அவன் அவள் unlimited



மனுஷத்தனமா நடந்துக்காதே!

முட்டாள் போல் நடந்துகொள்ளத் தெரிந்த
அறிவாளி மிருகம்தான் மனிதன்!
- ஆல்பர்ட் ஸ்க்வெயிட்சர்

‘‘சீ... மிருகத்தனமா நடந்துக்காதே!’’ - சினிமாக்களில் அடிக்கடி கேட்ட டயலாக் இது. பெரும்பாலும் தன்னைக் கற்பழிக்க(!) வரும் வில்லனைத்தான் ஹீரோயின் இப்படிக் கழுவி ஊற்றுவார். என்னவோ மிருகங்கள் எல்லாம் சில்க் ஜிப்பா மாட்டி புல்லட் ஓட்டும் மைனர் மாதிரியும்... டாடா சுமோவில் மோட்டா அடியாட்களை அவை வளர்ப்பது மாதிரியும்... கண்ணில் படும் பெண்களை எல்லாம் கட்டித் தூக்கி கற்பழிப்பது மாதிரியும்... இப்படியொரு அபாண்டம் அவற்றின் மீது சுமத்தப்படுகிறது. நியாயப்படி இந்த டயலாக்கை எதிர்த்து விலங்குலகம் கோர்ட்டுக்குப் போக வேண்டும்!

விலங்குகள் இப்படி வல்லுறவு கொள்வதுண்டா?

‘‘உண்டு’’ என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த வனவிலங்கு ஆர்வலரும் எழுத்தாளருமான ஜானகி லெனின். நமது காடுகளின் பெருமையை நேஷனல் ஜியோகிராபிக் வரை கொண்டு சென்றிருக்கும் ஜானகி, ‘என் கணவரும் பிற விலங்குகளும்’ எனும் சூப்பர் ஹிட் ஆங்கிலக் கட்டுரைத் தொகுப்புக்கு சொந்தக்காரர்.‘‘அடிப்படையில் மனிதனும் ஒரு விலங்குதான். ஆக, மிருகத்தனம் - மனிதத்தனம் என பிரித்துப் பார்ப்பதே தவறு. பாலியல் குற்றங்களில் பலம் முக்கிய பங்கு வகிக்கிறது.

 எனவேதான், பெண்ணைவிட ஆண் பெரிதாக வளரக் கூடிய பாலூட்டி இனங்கள் அனைத்திலுமே வன்புணர்ச்சி சாத்தியம்... சகஜம். உதாரணத்துக்கு, சிம்பன்ஸிகளில் பெண்ணை விட ஆண் இரு மடங்கு பெரியது. அவற்றிலும் பெரிதினும் பெரிது... வலிமையிலும் வலிமை தேடித்தான் பெண் விலங்கு காதல் கொள்ளும்.

 இதில் நிராகரிக்கப்படும் ஆண் சிம்பன்ஸிகள் வல்லுறவைக் கையில் எடுக்கும். இது போலவே, ஸ்கார்ப்பியன் ஈக்கள், கார்டர் பாம்புகள், வாத்துகள், பாட்டில் மூக்கு டால்பின்கள் மேலும் சில வகை குரங்கு இனங்களில் பலாத்காரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதனாலெல்லாம் ‘ரேப்’ என்பதே விலங்கு குணம் என்று சொல்லிவிட முடியாது!’’ என்கிற ஜானகி, மனிதனோடு ஒப்பிட்டால், விலங்குகள் எவ்வளவோ பரவாயில்லை என்ற கருத்தைத்தான் முன்வைக்கிறார்.

‘‘விலங்கியலாளர்களின் ஆய்வுப்படி, மிருகங்களில் வல்லுறவு நடப்பது வெறும் 0.2 சதவீதம்தான். ஸ்கார்ப்பியன் ஈக்களை எடுத்துக்கொள்ளுங்களேன். இவற்றில் ஆண் ஈக்களுக்கு மட்டும் ஒருவித ஸ்பெஷல் கொடுக்கு உண்டு. இதன் மூலம் பெண் ஈக்களை அசையாமல் பிடித்துக்கொள்ள முடியும். ‘நினைத்ததை சாதிக்கவும்’ முடியும். ஆனாலும் இந்தக் கொடுக்கைப் பயன்படுத்துகிற ஈக்கள் மிகக் குறைவு. பெரும்பாலான ஈக்கள் பெண்ணுக்குப் பரிசு கொடுத்து, அதன் காதலை யாசித்து ‘ஈ’ என்றுதான் இளித்துக்கொண்டிருக்கின்றன. உயிரினங்களில் அதிகம் வல்லுறவு கொள்வது மனிதனும் அவனுக்கு மிக நெருங்கிய உறவினரான உராங் உடான் எனும் ஆசியக் குரங்கும்தான்’’ என்கிறார் ஜானகி உறுதியாக!

