பார் See காலண்டர்!



விநோத ரஸ மஞ்சரி!

லோக்கலாக சொல்லப் போனால் ஜாதிச் சங்கம்தான். வட இந்தியாவில் மிக மிக மைனாரிட்டி வர்க்கமான பார்ஸி இன மக்களுக்கான அமைப்பு அது. ‘பாம்பே பார்ஸி பஞ்சாயத்’ என்று பெயர். தங்கள் பார்ஸி இனத்தைச் சேர்ந்த செக்ஸி மாடல்களைக் கொண்டே இப்படியொரு கிளுகிளு காலண்டரை வருடந்தோறும் கொண்டு வருகிறது இந்த அமைப்பு. 2011ல் தொடங்கிய இந்த வித்தியாச முயற்சி, ஐந்தாவது ஆண்டாக இப்போதும் தொடர்கிறது.

சாதிச் சங்கம்னா உறுப்பினர்கள் கிட்ட சந்தா கேக்கணும்... ஜெயிக்கிற கட்சிகிட்ட ரெண்டு சீட் கேக்கணும்... இதானே உலக வழக்கம்? அதை விட்டு ஏன் இந்த செக்ஸி காலண்டர்?
‘‘எல்லாம் இனம் வளரத்தான்’’ என்கிறார்கள் பா.பா.பஞ்சாயத் அமைப்பினர். பார்ஸி இனத்தில் மக்கள்தொகை குறைவு என்பதால், திருமணத்துக்குப் பெண் கிடைப்பதும் மாப்பிள்ளை கிடைப்பதும் குதிரைக் கொம்பாம். இதனாலேயே பலர் வேற்று இனத்தவரை கலப்புத் திருமணம் செய்துகொண்டு போய்விடுகிறார்கள்.

இதே ரேஞ்சில் போனால், பார்ஸி இனமே அழிந்துவிடும் என்பதால்தான் இந்த ஐடியாவாம். இதில் ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு மாடல் வீதம், பன்னிரண்டு பார்ஸி பசுங்கிளிகள் போஸ் கொடுத்திருக்கிறார்கள். ‘இவ்ளோ செக்ஸியான பெண்கள் நம்ம இனத்தில் இருக்கிறார்கள். நீங்கள் ஏன் வெளியில் போய்த் தேடுகிறீர்கள்’ என்ற எண்ணத்தை பார்ஸி ஆண்கள் மனதில் விதைப்பதே இந்த காலண்டரின் வேலை.

‘‘பார்ஸி இளம்பெண்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வருடமும் இந்தக் காலண்டரில் இடம் பிடிக்க வேண்டும் என்பது ஒரு குறிக்கோளாகவே மாறிவிட்டிருக்கிறது. காரணம், கடந்த நான்கு வருடங்களில் இதற்காக போஸ் கொடுத்த பெண்களுக்கு காலண்டர் மூலமாகவே சூப்பர் மாப்பிள்ளைகள் அமைந்திருக்கிறார்கள்’’ என்கிறது இந்த காலண்டர் குழு. இதே அமைப்பு, பல்வேறு எதிர்ப்புகளை மீறி பார்ஸி யுவன் யுவதிகளுக்காக டேட்டிங் சர்வீஸும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது! சங்கம்னா இதான்டா சங்கம்!

- ரெமோ