ஐந்தும் மூன்றும் ஒன்பது



மர்மத் தொடர் 3

‘‘திண்டுக்கல் மலை மேல் ‘இரவானால் ஆவி உலாவும். எனவே ஓடிப் போய் விடுங்கள்’ என்று கூறி எங்களைத் துரத்திய நபரிடம் முதலில் எனக்கு ஒரு பயம் இருந்தது. பிறகு அது நீங்கிவிட்டது. என்னுள் எழும்பிய சில கேள்விகள்தான் காரணம். முதல் கேள்வி, ‘அந்த ஆவிகள் அவனை ஒன்றும் செய்யாதா’ என்பதுதான்... அடுத்த கேள்வி, ‘எப்பொழுதோ மன்னர் காலத்தில் தூக்கிலிடப்பட்டவர்கள் இன்னமுமா ஆவியாக சுற்றிக்கொண்டிருப்பார்கள்?’

மூன்றாவதாக ஒரு கேள்வியையும் கேட்டுக்கொண்டேன். ‘இறந்தவர்கள் ஆவியாகிறார்கள் என்றால் இந்த நாட்டில் வாழ்கிறவர்களுக்கு சமமாக ஆவிகள் நடமாடியபடி இருக்க வேண்டும். ஆனால், அப்படித் தெரிவில்லையே?’ஆவியைத் தொட்டு எங்களைத் துரத்திய நபர், இப்படி என்னுள் பல கேள்விகள் எழும்பக் காரணமாகி விட்டான். அப்போது நாங்கள் குடியிருந்த வீடும் திண்டுக்கல் மலையின் அடிவாரத்தில்தான் இருந்தது. எனவே, நினைத்தால் மலை ஏறிவிட முடியும்.

மேலே போய் விட்டு கீழே வர எனக்கு பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் மிக அதிகம்.
ஒருநாள் இரவு தைரியமாக மேலேறி விட்டேன். அப்படி ஏறிய பிறகே தெரிய வந்தது... அங்கே அந்த நபர் கள்ளச்சாராயம் விற்றுக்கொண்டிருந்தான். பலர் வந்து குடித்துவிட்டு அங்கங்கே மலைப்பாறைகளின் மேலே கிடந்தனர்!

பாவிகளைத்தான் அவன் ஆவி என்று கூறிவிட்டான். மனிதன் தன் சுயநலத்துக்காக எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்வான் என்பதற்கு இதை நான் உதாரணமாக எடுத்துக் கொண்டேன். திண்டுக்கல் மலை என் மனதில் அழியாத வரலாற்றுப் பதிவாக இப்படிப் பல சம்பவங்களோடு உள்ளது. என் வரலாற்று விருப்பம் அதிகரிக்க அதுவும் ஒரு காரணம்!”
- ஆய்வாளர் கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...அந்த நிழலுருவத்தைப் பார்த்த ப்ரியதர்ஷினியின் முகத்தில் அதிர்வு பரவ ஆரம்பித்தது.

‘‘தாத்தா! கொஞ்சம் இப்படி வா...’’ என்றாள். அவரும் அருகில் வர, சைகையால் பீரோவின் பக்க வாட்டுச் சுவரைக் காண்பித்தாள். இந்த இடைவெளியில் அந்த கேமராவும் கையுமான நிழல் மறைந்து விட்டிருந்தது!‘‘இப்ப நீ எதைக் காட்டினே... எதுக்கு இந்த மௌன சிக்னல்?’’ - என்று வாய் விட்டே கேட்டார். ஆனால் பதில் கூறாமல் சற்று ஒதுங்கி, பீரோவின் பின்புறம் பார்த்தாள் ப்ரியதர்ஷினி என்கிற ப்ரியா.பீரோவின் பின்புறத்தில் ஒருவன் ஒளிந்து கொண்டிருந்தான்.

துணிவாக பீரோ அருகே சென்று அவனை நேருக்கு நேராகப் பார்க்கவும், அவனும் வெறித்தான். ஆனால் இருள் சூழ்ந்த அந்த நேரத்தில் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.  ‘‘வெளியே வாடா...’’ என்றவாறு அவன் வர இடம் கொடுத்து சற்றுப் பின்னால் வந்தார். அவனும் தயங்கித் தயங்கி வெளியில் வந்தான்.கணபதி சுப்ரமணியனுக்கு கபால உச்சியில் இருந்து உள்பாதம் வரைக்கும் ஒரு கூர்மையான கத்தி இறங்கினது போல் இருந்தது.