இதன்படி பார்த் தால், கதறக் கதற கற்பழித்ததாக வரும் காலை பேப்பர் கசமுசாக்களை எல்லாம் மனுஷத்தனம் என்பதே சரி. இது ஓகே... ‘நீ மனுஷனா? மிருகமா?’ என்ற கேள்வி வில்லனிடம் மட்டுமா வரும்..? மனைவியை அடிக்கும்போது, ஹீரோவிடமும் வரும். நம் ஊரில் பெரும்பாலும் வில்லன்கள் பெண்களை அடிக்க மாட்டார்கள்.

அடித்தாலும் பாலியல் வன்புணர்ச்சிக்காகத்தான் அடிப்பார்கள். ஆனால், ஹீரோ... தன் அம்மாவுக்காக, தங்கைக்காக, அல்லது பொதுவான நியாயத்துக்காக தன் மனைவியையோ, காதலியையோ பளார் என ஒரு அறை வைப்பார். அப்போதுதான் இந்த டயலாக் உதிர்க்கப்படும்- ‘நீ மனுஷனா? மிருகமா?’ ஏன்? மிருகங்கள் தங்கள் காதலிகளை அடிக்க தனி கோர்ஸ் முடித்து வருகின்றனவா என்ன?

பாலியல் விஷயத்தில் நம்மோடு சரிக்கு சமமாக போட்டி போடும் உராங் உடான் குரங்குகளுக்கும் நமக்கும் ஒரே ஒரு அடிப்படை வித்தியாசம் இருப்பதாகச் சொல்கிறார் ஜானகி. அது என்ன தெரியுமா? வல்லுறவின்போது கூட, அவை பெண்களைக் காயப்படுத்துவதில்லை.ஆக, இதில் கூட மைனஸ் மார்க் மனிதனுக்குத்தான். இதுவும் மனுஷத்தனம்தானே தவிர, மிருகத்தனமில்லை. இந்த இடத்தில் ஒரே ஒரு சந்தேகம்... பெண்களை அடிப்பது ஒரு கேடுகெட்ட செயல் என்கிறோம்... அது மிருகத்தனம் என்று சொல்லி மிருகத்தை வேறு அசிங்கப்படுத்துகிறோம். ஆனால், இத்தனை மோசமானதாகக் கருதும் ஒரு செயலை ஏன் எப்போதும் ஹீரோவே செய்கிறார்?

இதற்கான பதில் கொஞ்சம் சிக்கலானது. ‘நாம் வெளியில் பேசும் நியாயத்துக்கும் உள்மனதுக்கும் நிறைய முரண்பாடுகள் உண்டு’ என்பதற்கு இதுவே சாட்சி. உண்மையில் பெண்ணை அடிக்கும் செயலை நாம் பாசிட்டிவாகத்தான் பார்க்கிறோம். ஆனால், அந்த அடியில் பாலியல் நோக்கங்கள் இருக்கக் கூடாது... மது போதையால் விளைந்த அநியாய அடியாகவும் அது இருக்கக் கூடாது... இவைதான் கண்டிஷன்.

விலங்குகள் தம் குலப் பெண்களை அடிப்பதில்லைதான். அடித்தால்தான் அது அடுத்தவனோடு ஓடி விடுமே... அப்புறம் எப்படி இனம் வளரும்? நேச்சுரல் செலக்ஷன் எனும் இயற்கை இனப்பெருக்கத்தின்படி, பெண்ணை தலையில் வைத்துத் தாங்கியாக வேண்டியது ஆணின் கடமை. சதா சர்வ காலமும் பெண்ணிடம் பத்து மார்க் வாங்கத் துடிப்பதைத் தவிர, ஆணுக்கு வேறு கதியில்லை.
ஆனால், மனிதன் இந்த இயற்கை விதியை விட்டு திமிறி வெளிக் குதித்தான். 24 மணி நேரமும் ‘அண்ணன் செக்ஸ் மூடுல இருக்கேன்’ எனச் சொல்லிக்கொள்ள அவன் தயங்கினான்.

