சனிப் பெயர்ச்சி பலன்கள்




மகான்களின் ஆசி கிடைக்கும்

தனுசு

சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் நடந்து கொள்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து உங்களுக்கு ஓரளவு செல்வம், செல்வாக்கைப் பெற்றுத் தந்த சனி பகவான், இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரையுள்ள காலகட்டங்களில் விரயச் சனியாகவும் ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருப்பதால் நீங்கள் எதிலுமே கொஞ்சம் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. சனி பகவான் உங்களுக்கு 2ம் வீடு மற்றும் 3ம் வீட்டிற்கு அதிபதியாக வருவதால் ஏழரைச் சனியால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும்.

ராசிக்கு 12ல் சனி மறைவதால் உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படப் பாருங்கள். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை சொல்லாதீர்கள். இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால் அனுபவபூர்வமாகப் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களை எல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள்.

 மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். உரிய காலகட்டத்திற்குள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தப் பாருங்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் பரவும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். என்றாலும் ஏழரைச் சனியாகவும் விரயச் சனியின் தொடக்கமாகவும் இருப்பதால் உங்கள் குடும்ப விஷயங்களில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்காதீர்கள்.

மனைவி உங்கள் குறை நிறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.

 சனி பகவான் 2ம் வீட்டைப் பார்ப்பதால் ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் மற்றொரு பக்கம் செலவினங்களும் இருந்து கொண்டே இருக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். கண் எரிச்சல், முழங்கால் வலி வந்து போகும். சனி பகவான் 6ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகள், கடன் பிரச்னைகள், தாழ்வு மனப்பான்மை, வழக்கால் நிம்மதியின்மை வந்து செல்லும். சனி பகவான் 9ம் வீட்டைப் பார்ப்பதால் வீண் செலவுகள், தந்தைக்கு ஆரோக்கியக் குறைவு, அவருடன் மனத்தாங்கல் வந்து நீங்கும்.

மாணவ-மாணவிகளே! மொழி அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். பேருந்தில் செல்லும்போது படிக்கட்டுகளில் நின்று பயணிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! ஏழரைச் சனி தொடங்கியிருப்பதால் உயர்கல்வியை போராடி முடிக்க வேண்டி வரும். காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்க வேண்டாம். திருமணம் சற்று தாமதமாகி முடியும். அரசியல்வாதிகளே! தலைமையைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனையையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்யுங்கள். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். பற்று - வரவு சுமார்தான். புது இடத்திற்கு கடையை மாற்றுவது குறித்து யோசிப்பீர்கள். கமிஷன், புரோக்கரேஜ், துரித உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லையே என அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.

அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்களிடம் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்று தாமத மாகும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் தொழில் நுணுக்கங்களை கேட்டறிவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். சின்னச் சின்ன வாய்ப்புகள் வந்தாலும் தவற விடாதீர்கள். இந்த சனி மாற்றம் உங்களுக்கு ஏழரைச் சனியின் தொடக்கமாக இருந்தாலும் ஓரளவு மகிழ்ச்சியையும், சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றித் தருவதாகவும் அமையும்.

கௌரவம் தேடி வரும்

மகரம்

தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொள்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை எந்த வேலையிலும் முழுமையாக ஈடுபாடில்லாமல் செய்ததுடன், உத்யோகத்தில் பிரச்னைகளையும், இடமாற்றங்களையும் தந்த உங்கள் ராசிநாதன் சனி பகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரையுள்ள காலகட்டங்களில் லாப வீட்டில் அமர்வதால் இனி தொட்ட காரியங்கள் துலங்கும்.

மற்றவர்களால் முடியாத செயற்கரிய காரியங்களையும் சுலபமாக முடித்துக் காட்டுவீர்கள். வருமானம் உயரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வீட்டில் தள்ளிப்போன சுப காரியங்கள் கூடி வரும்.

குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து இனி சேமிக்கத் தொடங்குவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்தபடி உயர்கல்வி, உத்யோகம் அமையும். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.  மனைவி வழியில் அந்தஸ்து உயரும். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

மூத்த சகோதர வகையில் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி தடையின்றி கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் சொந்தமாக முதலீடு செய்து தொழில் தொடங்குவீர்கள்.

குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். சனி பகவான் ராசியைப் பார்ப்பதால் தலைசுற்றல், லேசாக மயக்கம், டென்ஷன், அலர்ஜி வந்து நீங்கும். ஹார்மோன் பிரச்னைகள் வரக்கூடும்.

சனி பகவான் 5ம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். எதிர்மறையாகப் பேச வேண்டாம். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் எடை மிகுந்த பொருட்களைத் தூக்க வேண்டாம். சனி பகவான் 8ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வாகனத்தை இயக்கும்போது அலைபேசியில் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமே என்கிற பயம் வரும். வேற்று மதத்தவர்கள், பிற மொழியினர், வெளிநாட்டினரால் திடீர் திருப்பம் உண்டாகும்.

வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புகழ்பெற்ற நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். வேலையாட்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி மதிப்பார்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.

மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். படிப்பிலும், விளையாட்டிலும் முன்னேறுவீர்கள். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள். வகுப்பாசிரியரின் அன்பையும் பாராட்டையும் பெறுவீர்கள். உயர்கல்வி எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில், விரும்பிய பாடப்பிரிவில் அமையும்.

கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். திருமணம் நல்ல விதத்தில் முடியும். அரசியல்வாதிகளே! அனைத்துக் கட்சியினரையும் அனுசரித்துப் போகும் மனப்பக்குவம் வரும். போட்டிகளை முறியடித்து முன்னேறு வீர்கள். இந்த சனி மாற்றம் புதிய பாதையையும், புதிய அனுபவங்களையும் தருவதுடன், அதிரடி மாற்றங்களையும் தருவதாக அமையும்.

வருமானம் உயரும்

கும்பம்

கல் மனசுக்காரர்களையும் கனிவான பேச்சால் கரைப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்து கைக்கு எட்டியதை எல்லாம் வாய்க்கு எட்டாமல் செய்ததுடன், சேமிப்புகளை கரைத்துக் கொண்டிருந்த சனி பகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலகட்டங்களில் 10ம் வீட்டில் அமர்வதால் புதிய பாதை புலப்படும். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகளும் வரும்.

ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். தந்தையார் குணமடைவார். அநாவசியச் செலவு களைக் குறைக்க வழிவகை கண்டறிவீர்கள். வருமானம் உயரும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.

வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தந்தைவழி உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். கணவன்-மனைவிக்குள் இருந்த வீண் சந்தேகம், பிணக்குகள் தீரும். மழலை பாக்கியம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். மனைவி வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

 சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சகோதரர்களால் உதவிகள் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். புது வேலை கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்புகளும் வரும். இந்தி, தெலுங்கு பேசுபவர்களால் பயனடைவீர்கள். அவசரத்திற்கு கைமாற்றாக, கடனாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். ஆலயங்களை புதுப்பிக்க உதவுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும்.

வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சனி பகவான் 4ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருக்கு நெஞ்சு வலி, ரத்த அழுத்தம், இடுப்பு வலி வந்துபோகும். தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலை தூக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வீண் பழிகள் வரக்கூடும். சனிபகவான் 7ம் வீட்டை பார்ப்பதால் மனைவியுடன் வாக்குவாதம், அவருக்கு ஃபைப்ராய்டு, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். சனி பகவான் 12ம் வீட்டைப் பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும். ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள். வீண் அலைச்சல்கள் அதிகமாகும்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். சின்னச் சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்வீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். கன்னிப் பெண்களே! ஸ்கின் அலர்ஜியும் விலகும். அழகு கூடும். உத்யோகம் அமையும். காதல் விவகாரத்தில் தெளிவு பிறக்கும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல வரனும் அமைந்து திருமணம் சிறப்பாக முடியும். அரசியல்வாதிகளே! தலைமையுடன் இருந்த மோதல் நீங்கும். மாநில அளவில் புது பொறுப்புகள் கிடைக்கும்.

போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். பழைய கடையை புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் தேடிவரும். கண்ணாடி, துணி, பெட்ரோகெமிக்கல் வகைகளால் லாபமடைவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். 10ம் வீட்டில் சனி வந்தமர்வதால் உத்யோகத்தில் உயர்வு உண்டு. சில சமயங்களில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டிவரும்.

