டார்லிங்



பேய் என்றாலே கொலைதான் நினைவுக்கு வரும்... ஓர் இளைஞனின் தற்கொலை முடிவு பேயால் மாறி, ‘ஆல் இஸ் வெல்’ ஆவதுதான் ‘டார்லிங்’!ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ரானி, பாலசரவணன் மூவரும் தனித்தனி ஃப்ளாஷ்பேக் காரணங்களுக்காக தற்கொலை முடிவோடு ஒரு கடற்கரை பங்களாவில் தங்குகிறார்கள். பாலாவின் ப்ளான்படி அங்கே ஜி.விக்கும் நிக்கிக்கும் காதல் கனிகிறது. ஆனால், அதே பங்களாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் ஆவி, நிக்கி உடலில் புகுந்து ரகளை செய்கிறது. அந்தப் பேயை அவர்கள் ஓட்டினார்களா... காதலர்கள் சேர்ந்தார்களா என்பதன் காமெடி காக்டெயில்தான் படம்!

இப்போதெல்லாம் பேய்ப்படத்தை ரசிக்கிறார்கள். ஸோ, சீஸனைப் பயன்படுத்திக்கொள்ள முனையும் சிக்கனப்படம் என்பதில் சந்தேகமே இல்லை. ‘வந்தா மலை போனா முடி’ எனப் பாடல் மூலம் இதை ஓப்பனிங்கிலேயே சொல்லிவிட்டார்கள். தெலுங்கில் வந்த கதைதான் என்றாலும் அதை சரியான சமயத்தில், சரியான ஒட்டு வெட்டு வேலைகளோடு தந்ததில் அறிமுக இயக்குநர் சாம் ஆன்டனுக்கு சபாஷ்.

ஜி.விக்கு முதல் படம் என்றாலும் இதில் அதிகம் வேலை இல்லை. கூடவே இருக்கும் பாலாவும் வழியில் ஒட்டிக்கொள்ளும் கருணாஸுமே பர்ஃபார்மென்ஸைப் பார்த்துக்கொள்கிறார்கள். லவ் ஃபெயிலியரை சாக்கு வைத்து ஜி.வியின் பாதி முகத்தை தாடிக்குள் மறைத்துவிட்டார்கள். ஆரம்பத்தில் ஃபீலிங் விடுவது, பேய் சார்ஜ் எடுத்த பின் பயந்தோடு வது... இந்த சிம்பிள் பணியை அவர் சரியாகவே செய்திருக்கிறார்.

ஹீரோயின் நிக்கி நிச்சயம் பேய்க்கே பிடிக்கும்படியான அழகு. ‘பச்ச மண்ணுடா’ என ஆளாளுக்கு சொல்லும்போது, அதற்கேற்ப இன்னசன்ட் இனிமை வழிந்தோடுகிறது பொண்ணுக்கு. அதே சமயம், பேஸ்ட் பூசிய முகத்தோடு பேயாகும்போது, அதற்கேற்ற காட்டம். நிக்கிக்கு இங்கே இருக்கு செம எதிர்காலம்!  ‘திருடன் போலீஸ்’ படத்தில் திரும்பிப் பார்க்க வைத்த பாலாவுக்கு இது அடுத்த கட்டம். இவரை மாதிரி அவரை மாதிரி என்றில்லாமல், இவர் கமென்ட்களில் தெரிவது தனித்துவம்.

 ஏமாற்றும் காதலியாக ஃப்ளாஷ்பேக் காட்சியில் கொஞ்ச நேரமே வந்தாலும் நெஞ்சம் நிறைகிறார் சிருஷ்டி. ஜி.வி.யின் குரலிலும் தொனியிலும் லேசாய் சிம்பு சாயல். பாடகி தேர்வில் ஒரு பெண், ‘டார்லிங் டம்பக்கு’ எனப் பாட, ஜி.வி கடுப்பாகும் காட்சியும்... ‘இப்பல்லாம் ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கிட்டு கிஸ் அடிக்கிறதுதான் டிரெண்டு’ என பாலா பேசும் வசனமும் சக இசை இளவலை சீண்டுவது உண்மை. அடுத்த தலைமுறை உரசல் ஆரம்பமாகிடுச்சோ!

பேயை விரட்ட ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை அழைத்து வந்து பண்ணும் அலப்பறை எல்லாம் கலகலக்கத்தான் வைக்கிறது. ஆனால், படத்தில் பிரதான இடம் பிடிக்க வேண்டிய அந்த செக்மென்ட் சீக்கிரமே முடிந்து போவது ஏமாற்றம். மந்திரவாதியையே மண்ணைக் கவ்வ வைக்கும் பேயிடம் கடைசியில் ஜி.வி. நேராய் போய் பேசியே பிரச்னையைப் பைசல் பண்ணிவிடுவது புஸ்ஸ்!

பாடல்கள் ஓகேதான். பின்னணியில் ஜி.வி.யின் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் மிரட்டுகிறது. கிருஷ்ணன் வசந்தின் கேமரா, திகில்! பங்களா, மூன்று நண்பர்கள், ஒரு மந்திரவாதி என வழக்கமான பேய்ப்பட டெம்ப்ளேட் இருந்தாலும் ‘டார்லிங்’ ரசிக்க வைக்கிற பேய்தான்!

- குங்குமம் விமர்சனக் குழு