‘‘டேய்! யாருடா நீ... திருட்டு ராஸ்கல். இந்த ரூமுக்குள்ளே எப்படிடா வந்தே?’’ என்று பதற ஆரம்பித்தார்.அவன் முகம் இப்போது ஓரளவு தெரிந்தது. ஒரு காதில் சிறிய வளையம் போட்டு, கையில் ஃபாஸ்ட் ட்ராக் வாட்ச் கட்டி, ஸ்டோன் வாஷ் சட்டை போட்டு, ப்ளூ ஜீன்ஸ் அணிந்திருந்தான். இன்றைய ட்ரெண்டான லோஹிப்பில் அங்குலம் இறங்கினாலும் உள்ளுறுப்பைப் பார்க்க முடிந்த அளவிலான அவனது தோற்றத்தில், அவனது குறுந்தாடியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ப்ரியா இம்மட்டில் ஆளைப் பார்த்த நொடி ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் வேகத்தில் அவனைத் தெரிய முயன்றாள்.

‘‘யாருடா நீ... லயோலாவா, பிரசிடென்சியா.... ஃபர்ஸ்ட் இயர்தானே?’’- பளிச் பளிச் என்று அவனை உமிழ்ந்தாள். ‘‘நான்... நான்...’’ - அவன் தடுமாறினான்.

‘‘ப்ரியா, முதல்ல போலீசுக்கு போன் பண்ணு... நான் கூப்பிட்டேன்னு இன்ஸ்பெக்டர் ராகவேந்திராவை உடனே வரச்சொல். யு ஸ்கவுண்ட்ரல்... என்ன ஒரு தைரியம்? இது என்னோட உயிர் பரவிக் கிடக்கற இடம்... இங்க நான் இந்த நாட்டு பிரசிடென்ட்டைக் கூட உள்ள விட யோசிப்பேன். இதுக்குள்ள நீ எப்படிடா வந்தே?’’- அவரிடம் பதற்றமும் சேர்ந்துகொண்டது. 

‘‘தாத்ஸ்! டென்ஷன் ஆகாதே... முதல்ல இங்க இருந்து வெளியே ஹாலுக்குப் போவோம். அங்க நின்னு மத்த விஷயங்களைப் பேசுவோம்!’’
அடுத்த பத்தாவது நொடி அவர்கள் ஹாலில்! இந்த சத்தம், ப்ரியாவின் தாயான பத்மாசினி, சமையல்காரி என்று சகலரையும் ஹாலில் கூட்டிவிட்டது. அதில் வீட்டு வேலைக்காரி  முத்தழகுவும் அடக்கம். அவள் முகத்தில் கணிசமான அளவில் பீதி!

இந்த கேப்பில் ப்ரியா அவன் கேமராவைப் பறித்துக்கொண்டு அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்து ரீவைண்ட் செய்தாள். நல்லவேளை, அவன் எதையும் ஷூட் செய்திருக்கவில்லை. அவனே அதை சொல்லவும் செய்தான்.‘‘அக்கா! நான் எதையும் எடுக்கல...’’
‘‘அக்காவா... நானா... உனக்கா?’’ - ப்ரியாவுக்கு எது பலவீனம் என்பது அவனுக்குத் தெரிய ஆரம்பித்தது.
‘‘இல்ல, நீங்க ஃபைனல் இயர். நான் நீங்க கெஸ் பண்ண மாதிரி ஃபர்ஸ்ட் இயர் - அதுலயும் கச்சிதமா லயோலா... உங்க ஐ க்யூ ‘பின் ஷார்ப்’ மேடம்...’’  என்றான்.
‘‘மேடமா... டேய் இதுக்கு அக்கா தேவலடா!’’

