ஆம்பள



அம்மாவின் கண்ணீருக்காக அப்பாவைக் கண்டுபிடித்து, கூடவே அவரோடு அத்தைமார்களையும் இணைத்து வைத்து, இலவச இணைப்பாக அத்தை மகளையும் காதலித்து மணம் முடிப்பதுதான் ‘ஆம்பள’!விஷாலுக்கென்றே டெய்லர் மேடாக அவதரித்த இன்னொரு காமெடி, கவர்ச்சி, சண்டைக் காட்சிகள் நிறைந்த படம். ஏற்கனவே புளித்த மாவில் கிளாமரையும், குட்டிக்குட்டி ஐடியாக்களையும் கலந்து கட்டி சரிவிகிதமாய் அடித்ததால் மட்டுமே தப்பிக்கிறது.

எப்போதும் லாஜிக் தேட வைக்காத சுந்தர்.சியின் சேஃப் திரைக்கதை, விஷாலுக்குக் கிடைத்திருக்கிறது. மனிதர் அதை அலட்சியமாகத் தாண்டிப்போகிறார். பெரும்பாலும் மூச்சு விடாமல் பேசி... ஆனால், சிரிக்க வைக்கிற கலாய், காமெடி டயலாக் டெலிவரிதான் நடிப்பு. அம்மா கதறி அழுததும், மதுரைக்குப் போய் அப்பாவைக் கண்டுபிடிக்கிறார். அங்கே அத்தைகளும் வில்லனும் அப்பாவுக்கு இழைக்கும் அநீதி, அதனால் அப்பா அடையும் சோகம், பட்ட கஷ்டம் இதையெல்லாம் பார்த்து ஆவேசமடைகிறார்.

இது போதாதா... விஷால் பொங்கியெழுகிறார்... புது சரித்திரம் படைக்கிறார்!விஷால் ஹீரோயிசத்தில் தேர்ந்து விட்டார். நடிகர் சங்க அரசியலில் ஆரம்பித்து, பன்ச்சில் தரை டிக்கெட் வரை இறங்கி அடித்திருக்கிறார். சந்தானத்தோடு சேர்ந்துகொண்டு கலகலக்க வைக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் விளாசிக்கொண்டு அடிக்கும் காமெடி சவாரிதான் ‘ஆம்பள’யின் பவர்ஃபுல் பவர் ப்ளே. ஆனால், இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளிப்பதில் சந்தானத்தின் ஆர்வம் எப்பவும் கைகொடுக்கும். இதிலும் கொடுத்திருக்கிறது!

அத்தைமார்களான ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் மற்றும் பிரபு, விஜயகுமார் ஆகியோர் முன்னரே இதே தோற்றங்களில் தங்கள் முத்திரையை பதித்து விட்டதாலோ என்னவோ... ஜஸ்ட் கடந்து செல்கிறார்கள்.தெலுங்குப் பதிப்புக்காக எடுத்த சண்டைக் காட்சிகளை தமிழில் கோர்த்து விட்டார்களோ! கார் பதறிக் கொண்டு பறப்பதையும் பத்து பேர் எகிறிப் போய் விழுவதையும் பார்த்து தலை கிறுகிறுக்கிறது. விஷாலுக்கு சண்டை போடத் தெரியாது என்று யாராவது சொன்னார்களா என்ன? அதை நிரூபிக்க இப்படியா ஓவர் டோஸ் கொடுப்பது?

பட்டர் மில்க் தேவதை ஹன்சிகாவிற்கு பாடல் காட்சிகள் தவிர, சில இடங்களில் நடிக்கவும் வாய்ப்பு இருப்பது பரவச ஆச்சரியம். கவர்ச்சிக்கு ஏகமாய் துணிந்ததில் இளசுகளுக்கு ஏகப்பட்ட இரை கிடைக்கிறது. ஆன்ட்டிகள் வகையறாவில் பல தலைமுறை ஹீரோயின்கள் வரிசையில் கொஞ்சம் கொஞ்சம் ஸ்கோர் செய்வது ரம்யா கிருஷ்ணன் மட்டுமே!

சதீஷ் மெயின் காமெடியன் ஆக இன்னும் டயம் பிடிக்கும். இவ்வளவு அத்தைகளை வைத்துக்கொண்டு பாசக் கயிறு திரிப்பார் என்றால், சந்தானத்தை வைத்து கொஞ்சம் ‘அய்யே’ சொல்ல வைக்கிறார்கள். சுந்தர்.சிக்கு பழக்கமான கதையோடு பயணமாவதால், நாமே அதிகமாக எதிர்பார்க்காமல் இருப்பதால் சின்ன காமெடிக்கும் பெரிதாக சிரிக்க முடிகிறது.

பாடல்கள் புத்தம் புதுசு. ஹிப் ஹாப் தமிழாவின் இசை நிச்சயமாக வேறு தினுசு. ‘பழகிக்கலாம்’ நிஜமாகவே ஹிட். மொத்த கேன்வாஸில் பெரும் கூட்டத்தைக் காட்டுவதிலும், பாடல் காட்சிகளில் பரவசம் காட்டுவதிலும் கோபி அமர்நாத் கூடுதல் ரம்மியம். ஆனாலும் ஹன்சிகாவின் வளைவு நெளிவுகளில் கூடுதலாகப் பயணம் போவது அநியாயம்!
ரொம்பவும் கவர்ச்சி பக்கம் சாய்ந்துவிட்ட ‘ஆம்பள’தான். ஆனாலும் ஜாலி ரைடு!

- குங்குமம் விமர்சனக் குழு