எமர்ஜென்சி



‘‘ஏங்க, பக்கத்து வீட்டுல ஒரு ஃபேமிலி புதுசா வந்திருக்காங்க. அவங்க ஹஸ்பெண்ட் ஆட்டோ ஓட்டுறாராம். இந்த ஹை கிளாஸ் குடியிருப்புல போயி...’’ - பிரகாஷிடம் இப்படிச் சொல்லி இழுத்தாள் அவர் மனைவி கீதா.

‘‘அடுத்த வீட்டுலயே ஆட்டோக்காரர் இருக்குறது எவ்வளவு நல்லது தெரியுமா? ஆத்திரம் அவசரத்துக்கு ஒரு போன் போட்டு கூப்பிட்டுக்கலாம். பசங்களை ஸ்கூல்ல இருந்து கூட்டி வரச் சொல்லலாம். ஏன், அகாலத்தில் எமர்ஜென்சி... டாக்டர்கிட்ட ஓடணும்னா இவங்க உதவியைக் கேட்கலாம் பாரு..’’ என சமாதானப்படுத்தினார் பிரகாஷ்.மறுவாரமே அங்கே ஒரு சங்கடம்.

ஆட்டோக்காரரின் பிள்ளையை மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆகிவிட்டது.‘எமர்ஜென்சி அது இது என வந்து பணம் காசுக்கு நின்னுடப் போறாங்களோ?’ என்று மனசில் குழம்பித் தவித்தார் பிரகாஷ். ஆனால் கீதாவோ, ‘‘அந்தப் பிள்ளையை ஆட்டோவில் எடுத்துட்டு ஓடினப்ப என் மனசு துடிச்சுப் போச்சுங்க.

அவசரத்துக்கு வச்சிக்குங்கனு உங்களைக் கூடக் கேட்காமலே பணம் கொடுத்து அனுப்பினேன். எமர்ஜென்சி யாருக்கு, எப்போ வரும்னு சொல்ல முடியாது பாருங்க’’ என்றாள். எதையோ சொல்ல முயன்ற பிரகாஷ், சொல்லாமல் வாயை மூடிக்கொண்டார்.  
                       
பம்மல் நாகராஜன்