‘‘சாரி... சாரி...’’
‘‘என்ன சாரி பூரி... யாருடா நீ? பேரைச் சொல்...’’
‘‘ப்ரியா! முதல்ல போலீசுக்கு போன் பண்ணு... அப்படியே வாட்ச்மேன் தங்கவேலுவைக் கூப்பிடு. அவன் எப்படி இவனை உள்ள விட்டான். கால் ஹிம்...’’
- கணபதி சுப்ரமணியன் அலறித் திமிறினார்.

‘‘சார்... சார்... வேண்டாம் சார்! என் பேர் தேசிகன். பத்மாசினி மேடத்தைப் பேட்டி எடுக்கற பத்திரிகையாளனாதான் பொய் சொல்லி உள்ள வந்தேன். உங்க கேலரியை ஷூட் பண்ணி நெட்ல அப்லோட் பண்றது என்னோட டார்கெட். என் சீனியர்ஸ் கொடுத்த ராகிங் அசைன்மென்ட் இது. நான் ரகசியமா படம் எடுப்பேன். அது என் ஹாபி. என்னை ராக் பண்ண என் சீனியர்ஸ்தான் ‘த்ரில்லா வேல்யுபிலா எதையாவது ஷூட் பண்ணிக்கிட்டு வா’ன்னாங்க. அதுல ஒருத்தன்தான் ‘கணபதி சுப்ரமணியன்ங்கற க.சு.வோட கேலரியை உன்னால் எடுக்க முடியுமா... அந்த கேலரிலதான் மூன் ஸ்டோன்ல இருந்து சோபியா லாரனோட மேலங்கி வரை எல்லாம் இருக்கும். நாம இதை நெட்ல ஏத்தி, க.சுவை கதற வைப்போம்’ அப்படின்னான்...’’

- அந்த தேசிகன் பேச்சில் சற்று இடைவெளி விட்டு உதட்டை ஈரப்படுத்திக்கொண்டான். கணபதி சுப்ரமணியனுக்குள் காந்தலெடுத்தது. ‘‘யாருடா அவன்... எந்தக் கபோதி இப்படிச் சொன்னவன்?’’ என்று தன் பூஞ்சை மார்பை ஆவின் பால் போல சற்று பொங்கச் செய்தார்.‘‘அது வந்து... அவன் பேர் நிக்கி. காலேஜுக்கு நீங்க ஒரு தடவை சீஃப் கெஸ்ட்டா வந்தப்போ, அவன் ஆடின டான்ஸை காக்கா வலிப்பு மாதிரி இருந்ததா கமென்ட் பண்ணீங்களாம். அதுவும் பப்ளிக்கா ஸ்டேஜ்ல... அதுல இருந்து அவனை எல்லோரும் காக்கான்னே கூப்பிடவும் அவன் உங்கமேல காண்டாயிட்டான் சார்!’’

- தேசிகன் எங்கே வருகிறான் என்பது ப்ரியாவுக்குப் புரிந்து விட்டது. உடனேயே திரும்பி உண்மையா என்பது போல தாத்தாவைப் பார்த்தாள்.‘‘ஓ... அந்தப் பன்னாடையா? அவன் ஆட்டம் அப்படித்தானே அன்னிக்கு இருந்தது. அவனுக்கென்ன மைக்கேல் ஜாக்சன்ங்கற நினைப்பாமா மனசுக்குள்ள..?’’ - திரும்ப எகிறினார்.
‘‘கூல் தாத்தா கூல்...’’ என்ற ப்ரியா அவன் பக்கம் திரும்பி, ‘‘டேய்! நீ எப்படி பூட்டியிருக்க ரூமுக்குள்ள போனே? அதைச் சொல்...’’‘‘நான் இப்பதான் வந்தேன். நீங்க டீயோட மாடிப்படி ஏறுறதைப் பார்த்தேன். நான் வந்து ஹால்ல உக்காந்துக்கிட்டிருந்ததை நீங்க பாக்கல. அப்படியே உங்க பின்னாலயே வந்து உள்ள பீரோ பின்னால ஒளிஞ்சிட்டேன்.’’