ஆடையைக் கண்டுபிடித்தான். காதல் உணர்வுகளைக் கட்டுப்படுத்தினான். பெண்ணை காதலுக்குரியவளாக மட்டுமே பார்த்து கரிசனம் காட்டுவதை விட்டு, அவளை சரிக்கு சமமாக பாவித்தான். தன்னை விட பலம் குறைந்த போட்டியாளனை, எதிரியை அடிப்பது போல அவளையும் அடித்தான். ஆக, இன்றும் ஒரு ஆண் ஒரு பெண்ணை போதையில் அடித்தால் தவறு... பாலியல் பலவந்தத்துக்காக அடித்தால் தப்பு... இந்த இரண்டு காரணமும் இல்லாமல் பெண்ணை அடிக்கிறான் என்றால், அவன் சராசரி காதல் உணர்வை வென்ற ஹீரோ! தெரிந்தோ தெரியாமலோ இப்படித்தான் நம் உள்ளுணர்வு இதைப் பார்க்கிறது! லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த சீன் இங்கே ஒப்பு நோக்கத்தக்கது.

மாமியார் - மருமகள் சண்டையில் மகன் மட்டும் மனைவி பக்கம் சேர்ந்துகொண்டு அம்மாவைக் கொடுமைப்படுத்தினால் நமக்கெல்லாம் பற்றிக்கொண்டு வருகிறது. இயற்கையான காதல் இச்சையை அவன் கடக்க வேண்டும்... மனைவிக்கு ரெண்டு அறை விட்டு அம்மாவிடம் அடிபணியச் செய்ய வேண்டும் என சுற்றியிருக்கும் பெண்களே எதிர்பார்க்கிறார்கள்.

‘தலையணை மந்திரம் போட்டுட்டா’, ‘பொண்டாட்டி காலையே சுத்திச் சுத்தி வர்றான்’... இப்படி இயற்கையான காதல் இச்சையைப் பழிக்கத்தான் நம்மிடம் எத்தனை டயலாக்குகள்! மனிதன் பிரத்யேகமாக உருவாக்கி வைத்திருக்கும் தாய்ப்பாசம் என்ற செயற்கை சென்டிமென்டைத்தான் நம்மை அறியாமலேயே நாம் உயர்த்திப் பிடிக்கிறோம்... என்னாது? தாய்ப்பாசம் செயற்கையானதா? எவன்டா அப்படிச் சொன்னது? எட்றா அந்த அருவாள...

உயிரினங்களில் அதிகம் வல்லுறவு கொள்வது மனிதனும் அவனுக்கு மிக நெருங்கிய உறவினரான உராங் உடான் எனும் ஆசியக் குரங்கும்தான்!
டாடி, அந்த சீனாத்தோப்பு சிம்பன்ஸி, என்கிட்ட மனுஷத்தனமா நடந்துக்கிட்டு என் வாழ்க்கையையே சீரழிச்சிட்டான் டாடி!

மிருகத்தனம்                                                                                 மனுஷத்தனம்
கஷ்டப்பட்டு உணவு தேடி காதலிக்கு பரிசளிப்பது...     ஓசியில் ஈஸியாக கவிதை படித்து கரெக்ட் பண்ணுவது...
தன்னை விட வலியவனிடம் போராடித் தோற்பது...     அவனை விட வலியவனிடம் அவனைப் போட்டுக் கொடுப்பது...
இன்றைய பசிக்காக இரை தேடுவது...                  பத்தாவது தலைமுறைக்காக சொத்து சேர்ப்பது...
பெண்களை பேரன்பு மூலம் கவர நினைப்பது...      பெண்களை அவள் பேரன்ட்ஸ் மூலமே கவர்ந்து செல்வது...

டாடி, அந்த சீனாத்தோப்பு சிம்பன்ஸி, என்கிட்ட மனுஷத்தனமா நடந்துக்கிட்டு என் வாழ்க்கையையே சீரழிச்சிட்டான் டாடி!

- தேடுவோம்...

கோகுலவாச நவநீதன்