எல்லா குடும்பத்துக்கும் ஒரு கதை இருக்கிறது...



சீனர்கள் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், அந்த ஆண்டு தங்கள் குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளை ஒரு திரைச்சீலையில் எழுதிப் பாதுகாப்பது வழக்கம். ஜப்பானியர்கள் தம் முதுமையில், மூதாதைகளின் வரலாற்றை ஒரு அழியாக் காகிதத்தில் எழுதி வாரிசிடம் தருவார்கள். சேர்த்த சொத்தைவிடவும் வாழ்ந்த வாழ்க்கைதான் ஒரு மனிதனை அடையாளம் காட்டுகிறது. அந்த வாழ்க்கையை தம் வருங்கால சந்ததியும் அறிந்து பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என்கிற அக்கறைதான் ஆவணப்படுத்தலுக்கான காரணம்.

உலகின் தொன்மக்குடி என்று புகழ்ந்துகொள்கிற தமிழ்ச்சமூகத்துப் பிள்ளைகளுக்கு தாத்தாவைத் தாண்டி தங்கள் குடும்ப வரலாறு தெரியாது. அக்பரின் தாத்தாவையும், அசோகனின் பேரனையும் பற்றிப் படிக்கிற பிள்ளைகள் தங்கள் பாட்டன், பூட்டன் வாழ்வைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. தமிழ்ப் பேரினத்தின் பின்னடைவுக்கு இதுவும் ஒரு காரணம். அந்த மனக்குறைதான் சிவபெருமாளுக்கு வித்தியாசமான ஒரு சிந்தனையை விதைத்திருக்கிறது.

உலக வரலாறு, தேச வரலாறு, சமூக வரலாற்றைப் போல குடும்பங்களின் வரலாற்றை ஆவணப்படுத்துவதற்காக ‘பரம்பரா’ என்ற பெயரில் ஒரு ஆவணப்பட நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார் சிவபெருமாள். முன்னணி தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியவர். பள்ளிக் காலங்களிலேயே இயக்குனர் பாலு மகேந்திரா, கேமராமேன் தர்மா போன்றோரின் பட்டறைகளில் பயிற்சி பெற்றவர். கோலத்தின் வரலாறையும் குழந்தைப் பாடல்களையும் ஆவணப்படுத்தி கவனம் ஈர்த்தவர். இவரது இந்தப் புதிய முயற்சிக்கு ஏகப்பட்ட வரவேற்பு.

‘‘எல்லாக் குடும்பத்திற்குமே சொல்ல ஒரு கதையும், ஆவணப்படுத்த ஒரு வரலாறும் இருக்கிறது. பூர்வீக கிராமம், அவர்களுக்கு இருந்த பெயர், மரியாதை, சொத்துகள், குலதெய்வ வழிபாடு, உறவுகள், நிலம், வீடு, புழங்கு பொருட்கள், படித்த பள்ளி, படம் பார்த்த திரையரங்கு, தனித்த உணவு என எவ்வளவோ சுவாரசியங்கள் இருக்கின்றன. வாழ்க்கை இன்று பலகூறாக சிதைந்து விட்டது. சொந்த அடையாளங்களை இழந்து வெவ்வேறு முகங்களோடு வாழ வேண்டிய நெருக்கடி... எப்போதாவது உறவுகளோடு இணையும்போது பழைய வாழ்க்கையை அசைபோடும் அனுபவம் வாய்க்கிறது. வெறும் ஞாபகங்களால் மட்டுமே அவற்றை தரிசிக்க வேண்டியிருக்கிறது.

இந்தத் தலைமுறை குழந்தைகள், அவசரகால வாழ்க்கையைப் பழகியிருக்கிறார்கள். கடந்த தலைமுறைக்கு வாய்த்த எதுவும் இவர்களுக்கு வாய்க்கவில்லை. எந்திரத்தனமான வாழ்க்கையை அவர்களுக்கு நாம் பரிசளித்திருக்கிறோம். தனித்த தங்கள் கலாச்சாரத்தை காலத்தின் வேகத்தில் அவர்கள் இழந்து விட்டார்கள். எந்த நவீனம் இக்குழந்தைகளின் இயல்பைப் பறித்ததோ, அதே நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இழந்தவற்றை ஆவணப்படுத்தி அவர்களின் விழிகளுக்கும் மனதுக்கும் நெருக்கமாகக் கொண்டு செல்வதே எனது நோக்கம்’’ என்கிறார் சிவபெருமாள்.

தாத்தாவில் தொடங்கி பேரன்கள் வரையிலான ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை ஒரு மணி நேரக் குறும்படமாக மாற்றுகிறார் சிவபெருமாள். எட்டு அங்கங்களாக கதை பிரிக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்படுகிறது. குலதெய்வக் கோயில் வழிபாட்டில் தொடங்கி, குடும்பத்தின் தலைவர் தம் உறவுகளை அறிமுகப்படுத்துவது, உறவுகள் அக்குடும்பத்தைப் பற்றி பேசுவது, குடும்பத்தில் நடக்கும் சடங்குகள், சுப நிகழ்வுகள் என அனைத்தும் குறும்படத்தில் உள்ளடங்கி விடுகிறது. மெல்லிய இசையினூடே, மனதிற்கு இதமான சூழலில் மெல்ல நடந்தபடி தங்கள் நினைவுகளை பதிவுசெய்யும் பாங்கே ஆக்கத்தை மனதுக்கு நெருக்கமாக்கி விடுகிறது. இதுவரை 2 குடும்பங்களின் வரலாறு ஆவணமாக்கப்பட்டுள்ளது. இன்னும் நான்கு குடும்பங்கள் ஒப்பந்தம் போட்டிருக்கின்றன.