‘‘சரி.. ரூம் திறந்திருக்கலன்னா என்ன பண்ணியிருப்பே?’’
‘‘அதுக்குத் தகுந்த மாதிரி பிளான் பண்ணியிருப்பேன். சார்கிட்டயே பத்திரிகைக்காரன்னு அப்பாயின்ட்மென்ட் வாங்கி ஏதாவது பண்ணியிருப்பேன்...’’
‘‘அப்ப எப்படியாவது அந்த கேலரியை ஷூட் பண்ணியிருப்பே... அப்படித்தானே?’’
அவன் முகக்கோணல்களோடு அதை ஆமோதித்தான்.

‘‘சரி! இப்ப மாட்டிக்கிட்டியே... என்ன பண்ணப் போறே?’’
‘‘எங்கக்கா... சாரி! எங்க, நான்தான் எதுவும் ஷூட் பண்ணலையே?’’
‘‘ஓ... அதனால உன்ன விட்ருவோம்ங்கற நினைப்பா உனக்கு?’’

‘‘ப்ளீஸ்ங்க. ஒரு த்ரில்லுக்காக தப்பு பண்ண நினைச்சேன். இனி நான் இப்படி நடந்துக்க மாட்டேன்!’’
‘‘ப்ரியா, என்ன இது? இவன்கிட்ட போய் வளவளன்னு பேசிக்கிட்டு! கூப்பிடு இன்ஸ்பெக்டர் ராகவேந்திராவை. இவனை, அந்த காக்கா வலிப்புக்காரனைன்னு ஒருத்தரையும் விடக் கூடாது. என்ன நெஞ்சழுத்தம்டா உங்களுக்கு..?’’

- கணபதி சுப்ரமணியன் கையை நெரித்துக்கொண்டார். அதுவரை எதுவும் பேசாத பத்மாசினி இடையிட ஆரம்பித்தாள்.
‘‘ஏம்ப்பா... பேட்டிக்காக எனக்கு போன் பண்ணது நீதானே?’’
‘‘ஆ... ஆமாங்க மேடம்!’’

‘‘எந்த பத்திரிகைக்காக?’’ - அவள் கேள்வி ப்ரியாவை எரிச்சல்படுத்த, அந்த இக்கட்டிலும் அதற்காக அந்த தேசிகன் மிகச்சிறிய அளவில் ஒரு சிரிப்பு சிரித்தான்.‘‘ஐய்யோ லூசு மம்மி... இவன் ஒரு காலேஜ் ஸ்டூடன்ட். ஹீரோயிசமா பேசறதுல இருந்தே இவங்க பிளான் தெரியலியா... எந்தப் பத்திரிகைன்னு அக்கறையா கேக்கறே? டேய் போடா... போ!’’
- பேச்சோடு ப்ரியா வாசல் பக்கம் கையைக் காண்பித்தாள்.

‘‘தேங்க்ஸ்க்கா..!’’ - அவனிடம் குபீரென்று ஒரு உற்சாகம். ‘‘ப்ரி.. என்ன இது? போங்கறே. இவனை எல்லாம் சும்மா விடக்கூடாது’’ - கணபதி சுப்ரமணியன் பகீர் என்றாகி அலற, அவர் கையைப் பற்றி ‘‘தாத்ஸ்...’’ என்று ஒருவித ராகம் கலந்த குரலில் அவரை ப்ரியா ஏறிட, அவரும் அடங்கத் தொடங்கினார்.

அவனோ இந்த நொடிகளே நான் தப்பிவிடப் போதுமானது என்று மெயின் கேட்டைக் கடந்திருந்தான். ‘‘என்ன குட்டி? இப்படி பண்ணிட்டே?’’ - கணபதி சுப்ரமணியன் சமயங்களில் ப்ரியாவை ‘குட்டி’ என்று செல்லமாய் அழைப்பார்.‘‘விடு தாத்தா... அதான் எதையும் ஷூட் பண்ணலையே! அப்புறம் தாத்தா... இனிமே நீ காலேஜுக்கெல்லாம் கெஸ்ட்டா போகாதே. போனா ஸ்டேஜ் ஈவன்ட்ஸைப் பாக்காதே. பாத்தா விமர்சிக்காதே.

