள்ளிவிவரங்களை எப்போதாவது உதிர்த்து மக்களின் சாபத்தைக் கொட்டிக் கொள்ளும் ஒரு அமைப்பாகவே அது அறியப்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டிய பிரதமர் நரேந்திர மோடி, திட்டக் கமிஷனைக் கலைக்கப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 64 ஆண்டுகளாக இந்திய மக்களுக்கான அனைத்துத் திட்டங்களையும் உருவாக்கிய அந்த அமைப்பு ஏன் மோடிக்குப் பிடிக்கவில்லை?

திட்டக் கமிஷன் தேவையில்லை என மோடி சொல்வது புதிதில்லை. தனது முதல் சுதந்திர தின உரையிலேயே அவர் இப்படிச் சொன்னார்... ‘‘சில சமயம் நமது பழைய வீட்டை சீர் செய்வோம். நிறைய பணம் செலவிடுவோம். ஆனாலும் அது நமக்கு எதிர்பார்த்த நிறைவைத் தராது. அப்போது வீட்டை இடித்துவிட்டு புது வீடு கட்டுவோம். அப்படி திட்டக் கமிஷனுக்கு பதிலாக ஒரு புது அமைப்பு வரும்!’’

திட்டக் கமிஷன் என்பது நமது முதல் பிரதமரான நேருவின் செல்லப் பிள்ளை. சுதந்திரப் போராட்ட காலத்தில், ‘இந்தியா பாம்பாட்டிகளின் தேசம்’ என்ற கருத்து மேற்கத்திய நாட்டினருக்கு இருந்தது. ‘வெள்ளைக்காரர்கள் வெளியேறி விட்டால் இந்தியா உருப்படாது’ என்ற எண்ணம் பணக்கார இந்தியர்களுக்கு இருந்தது.

‘இந்த இரண்டு நினைப்புகளும் மாற வேண்டும் என்றால், திட்டமிட்ட வளர்ச்சி தேவை’ என்பதை நேரு உணர்ந்தார்; காங்கிரஸ் தலைவர்களும் உணர்ந்தார்கள். காங்கிரஸ் கட்சியிலேயே பொருளாதார நிபுணர்கள், அறிவியல் அறிஞர் களைக் கொண்ட ஒரு குழு 1931ம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1950ம் ஆண்டில் திட்டக் கமிஷனை அமைத்தார் நேரு.

இது அரசியல் சட்டப்படி உருவான அமைப்பல்ல. மத்திய அமைச்சரவையின் ஒரு தீர்மானமே இதை உருவாக்கப் போதுமானதாக இருந்தது. பிரதமர்தான் இதற்குத் தலைவர். துணைத் தலைவராக யாரை வேண்டுமானாலும் பிரதமர் நியமிக்கலாம். அவர் ஒரு மத்திய அமைச்சரின் அந்தஸ்தைப் பெறுவார். நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு எதிரிலேயே ‘யோஜனா பவன்’ என திட்டக் கமிஷனுக்கு அலுவலகம் அமைத்தார் நேரு. நாடாளுமன்றத்துக்கு அடுத்து முக்கியமான அமைப்பாக அதை நேரு கருதினார்.

ரஷ்யப் புரட்சிக்குப் பிறகான ரஷ்யாவின் வளர்ச்சி நேருவை பெரிதும் கவர்ந்திருந்தது. விவசாயத்திலும் அறிவியலிலும் பெரும் வளர்ச்சி பெற்று, விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் வல்லரசாக குறுகிய காலத்தில் ரஷ்யா மாறியதற்கு திட்டமிடலும், அரசு சார்பில் ஆரம்பிக்கப்பட்ட பெரு நிறுவனங்களுமே காரணம் என அவர் நம்பினார்.

 இந்தியாவும் அப்படி மாற அவர் ஆசைப்பட்டார். பிரமாண்டமான அணைக்கட்டுகள், ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரியும் அரசு தொழில் நிறுவனங்கள், நவீன விவசாயம் என எல்லாம் இணைந்து இந்தியாவின் வறுமையைப் போக்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டார்.

திட்டக்கமிஷனின் ஆரம்ப இலக்குகளும் அப்படித்தான் அமைந்தன. உதாரணமாக, ‘இந்த ஆண்டு இரண்டு கோடி டன் அரிசி உற்பத்தி செய்ய வேண்டும்’ என விவசாயத் துறைக்கு ஒரு இலக்கு நிர்ணயித்தால், அதற்குத் தேவையான மின் வசதி, விதைகள், உரங்கள் என எல்லாம் பற்றித் திட்டமிட்டார்கள். ஐந்தாண்டுத் திட்டங்கள் அறிமுகமாகின.