‘‘இப்படியொரு திட்டம் உருவாக எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்களே காரணம்’’ என்கிறார் சிவபெருமாள். ‘‘திண்டிவனம் பக்கத்தில் உள்ள பாங்குளத்தூர் கிராமம் எங்களுக்குப் பூர்வீகம். பெரியப்பாவுக்கு 4 பிள்ளைகள், சித்தப்பாவுக்கு 5 பிள்ளைகள், எங்கள் குடும்பத்தில் 8 பிள்ளைகள்... பெரிய வீட்டில் எல்லோரும் கூட்டுக் குடும் பமாக வாழ்ந்த நினைவுகள் இப்போதும் என்னைப் பரவசமாக்கும். இன்று எல்லோரும் ஆளுக்கொரு திசையில். நல்லது, கெட்டதுக்குக் கூட இணையமுடியாத நெருக்கடி.

எனக்கு ஒரே மகன். அம்மா, அப்பாவைத் தவிர வேறெந்த உறவுகளின் நெருக்கத்தையும் அவன் அனுபவித்ததே இல்லை. அவனுக்கு எப்படி நான் கூட்டுக்குடும் பத்தின் உன்னதத்தைச் சொல்லித் தருவது? மதுரையில் எனக்கொரு நண்பன் இருக்கிறான். அவன் குடும்பத்தில் 50 பேர். ஆளுக்கொரு மூலையில் வாழ்கிறார்கள். பொங்கல் வந்துவிட்டால் அத்தனை பேரும் வீட்டில் குழுமி விடுவார்கள். அப்படியொரு தருணத்தில் நான் அந்த நண்பனின் வீட்டில் இருந்தேன். அந்த அனுபவம் உண்டாக்கிய நெகிழ்ச்சியை வார்த்தைப்படுத்த முடியாது.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு நண்பரைப் பற்றி ஆவணப்படம் செய்தேன். அவருடைய மகன் அமெரிக்காவில் இருக்கிறார். அதை தன் மகனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் நண்பர். மகனின் மகனுக்கு 14 வயது. இதுவரை தாத்தா, பாட்டியின் முகத்தையே பார்த்திராத அவன் முதன்முறையாக இந்தியா வருகிறான். விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த அந்தப் பையன், தன் தாத்தா பாட்டியைப் பார்த்துவிட்டு ‘கிராண்ட் பா, கிராண்ட் மா’ என்று கத்திக்கொண்டே ஓடிவந்து கட்டிப் பிடித்திருக்கிறான்.

‘நீங்கள் அனுப்பிய ஆவணப்படத்தை அடிக்கடி பார்ப்பேன். நீங்கள் வாழ்ந்த வீட்டையும், ஆடு, மாடுகளையும் பார்க்க வேண்டும். என்னை அழைத்துச் செல்லுங்கள்’ என்று ஆர்வம் மிளிரப் பேசிய தன் பேரனைப் பார்த்து நெகிழ்ந்து விட்டார் அவர். இதுபோன்ற பல அனுபவங்கள்தான் என்னை யோசிக்க வைத்தன. இப்படியொரு குறும்படத்தை எடுக்க 8 முதல் 10 லட்ச ரூபாய் வரை செலவாகும். ஓராண்டு முழுவதும், அக்குடும்பத்தின் எல்லா நிகழ்வுகளிலும் நாங்கள் இருப்போம். பூர்வீகம், குலதெய்வம், மொழி மற்றும் தொடர்புடைய அத்தனை இடங்களையும் பதிவு செய்வோம்.

உறவுக்காரர்கள், நண்பர்களின் கருத்துகளைப் பதிவு செய்வோம். கடிதங்கள், ஆவணங்கள் அனைத்தையும் டிஜிட்டலாக்கி படத்தின் உள்ளே கொண்டு வருவோம். வெறும் கதைசொல்லல் பாணியில் மட்டுமின்றி உரையாடல்கள், விளையாட்டுகள் என அதிக மிகையுணர்வு இல்லாத நேர்த்தியுடன் பதிவுசெய்கிறோம். நிறைவாக, உறவினர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்களை அழைத்து, பாரம்பரிய விருந்தோடு ஒரு மினி தியேட்டரில் அந்தப் படத்தை ரிலீஸ் செய்கிறோம். தனியாக அவர்களின் பெயரிலேயே ஒரு இணையதளத்தை உருவாக்கி அதிலும் அந்தப் படத்தைப் பதிவு செய்கிறோம்’’ என்கிறார் சிவபெருமாள்.

குடும்ப வரலாற்றில் இருந்து தான் சமூக வரலாறு பிறக்கிறது. உலகமயத்துக்கு விலைபோன வாழ்க்கையில் பூர்வீகம் விட்டு, உறவுவிட்டு, தொலைதூரத்துக்கு ஓடி இறுதியில் எந்தப் பதிவுமின்றி உலகை விட்டே ஓடிவிடுகிறோம். அடையாளம் என்று நம் சந்ததிக்குச் சொல்லி வைக்க ஒரு ஆவணம், எல்லோருக்கும் தேவைப்படுகிறது. இது பாராட்டுக்குரிய முயற்சி!

மொத்தம் குடும்பத்தில் 50 பேர். ஆளுக்கொரு மூலையில் வாழ்கிறார்கள். பொங்கல் வந்துவிட்டால் அத்தனை பேரும் வீட்டில் குழுமி விடுவார்கள். அந்த அனுபவம் உண்டாக்கும் நெகிழ்ச்சியை வார்த்தைப்படுத்த முடியாது.

வெ.நீலகண்டன்