பண்ணித்தான் தீரணும்னா ‘எல்லாமே மைண்ட் ப்ளோயிங்’னு சும்மாவாவது சொல்லு. இப்ப இப்படி சொல்லத் தெரிஞ்சவங்களுக்குத்தான் காலம். காக்கா வலிப்பு மாதிரி இருக்குன்னு சொல்லி உன்னோட பாகவதர் காலத்துக்குப் போயிட்டியே தாத்தா! பாவம் தாத்தா அந்த காக்கா. அவனை எல்லாரும் எப்படி ஓட்டியிருப்பாங்க தெரியுமா?’’ - ப்ரியாவின் வருத்தம் கணபதி சுப்ரமணியனை ஒரு மிரட்டு மிரட்டி விட்டது.

‘‘இப்படியா குட்டி ஒரு ஸ்டூடன்ட்டா பேசுவே. நீ என் பேத்திங்கறத மறந்துட்டியா?’’‘‘மறக்கல... அதான் ஒரு பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்தியிருக்கேன். இந்த தேசிகனை நாம ஒண்ணும் பண்ண முடியாது தாத்தா. பிடிச்சு உள்ள போட்டாலும் வெளிய வந்துடு வான். ஒருவேளை பனிஷ் பண்ணாலும் ரொம்ப தப்பானவனா மாறிடுவான். இவன் மாதிரி திறமைசாலிகள் போர்னோகிராபி பக்கம் டர்ன் ஆனா என்னாகும்? யோசிச்சுப் பார்!’’- ப்ரியா ஒரு புதிய கோணத்தைக் காட்டிப் பேசினாள்.

‘‘அப்படி என்ன அந்த கேலரில இருக்கு? கேலரின்னா எல்லாரும் பாக்கறதுக்குத்தானே? அதை அலிபாபா குகை மாதிரி பூட்டிப் பூட்டி வச்சா இப்படித்தான் திருடன் வருவான்!’’ - என்றபடியே பத்மாசினி விலகிப் போனாள். ‘‘மம்மி உனக்கு குரல் மட்டுமில்லேன்னா நீ சரியான டம்மிதான். வந்தவன் திருடன் இல்ல... ஸ்டூடன்ட்!’’ என்ற ப்ரியாவின் இம்மீடியட் பதிலை ரசித்த கணபதி சுப்ரமணியன், ‘‘சபாஷ்... சரியா சொன்னே. யு ஆர் ரைட். நான் என் ஜாப் விஷயத்துல ரொம்ப பொசஸிவாவே இருக்கேன். இல்ல?’’

- க.சு.வின் கேள்வியைப் புறந்தள்ளியவள்,‘‘தாத்ஸ்! ‘போய் அந்தக் காலப் பலகணியை கவனியுங்க. ரெண்டு நாள்ல... தட் மீன்ஸ், டே ஆஃப்டர் டுமாரோ ‘ரத்தினம் விண்ணில் மறையும்’னு சொன்னது நடக்குதான்னு பார்ப்போம்!’’‘‘அப்ப அந்த வள்ளுவன் கூட என்னை இப்ப பேச வேண்டாம்ங்கறியா?’’
‘‘ஒரு இரண்டு நாள் பொறுக்க முடியாதா தாத்தா?’’

- அழகான பாவனைகளோடு ப்ரியா கேட்ட விதத்தில் க.சு.வும் அடங்கித்தான் போனார்.இரண்டாம் நாள் காலை...ப்ரியாவின் அறையில் விராட் கோலி, ஷாருக் கான், பாகிஸ்தானின் வீணா மாலிக், மல்லிகா ஷெராவத், கமல்ஹாசன் என்று கலவையாக பத்திரிகைகளில் வந்த படங்களின் கட்டிங்ஸ், அப்புறம் ஏராளமான பிள்ளையார் உருவங்கள், கிளிஞ்சல்கள்.ஒரு ஷெல்ஃப் முழுக்க கழித்துக் கட்டிய செல்போன்கள், அவற்றின் சார்ஜர்கள், அங்கங்கே தோரணம் போல தொங்கியபடி சி.டிக்கள், சிரசாசனம் செய்தபடி டெட்டி பேர். குண்டு ஜாடியில் வில்லன் முகம் கொண்ட வினோத மீன் ஒன்று. இவற்றின் நடுவே தரையோடு போடப்பட்ட ஒரு அடி உயர மெத்தை மேல் நான்கைந்து திண்டுகளும், ரஜாய் போர்வையுமிருக்க, அதன் மேல் பெப்பர் மின்ட்டுகளும், பேப்பர் பிளேட்டுகளும் கூட இருந்தன.