உயரதிகாரிகள் உங்களின் புது முயற்சி களை ஆதரிப்பார்கள். அநாவசிய விடுப்புகளை தவிர்க்கவும். முக்கிய பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் உயரதிகாரிகளைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். திடீர் இடமாற்றம் உண்டு.    இந்தச் சனி மாற்றம் உங்களுக்கு ஓரளவு வசதியைத் தருவதுடன், நீண்ட நாள் கனவுகளையும் நனவாக்குவதாக அமையும்.

விஸ்வரூப வெற்றி கிடைக்கும்

மீனம்


மறப்போம் மன்னிப்போம் என்றிருக்கும் நீங்கள், சண்டைக்காரர்களைக் கூட சந்தோஷப்படுத்துவதில் வல்லவர்கள். இதுவரை அஷ்டமத்தில் நின்று கொண்டு உங்களை படாதபாடுபடுத்தி, வாழ்க்கை மீது விரக்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்திய சனி பகவான், இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை 9ம் வீட்டில் அமர்கிறான்.

எனவே, தோல்வி யால் துவண்டிருந்த நீங்கள், இனி முன்னேறத் தொடங்குவீர்கள். சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை உண்டாகும். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பழைய பிரச்னைகள், சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள்.

புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். இனி இருவரும் மனம் விட்டுப் பேசி, முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். பிள்ளைகளை கூடாப் பழக்கவழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். மகள் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்துவீர்கள்.

மகனுக்கு அதிக சம்பளத்துடன் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். அங்கு, இங்கு புரட்டி ஒரு வீடோ, மனையோ வாங்கி விட முயன்றீர்களே, அது நல்ல விதத்தில் முடியும். வெளிவட்டாரம், சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளிப் பிரச்னை தீரும். ஆனால் தந்தையாருடன் மனவருத்தம் வரும். தந்தையாருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, மூச்சுப் பிடிப்பு, எலும்புத் தேய்மானம் என பிரச்னைகள் வந்து போகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் ஏற்படும்.

எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறையும் நீடிக்கும். சனி பகவான் 3ம் வீட்டைப் பார்ப்பதால் புது முயற்சிகள் கைகூடும். அரசால் அனுகூலம் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சனி பகவான் 6ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். என்றாலும் பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வழக்கில் தீர்ப்பு சற்று தாமதமாகும். சனி பகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் தடைகளெல்லாம் நீங்கும். புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும். பணப்புழக்கம் கணிசமாக உயரும்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். கவிதை, கட்டுரை, இலக்கியப் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டுகளைப் பெறுவீர்கள். உயர்கல்வியில் கூடுதல் மதிப்பெண் எடுத்து பெற்றோரை தலை நிமிரச் செய்வீர்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில், விரும்பிய நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.

கன்னிப்பெண்களே! அடிக்கடி முகம் சோர்ந்து காணப்பட்டீர்களே, இனந்தெரியாத கவலை உங்களை வாட்டியதே, இனி அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். உற்சாகம் திரும்பும். தோழிகளுக்கெல்லாம் திருமணமாகி விட்டதே; நமக்கு இன்னும் ஆகவில்லையே என வேதனைப்பட்டீர்களே! கண்ணுக்கு அழகான கணவர் வந்தமைவார். தாயாருடன் அடிக்கடி மனஸ்தாபங்கள் வந்த நிலை மாறும். தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள். தகுதிக்கேற்ற நல்ல வேலையும் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! புதிய பொறுப்புகளை தலைமை ஒப்படைக்கும். சகாக்களிடையே மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகளை சரி செய்வீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை அமர்த்துவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வருவார். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், இரும்பு, ஏற்றுமதி-இறக்குமதி, எண்ணெய் வகைகளால் லாபம் உண்டு. வி.ஐ.பிக்களும் வாடிக்கையாளர்களால் அறிமுகமாவார்கள்.

உத்தியோகத்தில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். தேங்கிக் கிடந்த பணிகளை சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் விரைந்து முடிப்பீர்கள். அதிகாரிகளின் பலம் / பலவீனம் உணர்ந்து அதற்கேற்ப உங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தாமதமின்றி இனி கிடைக்கும். வேறு நல்ல வாய்ப்புகளும் வரும்.
இந்த சனி மாற்றம் விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன், சாதனையாளராகவும் மாற்றும்.