ஆனால் திட்டக் கமிஷன் பதவிகளுக்கு தவறானவர்கள் வந்து அமர்ந்து, அதிகாரப் பசி பிடித்த அமைப்பாக அது மாறியபோது எல்லாம் உருக்குலைந்தன. எல்லா மாநிலங்களும் வசூலிக்கும் வரியை மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் மாநில அரசுகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். அதோடு ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்த மாநிலங்களுக்கு நிதிப் பங்கீடு செய்ய வேண்டும்.

இந்த அதிகாரங்களை நிதி அமைச்சகத்திடமிருந்து திட்டக் கமிஷன் பறித்துக் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலத்துக்குத் தேவையான நிதி பற்றிய கோரிக்கையோடு திட்டக் கமிஷனில் போய் நிற்பார்கள்; அவர்கள் பல கோடி மக்களால் வோட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

ஆனால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை பற்றியே தெரியாத யாரோ ஒரு முன்னாள் அதிகாரி திட்டக் கமிஷனில் இருந்துகொண்டு, ‘‘இவ்வளவு பணம் தர முடியாது’’ என நிராகரிப்பார். மாநில அரசுகள் செயல்படுத்தும் எல்லா திட்டங்களிலும் மூக்கை நுழைத்து குழப்பினார்கள். மாநிலங்களின் பல அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.

நேருவின் நிதி அமைச்சராக இருந்த ஜான் மத்தாய், ‘‘திட்டக் கமிஷன் ஒரு சூப்பர் கேபினட் போல செயல்படுகிறது’’ எனக் கோபமாகச் சொல்லிவிட்டு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். திட்டக் கமிஷன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் இப்படியான திட்டங்கள் எல்லாமே காமெடி ஆகிவிட்டன. யதார்த்த வாழ்க்கைக்கு சம்பந்தமே இல்லாத கற்பனைகளில் மூழ்கியிருக்கும் நிபுணர்கள்தான் திட்ட அறிக்கைகளை தயாரிப்பார்கள். ஒரு ஐந்தாண்டுத் திட்டம் இப்போது அமலாக வேண்டும் என்றால், அதற்கான அறிக்கை அடுத்த ஆண்டுதான் ரெடியாகும். அவ்வளவு மெத்தனம். எந்தத் திட்டமாவது இலக்கை அடைந்ததா? அடையவில்லை என்றால் என்ன பிரச்னை? எப்போதும் இதுபற்றியெல்லாம் கவலைப்பட்டதே இல்லை.

2012 முதல் 2017 வரை பன்னிரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கான திட்ட அறிக்கை மூன்று வால்யூம்களில் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கிறது. இதை முழுதாகப் படித்தவர்கள் இந்தியாவில் ஒருவராவது இருப்பார்களா, தெரியவில்லை! எளிய மக்களின் வாழ்வை முன்னேற்ற திட்டங்கள் தீட்டுகிறார்கள் எனில், அந்த எளிய மக்களுக்குப் புரியாத பொருளாதாரத்தை இந்த அறிக்கைகள் பேசி என்ன ஆகப் போகிறது?

இத்தனை திட்டங்கள் போட்ட பிறகும், இந்தியாவில் இன்னமும் 77 சதவீதம் பேர் பொருளாதாரரீதியாக தோல்வியடைந்தவர்களாகவே கருதப்படுகிறார்கள். வறுமைக்கோட்டிலிருந்து மக்களை மீட்க வேண்டிய திட்டக் கமிஷன், அந்தக் கோட்டை அழித்து கீழே வரையும் விஷம வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

பெரிய பெரிய பொதுத்துறை நிறுவனங்களை அரசு உருவாக்கும் சோஷலிச காலம் மாறி, அடானி போன்ற தொழிலதிபர்களுக்கு கடன் கொடுக்கும் நிலைக்கு அரசு மாறிக் கொண்டிருக்கிறது. இப்படியான சந்தைப் பொருளாதார காலத்தில் திட்டக் கமிஷனுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. உண்மையில் அது அரசின் செயல்பாட்டை குறுக்கே பாய்ந்து தடுக்கும் வேலையைத்தான் செய்துவந்தது. ராஜீவ் காந்தியே ஒருமுறை திட்டக் கமிஷனை ‘ஜோக்கர்களின் கூட்டம்’ என சொல்லியிருக்கிறார். மாற்றங்களுக்கு ஈடுகொடுக்காத எதுவும் காலநதியின் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்படுவதுதான் நியதி!

- அகஸ்டஸ்