இன்றைய நவயுகிகளின் அறைகள் எல்லாமே இப்படியான கந்தர்வமாகவே உள்ளன. இதில் படுக்கை மேல் கிடந்த ப்ரியாவின் ஆண்ட்ராய்டில் ஆனந்தவர்ஷன் உருவம் தோன்றி ‘ஹாய் தர்ஷினி...’ எனவும் ப்ரியாவும் கவனமானாள்.‘‘சொல்லுடா...’’ - என்று தனது வளையம் தொங்கிய காதைக் கொடுத்தாள்.‘‘என்னப்பா! சீக்கிரமாவே எழுந்துட்ட இன்னிக்கு?’’‘‘நீ நேத்து கொடுத்த சி.டி. சரியான மொக்கை. அதான் லேப்டாப்பை மூடிட்டு படுத்துட்டேன். சீக்கிரம் படுத்ததால சீக்கிரம் எழுந்துட்டேன். தட்ஸ் ஆல்!’’‘‘ஹாலிவுட்டோட ஹாட் கேக் சி.டி. அது. உனக்கு மொக்கையா? உன்னையெல்லாம் ‘வீராச்சாமி’கிட்ட விடணும்!’’

‘‘காலங்காத்தால காலட்சேபம் பண்ணாத வர்ஷன்!’’
‘‘சரி... சரி... டி.வி.ல நியூஸைப் பாரு! அதுக்குதான் கூப்பிட்டேன்...’’
‘‘என்ன விஷயம்... திரும்பவும் சுனாமியா?’’

‘‘இப்பல்லாம் பூமியில பெருசா பிரச்னை இல்ல தர்ஷினி. ஸ்கைல தான் எல்லாம்..!’’
‘‘என்னன்னுதான் சொல்லேன்...’’

‘‘நம்ப பாரத ரத்னாவான சயின்டிஸ்ட் பகீரதன் போன ஃப்ளைட் காணாமப் போயிடிச்சு. அவர்தான் என்னோட மென்ட்டர்னு நான் உனக்கு சொல்லத் தேவையில்லை. இன்னிக்கு விண்ணில் மறைஞ்ச ஒரு ரத்தினமா அவர் ஆயிட்டார்..!’’
- வர்ஷன் சொல்லி முடித்தான்.

ப்ரியா வரையில் காலப்
பலகணிதான் பளிச்சென்று நிமிர்ந்து கூடாரம் போட்டது!
‘விண்ணிலொரு ரத்தினம் மறையும்?’

கேலரின்னா
எல்லாரும்
பாக்கறதுக்குத்தானே? அதை அலிபாபா
குகை மாதிரி பூட்டிப் பூட்டி வச்சா இப்படித்தான் திருடன்
வருவான்!

‘‘இந்த பட்டி
மன்றத்துக்கு
தலைவர்தான்
பொருத்தமான
நடுவர்னு எதை வச்சு சொல்றே?’’
‘‘சட்டத்தை ஏமாற்றுவது சுலபமா... மக்களை ஏமாற்றுவது சுலபமாங்கற தலைப்பை
வச்சுதான்!’’

‘‘லேசா தலை
வலிக்குதுன்னுதானே வந்தேன்... எனக்கு ஏன் டாக்டர் வயித்துல ஆபரேஷன் செய்யணும்னு
சொல்றீங்க?’’‘‘உங்களை டெஸ்ட் பண்ணிட்டு இருந்த கேப்ல, இன்னைக்கு வயித்துல ஆபரேஷன் செய்ய வேண்டிய பேஷன்ட் தப்பிச்சு போயிட்டாரே!’’

‘‘என் மனைவி தினமும் சாம்பார் வச்சே என்னைக் கொல்றா டாக்டர்!’’
‘‘அதுக்கு நான் என்னய்யா செய்ய முடியும்?’’
‘‘அவ சாம்பார் வைக்கறதை மறக்கற மாதிரி எதாவது மருந்து இருந்தாக் கொடுங்க!’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

தொடரும்...